"தனிமரம்"- சிறு கதை

 


மாங்குளம் என்ற அமைதியான, போர் சூழல் இன்று மறக்கப்பட்ட,  கிராமத்தில் ஒரு தனி ஆலமரம் நின்றது, அதன் வேர்கள், குண்டுகளாலும் ஷெல்களாலும் எரிந்த பூமியில் ஆழமாக மண்ணுக்குள் நீண்டு இருந்தது. அதன்  கீழ் ஒரு தமிழ்த் தாய் சுந்தரி அமர்ந்திருந்தாள். அவளது வாழ்க்கை தன்னைச் சுற்றியுள்ள நிலத்தைப் போல வாடி, தனிமையாகி இருந்தது. போர் முடிந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன, ஆனால் சுந்தரிக்கு அவள் இதயத்தில் போர் இன்னும் முடியவில்லை, ஏனென்றால் அவள் குடும்பம் - அவளது கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் - விசாரணைக்காக இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள். ஆனால் அதன்பின் இன்னும்  திரும்பி வரவில்லை.

உள்நாட்டுப் போரின் முடிவு அமைதியின் கொடூரமான சாயலைக் கொண்டு வந்தது. போர் நிறுத்தத்தை தொடர்ந்து வந்த நாட்களில், தாங்கள் சந்தேகிக்கப்படும் ஆண்கள், பெண்கள்  மற்றும் சிறுவர்கள் அனைவரையும் விசாரணைக்காக சரணடையுமாறு கோரி சீருடை அணிந்த அரச ஆயுத படையினர் அவளது கிராமத்தின் வழியாக ஊர்வலமாக சென்றனர். சுந்தரியின் கணவர் ராகவன், சிவா மற்றும் அர்ஜுனன் என்ற இரு மகன்களுடன் அவளது மகள் மீனா, வெறும் பதினேழு வயதுடையவளும் அழைத்துச் செல்லப்பட்டாள். சுந்தரி "அவள் ஒரு சிறிய பெண்" என்று கெஞ்சினாள், அழுதாள். ஆனால், வீரர்கள் காது கேளாதவர்களாக மாறி, எண்ணற்ற மற்றவர்களுடன் அவர்களை ஒரு டிரக்கின் [ஒரு பெரிய சாலை வாகனம்] பின்புறத்தில் தள்ளினார்கள். வழக்கமான விசாரணைக்குப் பிறகு திரும்பி அனுப்புவோம் என்று ராணுவ வீரர்கள் உறுதியளித்தனர். ஆனால் நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறி, இப்போது பதினைந்து வருடங்கள் வேதனையளிக்கின்றன.

பதினைந்து ஆண்டுகளாக சுந்தரி  கிராமத்தில் "தனிமரம்" மாக இன்னும் தன் கணவனும் மூன்று பிள்ளைகளும் வருவார்கள் வருவார்கள் என்று கண்ணீருடன், அதிகமாக  அவள்  விடியற்காலையில் இருந்து மாலை வரை ஆலமரத்தின் அடியில் அமர்ந்து, தனது அன்புக்குரியவர்களின் பார்வைக்காக தினம் காத்திருந்தாள். மாங்குள கிராமவாசிகள், அவள் முதுகுக்குப் பின்னால் பரிதாபமான வார்த்தைகளைக் கிசுகிசுத்தாலும், அவளுடைய வலிமையைப் பாராட்ட என்றும் தயங்கவில்லை. ஆனால் சுந்தரியின் இடைவிடாத தேடல் மற்றும் அதற்காக அவளின் பரந்தப் பட்ட  குரலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கவனத்தை ஈர்த்ததால், அது ஒரு அகிம்சை போராட்டமாக வலுப்பெற தொடங்கியது. 

அவளுடைய போராட்டம் வெறும் துயரம் மட்டுமல்ல, அவளை மௌனமாக்க விரும்பும் சக்திகளுக்கு எதிரான ஒரு நிலையான போராட்டம் ஆகும். சில மாதங்களுக்கு ஒருமுறை, அவள் தலைநகருக்குச் சென்று, அரசாங்கத்திடம் மனு தாக்கல் செய்வாள், இராணுவ முகாம்களின் கதவுகளைத் தட்டுவாள், மனித உரிமை அமைப்புகளின் அலுவலகங்களுக்குச் செல்வாள். ஆனால் ஒவ்வொரு முறையும், அவள் சரியான பதில் ஒன்றையும் பெற முடியவில்லை. அவள் பலவழிகளில் பயப்படுத்தப்பட்டும் மோசமாகவுமே கையாளப்பட்டாள். அது மட்டும் அல்ல,  அவளது குடும்ப உறுப்பினர்கள் எவருமே  இதுவரை காவலில் வைக்கப்படவில்லை என மறுத்தது. "அவர்கள் வேறு நாட்டிற்கு தப்பிச் சென்றிருக்க வேண்டும்" என்றும் "ஒருவேளை அவர்கள் இறந்திருக்கலாம்." என்றும் ஏளனமாக கூறியும் வந்தது. ஆனால் சுந்தரிக்கு உண்மை தெரியும் -  அவளுடைய குடும்பம் தனக்கு முன்னாலேயே அழைத்துச் செல்லப்பட்டது, அவர்கள் இன்னும் திரும்பி வரவில்லை.

சுந்தரி தனது பல வருட தேடுதலில் இறுதியாக உள்ளூர் இராணுவத் தளபதியுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய முடிந்தது. அவனுடன் சில நிமிடங்கள் அனுமதிக்கப்படுவதற்காக அவள் பல நாட்கள் அங்கு பயணம் செய்துள்ளாள், கொளுத்தும் வெயிலில் மணிக்கணக்கில் வெளியே காத்து நின்று இருக்கிறாள். அவள் இறுதியாக ராணுவ முகாமுக்குள் உள்ள சிறிய அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​​​அங்கு மேசைக்குப் பின்னால் இருந்த அலுவலகர் அவள் சமர்ப்பித்த அத்தாட்ச்சிகளையோ அல்லது அவளின் வேண்டுகோள் நிறைந்த கடிதத்தையோ ஏறிட்டு  கூட பார்க்கவில்லை.

ஆனால் அவள் தளரவில்லை. ஔவையின் மூதுரையை தனக்குள் முணுமுணுத்தாள்


"அடுத்தடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகாதொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா"

ஒரு காரியம் நிறைவேற வேண்டுமென்று தொடர்ந்து முயற்சிகள் செய்தாலும், ஆக வேண்டிய காலம் வந்தால்தான் ஆகும். மரம் உயரமாக வளர்ந்துவிட்டது என்பதற்காக உடனே பழம் பழுக்கத் தொடங்கிவிடுமா? பூப்பூத்துக் காய் காய்த்துப் பழுக்கிற காலத்தில்தான் பழுக்கும் என்று அவளுக்கு தெரியும். ஆனால் அந்த காலத்தை விரைவில் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை, அவளின் முயற்சியை ஊக்கிவித்துக் கொண்டே இருந்தது. தளர்ச்சியடையாமல் தொடர்ந்து முயல்க. ஒரு முறை, இருமுறை அல்ல, ஓராயிரம் முறையானாலும் முயல்க. அயராமல் செய்கிற முயற்சி உரிய பயனைத் தரும் என்ற வள்ளுவரின் குறள் - "ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர்" - அவளுக்கு மனம் சோராமல் தொடர்ந்து போராட பலம் கொடுத்தது.

"ஐயா, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என் கணவரையும் மூன்று குழந்தைகளையும் உங்கள் ஆட்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்கள் திரும்பி வருவார்கள் என்று பல முறை என்னிடம் கூறினார்கள், ஆனால்  எதுவும் இன்னும் நடக்கவில்லை. நான் உங்களிடம் கெஞ்சுகிறேன், தயவுசெய்து அவர்களைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள்."

தளபதியின் குரல் எந்த தயக்கமும் கருணையும் இல்லாமல் . "நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மோதலின் போது பலர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உங்கள் குடும்பம் அரசுக்கு எதிராக தொடர்புபட்டிருந்தால், அவர்கள் ஒருவேளை வேறுவிதமான விதியை சந்தித்திருக்கலாம்? "

சுந்தரியின் இதயம் இறுகியது. "ஆனால் அவர்கள் போராளிகள் இல்லை ஐயா. அவர்கள் சாதாரண மனிதர்கள். என் மகளுக்கு பதினேழு வயதுதான். நான் எல்லா இடங்களிலும் தேடினேன். தயவுசெய்து அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிய வேண்டும். நீங்கள் தான் பிடித்துக்கொண்டு போயிருந்தீர்கள் , அப்படியென்றால் என்ன நடந்தது கட்டாயம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும், எதுவாகினும், அவர்களும் இந்த நாட்டின் மூத்த குடிகள் "

தளபதி இறுதியாக மேலே பார்த்தார், அவரது கண்கள் கடினமாகவும் அலட்சியமாகவும் இருந்தன. "இந்த வழக்குகள் பொதுவானவை, பெண்ணே. பலர் காணாமல் போனார்கள். இதை வைத்து உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள். பதிவுகள் இல்லை. வேண்டும் என்றால் மரணச்சான்றிதலும் இழப்பீடும் தரலாம். அதற்க்கான வழியை பாருங்கள். அதை பெற்று  இதை மறந்துவிட்டு, உங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடருங்கள்."

"ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும் வரை என்னால் நகர முடியாது," சுந்தரியின் குரல் உடைந்தது, ஆனால் அவள் அவன் முன் அழாமல், ஒரு கண்ணகியாக நின்றாள். "தயவுசெய்து, என் மகள் ஒரு குழந்தை, பெண் குழந்தை, அவளை என்ன செய்தீர்கள்? ,பொய் சொல்லவேண்டாம் ? உங்களுக்கு குழந்தைகள் ஒன்றும் இல்லையா?"அவள் கோபத்தில் கேட்டாள். 

தளபதி நாற்காலியில் சாய்ந்தார், கண்ணை மூடினார், பின் வேறு பக்கம் பார்த்துக்கொண்டு  "அம்மா வீட்டுக்குப் போ. உன் புரிதலுக்கு அப்பாற்பட்ட விடயங்களில் உன்னை ஈடுபடுத்தாதே." அதட்டிப் பேசினான். புத்த சமயம் வாழ்வதாக கூறும் பூமியில், நீதி, மனிதம் இறந்துவிட்டது!!

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவளின் விடாமுயற்சியின் பயனாக, சுந்தரி நீதிமன்ற அறையில் நீதிபதியின் முன் நின்றாள். இது தமிழரினதும் உலகத்தினதும் கவனத்தை ஈர்த்த ஒரு வழக்கு - அவளைப் போன்ற தாய்மார்களின் சாட்சியம் மற்றும்  யாருடைய மகன்கள், மகள்கள், கணவர்கள் வலிந்து காணாமல் போனார்களோ அவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர், இதுவே அவளுடைய கடைசி நம்பிக்கையாக இருந்தது. இறுதியாக இது அரசாங்கத்தை, உண்மையை ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தும் என நம்பினாள்.  

நீதிபதி, சோர்வான கண்களுடன் கூடிய ஒரு முதியவர், அவளது வழக்கறிஞர் தனது வழக்கை முன்வைப்பதைக் உற்றுக் கேட்டார். மனித உரிமை மீறல்கள், இதுவரை விசாரிக்கப்படாத வலிந்து காணாமல் போனவர்கள் பற்றி வழக்கறிஞர் மிக விபரமாக சாட்சிகளுடன் பேசினார். அவள், சாட்சியாகவும், வழக்கிட்ட நபராகவும்  தனக்கு வரும் பேசும் தருணத்திற்காக காத்திருந்த சுந்தரியின் இதயம் துடித்தது.

நீதிபதி அவளை முன்னோக்கி அழைத்தபோது, ​​சுந்தரி தொண்டையில் ஒரு கட்டியை உணர்ந்தாள். "நான் பதினைந்து வருடங்களாக என் குடும்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்," என்று அவள் ஆரம்பித்தாள், அவள் குரல் தளதளத்தது, கண்ணீர் வடிந்தது, ஆனால் உறுதியாக சாட்சி கூட்டில் நின்றாள். "என் கணவர், என் மகன்கள், என் மகள் அனைவரையும் இராணுவம் பிடித்துச் சென்றது. நான் ஒவ்வொரு அரச அதிகாரத்தையும் கேட்டேன், கெஞ்சினேன், ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று யாரும் என்னிடம் இதுவரை சொல்ல மறுத்தார்கள், எனக்கு உண்மை மட்டுமே வேண்டும்."

நீதிபதி பெருமூச்சு விட்டார். "அம்மா, இது நடந்தது ஒரு கடினமான காலத்தில் , நீண்ட மற்றும் இரத்தக்களரி போரில். பலர் காணாமல் போனார்கள்." என்று அவளைப்பார்த்து கூறினார்.

அவள், சுந்தரி , வாய்விட்டு சிரித்தாள், "கணம் நிறைந்த நீதிபதி அவர்களே, நான் கேட்பது போர் முடிந்தபின், முடிவிற்கு வந்தபின், விசாரணைக்கு என, அரசின் கோரிக்கைக்கு இணங்க சரணடைந்து, அவர்களால் அழைத்துச்செல்லப்பட்டு வலிந்து காணாமல் போனவர்களையே, அதை நீங்கள் முதலில் விளங்கி கொள்ளுங்கள்" என்றாள். அதைத்த தொடர்ந்து

"உங்கள் குடும்பம் வீட்டிற்கு வருவதற்கு ஒவ்வொரு நாளும் காத்திருப்பது என்னவென்று உங்களுக்கு புரிகிறதா?" சுந்தரியின் குரல் வலுத்தது. "நான் ஒவ்வொரு நாளும் அந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து, அவர்கள் திரும்பி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். ஆனால் ஒருபோதும் இதுவரை நடக்கவில்லை . அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நான் அறியும் வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன்." என்றாள்.

நீதிபதி சங்கடமான நிலையை உணர்ந்தார்.  "நீதிமன்றம் உங்கள் மனுவை பரிசீலிக்கும். நாங்கள் இந்த விடயத்தை மேலும் விசாரிப்போம், ஆனால் இந்த வழக்குகள் சிக்கலானவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நேரம் ஆகலாம்." அவரின் கவனம் நீதியை நிலைநாட்டுவதை விட, சமாளிப்பதிலேயே முழு கவனமாக இருந்தார்.

"நான் ஏற்கனவே பதினைந்து வருடங்கள் காத்திருக்கிறேன்," அவள் சொன்னாள், அவள் குரல் ஆத்திரமும் சோகமும் கலந்து நடுங்கியது. "நான் இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்?", ஆனால் நீதிபதி எந்த பதிலையும் வழங்காமல் வழமை போல் வழக்கை ஒத்திவைத்தார்.

மெதுவாக நகரும் சட்ட அமைப்பில் சுந்தரியின் விரக்தி இறுதியில் அவளை எதிர்ப்பில் சேர வழிவகுத்தது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் தொடர்ந்து நடைபெறும் வலிந்து காணாமல் போனோர் சங்கத்தின் ஆர்ப்பாட்டங்களில் அவள் முதல் முறையாக இணைந்துகொண்டாள், என்றாலும் தனிமரமாக தன் நடவடிக்கைகளையும் தொடர்ந்தாள். சுந்தரி , மற்ற தாய்மார்கள் மற்றும் விதவைகளுடன் சேர்ந்து, காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களின் படங்களைப் பிடித்தபடி தெருக்களில் அணிவகுத்துச் செல்லத் தொடங்கினார்.

அத்தகைய ஒரு போராட்டத்தில், ஒரு நாள், சுந்தரி ஒரு அரசாங்க கட்டிடத்தின் முன் நின்று, “எங்கள் குழந்தைகள் எங்கே?” என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை வைத்திருந்தார். கூட்டம் பதட்டமாக இருந்தது, அவர்களின் குரல்கள் தெருக்களில் எதிரொலிக்கும் கோஷங்களில் எழுந்தன.

போராட்டக்காரர்கள் சத்தம் எழுப்பியதையடுத்து, ஆயுதம் ஏந்திய போலீசாரும் ராணுவத்தினரும் அவர்களை சுற்றி வளைத்தனர். ஒரு அதிகாரி சுந்தரியையும் மற்ற பெண்களையும் அணுகினார். அவன் முகம் கடினமாக இருந்தது, அவமானத்தால் கண்கள் சுருங்கியது. "இந்த போராட்டம் சட்டவிரோதமானது," என்று அவன் நாயைப் போல  குரைத்தான். உடனே கலைந்து செல்லுங்கள், இல்லையெனில் கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டினான்.

ஆனால், சுந்தரி குரலை உயர்த்தி முன்னேறினாள். "நாங்கள் நீண்ட நேரம் அமைதியாக காத்திருந்தோம், உண்மை தெரியும் வரை நாங்கள் வெளியேற மாட்டோம்." என உறுதியாக கூறி, அந்த இடத்தில் மற்றவர்களுடன் அமர்ந்தாள்.

அதிகாரி ஏளனமாக சிரித்த படி  "எதுவும் இல்லாத இந்த  இடத்தில் நீங்கள் சிக்கலை ஏற்படுத்துகிறீர்கள். உங்களுக்கு நிலைமை மோசமாகும் முன் வீட்டிற்குச் செல்லுங்கள்." மீண்டும் தன் துப்பாக்கியை காட்டி எச்சரித்தான். 

"விடயங்கள் ஏற்கனவே மோசமாக உள்ளன," சுந்தரி மீண்டும் கத்தினாள். "நீ என் குடும்பத்தை அழைத்து சென்றாய். எனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. உனக்கு வேண்டுமானால் என்னை கைது செய். ஆனால் எங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே என்று கேட்பதை நாங்கள் நிறுத்த மாட்டோம்!" அவளும் எச்சரித்தாள்.

கூட்டத்தினர் கைதட்டல் மற்றும் முழக்கங்களுடன் தமது போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களின் எதிர்ப்பின் சத்தம் அந்த சூழலில் எங்கும் காதுகளில் ஒலித்தது. அவள் பல வருட போராட்டத்தின் வலியை ஆழமாக உணர்ந்தாள். இராணுவத்தால், அரசாங்கத்தால், நீதிமன்றத்தால் தாம் எந்த தீர்வும் இன்றி அவதிப்படுவதை உணர்ந்தாள். தன்னந்தனியாக அவள் மீண்டும் தினமும் காத்திருக்கும்  தனி ஆலமரத்தின் அடியில் போய் அமர்ந்தாள்.

 

அவளது குடும்பம் அரசபடையால் கொண்டு செல்லப்பட்டு  பதினைந்தாவது ஆண்டு நிறைவை நெருங்கும் வேளையில், சுந்தரியின் பலவீனமான உடல் மீண்டும் தலைநகருக்கு பயணத்தை மேற்கொண்டது. இம்முறை, போரின் போது காணாமல் போன பொதுமக்கள் தொடர்பில் விசாரணை செய்வதாக உறுதியளித்த புதிதாக உருவாக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு அவள் சென்றாள். அவள் இதன் தந்திரத்தை, உலகை ஏமாற்றும் வேலையை கேள்விப்பட்டிருந்தாள், ஆனால் அவளுடைய இதயத்தில் ஏதோ ஒன்று, ஒருவேளை கடைசி நம்பிக்கையின் மினுமினுப்பு, கடைசியாக ஒரு முறை முயற்சி செய்ய அவளை வற்புறுத்தியது.

 

சுந்தரி தனது குடும்பத்தின் மங்கலான புகைப்படத்தை அங்கு வழங்கினாள், பல வருடங்கள் தன்  மார்போடு நெருக்கமாக வைத்திருந்த படங்கள் அவை. "இவர்கள் என் அன்புக்குரியவர்கள்," அவள் குரல் கரகரப்பான ஆனால் நிதானமாக இருந்தது. "அவர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரிய வேண்டும். நான் அவர்களை, நான் இறக்கும் முன்பு எம்  வீட்டிற்கு அழைத்து வர வேண்டும்." அவள் கெஞ்சினாள்.

 

அதிகாரிகள் அவளை இம்முறை கொஞ்சம் அனுதாபத்துடன் பார்த்தார்கள், ஆனால் இது உண்மையான அனுதாபமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது? அவர்களின் கண்கள், அவள் மீண்டும் மீண்டும் பார்த்த, அதே உதவியற்ற கருணையற்ற  தன்மையால் நிரம்பியிருந்தன. அவர்கள் விசாரிப்பதாகவும், காப்பகங்களை மறுபரிசீலனை செய்வதாகவும், சாட்சிகளை அணுகுவதாகவும் உறுதியளித்தனர். அவர்களின் வார்த்தைகளின் பழக்கமான ஓட்டை அவளுக்குத் தெரிந்திருந்தாலும், சுந்தரியால் நம்புவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. 

 

நீண்ட பயணத்தை மீண்டும் மாங்குளம் நோக்கிச் சென்றபோது, ​​உடல் வலுவிழந்தாலும், நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்  இன்னும் அந்த பலவீனமான உடலில் ஒட்டிக்கொண்டிருக்க, தன் போராட்டம் இன்னும் வெகு தொலைவில் இருப்பதை சுந்தரி அறிந்தாள். தனி ஆலமரம், தனிமரமான  அவளுக்காகக் காத்திருந்தது, அதன் வேர்கள் அவளுடன் பிணைக்கப்படாத விடாமுயற்சியின் பிணைப்பில் பின்னிப்பிணைந்தன.

 

அதனால் அவள் அந்தத் தனிமரம் போலத் தொடர்வாள் - காலத்தின் காற்றுக்கு எதிராக தனித்து நின்று, காத்திருந்து, தேடி, தன் குடும்பத்தின் நினைவை மங்க விட மறுத்து, எத்தனை சக்திகள் அவளை அலைக்கழித்தாலும், அவளுடைய அன்புக்குரியவர்கள் திரும்பி வரும் வரை, போர் முடிக்க மாட்டாள்,  ஓய்வெடுக்க மாட்டாள் என்று எல்லோரும் நம்பியிருந்த அந்த வேளையில் ... 

 

நேற்று கனவில்

 

"புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.

சிவில் உடை அணிந்த

அரச காவலர் அவரைக் கொன்றனர்.

யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே

அவரது சடலம் குருதியில் கிடந்தது!"

 

இன்று நனவில்

 

"தனிமரம் சுந்தரி நீதிமறுக்கப்பட்டார்

சிவில் உடை அணிந்த

அரச காவலர் அவரைக் மிரட்டினர்

ஆல மரத்தின் அடியருகே

அவளது சடலம் வாள்வெட்டுடன் கிடந்தது!" 

    

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment