திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../18/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

 திரிகடுகம் தொடர்கிறது.....

பாடல் - 86

அற்புப் பெருந் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்

கற்புப் பெரும் புணை காதலின் கை விடுதல்,

நட்பின் நய நீர்மை நீங்கல், - இவை மூன்றும்

குற்றம் தரூஉம் பகை.

 

விளக்கம்:

உயிரிடத்தில் அன்பு காட்டாதிருத்தலும், பொருள் மீது கொண்ட விருப்பத்தினால் கல்வியை விட்டுவிடுதலும், ஒருவரிடம் கொண்ட நட்பால் நீதித் தன்மையினின்று நீங்குதலும் குற்றங்களை விளைவிக்கின்ற பகைகளாம்.

 

பாடல் - 87

கொல்வது தான அஞ்சான் வேண்டலும், கல்விக்கு

அகன்ற இனம் புகுவானும், இருந்து

விழு நிதி குன்று விப்பானும், - இம் மூவர்

முழு மக்கள் ஆகற்பாலார்.

 

விளக்கம்:

ஓருயிரைக் கொல்வதற்கு அஞ்சாதவனும், கல்லாதவர் கூட்டத்தோடு சேர்வதும், ஒரு முயற்சியும் செய்யாமல் இருக்கின்ற செல்வத்தை அழிப்பவனும், மூடர்கள் ஆவார்.

 

பாடல் - 88

பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்துமாறும்,

தணிவு இல் பெருங் கூற்று உயிர் உண்ணுமாறும்,

பிணைச் செல்வம் மாண்பு இன்று இயங்கல், - இம் மூன்றும்

புணை இல் நிலை கலக்குமாறு.

 

விளக்கம்:

நோய் வந்து துன்பப்படுவதும், எமன் உயிரைக் கொண்டு போக வருத்தும் வகையும், செல்வம் இழந்த நிலையும், மன உறுதியைக் குலைப்பவையாகும்.

 

பாடல் - 89

அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும்,

பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும்,

இறந்து இன்னா சொல்லகிற்பானும், - இம் மூவர்

பிறந்தும் பிறந்திலாதார்.

 

விளக்கம்:

அருளினை நிறைத்து வைத்துக் கொள்ளாதவனும், செல்வத்தை மறைத்து வைத்துக் கொள்கின்றவனும், பிறர்க்கு துன்பம் தரும் சொற்களைச் சொல்பவனும், மக்கட் பிறப்பாக கருதப்பட மாட்டார்.

 

பாடல் - 90

ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி

சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும்

அருள் புரிந்து சொல்லுக, சொல்லை! - இம் மூன்றும்

இருள் உலகம் சேராத ஆறு

 

விளக்கம்:

செல்வத்தை உரியவனுக்கு ஈதலும், அறநெறிகளைத் தரும் நூலைச் செய்தலும், அருள் தரும் சொற்களைச் சொல்லுதலும், ஆகிய இம்மூன்றும் நரக உலகத்திற்கு செல்லாமைக்குரிய வழிகளாகும்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

...............................................................

0 comments:

Post a Comment