சொர்க்கம் போகலாமா?

உலகெங்கும் சுமார்  4,200 மதங்கள், எண்ணற்ற கடவுள்கள், வணக்க ஸ்தலங்கள், மத அமைப்புகள், விசுவாசக் குழுக்கள், குரு மையங்கள், பழங்குடியினர் கலாச்சாரங்கள், இயக்கங்கள் என்று  எண்ணற்ற அளவில் பரந்து  கிடக்கின்றன.

 

மதம் ஒவ்வொன்றும் அதற்கு ஒரு சொந்த சிறப்புத் தெய்வம் இருப்பதாகவும், சொந்தமான சொர்க்கத்தையும் நரகத்தையும், கொண்டுள்ளதாகவும்  கூறுகின்றது.

 

இவ்வுலகில்  சுயநலப் பிரியராகவே வாழும் மனிதன்,  தன் அயல் வீடு நல்லாய் வாழ்ந்தால் பார்த்துப் பொறாமைப்படும் இந்த மனிதன், தான் இறந்தபின்னர் நடக்கும் என்று அவன் நம்பிக்கொண்டு இருக்கும் அந்த அறிய இயலாத, கேள்விப்பட முடியாத, தெரியாத ஏதோ ஒன்றோ, என்னவோ மட்டும், வேறு எங்கோவோ, எப்போவோ  நலமே வாழவும், சொர்க்கம் செல்ல வேண்டும் என்றும் விரும்பி, இப்பிறவியில் என்னமாதிரி எல்லாம் அலைந்து திரிகிறான்! (அவ்வளவுக்கு நல்லவனா?)

 

அது சரி, இந்த சொர்க்கமோ, நரகமோ இருப்பது உண்மையா?

 

இதைப் பற்றி நாலு விஷயம் தெரிந்த தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும் என்ன சொல்ல்கிறார்கள்? பார்க்கலாம், வாருங்கள்.

 

ஜெ. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்:

 

தூய்மை உள்ளம் படைத்த ஒரு மனிதனைத் தவிர வேறு கடவுளும் இல்லை, சொர்க்கமும் இல்லை, அவனை விட வேறு ஒரு பெரிய வெளிப் புறச் சக்தியும் அவனைக் கட்டுப்படுத்தவோ, வழிகாட்டிடவோ  முடியாது.

 

சொர்க்கமும், நரகமும் நாமே நமக்குள் இங்கு வாழும்பொழுது உருவாக்கிக் கொள்ள்கிறோம். இறந்தபின்னர் நாமும் இல்லை. மறு உலகு என்பதும் உண்மை இல்லை.

 

ஓஷோ சொல்கிறார்:

 

நரகமும் சொர்க்கமும் உங்களுக்குள் உள்ளன,

 

நீங்கள் அறியாமலே நடந்துகொள்ளும் பொழுது நரகம்;  நீங்கள் எச்சரிக்கையாகவும், சுய நன் நினைவோடு மாறும்போது அது சொர்க்கம்.

 

நீங்கள் ஆனந்தமாக உணர்வதும், கஷ்டம் என்று இடர் கொள்வதும் முழுக்க முழுக்க உங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதற்கு வேறு ஒரு வெளிச்ச சக்தியும் காரணி அல்ல

 

ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் சொல்கிறார்:

 

கடவுள் தனது குழந்தைகளில் பலரைத் தண்டிப்பார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரின் படைப்பில் அவர் பல பிழைகளை விட்டதனால்தான்  மனிதன் பாவம் செய்கிறான். சரி, கடவுள் சக்தியை மீறி பாவத்தை மனிதன்தான் செய்கிறான் என்று வைத்துக் கொண்டாலும் , இதற்கு ஒரு சிறு தண்டனை மட்டும் கொடுக்காது, நிரந்தர நரகம் அனுப்புவது என்பது எப்படி நியாயம் ஆகும்?

 

ஸ்டீபன் ஹாக்கிங் சொல்கிறார்:

 

மூளையை ஒரு கணினியாக நான் கருதுகிறேன், அதன் கூறுகள் தோல்வியடையும் போது வேலை செய்வதை நிறுத்திவிடும். உடைந்த கணினிகளுக்கு சொர்க்கம்/நரகம்  அல்லது பிற்பட்ட வாழ்க்கை என்பது இயலாத விடயம்.

 

விளங்காது இருட்டில் இருப்பவர்களுக்கு பயமுறுத்தி அடி பணிய வைப்பதுதான் இந்த சொர்க்கமும், நரகமும் பற்றிய கற்பனைக் கதைகள் .

 

ஆனால்,

ஆன்மிகவாதிகள் இந்தச் சொர்க்க, நரக மறு உலகு பற்றி உறுதியான கருத்துக்களை வைக்கின்றார்கள். பக்தர்களையும் ஒரு விதமான சான்றுகளையும் வைக்காமலேயே நம்ப வைக்கிறார்கள். பக்தர்களும் மறுத்துரைத்தல் தெய்வ குற்றம் என்று அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்.

 

இப்படியான நம்பிக்கை என்னவோ மனிதனை நல்லவனாக வாழ வைக்கிறது என்பதுவும் ஏதோ உண்மைதான். இறந்த பின்னர் கிடைக்கப்போகும் நல்லதொரு வாழ்விற்காக பல நற்பணிகளைச் செய்யத் தூண்டுகின்றது.

 

சொர்க்கமோ, நரகமோ சென்ற யாராவது, அங்கு நடக்கும் இன்ப நிகழ்வுகள், சித்திரவதைகள் சிலவற்றை, ஒரு முறையாவது ஒரு சின்ன வீடியோ கிளிப்  எடுத்து எங்களுக்கும் அனுப்புவார்களேயானால், நாங்களும் நாலு நல்ல விஷயங்களைச் செய்வோம் தானே!

 

பொறுத்திருந்து பார்ப்போம். சொர்க்கம் செல்லுவோம்!!

 

ஆக்கம்:செ.சந்திரகாசன்

0 comments:

Post a Comment