மகாவம்சத்தில் புதைந்துள்ள…… பகுதி 33

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும் 


கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த மூத்த பிளினி இலங்கையில் குறிப்பிட்ட பலேசிமுண்டோ என்பது, தமிழ் சொல் 'பழைய முந்தல்' என்பதன் திரிபு ஆகவும் இருக்கலாம்? [Also Palaisi moundou may be a corruption of palaya mundal [பழைய முந்தல்]], முந்தல் என்பதன் ஒரு பொருள் முனை [promontory - கடல் முனை] ஆகும். அது மட்டும் அல்ல இலங்கையின் மேற்கு கடற்கரையில் முந்தல் என அழைக்கப்படும் பல கடல் முனைகள் உள்ளன. மேலும் பிடோலேமி அல்லது தொலமி கூட அப்படி ஒரு கடல் முனையை, அதாவது இன்றைய கற்பிட்டி தீபகற்பகத்தை, அனரிஸ் முண்டோ [Anarismoundou] என குறிப்பிட்டுள்ளார். [There are several promontories on the west coast called by the Tamil name Mundal, and Ptolemy himself mentions one of the name of Anarismoundou, now called Kalpitiya Peninsula]. முதலில் பலேசிமுண்டோ தலைமை நகரத்தை குறித்தாலும், காலப்போக்கில் அது முழு தீவையும் குறிக்கப் பாவிக்கப் பட்டதாக அறிகிறோம். உதாரணமாக,  பெரிப்ளுசு இலங்கையை பலேசிமுண்டோன் [Palaisimoundon] என்றே குறிப்பிடுகிறார்.[according to the Periplus, Ceylon was then known as Palaisimoundon]

 

மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது. இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன. உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த பழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது.

 

"பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு

உறைபதி என்னும் உலகு." (குறள்-1015)

 

எனவே, [அரசனே] பழிக்குரியவற்றைச் செய்யினும் அல்லது [அரசன்] தான் செய்யவில்லை, எனவே தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்தது போலக் கருதியும் [அரசன்]  நாண மடையும் பண்பாட்டையே உலகம் போற்றும். இதை மனதில் கொண்டே பெருங்கதை,"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484) என்ற அடைமொழியைத் தருகிறது எனலாம். மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது. உதாரணமாக, மதுரைக்காஞ்சி  494 - 498

 

"நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி,

அன்பும் அறனும் ஒழியாது காத்து,

பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த"

 

என்கிறது, அதாவது, அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து..., என்று பாடுகிறது. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த[சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததை காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல்,  இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது , மற்றும் சந்திரமுகன் சிவா,  ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது.

 

ஆனால், மாகாவம்சத்தில், துட்டகாமினியை எடுத்துக் கொண்டால், தனது ஈட்டியில், புத்தரின் உடல் எச்சத்தை [relic] போட்டு சண்டைக்கு போனான் என்கிறது. எப்படி புத்தரின் எச்சத்தை பெற்றான் என்பது இன்னும் ஒரு ஆச்சரியமான கதை. ஆனால், அன்பே உலகம் என அமைதி விரும்பும் புத்தர் , எப்படி துட்டகாமினிக்கு அதன் மூலம் நீதி தவறாத எல்லாளனை கொல்ல உதவினார் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது. அப்படி என்றால் எப்படியான  ஞானம் புத்தருக்கு கிடைத்தது ? அன்பே வடிவான புத்தருக்கு இது அவமதிப்பு இல்லையா ?  இன்னும் ஒரு கட்டத்தில், தமிழ் அரசன் தித்தம்பாவை  [Damila Titthamba] , நாலு மாதம் ஆகியும் வெல்ல முடியாத சந்தர்ப்பத்தில், தந்திரமான முறையில், தான் தன் தாயை திருமணம் செய்ய தருகிறேன் என தன் தாயை தன்னுடன் யுத்த இடத்தில் வைத்திருந்து ஏமாற்றி அவனை கொல்லுகிறான் என்கிறது. இது வெளிப்படையாக கூறாவிட்டாலும், துணை விளக்கம் [it is stated so in the Tika, the commentary, as per the foot note in the Geiger’s translation.]  கொடுக்கப் பட்டுள்ளது.மகாவம்சம் எழுதியவர் எந்த நிலைக்கும் , உதாரணமாக தாயையே எதிரிக்கு கொடுக்கும் அளவுக்கு தயாராக, தாய் இனத்தையே அவமதிக்கும்  அளவுக்கு தள்ள பட்டிருப்பது, பத்தினி தெய்வம் வணக்கும் இலங்கையின் காப்பியம் ஒன்றில்  எழுதப்பட்டிருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 34 வாசிக்க கீழ் அழுத்துக 

Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள…. (பகுதி 34):

ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

0 comments:

Post a Comment