உளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்

வாழ்க்கை வாழ்வதற்கே. ஆம்! வாழ்வதற்கே என்றால் எப்படிப்பட்ட
வாழ்க்கை? ஏதோ உண்டோம். உறங்கினோம். விழித்தோம் என்கிற வாழ்க்கையா?வெந்ததைத் தின்றோம் விதிவந்தால் செத்தோம்!’ என்கிற வழக்கு மொழிக்கு ஏற்ப வாழ்வதெல்லாம் வாழ்வாகாது. வாழ்க்கை என்பது மகிழ்ச்சி நிறைந்ததாக, மன நிறைவானதாக, எல்லா வளமும் நலமும் பொருந்தியதாக அமைய வேண்டும். () அமைத்துக்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்குத் தவறான பொருள் கொண்டு, தானாக வாழ்க்கையில் வளம் சேர வேண்டும் என்று தளர்ந்து வாழ்வதால் என்ன பயன்? உலகமும் இந்தப் பிரபஞ்சமும், செயல்விளைவு தத்துவத்தின் அடிப்படையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிற பேருண்மையை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது. எதுவும் இந்த உலகத்தில் தானாக நிகழ்ந்துவிடாது என்பதுதான் உண்மை.

இன்றைய உழைப்பு
எந்த வசதியையும், பணத்தையும், பதவியையும், பெயரையும், புகழையும் பெறுவதற்கு ஒருவிலைகொடுத்தாக வேண்டும். உழைப்பை, சிரமத்தை, காலத்தைத் தராமல் சும்மா எதுவும் கிடைக்காது. There is no free Lunch என்கிற ஆங்கில வார்த்தைகள் இதைத்தான் உணர்த்துகின்றன. உழைப்பையும், சிரமத்தையும், இடைஞ்சல்களையும் உதறித் தள்ளிவிட்டு உல்லாசமாக வாழ்க்கையைக் கழித்தால் பின்னாளில் சிரமங்களும், இடைஞ்சல்களுமே வாழ்க்கை என்றாகிவிடும்.

கல்லா, கடவுளா?
புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் ஊரில் இறை வழிபாட்டிற்காக ஒரு கோயிலைக் கட்டுவது என்று அவ்வூர் மக்கள் முடிவெடுத்தார்கள். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதல்லவா நடைமுறை.

ஊர்ப் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சிற்பியை அணுகி கோயிலுக்குத் தெய்வச்சிலை செய்து தருமாறு கேட்டார்கள்.. அதற்கு ஒத்துக்கொண்ட சிற்பியும் சிலைக்காக கல்லைத் தேடிச் சென்றபோது ஓர் பொருத்தமான கல்லைக் கண்டார். சிற்பி அந்தக் கல்லில் தெய்வச் சிலை செதுக்குமுன் அந்தக் கல்லோடு சற்று பேசினார்.

சிற்பி: உன்னை நான் தெய்வச் சிலையாக வடிக்க எண்ணுகிறேன். அனுமதி தருவாயா?

கல்    : என்னைத் தெய்வச் சிலையாக வடிக்க நீங்கள் என்ன செய்வீர்கள்?

சிற்பி: கூர்மையான உளியாலும் கனமான சுத்தியாலும் உன் உடலில் உள்ள தேவையற்ற பகுதிகளை வெட்டி எடுத்துவிடுவேன்.

கல்: ஆம். இந்தச் சிரமத்தை மட்டும் பொருத்துக் கொண்டால் உன் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும்.

கல்: என் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. எனக்கு எந்தத் துன்பமும் வேண்டாம். சிரமும் வேண்டாம். ஆளை விடுங்கள்.

சிற்பி: இந்தச் சிறிய ஒரு சிரமத்தை மட்டும் ஏற்றுக்கொண்டால் நீ உயர்ந்த பதவியை அடைவாய். உலகம் உன்னைக் கையெடுத்துக் கும்பிடுவார்கள். உன் காலடியில் சரணடைவார்கள். உனக்கு பாலபிஷேகமும் நெய் அபிஷேகமும் நடக்கும். உயர்ந்த இடத்தில் உன்னை வைத்து உலகமே கூத்தாடும்.

கல்: எனக்கு சும்மா இருக்கிற சுகம்போதும். நான் அடிவாங்கத் தயாரில்லை.

சிற்பி பண்பாடு மிக்கவர். கட்டாயப்படுத்தி அக்கல்லை சிலையாக வடிக்க விரும்பவில்லை. அருகில் இருந்த மற்றொரு பொருத்தமான கல்லைக் கண்டார். அதனிடமும் அனுமதி வேண்டினார். அந்த இரண்டாவது கல் சிற்பியிடம் சொன்னது, “நீங்கள் அந்தக் கல்லிடம் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன். நீங்கள் கூறியவைகிடைக்குமானால் நான் தயார், எந்தச் சிரமத்தையும் மேற்கொள்ளுவேன்என்றது. சிற்பி இந்த இரண்டாவது கல்லைத் தெய்வச் சிலையாகச் செதுக்கினார்.

ஊர் மக்கள் நாள் குறித்து நேரம் மங்கள இசை முழங்கி மந்திரங்கள் சொல்லி, கோயில் கருவறையில் சிலையை நிறுவி குடமுழுக்க நடத்தினார்கள். மக்கள் அனைவரும் இறைவழிபாட்டிற்காக தேங்காய், பூ, கற்பூரம், ஊதுபத்தி,பழம், வெற்றிலை பாக்குகளோடு அர்ச்சனை செய்கிற அர்ச்சகர் தேங்காயை உடைப்பதற்கு வசதியில்லாத்தால், ஒரு கல்லைக் கொண்டு வந்து வைக்குமாறு சொன்னார். கோயில் நிர்வாகிகளோ கல் தேடிச் சென்று சிற்பிக்கு அனுமதி மறுத்த கல்லை தூக்கிவந்து கருவறைக்குப் பக்கத்தல் வைத்தார்கள். அர்ச்சகர்கள் மாறிமாறி நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கன பக்தர்களின் தேங்காயை இன்றைக்கும் அந்தக் கல்லில்தான் உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இளமையில் உழைப்பு
எந்தக் கல் சிறிதுகாலம் சிலையடிக்கிற சிரமத்தைப் பொறுத்துக் கொள்ள மறுத்ததோ அந்தக்கல்தான் தன்வாழ்நாள் முழுவதும் அடிவாங்கிக்கொண்டு அல்லல்பட்டுக் கிடக்கிறது.

இளைஞர்கள் தங்களைத் தகுதிப்படுத்தக் கொள்கிற காலத்தில் முயற்சி செய்யாமல் சோம்பல் வாழ்க்கை வாழ்ந்தால் வாலிபம் கடந்த வாழ்க்கைப் பருவத்தில் துன்பம், வறுமை, கவலை, துயரம் மட்டும் வாழ்க்கையாகிவிடும். கவிப்பேர்ரசு வைரமுத்துவின் வைர வரிகளை எண்ணிப்பாருங்கள்.

இளமைக்கு நீ வேலைக்காரனாக இருந்தால்
முதுமைக்கு நீ எஜமான்னாக இருப்பாய்

இனிய வாழ்க்கை
இளமைக்காலத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் நம்மைச் செதுக்குகிற வேலையைத்தானே செய்கிறார்கள். மற்றவர்கள் நம்மைச் செதுக்க அனுமதிக்காதபோது அல்லது நம்மை நாமே செதுக்கிக்கொள்ள மறுக்கிறபோது கரடு முரடான, பண்படாத, அறிவில் ஒளியூட்டப்படாத்த மனிதர்களாகத்தான் நாம் வாழ முடியும். அஃறிணை விலங்குகளைப்போல் அறிவு வளர்ச்சி இல்லாமல் உடல் வளர்ச்சி மட்டும் இருந்தால் வாழ்க்கை வளப்படுவது எங்ஙனம் நிகழும்.

உளிபட்டால் சிலையாகலாம்,உழைத்திட்டால் வளமாகலாம்.
நன்றி - நா. மாசிலாமணி



மகிழ்ச்சி-கவிப்பேரரசு வைரமுத்து

காதெல்லாம் இனிக்கும் உங்கள் கரவொலிக்கு மகிழ்ச்சி

தன்னை நோக்கி வீசப்படும் வெள்ளிக் காசுகளைவிட
கரவோசையைத்தான் ஒரு கவிஞன் நேசிப்பான்
கரசேவை செய்ய வந்தவர்களே......., மகிழ்ச்சி!
கல் இல்லாத கரசேவை கவியரங்கில் மட்டும்தான்

நீங்கள், இவர்கள், நான், நாம் எல்லாம் மகிழப்பிறந்தவர்கள்
நிலவின் ஒளியை குடிக்கப் பிறந்தவர்கள்
நீலவான் வெளியை இழுக்கப் பிறந்தவர்கள்
பூமியை வியந்து புகழப் பிறந்தவர்கள்
மரிக்கும் வரைக்கும் மகிழப் பிறந்தவர்கள் - காரணம்
ஓர் ஆணின், பெண்ணின் மகிழ்ச்சியில் பிறந்தவர்கள்

கனி உண்ண வந்த பறவைகள் நாம் - வெறும்
மரம்கொத்தி கொத்தியா மரித்துப்போவது
இந்தப் பூமியென்ன மண்ணின் திரடசியா
மகிழ்ச்சியின் திரட்சி
மகிழ்ச்சி இல்லையேல் அலைகள் கொண்டு
ஜலதரங்கம் பாடுமா கடல்
இடிகள் கொண்டு தம்பட்டம் தட்டுமா வானம்
வீட்டுக்குத் திரும்பிவருமா வெளியூர் போன காற்று

உதிர்ந்து உதிர்ந்து இலைகள் உதிர்ந்து
நலிந்து நலிந்து வெயிலில் நலிந்து
மெலிந்து மெலிந்து கிளைகள் மெலிந்து
அளந்து அளந்து கொழுந்து எழுந்து
வளர்ந்து வளர்ந்து அரும்பு வளர்ந்து
மலர்ந்து மலர்ந்து மடல்கள் மலர்ந்து
சித்திரை மாதம் தாவர வர்க்கம்
முத்திரை காட்டி முகிழ்ப்பது எல்லாம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஐந்தே புலன்கள் ஆயினும் என்ன
ஒவ்வொர் புலனின் வாசல் வழியே
ஆயிரம் லட்சம் கோடி மகிழ்ச்சி
பூமியைச் சுற்றும் கடலைப் போல
சுற்றிச் சுற்றிச் சுற்றி மகிழ்ச்சி
அதை அறிந்துகொண்டவன் ஞானியாகிறான்
அனுபவிப்பவன் கலைஞன் ஆகின்றான்

கண்ணுக்கு மகிழ்ச்சி எது?
விடிகாலைச் சோலை..? இல்லை
வெற்றிலை போட்ட வானம்..? இல்லை
தூங்கும் குழந்தையின் தூங்காத புன்னகை..? 'ஊகும்";
கண்ணுக்கு மகிழ்ச்சி.. .. ஆனந்தக் கண்ணீர்

காதுக்கு மகிழ்ச்சி எது?
மழைபாடும் சங்கீதம்..? இல்லை
மைத்துனியின் கொலுசோசை..? இல்லை
காதுக்கு மகிழ்ச்சி.. .. வேலைக்குச் சென்று
வீடுவந்து அமர்கையில் மடிமீதேறி
குழந்தைபேசும் மழலைத் தமிழ்

வாய்க்கு மகிழ்ச்சி எது?
புதுமனைவியின் முதல் சமையல்..? இல்லை
முதல் காப்பியின் இளம் கசப்பு..? இல்லை
முரட்டு இருட்டில் திருட்டு முத்தம்..? இல்லை
வாய்க்கு மகிழ்ச்சி.. ..தப்பின்றி உச்சரிக்கும் தாய்மொழி

உடலுக்கு மகிழ்ச்சி தகிக்கும் காய்ச்சலில் தாயின் ஸ்பரிசம்
நாசிக்கு மகிழ்ச்சி நேசிக்கும் பெண்ணின் குழல்கொண்ட பூக்கள்
மண்ணுக்கு மகிழ்ச்சி மழையூட்டும் வாசம்
பெண்ணுக்கு மகிழ்ச்சி மதிக்கின்ற நேசம்
வார்த்தைக்கு மகிழ்ச்சி காலத்தால் உதிராத கவிதைக்குள் நிற்பது
வாஜ்பாய்க்கு மகிழ்ச்சி.. ..?
சாதுக்கள் எப்போதும் சாதுவாய் இருப்பது..!

மகிழ்ச்சி என்பது வேறொன்றும் இல்லை.. மனசின் கொள்ளளவு..!
மழைகொண்டு வருகிறது சமதர்ம மேகம்
குவளையில் பிடித்தால் ஒருவேளை மகிழ்ச்சி
குடத்தில் பிடித்தால் ஒருநாள் மகிழ்ச்சி
குளத்தில் பிடித்தால்.. வருடமெல்லாம் மகிழ்ச்சி
எது உன் மனசு..?
குவளையா? குடமா? குளமா? இல்லை.. குழப்பமா..?

குழந்தைபோல் மனம் இருந்தால் குழப்பமே இல்லை
உன்னை சண்டையிட்டு, மண்டியிட்டு கேட்கிறேன் காலமே...
உன் எலும்புகளுக்கும், திசுக்களுக்கும் வயசாகட்டும்
மனசுமட்டும் எப்போதும் குழந்தையாய் இருக்கட்டும்..!

குழந்தையாய் இருப்பது எத்தனை வசதி
கூப்பிட்ட குரலுக்கு நிலா வரலாம்
பல் இல்லாத வாயில் நட்சத்திரம் மெல்லலாம்
தொட்டிலில் கிடந்தாலும் தொட்டியில் கிடந்தாலும்
அழுகை கேட்டதும் ஆள் ஓடி வரலாம்
தனக்கு வந்த காதல் கடிதங்களில் கூட
தப்புக்களை மன்னிக்காத தமிழாசிரியர்
மன்னித்து மகிழ்வது மழலையிடம் மட்டும்தான்..

ஒரு சந்தேகம் எனக்கு.. ..!
குழந்தையும் தெய்வமும் ஒன்றென்றார் - ஒன்றா..?
இன்று உள்ள சூழலில் ஒப்பிடுதல் நன்றா..?
குழந்தைகள் மணல் வீடு கட்டியதுண்டே தவிர
சர்ச்சைக்குரிய இடத்தில் மதவீடு கட்டியதுண்டா?
கருத்துச் சுளை போன்ற குழந்தையொன்றை நிறுத்திக் கேட்டேன்
உன் மதம் என்ன குழந்தாய்..? தெரியாது
உன் ஜாதி ஏதும் சொல்லாய் பிள்ளாய்? தெரியலையே..
தப்புத்தப்பாய் பேசும்போது சரியாய் பேசிய மனிதன்
சரியாய் பேச தெரிந்த பிறகு தப்புத்தப்பாய் பேசுகிறான்
பிறை நிலாவுக்கு கறையில்லை எல்லாம் வளர்ந்த பிறகுதான்
குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை எல்லாம் நிமிர்ந்த பிறகுதான்

அறிவூட்டும் ஆசான்களே.. ..
குழந்தைகளை குழந்தைகளாய் இருக்கவிடுங்கள்
வந்தவன் போனவன் வைக்கோல் திணிக்க
பிள்ளையின் மூளையென்ன.. முச்சந்தித் தொட்டியா..?
பட்டாம்பூச்சி பிடிக்கவிடாத பாடத்திட்டம் எதற்கு?
பணக்கார மணமகளாய் இருக்கலாம்
முத்தமிட இடமில்லாமல் மொத்த நகை எதற்கு?
கனவுகாணவிடாத கணிதம்
இரசனை குறைக்கம் இரசாயனம்
சிறகு விற்ற காசில் சிலுவைகள்.. ..ஐயகோ..
வண்டலூரில் இருந்தாலும் தப்பித்திருக்கலாம்
வண்டலூரைவிட வகுப்பறை கொடியது

அதோ..
பெற்றுப்போட்ட பெருமாக்களே..!
10 வயதுவரை குழந்தைகளுக்கு நீங்கள் வேலைக்காரர்கள்
15 வயதுவரை உங்களுக்கு வேலைக்காரர்கள்
16 வயதுமுதல் பாகம் பிரிக்கும்வரை தோழர்கள்
பிறகு தூரத்து உறவினர்கள்

இளைஞர்களே..! உங்களை நம்புங்கள்
உங்கள் கால்கள் சிறகுகள், கண்கள் சூரிய சந்திரர்கள்
அதிஸ்டத்தை நம்பாதீர்கள் அது சீட்டில் கட்டிய பணம்
வந்தாலும் வரலாம்.. வராமலும் போகலாம்..
இங்கேதான் வாழ்க்கை, தற்கொலை
இரண்டுமே கடினம்.. கொலை சுலபம்
போட்டி உலகம் இது போராடு
நீயென்ன அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயா?
நாளும் நாளும் ஏன் நம்பிக்கை குறைகிறாய்
நீ முலிகையாய் இரு....
எங்கிருந்தோ காதல் வரும் உள்ளிருந்து குயில் கூவும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் விளங்கும் இளமையில்...

ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம்
ஆண்! அரசனாய் வந்து அடிமையாகிறவன்
பெண்! அடிமையாய் வந்து அரசியாகிறவள்
ஆண் பெண்ணின் பூரணம்..
பெண் ஆணின் பூரணம் - காரணம்
குறையும் குறையும் சேரணும்

திருமணம் என்பது இந்தியா மாதிரி
வேற்றுமையில் ஒற்றுமை முரண்பாடுகளில் உடன்பாடு
இருளை ஒளியை சேர்க்க முடியாத இயற்கை
கிழக்கை மேற்கை சேர்க்க முடியாத இயற்கை
சொர்க்கம் நரகம் சேர்க்க முடியாத இயற்கை
ஆணையும் பெண்ணையும் சேர்த்தே விட்டது
ஆணும் பெண்ணும் சேருவது இயற்கை
அழுகை, கண்ணீர், வலிகள் செயற்கை

இளமையில் அன்புசெய் அது முதுமைக்கு மூலதனம்
இளமையில் உழைப்பு முதுமையில் அறுவடை
முதியோர் மீது பாசம் எனக்கு...
அந்த வாழ்வின் வஞ்சிகளைக்
கண்டால் வணங்கத்தோன்றும் எனக்கு
ஒவ்வொரு பழமும் ஞானப்பழம்
நரை! மனிதக் குதிரை மூச்சிரைக்க மூச்சிரைக்க ஓடிவந்த நுரை
சுருக்கங்கள்! காலக் கவிஞன் எழுதி முடித்த
ஞானக் கவிதையின் கிறுக்கல்கள்
தலையாட்டம்! வரமாட்டேன்.. வரமாட்டேன்..
காலனுக்கு எதிரான அகிம்சை ஆர்ப்பாட்டம்

இளைஞர்களே..!
முதியவர்களை மட்டும் அழவிடாதீர்கள்
முதியவர்கள் அழுகின்ற தேசத்தில் மேகங்கள் அழுவதில்லை
ஒரு முதியவர் சொல்லும் மொழி வைரத்தைவிட மேலானது
முதியவர் சிந்தும் கண்ணீர் சூரியனைவிட சூடானது
வாழ்க்கை ஒரு நெல்லிக்காய்.. மேல்தோல் கசப்பு
ஆழம் ஆழம் போனால் உள்ளே உறங்கும் இத்துணுண்டு இனிப்பு
இனிப்பு வேண்டுமா..? கசப்பை விழுங்கு..!

எங்கள் பிராத்தனை எல்லாம் இதுதான்..
மண்ணகம் எல்லாம் மகிழ்ச்சியில் நிற்க
ஓரறி உயிரோ, ஆறறி உயிரோ
எல்லா உயிர்களும் இன்பம் எய்துக
சமுத்திர மேகம் மேலே எழுந்து
சமத்துவ மழையை தரையில் எறிக
நிலமோ கடலோ சிந்திவிடாமல்
உலக உருண்டை ஒழுங்காய்ச் சுற்றுக
இரங்கல் தீர்மானம் ஏதுமின்றி
நாடாளுமன்றம் நன்கு கூடுக
பள்ளிவாசலின் சாளரத்திலும்
பழைய கோவிலின் கோபுரத்திலும்
புறாக்கள் கட்டிய கூடுகள் வாழ்க
எங்கள் கவிதை கேட்போர் யாவரும்
இரயிலோ, மெயிலோ எதில் சென்றாலும்
வீடுதிரும்பி வீடுபேறடைக....... மகிழ்ச்சி....!!!!