"வேள்வித் தீயிலவள்" & "விழிச்சிறையில் அடைத்தவளே..."

"வேள்வித் தீயிலவள்"

"வேள்வித் தீயிலவள் வெந்து வாடுகிறாள்

கேள்விக் கணைகளினால் நொந்து துடிக்கிறாள்

கள்ளப் பார்வைகளின்  பிடியிலிருந்து  தப்பவே

தள்ளிக் கொஞ்சம் விலகி நடக்கிறாள்!"

 

"புனித மேனியை கயவர்கள் தீண்டாமல்

மனிதத் தன்மையை விட்டுக் கொடுக்காமல்

கூனிக் குனிந்து பணிந்து போகாமல்

தனியே நின்று தன்னையே எரிகிறாள்!"

 

"கற்பு என்பது இல்லற ஒழுக்கமே

அற்ப சுகத்துக்காக எல்லை மீறுபவனே

பெற்ற அன்னையும் ஒரு பெண்ணே

சற்று சிந்தித்தால் நீயும் இறைவனே!"

 ⇔⇔⇔⇔

"விழிச்சிறையில் அடைத்தவளே விடுதலை தருவாயா...?"

"ஆழிப்பேரலையாய் காதல் வெள்ளத்தில் மூழ்கடித்தவளே!

அழியா நினைவுகளாய் இன்பமுத்தம் தந்தவளே!

ஒழித்து விளையாடும் நேரம் இதுவல்லவே!

பழிச்சொல் வேண்டாம் போக விடுவாயா?"

 

"பொழில் போன்ற  அழகு மேனியே!

எழில் கொஞ்சும் அழகு கண்ணே !

வழி தெரியாமல் சிக்கித் தவிக்கிறேன்!

விழிச்சிறையில் அடைத்தவளே விடுதலை தருவாயா?" 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment