திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../20/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

திரிகடுகம் தொடர்கிறது.....பாடல் - 96

கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன

செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ,

நல்லவை செய்வான் அரசன்; - இவர் மூவர்,

'பெய்' எனப் பெய்யும் மழை.

 

விளக்கம்:

கணவனுடைய குறிப்பறிந்து நடக்கும் மனைவியும், நோன்புகளை முறைப்படி செய்யும் தவசியும், நன்மைகளைச் செய்யும் அரசனும் பெய் என்று சொல்ல மழை பொழியும்.

 

பாடல் - 97

ஐங் குரவர் ஆணை மறுத்தலும், ஆர்வு உற்ற

எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும், நெஞ்சு அமர்ந்த

கற்பு உடையாளைத் துறத்தலும், - இம் மூன்றும்

நற் புடையிலாளர் தொழில்.

 

விளக்கம்:

பெரியோர்களுடைய கட்டளையை மறுத்து நடத்தலும், நண்பனிடம் பொய் பேசுதலும், கற்புடைய மனைவியைத் துறத்தலும், பாவச் செயல்கள் ஆகும்.

 

பாடல் - 98

செந் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்,

வெஞ் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும்,

பெண்பால் கொழுநன் வழிச் செலவும், - இம் மூன்றும்

திங்கள் மும் மாரிக்கு வித்து.

 

விளக்கம்:

அந்தணர்கள் தமக்குரிய அறத்தை மறவாது வாழ்தலும், அரசன் முறையாக ஆள்வதும், தன் கணவன் குறிப்பின் வழியில் நடத்தலும், மாதம் தோறும் பெய்ய வேண்டிய மழைக்குக் காரணங்களாகும்.

 

பாடல் - 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும், காமுற்று

பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும், முட்டு இன்றி

அல்லவை செய்யும் அலவலையும், - இம் மூவர்

நல் உலகம் சேராதவர்.

 

விளக்கம்:

கற்றவன் கைவிட்டு வாழ்தலும், விரும்பியவற்றைச் செய்யும் அறிவில்லாதவனும், தீங்கு செய்து அவற்றைப் பேசுதலும் கொண்டவர்கள், நல் உலகம் சேர மாட்டார்கள்.

 

பாடல் - 100

பத்திமை சான்ற படையும், பலர் தொகினும்

எத் திசையும் அஞ்சா எயில்-அரணும், வைத்து அமைந்த

எண்ணின் உலவா இரு நிதியும், - இம் மூன்றும்

மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு.

 

விளக்கம்:

அன்பு நிறைந்த படையும், பகைவர் பலர் கூடி எதிர்ப்பினும் அஞ்சாத அரணும், எண்ண முடியாத அளவிற்கு இருக்கும் செல்வமும், ஆகிய இம்மூன்றும், பூமியை ஆள்கின்ற வேந்தர்க்கு உறுப்புகளாகும்.

 

திரிகடுகம் முற்றுப்பெற்றது.

0 comments:

Post a Comment