மகாவம்சத்தில் புதைந்துள்ள…. (பகுதி 38)

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

 


உயரிய  வரலாற்றுக் குறிப்பான மகாவம்சம், உண்மையில் இலங்கையினதோ அல்லது சிங்களவர்களினதோ வரலாறாக எழுதியது என்பதை விட, அது மகாவிகாரையின் அல்லது தேரவாத பௌத்தத்தின் வரலாறு என்று கூறுவதே பொருத்தம் என்று எண்ணுகிறேன் [The Mahavamsa (Great Chronicle of historical poem) was written not as a history of Sri Lanka (or Sinhalese) but as a history of the Mahavihara (Theravada Buddhists)]. உதாரணமாக தீபவம்சம், மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை மட்டுமே சொல்லுகிறது, அப்பொழுது சிங்கள இனம் என்று ஒன்றும் இல்லை, எனவே சிங்கள பௌத்தம் [Sinhala Buddhists] என்ற சொல்லுக்கே இடமில்லை. எனவே உண்மையில் இலங்கையின் சரியான வரலாற்றையும், அதன் மக்களையும் [சிங்களவர், தமிழர்], அதன் பண்டைய மதங்கள் [ இந்து, புத்த], அதன் பண்டைய மொழிகள் அல்லது எழுத்து வடிவங்கள் மற்றும் அதன் பண்பாடுகளையும் அறிய வேண்டுமாயின், [To study the history of Sri Lanka and its people (Sinhalese/Tamils), its ancient religions (Buddhism / Hinduism), its languages/scripts and its culture], நாம் வடக்கு, தெற்கு இந்தியாவின் வரலாற்றையும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இலங்கையின் வரலாற்றின் மூலம் (origin / roots) அங்குதான் ஆரம்பிக்கிறது. அதுமட்டும் அல்ல அந்நியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெரும் மட்டும் இவை இரண்டின் வரலாறும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட, தொப்புள் கொடி உறவாகவே இருந்தன எனலாம் [interconnected / umbilical cord].

 


நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது, இந்த பாளி நூல்கள், இலங்கையின் புத்த அரசர்களின் இனப் பின்னணி [ethnic background] பற்றி குறிப்பிடவில்லை. எனவே அவர்களின் பெயர்களிலும் அதன் கருத்து அல்லது அதன் பின்னணியிலுமே நாம் அதை தேட வேண்டி உள்ளது. மேலும் வரலாற்று அறிஞர்களின் படி, ஒன்பதாம் நூற்றாண்டில் தான் நாகர் என்ற பதம் அல்லது பெயர், இலங்கை வரலாற்றில் இருந்து, அதாவது கல்வெட்டுகளில் [stone inscriptions] இருந்து வழக்கொழிந்து போயின என்கின்றனர். அதன் பின் தான் மிகவும் தெளிவாக இரண்டு முதன்மை இனக்குழுக்களாக [ethnic groups], அதாவது, ஹெல /  சிகல மற்றும் தமிழர் [Hela/Sihala and Demela] என அடையாளம் காணக்கூடியதாக இருந்தது எனலாம். ஆகவே வரலாற்று ஆசிரியர்கள், நாகர்கள் இந்த இரண்டு முதன்மை இனக்குழுக்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டார்கள் என்று நம்புகிறார்கள். பேராசிரியர் க இந்திரபாலாவின் [Prof. K. Indrapala] கூற்றின்படி, வரலாற்றுக்கு முந்தைய காலம் [prehistoric times] மற்றும் எழுத்துகள் கண்டுபிடிக்காத, வரலாற்றின் மிகப்பெரிய நாகரிகங்கள் உருவாகாத, மக்கள் ஒருங்கிணைந்த சமூகமாகச் சேர்ந்து வாழ்ந்த புரோட்டோ [மூல அல்லது முதனிலை] வரலாற்று காலத்திலும் [proto-historic times], வாழ்ந்த பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் [As per Prof. K. Indrapala, ‘The Sinhalese and Tamils of Sri Lanka are descended from the common ancestors who lived in the country in prehistoric and proto-historic times] இவர்கள் இருவரும் என்றும் இவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக வரலாற்றை இலங்கையில் பகிர்ந்துள்ளார்கள் என்றும் கூறுகிறார். இதை நாம் ஏற்றுக்கொள்வோமாயின், இன்று நாம் சிங்களவர், நாம் தமிழர் என இலங்கையில் கூறுபவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே ஆவார்கள் என்பது கண்கூடு.

 

நாம் மகாவம்சத்தில் விஜயனின் வருகையை பார்க்கும் பொழுது ஒரு உண்மை புலனாகிறது. அதாவது, இலங்கைக்கு புத்த மதம் வரும் முன்பே, மற்றும் சிங்களவர் என்ற ஒரு இனம் பரிணமிக்கும் முன்பே, இலங்கை, சங்க இலக்கியத்தில் கண்ட தென் இந்தியா மாதிரி, நாகரிகம் அடைந்த நாடாகவே காண்கிறோம். உதாரணமாக ஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் நாடு கடத்தப் பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, அவன் முதல் குவேனி நூல் நூற்பதை காண்கிறான். பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரியில் நாம் காணும் நாகரிக மங்கை போல் குவேனியும் தன் அழகிய உடலுக்கு அணிந்து கொள்ள, உடை ஒன்றை பின்னுவதற்க்காக, நூற்பதை காட்டுகிறது. இது அன்று ஒரு முன்னேறிய நாகரிகம் இலங்கையில் இருந்தது என்பதை கட்டாயம் காட்டுகிறது என்றே நம்புகிறேன். குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும்,  கவினி என்றால் "பேரழகு படைத்தவள்" என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இராமாயண காப்பியத்தில் இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டது போல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்" என்பது கவனிக்கத் தக்கது.

 

கி மு 205 க்கும் கி மு 161 க்கும் இடைப்பட்ட துட்ட காமினி, எல்லாளன் [Dutugemunu and Ellalan] பெரும் போரைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது. இதில் இன்னும் ஒன்றையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது. துட்ட காமினியின் பத்து மாபெரும் வீரர்கள் என வர்ணிக்கப்படுபவர்களில், நந்திமித்ரா [Nandhimitta], வேலுசுமணா என்ற இருவர் தமிழர் ஆகும். உதாரணமாக நந்திமித்ரா, எல்லாளனின் தமிழ் சேனாதிபதியான மித்ராவின் [Mitta] சகோதரி மகனாகும் [nephew]. அதே போன்று, எல்லாளனின் படையில் பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்த்தவர்களின் மூதாதைய வீரர்கள் மட்டுமல்ல, சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். உதாரணமாக  தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா …. ஆவார்கள். இந்த சேனாதிபதிகளின் பட்டியலில், துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் அந்த கால பகுதியில் சிங்களம் என்ற ஒரு இனம் இல்லை, ஆனால் இவர்களின் பவுத்த பரம்பரை பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்தார்கள் என்பது தான் உண்மை. இது இந்த பெரும் யுத்தம், மொழி, இனம் அடிப்படையில் அல்ல, மத அடிப்படை மட்டுமே என்பதை மீண்டும் உறுதிப் படுத்துகிறது. எனவே, எல்லாளன் – துட்ட கைமுனு போர் தமிழர் – சிங்களவர் போராகப் பார்ப்பது தவறானது. அன்று சிங்கள இனமோ மொழியோ தோன்றாத காலம். அந்தப் போர் சைவ மதத்தினருக்கும்  – பவுத்தர்களுக்கும் இடையிலான ஆட்சி அதிகாரப் போர் என்பதே உண்மையாகும். 

 

துட்ட கைமுனு நாக வம்சத்தை சேர்ந்தவன். அவனது தந்தை பெயர் காகவண்ண தீசன் [Kavantissa]. காகவண்ண தீசனின்  பூட்டன் பெயர் மகாநாகன் ஆகும் [Kavantissa -  a great-grandson of King Devanampiyatissa's youngest brother Mahanaga]. மகானாகனது தந்தை பெயர் முத்துசிவன் [Mutasiva / மூத்தசிவா]!  இது ஒன்றே துட்ட கைமுனு யார் என்று எடுத்து காட்டுகிறது. அது மட்டும் அல்ல,  துட்ட கைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய ஒரு இனம் வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. மகாவம்ச கதைப்படியே துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தைச் சேர்ந்தவன். அவனது தாய் விகாரமாதேவி கல்யாணியை ஆண்ட மணியக்கியா அல்லது களனி தீசன் என்ற அரசனின் மகள் ஆவாள் [Dutugemunu's mother was Viharamahadevi, daughter of Tissa, king of Kalyani.].

 

எல்லாளன் மீது போர் தொடுக்கு முன்னர் கதிர்காமத்தில் உள்ள முருகனை வழிபாடு செய்துவிட்டே புறப்படுகிறான். அவனது போர் முழக்கம் “இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்’ [Chapter XXV of Mahāvaṃsa depicts the story of the “The Victory of Duṭṭhagāmaṇi.” After having a relic placed on his spear, Duṭṭhagāmaṇi takes five hundred bhikkhus with his army to march in conquest across the Tamil occupied territories. He victoriously conquers many kings, but states, “Not for the joy of sovereignty is this toil of mine, my striving (has been) ever to establish the doctrine of the Saṃbuddha. And even as this is truth may the armour on the body of my soldiers take the colour of fire.”] என சூளுரைத்ததாக மகாவம்சம் (அதிகாரம் 25) தெரிவிக்கிறது. “பவுத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரில் துட்ட கைமுனு என்ற சிங்கள பவுத்த மன்னன், எல்லாளன் என்ற தமிழ் சைவ மன்னனை வென்றான்” என்ற கதை பின்னாளில் புனையப்பட்டு சிங்கள பள்ளி மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பாட நூலில் சேர்க்கப்பட்டது என்பது வெள்ளிடை மலையாகும்.

 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 39 தொடரும்.... வாசிக்க, அழுத்துக

Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.... (பகுதி 39):   

ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

0 comments:

Post a Comment