திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற....(11)

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

திரிகடுகம் தொடர்கிறது....


பாடல் - 51

தூர்ந்து ஒழுகிக்கண்ணும், துணைகள் துணைகளே;

சார்ந்து ஒழுகிக்கண்ணும், சலவர் சலவரே;

ஈர்ந்த கல் இன்னார் கயவர்; - இவர் மூவர்,

தேர்ந்தக்கால், தோன்றும் பொருள்.

 

விளக்கம்:

வறுமையிலும் உதவுபவர் உறவினரேயாவார், கருத்துக்கு இணங்கி நடந்தவிடத்தும் பகைவர் பகைவரே ஆவர். துன்பம் செய்யும் கயவர்கள் பிளக்கப்பட்ட கல்லுக்கு ஒப்பாவார்கள். இவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

 

பாடல் – 52

கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்; காமுற்ற

பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை; நண்ணும்

மறுமைக்கு அணிகலம் கல்வி; - இம் மூன்றும்

குறியுடையோர்கண்ணே உள.

 

விளக்கம்:

கண்களுக்கு அணிகலம் கண்ணாடுதல், பெண்ணுக்கு அணிகலம் நாணம், மறுபிறப்புக்கு அணிகலன் கல்வி அறிவு. இம்மூன்றும் ஆராயும் இயல்புடையாரிடத்தில் உள்ளன.

 

பாடல் - 53

குருடன் மனையாள் அழகும், இருள் தீரக்

கற்று அறிவில்லான் கதழ்ந்துரையும், பற்றிய

பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும், - இம் மூன்றும்

எண்ணின், தெரியாப் பொருள்.

 

விளக்கம்:

குருடனுக்கு மனைவியின் அழகும், நூலைக் கற்றுப் பொருளை அறியாதவன் சொல்லுகின்ற சொல்லும், பண்களைத் தெரியாதவன் யாழின் இசையைக் கேட்பதும், இம்மூன்றும் ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது.

 

பாடல் - 54

தன் பயம் தூக்காரைச் சார்தலும், தான் பயவா

நன் பயம் காய்வின்கண் கூறலும், பின் பயவாக்

குற்றம் பிறர் மேல் உரைத்தலும், - இம் மூன்றும்

தெற்றெனவு இல்லார் தொழில்.

 

விளக்கம்:

தனக்கு உதவி செய்யாதவரைச் சேர்தல், சினம் கொண்ட போது பயன்படாத சொற்களைப் பேசுவது, குற்றங்களைப் பிறர் மேல் சொல்லுதல் ஆகியவை அறிவில்லாதவர் செயலாகும்.

 

பாடல் - 55

அரு மறை காவாத நட்பும், பெருமையை

வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும், யாண்டானும்

செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும், - இம் மூவர்

ஒன்றாள் எனப்படுவார்.

 

விளக்கம்:

மறைமொழியை வெளிப்படுத்தாத நட்பும், பெருமைக் குணத்தை விரும்பாத தலைவனும், தர்மத்தின் நீங்கிய பெண்ணும் ஒற்றர்கள் என்று சொல்லப்படுவார்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

 👈👈👈👉👉👉

"தைரியமானவள்" (சிறுகதை)

வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.

 

அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!     

ஒப்புமையில் கடலினையும், மீனையும், அம்பையும்மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும் , பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும் ,வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும் , விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'


காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.


அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய

சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர் . அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வப்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.


மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.


கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று


பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.


ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.


அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள் , குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.


மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது" . அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.


அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!

 

கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல, அவன் வீடு சென்றவள்

''ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள்'' என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.

''கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம்'' என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.


அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.  


சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன் , தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.


"தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"

நன்றி 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

புத்தாண்டு புதுமைகள் படைக்கட்டும்



வாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் .
இன்றய உலகில் தொழிநுட்பம் வளரும் அசுர மாற்றத்திற்குச் சமமாக மனிதனும் மாறிக்கொண்டிருக்கிறான்.

விஞ்ஞானம் எப்படி மனிதனுக்கு நன்மைகள் விதைத்தாலும் ,மறுபக்கத்தில் தீமைகளையும் இணையாக விதைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

 அதேபோலவே மனிதனும் காலச்சக்கரத்தில் மனிதத்ததை மேம்படுத்தியவர்கள் ஒருபுறம் இருந்தாலும் , அதே மனிதத்தை இழந்தவர்களும் இன்னொருபுறம் மலிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக வெவ்வேறு வடிவங்களில் திரிப்படைந்து இன்று உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்,மாறிவரும்  மாபெரும் விஞ்ஞானப் புரட்சிக்கே பெரும் சவாலாக அமைந்துவிட்டது.

எனவே, இடம்,காலம்,சுற்றாடல் புரிந்து ,நடந்து பிறக்கும் ஆண்டில் கொள்ளை நோய்கள், ஏமாற்றங்கள், கவலைகள் அற்ற ஆண்டாக அனைவருக்கும் கிடைக்க நாம் வாழ்த்தி வணங்குகிறோம்.
அதேவேளையில் தீபம் சஞ்சிகையும்  தரமான ,ஆரோக்கியமான ஆக்கங்களுடன்  பல்லாயிரக்கணக்கான வாசகர்களை சந்திக்கவைத்த தீபம் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் , தீபம்  தனது 11வது ஆண்டு நிறைவினை க்கடந்து கடந்து அதன் வளர்ச்சிப்பாதையில் மேலும் தமிழுக்கும், சமுதாயத்திற்கும் எம் பணி தொடரும் என்பதில் பெருமை கொள்கிறோம். நன்றி 
 
www.ttamil.com✍←தீபம்→✍www.theebam.com


கடந்த வாரம் வெளியான திரைப்படங்கள்

   


''கனெக்ட்''  விமர்சனம்  (Cinema Tamil Movie 'Connect' Review)

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திகில் - திரில்லர் திரைப்படம்.  விக்னேஷ் சிவன் தனது "ரௌடி பிக்சர்ஸ்" தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க,  பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

 தந்தையை இழந்து வாடும் நயன்தாராவின் மகள் ஹனீயா நஃபீஸ் எடுக்கும் ஒரு விபரீத முயற்சியால் வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக வருகிறது பேய். கொரோணா நிலையில், வெளியுலக உதவியைப் பெற முடியா சூழலில், நயன்தாரா தன் மகளை எப்படிக் காப்பாற்றினார் என்பதே கதை.

ஒரு முறை பார்த்து திகில் அடையலாம்![3/5]

 

லத்தி (லத்தி சார்ஜ்) விமர்சனம்  (Cinema Tamil Movie 'LATHTHI CHARGE ' Review)

வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா, பிரபு எனப்பலர் நடித்திருக்கும் தமிழ் நடிகர்களான ரமணா மற்றும் நந்தா இணைந்து 'ராணா புரொடக்ஷன்' என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்க,  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஒரு சாதாரண கான்ஸ்டபிள் தன்னையும், தன் குடும்பத்தையும் அதிகாரம் படைத்த சிலரிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார், என்பதே படத்தின் கதைக்கரு.

சுவாரஸ்யம் இல்லா திரைக்கதை[2.5/5]


தொகுப்பு:மனுவேந்தன் செல்லத்துரை


நம்மை நெருங்கிவரும் புதுமைகள்

அறிவியல்=விஞ்ஞானம்

360 டிகிரி உணரி


தானோட்டி கார்கள் அவற்றின் சுற்றுப்புறத்தை அறிந்துகொள்ள ,லிடார்(lidar) எனும் உணரிகள் உதவுகின்றன. லேசர் கதிர்களை செலுத்தி ,அது போகும் வழியில் உள்ள அசையும் ,அசையாப் பொருட்களை உணர்ந்து மோதலைத் தவிர்க்கின்றன.

இதுவரை இரண்டு பரிமாணத்தில் மட்டுமே பார்க்கத் தெரிந்த லிடார்களுக்கு ,போஹாங் அறிவியல் தொழிநுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ,தற்போது புதிய திறன்களாக 360 டிகிரி சுற்றுப் புறத்தையும் பார்க்கும் திறனைக் கொடுத்துள்ளனர்.

 ➡➡➡

குறுக்கெழுத்துப் பயன்கள்

வயது ஏற ஏற நினைவாற்றலும் ,மூளையின் செயல் திறனும் குறையத்தொடங்குகிறது. இது போன்ற குறைபாடுகளைத் தடுப்பதுக்கென்றே சில வீடியோ கேம்ஸ் வந்துள்ளன. அவை வயதானோருக்கு மூளைக்கு சுறுசுறுப்பினை தரவும் செய்கின்றன. ஆனால் அதைவிட நாளிதழ்களில் வரும் குறுக்கெழுத்துப் புதிர்களை நிரப்புவது மூளைத்திறன் குறைவதைத் தடுத்து நிறுத்துவதில் அதிக பலன் தருகிறது.

கொலம்பியா மற்றும் டியூக் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியாளர் 70 வயதானோர் மத்தியில் ஓராண்டு நடாத்திய ஆய்வின் முடிவு இது.

  ➡➡➡

செயற்கை வைத்தியம்

தசைகளை சிதைக்கும் தன்மை கொண்டது 'லூ கேரிக் 'நோய். இதற்கான புதிய மருந்தினை 'வெர்ஜ் ஜீனோ மிக்ஸ்' புதுமையான முறையில் கண்டுபிடித்துள்ளது.

நான்கு ஆண்டுகள் மனிதரில் நடாத்திய சோதனையில் வெற்றியும் கண்டுள்ளனர் வெர்ஜ் ஜீனோ மிக்ஸ்' நிறுவனத்தினர்.

  ➡➡➡

கூகிளின் காட்டுத்தீ வரைபடம்

செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்தினை சமூகநலனுக்கு பயன்படுத்தும் திடடத்தின் ஒரு பகுதியாக கூகிள் ,மெக்சிகோ,கனடா,அமெரிக்கா அவுஸ்திரேலியா நாடுகளின் வனப்பகுதிகளில் காட்டுத்தீ எச்சரிக்கை வரைபடங்களை

வெளியிடத்தொடங்கியுள்ளது.

காட்டுத் தீயை அடையாளம் கண்டு அது எந்த அளவில்,எந்த திசையில் ,அதன் தீவிரம் ,காற்றின் வேகம் போன்ற கணிப்புகளை கூகிள் நிமிடத்துக்கு நிமிடம் வழங்குவதன் மூலம் தீயணைப்புப் படையினர்  அவற்றினை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

  ➡➡➡

ஒளிவேக சாதனை


ஆப்டிகல் பைபர் கேபிள் எனப்படும் ஒளி இழை வடம் மூலம் தகவல் அனுப்புவதில் புதிய சாதனையை ஜப்பானிலுள்ள நெட்வெர்க் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் நிகழ்த்தியுள்ளனர். வழக்கமான ஒளி இழை வடத்தின் மூலம் ,நொடிக்கு 1.53 பெட்டா பிட்ஸ் அளவுக்கு வேகமாகவும்,அடர்த்தியாகவும் தகவல்களை பரிமாறி அவர்கள் சாதித்துள்ளனர். தற்போது இணையத்தில் புழங்கும் அத்தனை தகவல்களையும், ஒரு நொடியில் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு அனுப்புவதற்கு இணையான சாதனை இது என வல்லுனர்கள் பாராட்டியுள்ளனர்.

 

பிரதியாக்கம்:செ.மனுவேந்தன்