அவள்ஏன் அப்படி? ...



கடந்த  சில நாட்களாக கவலை தோய்ந்த முகத்துடன் காட்சியளித்த அக்காவை அன்புடன் அருகில் அழைத்தாள் பாட்டி. அக்காவின் கவலைக்கு காரணம் இதுதான். அவருடன் கூடப்படித்த அவரது ஆருயிர் நண்பி உமா அவளது பெற்றோர்கள் வேறு ஊருக்கு இடம் மாறிச் சென்றதினால்  பாடசாலையும்  வேறு அவள் மாறிச் சென்றதும் அக்காவுடனான தொடர்புகளை முழுமையாக நிறுத்தி விட்டாள்.ஒரு நண்பியை இழந்த உணர்வில் நடைப் பிணமானாள் அக்கா.நிலைமையினை புரிந்துகொண்ட பாட்டி மெல்லச் சிரித்தது அக்காவுக்கு சினத்தினை ஊட்டியதோ என்னவோ கீழே பார்த்துக்கொண்டிருந்தாள்."ஏன் பிள்ளை உமாவினைஉன்னுடைய நண்பியாக என்னுமா நினைத்துக்கொண்டு இருக்கிறாய்.நட்பு என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா?"கேள்விமேல் கேள்வி கேட்ட பாட்டியைப் புரியாமல் நிமிர்ந்து பார்த்தாள் அக்கா.
"பிள்ளை நான் ஒன்று சொல்லுறன் கேள்.
<தனக்குப்பயன் கிடைக்கும் பொது இணைந்திருந்து தேவை முடிந்ததும் பிரிந்து செல்பவர்,
<ஆபத்து வேளைகளில் எமைவிட்டு ஓடுபவர்கள்,பொழுது போவதற்காக,சிரித்துப்பேசு வதற்காக மட்டும் எம்மோடு இணைபவர்கள்
<நிறைவேற்றக் கூடிய நியாயமான செயலை செய்ய விடாமல் எம்மைத் தடுப்பவர்கள்,
<சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லாதவர்கள்,
<பொழுது போக்குக்காக மட்டும் எம்மோடு இணைபவர்கள்,
<தனிமையில் பேசும்போது இனிக்கப்பேசி விசயங்களை பெற்றபின் பொது இடங்களில் அதனை வைத்து மற்றவர்களுடன் பழித்துப் பேசுபவர்கள்
இவர்களை எல்லாம் நண்பர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது பிள்ளை.
பாட்டியின் பேச்சு அக்காவை சிந்திக்க வைத்தது என்பது அக்காவின் முகத்தில் பளிச்சென்று தெரிந்தது.பாட்டி தொடர்ந்தாள்.
"நாம் பாடசாலையில் படிக்கின்ற போது கூடவே நிறைய மாணவர்கள் படிக்கின்றார்கள்.அவர்கள் எல்லாம் எமது நண்பர்களா?எம்முடன் திரைப்படம் பார்க்கக் கூடவே சிலர் வருகின்றார்கள் அவர்கள் எமது நண்பர்களா?வீதிகளில்    சந்திப்பதில் சிலர் சிரித்து எம்முடன் கதைக்கிறார்கள் அவர்கள் நண்பர்களா?விளையாட்டு மைதானத்தில் எம்முடன் இணைந்து விளையாடும் அவர்கள் எல்லாம் எமது நண்பர்களா?அல்லது தொலைபேசியில் பலமுறையும் தொடர்புகொண்டு நேரம் போவது தெரியாமலே எம்முடன் கதைக்கும் அவர்கள் நண்பர்கள்?யோசிச்சுப்பார்!இவர்களெல்லாம் ஒவ்வொரு தேவைகளுக்காக நம்முடன் இணைந்து கொள்பவர்கள்.இரயில் சிநேகிதர் எண்டு சொல்லுவம்..இவர்களில் எவராவது சிலர் எமக்கு நண்பராகக் கூடும்.அந்த உறவு இருவருக்கிடையில் நட்பாக உருவாகுவதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதில்லை.இருவருக்கும் இடையில் காணப்படும் ஒத்த மன உணர்வே போதுமானது.நேரில் காணும்போது புன்சிரிப்பு காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளம் ஆகாது.இதய புர்வமாக நேசிப்பது உண்மையான நட்பாகும்.இன்னும் சொல்லுறன் கேள்.
ஒருவருக்கு ஒருவர் மனவேறுபாடு கொள்ளாமல் தன்னாலே இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பரைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பு.உனக்கு அப்படி ஒருவர் நண்பராக இருந்திருந்தால் நிச்சயமாக உன்னை விட்டுத் தூரப் போய் இருந்தாலும் உன்னை மறந்திருக்கமாட்டார்.உன்னுடைய பாடசாலை பயணத்தில் உமா ஒரு இரயில் சிநேகிதி.அப்படியானவர்களுடன் நீயும் ஒரு இரயில் சிநேகிதியாக வாழக் கற்றுக்கொள்.எல்லோருடனும் சந்தோசமாகப் பழகு.உனக்கொரு உண்மையான நண்பி கிடையாமலா போய்விடும்."
பாட்டியின் புத்திமதி அக்காவைச் சாந்தப்படுத்தி இருக்க வேண்டும்.
"பாட்டிக்கு ஒரு மில்க்ரீ  போட்டுத்தாறேன்" என்று கூறியவாறே  அக்கா சமையலறைப் பக்கம் போய்க்கொண்டு இருந்தாள்.
பாட்டியும் மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவுக்கு  நடந்ததை கூற தொலைபேசியின் பக்கம் கையை நீட்டினார்.

ஆக்கம்:செல்லத்துரை மனுவேந்தன்

பெண்களே! சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி ?



திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள், தங்களுக்கு வரப்போகும் துணையைப் பற்றி பல கற்பனை பிம்பங்கள் உருவாக்கி வைத்திருப்பார்கள். அப்படி இருந்தாலும், அந்தத் துணை நல்ல, சிறந்த மனிதராக இருப்பாரா. அவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி? இக்கேள்விக்கு சத்குரு தரும் பதில் இங்கே

சத்குரு: இந்த உலகில் நூறு சதவீதம் சிறந்தவர் என்று யார் இருக்கிறார்கள்? அப்படி யாருமே இல்லை. உலகில் மிகச் சிறந்த செயல் என்று எதுவுமே கிடையாது. நீங்கள் எந்தச் செயல் செய்தாலும், அது எல்லோருக்கும் திருப்திகரமாக, நல்ல விதமாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. மிகச் சிறந்த மனிதனைத் தேடுவதை நிறுத்துங்கள். அப்படி ஒருவர் கிடைக்கவே போவதில்லை. உங்கள் இதயம் யாரிடமாவது நேசம் கொள்கிறதா? யாரிடமாவது தாவிப் போகிறதா? யாரிடமாவது பகிர்ந்து கொள்வதற்கான ஆர்வம், வருகிறதா? அவரையே உங்களுக்குச் சிறந்த துணையாகத் தேர்ந்தெடுக்கலாம். அவர் தான் உலகில் சிறந்த கணவரா? அப்படியல்ல. அவரிடம் குறைகள் இருக்கும். ஆனால், அந்த உறவை மிகச் சிறந்த உறவாக உங்களால் மாற்றிக் கொள்ள முடியும். கவனமோ, தெளிவோ இன்றி வாழ்க்கையை அணுகினால், எந்த உறவையும் மிக அசிங்கமான உறவாக மாற்றி விட முடியும். இரண்டு நிலையும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. முட்டாளுடன் கூட வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். அந்த உறவு அற்புதமாக அமைய வேண்டும் என்பது உங்கள் விழைவாக இருக்கும் பட்சத்தில் அதை அப்படி அமைத்துக் கொள்ள வேண்டிய கவனம் உங்களுக்குத் தான் தேவை. ஒவ்வொரு கணமும் அதே கவனத்தோடு, அதே விழிப்புணர்வோடு உறவை அணுகுங்கள். பத்து வருடங்கள் ஒழுங்காகத் தான் இருந்தேன். ஒரே ஒரு கணம் தான் தவற விட்டு விட்டேன் என்பது இங்கே செல்லுபடியாகாது.

ஒளிர்வு 86, தமிழ் இணைய சஞ்சிகை - மார்கழி மாத இதழ்[2017]

   தீபம் வாசகர்கள் அனைவருக்கும் குளிர்மையான மார்கழி வணக்கம்.


பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது.                            என்கிறார்.

அதாவது, நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.
இது நண்பர்களுக்கு மட்டுமல்ல சகலவிதமான உறவுகளுக்கும் பொருந்தும் என்பதே எமது கருத்து. அப்பொழுது தான் ஏமாற்றங்களையும், தேவையற்ற சச்சரவுகளை யும்  தவிர்த்துக்கொள்ளலாம்.
அமைதியாக வாழ்வோம், ஆனந்தமாக வாழ்வோம்.
- தீபம்.