"அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 04



இந்த நோயை எப்படித் தீர்க்கலாம்? அல்லது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கலாம் ’ என்ற சிந்தனை ஓட்டம், நெடுநாளாக உலகின் எல்லா மூலைகளிலும் இருந்திருக்கிறது. உதாரணமாக பண்டைய கிரேக்க மருத்துவர்கள் [The early Greek physicians recommended treating diabetes with exercise, if possible, on horseback. They believed that this activity would reduce the need for excessive urination] அதிகமாய்ப் போகும் சிறுநீரை அடக்குவது, நோயைக் கட்டுப்படுத்துமோ எனக் கருதி, நோயுற்றோரைக் குதிரையில் ஏற்றி ஓட வைத்துள்ளனர். அதாவது வேகமாக ஓடும் குதிரைச் சவாரியில் கலோரிகள் எரிக்கப்பட்டு, குளுக்கோஸ் வற்றிப்போனதில் தற்காலிக விடுதலை வரும் என்பது அவர்களின் ஒரு ஊகமாக இருந்திருக்கலாம். ரொம்ப நாளைக்கு இந்த ‘சவாரி சிகிச்சை’ அங்கு மருத்துவமாக இருந்திருக்கிறது.

 

அப்போலனைர் (Apollinaire Bouchardat / July 23, 1809 – April 7, 1886) எனும் பிரெஞ்சு மருத்துவர், பிரெஞ்சு போர்க் காலத்தில் குறைவான பஞ்ச உணவைச் சாப்பிட்டபோது பல நீரிழிவு நோயாளிகளுக்கு அதில் கட்டுப்பாடு ஏற்பட்டதைத் தற்செயலாகக் கண்டறிந்திருந்தார். உடனே தன் நோயாளிகளுக்கு, உணவைக் கட்டுப்படுத்தி மிகக் குறைந்த அளவு உணவை விநியோகித்து, நீரிழிவுக்கு வைத்தியம் செய்ய தொடங்கினார். [Bouchardat is often credited as the founder of diabetology, and was a major figure involving dietetic therapy for treatment of diabetes prior to the advent of insulin therapy] அவர் பட்டினி கிடப்பது. சிறுநீரில் குளுக்கோஸ் (சர்க்கரை) இருப்பதை குறிக்கும் கிளைகோசூரியாவை [glycosuria] குறைக்கலாம் என்றும். நீரிழிவுக்கு முக்கிய காரணம் கணையத்தில் [pancreas] அமைந்திருக்கிறது என்றும் கூறினார். அவர் தனது சிகிச்சையின் பொழுது உடற்பயிற்சி [exercise] முக்கியம் என்றும் தனது சிறுநீரை தானே அதில் உள்ள சர்க்கரையின் [glucose] அளவை பரிசோதிக்கும் முறையையும் உருவாக்கினார் [self-testing urine]. அது மட்டும் அல்ல குறைந்த கார்போஹைட்ரேட் உணவு முறையை [a low-carbohydrate diet] தனது நோயாளிகளுக்கு உருவாக்கினார்.

 


1916-ல் அமெரிக்க பாஸ்டன் [Boston] நகரத்திலிருந்த, உலகின் தலைசிறந்த நீரிழிவு மருத்துவர் எலியட் ஜோஸ்லின், [Elliott Proctor Joslin (June 6, 1869 – January 28, 1962) was the first doctor in the United States to specialize in diabetes] ‘தி ட்ரீட்மெண்ட் ஆஃப் டயாபட்டீஸ் மெல்லிட்டஸ்’ எனும் மருத்துவ நூலை [The Treatment of Diabetes Mellitus, the first textbook on diabetes in the English language] வெளியிட்டார். நல்ல கட்டுப்பாடான உணவும் உடற்பயிற்சியும்தான் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் என்ற முதல் கருத்து தெளிவாக அப்போதுதான் வெளியிடப்பட்டது. இன்றைக்குவரை, அந்தக் கருத்தை ஒட்டியே அத்தனை மருத்துவ முறைகளும் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. 

 

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனிதனை சிரமப்படுத்திய  நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த 20-ம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பாக வந்ததுதான் ‘இன்சுலின்’ ஆகும். இது நீரிழிவைக் குணப்படுத்தும் மருந்தல்ல. ஆனால், மிக நுட்பமாகக் கட்டுப்படுத்தும் மருந்து மட்டுமே ஆகும். இன்று ' நீரிழிவு நோய் ' பலரை வருத்திக் கொண்டு வருகிறது. இலங்கை, இந்திய போன்ற தமிழர்கள் அதிகமாக வாழும் நாட்டில் பணக்காரர்களுக்கு மட்டுமே முன்பு வந்த இந்த 'பணக்கார நோய்' ஏழை மக்களையும் பாதித்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் வீட்டுக்கு ஒருவருக்கு இந்த நோய் தாக்கினாலும் தாக்கலாம். உழைப்பின்மை, உணவு முறையில் மாற்றம் (அதிகமாய் மாவுச்சத்து உண்பது), அதிக மனக்கவலை, பதற்றம் [டென்ஷன்], உடற்பயிற்சி இல்லாதது, பாரம்பரியம் என்று பலவிதங்களில் இது மக்களை தாக்குகிறது. இந்த நோயை கட்டுப்படுத்தாவிட்டால் இதய நோய், உடல் பருமன் நோய், கண் பார்வையிழப்பு, பக்கவாதம், கால்களை இழுத்தல் போன்ற கொடூரங்களும் ஏற்படலாம். 'இன்சுலின்' தூண்டினால் நீரிழிவு கட்டுக்குள் வந்துவிடும் என்ற அற்புதமான அந்த மருந்தை கண்டுபிடித்த மருத்துவ விஞ்ஞான மேதை ஃபிரடரிக் கிராண்ட் பாண்டிங் என்பவர் ஆவார். [Sir Frederick Grant Banting / November 14, 1891 -  February 1941]. கணையத்திலிருந்து 'இன்சுலின்' சுரக்காததால் 'நீரிழிவு நோய்' வருகிறது. இன்சுலினை கொடுத்தால் கணையம் வேலை செய்து இரத்தம் மற்றும் சிறுநீரில் அதிகப்படும் சர்க்கரையை குறைக்கிறது என்பதே அவரின் கண்டுபிடிப்பாகும்.

 

இனி நாம் சித்த மருத்துவம் பக்கம் எம் பார்வையை திரும்புவோம். ஒரு பிரச்சனை அல்லது வருத்தம் ஒன்றுக்கு தீர்வு அல்லது மருந்து வேண்டுமாயின், அந்த பிரச்சனை அல்லது வருத்தத்திற்கான காரணம் புரியவேண்டும். உதாரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானுறு 18 சுருக்கமாக “உண்டிமுதற்றே உணவின்பிண்டம்

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" என்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதனாலும் நோய்கள் உற்பத்தியாகின்றன என் சொல்லாமல் சொல்கிறது! " மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்." என திருக்குறள் தெளிவாக கூறுகிறது. அதாவது முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு ‘மருந்து’ என்னும் எதுவுமே வேண்டாம் என்கிறது. அதைத்தான் எம் பெரியோர் பசித்துப் புசி என்பர். இந்த அடிப்படையை தான் பிரெஞ்சு மருத்துவர் அப்போலனைர் வைத்தியத்தில் நாம் காண்கிறோம். ஆமாம் நீரை உண், உணவைக் குடி என்பர் எம் பெரியோரும்!  மனிதனுக்கு நோய் வருவதற்கான பெரும்பான்மைக் காரணங்களாக உணவு, செயல்களில் ஏற்படும் மாறுபாடு அமைகின்றன. இவையன்றி திடீரனத் தோன்றும் கொள்ளை நோய்களும் மனிதனைப் பாதிக்கும். நோய் வருவதற்கான காரணங்கள் எவையாக இருந்தாலும் அந்த நோய்களை எதிர்த்துக் குணப்படுத்துவதற்கான ஆற்றலைப் பெறும் வண்ணம் உடலைத் தயார் செய்வதுதான் பொதுவாக சித்த மருந்துகளின் தலையாய பணியாக இருக்கிறது.

 

இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் நீரிழிவு  நோயும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் [Aids, cancer] போன்றவற்றை விட மக்களை தினமும் பாடுபடுத்தும் நோயாகவே இந்த நோய் உள்ளது. பொதுவாக நீரிழிவு வியாதி எல்லோருக்கும் ஒரே வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. உதாரணமாக முதலாம் வகை என கூறப்படும் நீரிழிவு - சிறு வயதிலிருந்தே கணையம் கணையநீரை சரிவர சுரக்காததால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உண்டாகிறது என்றும் இரண்டாம் வகை என்பது - அதிக வேலைப்பளு, மன அழுத்தம், தீரா சிந்தனை.  உணவு மாறுபாடு, மதுப்பழக்கம், உடல் எடை போன்றவற்றாலும், பரம்பரையாகவும் உண்டாகிறது எனலாம். மற்றும் நவீன உணவு மாறுபாடு, இரவு உணவில் அதிக காரம் கொண்ட உணவினை சாப்பிடுவது. நேரம் தவறிய உணவு, நீண்ட பட்டினி, வயிறு புடைக்க சாப்பிடுதல் இவற்றாலும் நீரிழிவு நோய் உண்டாகலாம்

 

இன்றைய நவீன காலத்தில்,  தவிடு நீக்கிய வெண்மை நிற அரிசி உணவால் ஏற்படும் சர்க்கரை நோய் தான் தென்னிந்திய, இலங்கை  மக்களை அதிகம் பாதிக்க வைத்துள்ளது. அரிசியின் மேல் இருக்கும் தவிடு இரத்தத்தை சுத்தப்படுத்தி, இரும்புச் சத்தை அதிகப்படுத்தி, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கக் கூடியது என்பதை எனோ மறந்து விட்டார்கள்? அது மட்டும் அல்ல,  இயற்கையான கீரைகள், காய்கறிகள் தற்போது இல்லை. இவை அனைத்தும் வேதிப் பொருட்கள் தெளித்து வளர்க்கப்பட்டவை. இதனால் அவற்றின் சக்தியிழந்து உடலுக்கு மாற்றத்தையும் உண்டு பண்ணலாம். எனவே இவைகளையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.   

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 05 தொடரும்

0 comments:

Post a Comment