மலக்குடல் புற்றுநோய்: கண்டறிவது எப்படி? சிகிச்சைகள் என்ன? –

ஒரு மருத்துவ அறிவியல் விளக்கம்

மிக விரைவிலேயே கண்டறியக் கூடிய புற்றுநோய்களில் ஒன்று மலக்குடல் புற்றுநோய். சில நேரங்களில் இதை பெருங்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கிறார்கள். இதைக் கண்காணிப்பதற்கு மிகவும் அடிப்படையானது மலத்தை பரிசோதிப்பதுதான் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

மலக்குடல் புற்றுநோயைக் எப்படிக் கண்டறியலாம்?

 

மூன்று முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது:

 

👉 எந்தக் காரணமும் இல்லாமல் உங்கள் மலத்தில் ரத்தம் காணப்படும்போது - அது தெளிவான சிவப்பு நிறத்திலோ அல்லது கருஞ்சிவப்பு நிறத்திலோ இருக்கிறதா?

👉 மலம் கழிப்பதில் மாற்றம் - அடிக்கடி மலச்சிக்கல், அடிக்கடி கழிவறைக்கு செல்லும் நிலையில் இருக்கிறீர்களா அல்லது நீங்கள் கழிக்கும் மலம் தண்ணீராகப் போகிறதா அல்லது கெட்டியாக வெளியேறுகிறதா?

👉 உங்கள் அடிவயிற்றில் வலிப்பது போன்ற உணர்வு இருக்கிறதா அல்லது வீக்கமாக இருக்கிறதா, உங்கள் வயிறு முழுமையாக மற்றும் இறுக்கமாக இருப்பது போல உணர்கிறீர்களா?

 

இது போலவே மேலும் சில அறிகுறிகளும் கூட இருக்கலாம்

 

👉 உங்கள் உடல் எடை திடீரெனக் குறைவது

👉 மலம் கழித்த பிறகும் மலக்குடல் முழுமையாகக் காலியாகவில்லை என்பது போன்று உணர்வீர்கள்.

👉 சோர்வாக அல்லது வழக்கத்துக்கு மாறான மயக்கமாக நீங்கள் உணர்வீர்கள்

இந்த அறிகுறிகளை நீங்கள் கொண்டிருந்தால், மலக்குடல் புற்றுநோய்தான் வந்துவிட்டது என்று நீங்கள் கருதத் தேவையில்லை. ஆனால், இவை எல்லாம் மூன்று வாரங்களுக்கு அல்லது நீண்ட நாட்களுக்கு தொடர்கிறது என்று நீங்கள் அறிந்தால், ஏதோ சரியில்லை என்று நீங்கள் உணர்ந்தால் உங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அவற்றை விரைவாக சரிபார்க்க வேண்டும் என்பது இதன் பொருளாகும். ஆரம்பகட்ட பரிசோதனையின்போதே புற்றுநோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவற்றை எளிதாக சிகிச்சையின் மூலம் குணப்படுத்தமுடியும்.

 

சில நேரங்களில் மலக்குடல் வழியே கழிவு வெளியேறுவதை மலக்குடல் புற்றுநோய் தடுத்துவிடும். இதன் காரணமாக அடைப்பு ஏற்படும். இது தீவிரமான வயிற்று வலி, மலச்சிக்கல், உடல் நலக் கோளாறுகளை கொண்டுவரும். இது போன்ற சூழல்களில் நீங்கள் உடனடியாக அருகில் உள்ள அவசரகால சிகிச்சை பிரிவுக்கு செல்ல வேண்டும் அல்லது உங்கள் மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

 

மலக்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன?

 

👉 மலம்கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் - மலச் சிக்கல், அடிக்கடி கழிவறைக்கு செல்வது, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு

👉 மலத்தில் ரத்தப்போக்கு - மூலம் போன்ற காரணங்கள் இல்லாமல் ரத்தம் வருதல் .

👉 அடிவயிற்றில் வலி, அசெளக்கர்யமாக உணர்தல் அல்லது வயிறு காலியாக இல்லாமல் இருப்பது - பொதுவாக உணவு உண்டபின் தோன்றும் அறிகுறிகள்

👉 அதீத சோர்வு அல்லது திடீரென எடைகுறைதல் - போதுமான காரணமின்றி வரும் அறிகுறி

 

என்னுடைய மலத்தை எவ்வாறு பரிசோதிப்பது?

நீங்கள் கழிவறைக்கு செல்லும்போது உங்களிடம் இருந்து என்ன வெளியேறுகிறது என நன்றாக பாருங்கள், அது பற்றி பேசுவதில் தயக்கம் வேண்டாம். உங்கள் மலத்தில் ரத்தம் வருகிறதா என நீங்கள் பார்க்க வேண்டும். அதே போல உங்கள் ஆசனவாயில் ரத்தப்போக்கு இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

 

உங்கள் ஆசனவாயில் ரத்த குழாய் அழற்சியால் (மூலம் காரணமாக) தெளிவான சிவப்பு ரத்தம் வெளியே வரலாம். தவிர இது மலக்குடல் புற்றுநோய் காரணமாகக்கூட இருக்கலாம். கருஞ்சிவப்பு அல்லது கருப்பு ரத்தம் உங்கள் மலக்குடலில் இருந்து அல்லது வயிற்றில் இருந்து வெளியே வரலாம். இதுவும் உங்களுக்கு கவலை அளிக்கக் கூடியதாகும்.

மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றத்தை அதாவது வயிற்றுப்போக்கு அல்லது வழக்கத்தை விட அடிக்கடி மலம் கழித்தல் ஆகியவற்றின்போது நீங்கள் இதனை கவனித்திருக்கலாம். அல்லது மலக்குடலில் இருந்து முறையாக மலம் வெளியேறி மலக்குடல் காலியாகவில்லை என்று நீங்கள் உணரலாம். போதுமான அளவு வெளியேறவில்லை என்றும் உணரலாம்.

 

மருத்துவரை சந்திக்கப் போகும் முன்பு எதையும் மறந்து விடாமல் இருக்க அறிகுறிகள் குறித்த நாட்குறிப்பை வைத்திருக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

 

பல்வேறு வகையான மலக்குடல் பிரச்னைகளுக்காக பல நோயாளிகளை மருத்துவர்கள் பார்க்க நேரிடுகிறது. எனவே, எந்த ஒரு மாற்றம் அல்லது ரத்தப்போக்கு குறித்தும் அவர்களிடம் சொல்லுங்கள். அப்போதுதான் அவர்கள் காரணத்தை கண்டறியமுடியும்.

 

மலக்குடல் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

என்ன காரணத்தால் இது வருகிறது என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் சில விஷயங்கள் மலக்குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களாக இருக்க முடியும்.

 

நீங்கள் வயதானவர்களாக இருந்தால், புற்றுநோய் வருவதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளன. மலக்குடல் புற்றுநோயும் அதற்கு விலக்கு இல்லை- பாதிப்புக்கு ஆளான பெரும்பாலானோர் 50 வயதுக்கு மேற்பட்டோர்தான்.

 

👉 பன்றி இறைச்சி, சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்ளும் உணவு முறை

👉 சிகரெட் புகைப்பது பல்வேறு புற்றுநோய்கள் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

👉 அதிக அளவு மது குடித்தல்  

👉 அதிக உடல் எடை அல்லது உடல் பருமனாக இருத்தல்

👉 உங்களுடைய மலக்குடலில் பருக்கள் இருப்பதற்கான வரலாறு இருப்பின், அது கட்டியாக வளர வாய்ப்புள்ளது.

 

 

பரம்பரையாக கடந்து வருகிறதா?

பெரும்பாலானோர்களிடையே மலக்குடல் புற்றுநோய் பரம்பரையாக வருவதில்லை. ஆனால் 5 முதல் 10 சதவிகிதம் வரை பரம்பரையாக வர வாய்ப்பிருப்பதாக புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அனிதா ரமேஷ் கூறுகிறார்.

 

50 வயதுக்கு முன்னதாக உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு மலக்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதா என உங்கள் மருத்துவரிடம் அவசியம் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

 

"தாய், தந்தை, உறவினர் உள்ளிட்டோருக்கு மலக்குடல் புற்றுநோய் இருந்தால் உடனடியாக மலப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்கிறார் அனிதா ரமேஷ்.

 

லின்ஞ் சின்ட்ரோம் போன்ற சில மரபு நிலைகளில் மலக்குடல் புற்றுநோய் நேரிடுவதற்கான அபாயம் பெரும் அளவுக்கு இருக்கிறது. ஆனால், புற்றுநோயின் நிலையை மருத்துவர் அறிந்தால் அதனை அவர்களால் தடுக்க முடியும் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

உங்களுக்கான அபாயத்தை குறைப்பது எப்படி?

மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் குடல் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

அதிகம் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், அதிக நார்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளல், குறைவான கொழுப்பு சத்துள்ள உணவுகளை உட்கொள்ளல், தினமும் 6 முதல் 8 டம்ளர் நீர் குடிப்பது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

 

எனினும், ஏதேனும் கவலைக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் பொது மருத்துவரை சந்தித்து, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் புற்றுநோய் பரிசோதனையை எடுத்துக் கொள்ள வேண்டும்,

 

மலக்குடல் புற்றுநோய்க்கு எங்கே பரிசோதனை செய்து கொள்வது?

 

"தமிழ்நாட்டைப் பொறுத்துவரை அனைத்து வகையான புற்றுநோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதை பெரும்பாலும் இலவசமாகவே செய்து கொள்ள முடியும். தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்" என்கிறார் புற்றுநோய் சிகிச்சை நிபுணரான அனிதா ரமேஷ்.

 

எனினும் தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும்கூட பரிசோதனைகளைச் செய்ய முடியும் என்றும் கூறும் அவர், வீட்டிலேயே பரிசோதனை செய்துகொள்ளும் வழக்கம் இந்தியாவில் பரிந்துரைக்கப்படுவதில்லை என்கிறார்.

 

மலக்குடல் புற்றுநோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

முதலில் மலப் பரிசோதனை மூலம் நோய்க்கான ஆய்வு தொடங்கப்படுகிறது என்கிறார் மருத்துவர் அனிதா ரமேஷ்.

 

"இதன் பிறகு கலோனோஸ்கோபி, சிக்மோய்டோஸ்கோபி முறையில் மலக்குடல் புற்றுநோய் பொதுவாகக் கண்டறியப்படுகிறது"

 

கலனோஸ்கோபி, சிக்மோய்டோஸ்கோபி நீண்ட குழாய் வடிவிலான இதனுள் இருக்கும் கேமரா உங்களுடைய ஒட்டு மொத்த மலக்குடலையும் பார்க்கும் வகையிலான முறையாக இருக்கும். சிக்மோய்டோஸ்கோபி என்ற பரிசோதனை முறையில் மலக்குடலின் ஒரு பகுதியை மட்டும் பார்க்கும் வகையில் இருக்கும்.

 

மலக்குடல் புற்றுநோய் வந்தால் உயிர் பிழைக்க முடியுமா?

சில புற்றுநோய்களைப் போல் அல்லாமல் மலக்குடல் புற்றுநோயை மிக விரைவிலேயே அறிகுறிகள் மூலம் தெரி்ந்து கொள்ள முடிகிறது. அதனால் பெரும்பாலும் தொடக்க நிலையிலேயே இது கண்டறியப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

"மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் ஆகியவற்றைப் போல மலக்குடல் புற்றுநோயையும் நோய் வருவதற்கு முன்பே கண்டறிந்துவிட முடியும். அதற்கான சோதனைகள் இருக்கின்றன" என்கிறார் மருத்துவர் அனிதா ரமேஷ்.

 

"ஸ்டேஜ் 1 எனப்படும் முதல் கட்டம் அல்லது இரண்டாவது கட்டத்திலேயே மலக்குடல் புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதை முழுமையாகக் குணப்படுத்த முடியும். இதில் உயிர்பிழைக்கும் விகிதம் 70%-க்கும் அதிகம். மூன்றாவது கட்டத்துக்கு நோய் முற்றியிருந்தாலும் 60 சதவிகிதம் வரை குணமாக்க முடியும். ஆனால் கடைசிக் கட்டத்தில்தான் மலக்குடல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது என்றால் உயிர் பிழைப்பது கடினம். எனினும் தற்போதைய மருத்துவ வசதிகளைக் கொண்டு மரணத்தைத் தள்ளிப்போட முடியும்"

 

 

மலக்குடல் புற்றுநோயின் கட்டங்கள் என்னென்ன?

 

கட்டம் 1 - கட்டி சிறியதாக இருக்கும், ஆனால் பரவாது

 

கட்டம் 2 - கட்டி பெரியதாக இருக்கும், ஆனால் இதற்குமேல் பரவாது

 

கட்டம் 3 - லிம்ப் நோட்ஸ் எனப்படும் சுற்றியுள்ள சில திசுக்களில் இப்போது பரவ ஆரம்பிக்கும்

 

கட்டம் 4 - உடலில் உள்ள இன்னொரு பாகத்தில் பரவும். இரண்டாம் நிலை கட்டியை உருவாக்கும்.

 

என்ன மாதிரியான சிகிச்சைகள் கிடைக்கின்றன?

முன்கூட்டியே கண்டறியப்பட்டால் மலக்குடல் புற்றுநோய் குணப்படுத்தக் கூடியது.

 

எந்த ஒரு நிலையில் உங்கள் புற்றுநோய் கண்டறியப்பட்டாலும், கிடைக்கக்கூடிய சிகிச்சைகள் வாயிலாக உங்களுக்கு உதவி கிடைக்கும். அது ஓர் அறுவை சிகிச்சையாக அல்லது கீமோ தெரபியாக, ரோடியோ தெரப்பியாக அல்லது ஒன்று அல்லது இதர உங்களுடைய புற்றுநோயைப் பொறுத்ததாக அந்த சிகிச்சை இருக்கும்.

 

"அறுவைச் சிகிச்சை, ஊசிமருந்துகள், கீமோ தெரபி, கதிர்வீச்சு சிகிச்சை போன்றவை அடிப்படையாகச் செய்யப்படுகின்றன..

 

 

::-எம். மணிகண்டன்---பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment