"அறிவியல் நோக்கில்....பகுதி-44B -பெளத்தம் ஒரு அலசல்''

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

பகுதி: 44 B / பின் இணைப்பு - தீபவம்சம் / 'இந்தியா இலங்கை மரபுகளுக்கிடையில் வேறுபாடு ஏன்?'

 [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]

 


இரண்டு மரபுகளுக்கும் இடையே பல குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, இலங்கை பாரம்பரியம் மூன்றாவது பௌத்த சபையைக் கூட்டுவதில் அசோகரின் பங்கையும், அவரது மகன் மகிந்த உட்பட இலங்கைக்கு புத்த மத நம்பிக்கையை மற்றும் மனிதாபிமான வேலையை பிரச்சாரப் படுத்தும்படி கட்டளையிடப் பட்ட ஊழியத்தை மேற்கொள்வதற்காக பல நபர்களை [missionary / மதப் போதகர்களை / மிஷனரிகளை] தொலைதூரப் பகுதிகளுக்கு அனுப்பியதையும் வலியுறுத்துகிறது. இருப்பினும், வட இந்திய பாரம்பரியம் இந்த நிகழ்வுகளை குறிப்பிடவில்லை. என்றாலும் குணாலா என்ற மற்றொரு மகனைப் பற்றிய கதையையும் மற்றும் இலங்கை பாரம்பரியத்தில் காணப்படாத பிற நிகழ்வுகளையும் தான் இது விவரிக்கிறது.

 


அது மட்டும் அல்ல, பொதுவான கதைகளை விவரிக்கும் போது கூட, இரண்டு மரபுகளும் பல வழிகளில் வேறுபடுகின்றன. உதாரணமாக, பௌத்த சமயத்தை மௌரியப் பேரரசு முழுவதும் பரப்பிய நிகழ்வுகளை எடுத்துரைக்கும், அசோகவதனம் மற்றும் இலங்கை மகாவம்சம் இரண்டும் அசோகரின் பேரரசி திஷ்யரக்ஷா [Tishyaraksha, கி.மு. 3 ஆம் நூற்றாண்டு. இவர்  மூன்றாவது மௌரிய பேரரசர் அசோகரின் கடைசி மனைவி ஆவார். அசோகவதனம் நூலின் கூற்றுப்படி, அசோகனின் மகனும், அவரின் வாரிசான குணாளனின் கண் பார்வை பறிபோக காரணமானவள்.] போதி மரத்தை அழித்ததாகக் குறிப்பிடுகின்றன.

எனினும் அசோகவதனாவில், பேரரசி தனது தவறை உணர்ந்த பிறகு மரத்தை பழைய இயல்பு நிலைக்கு கொண்டுவந்தாள். ஆனால், மகாவம்சத்தில், மரத்தின் ஒரு கிளை இலங்கையில் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், அவள் மரத்தை நிரந்தரமாக அழித்தாள் என்கிறது. மற்றொரு கதையில், இரண்டு நூல்களும் இராமகிராமத்தில் இருந்து [Ramagrama] கௌதம புத்தரின் நினைவுச்சின்னத்தை [புத்த தாதுவை] சேகரிக்க அசோகரின் தோல்வியுற்ற முயற்சிகளை விவரிக்கின்றன. அசோகவதனாவில், அவர் அதைச் செய்யத் தவறுகிறார், ஏனென்றால் புத்த தாதுவை வைத்திருக்கும் நாகர்களின் ஒப்பற்ற பக்தியுடன், அசோகனின் பக்தி ஒப்பிட முடியாததால், அசோகன் தோல்வி அடைந்தார் என்று கூறுகிறது; இருப்பினும், மகாவம்சத்தில், புத்தர் இந்த நினைவுச்சின்னத்தை இலங்கையின் மன்னர் துட்டகாமினியால் பிரதிஷ்டை செய்ய என முன்னரே தீர்மானிக்கப்பட்டு இருந்தார், ஆகவே அசோகன் தோல்வியடைந்தார் என்கிறது. இத்தகைய கதைகளைப் பயன்படுத்தி, மகாவம்சம் இலங்கையை புத்த மதத்தின் இருப்பை பாதுகாக்கும் இடம் என்று போற்றுகிறது. அது அவர்களின் விருப்பம், ஆனால் மற்ற மொழி, சமயம் கொண்ட தமிழ் மக்களின் வாழ்விடங்களிலும், அவர்களின் பூர்வீக நிலத்தை பறித்து, அங்கிருந்து அகற்றி புத்தரை [புத்தர் சிலையை] குடியிருக்க வைப்பதை எப்படி புத்தர் அனுமதிப்பார் ? அல்லது அது தான் மகாவம்ச புத்தரின் கொள்கையா ?, நான் அறியேன், பரா பரமே!  

 

சாருமதி (Charumati / Brahmi: 𑀘𑀸 𑀭𑀼𑀼 𑀫𑀓𑀻) சில சமயங்களில் சாருமித்ரா என்று அழைக்கப்படுபவர், இந்திய மௌரியப் பேரரசர் அசோகரின் மகள் மற்றும் அவரது மனைவி பேரரசி அசந்திமித்ராவின் [Asandhimitra] வளர்ப்பு மகள் ஆவார்.  அசந்திமித்ரா, அசோகரின் இரண்டாவது மனைவி மற்றும் முதல் பேரரசி மனைவி ஆகும். அசந்திமித்ரா அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். அவளுக்கு குழந்தைகள் இல்லை. அவரது மரணத்திற்குப் பிறகு, திஷ்யரக்ஷா அசோகரின் முதல் தலைமைப் பேரரசியானார்.

 

சாருமதி, அசந்திமித்ராவிடம் செவிலி பயிற்சி பெற்றார். அவர் காத்மாண்டு அல்லது காட்மாண்டூவில் [Kathmandu] நேபாள இளவரசர் சத்திரியர் தேவபாலவை [kshatriya named Devapala] மணந்தார். நேபாளத்தின் மிகப் பழமையான புத்த மடாலயங்களில் ஒன்றான சபாஹில் (Chabahil / சாருமதி விகாரை என்றும் அழைக்கப்படும்) மடத்தை நிறுவிய பெருமைக்குரியவர் ஆவார். அவர் தனது தந்தையின் வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில் அவரை கவனித்துக்கொண்டார் என்றும், அவருடன் புத்த யாத்திரைக்கு, உபகுப்தர் (Upagupta) சகிதம்  சென்றார் என்றும் நம்பப்படுகிறது. உபகுப்தர், மௌரியப் பேரரசர் அசோகரின் ஆன்மீக குருவாக இருந்தார் என அறியப்படுகிறது, சாருமதியும் அசோகர் பேரரசரும் நேபாளத்திற்குச் சென்றதாக புனித நூல் ஒன்று விவரித்தாலும், 2003 ஆம் ஆண்டு வரை தொல்பொருள் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், 2003 ஆம் ஆண்டில், தண்டோ சைத்யாவை [Dhando chaitya] புணருத்தாரனம் செய்யும் போது, ​​தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அவரது பெயருடன் செங்கற்களைக் கொண்ட கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தனர். மேல் முகம் பிராமியில் சா ரு வா டி [Cha Ru Wa Ti] என்றும், அத்துடன் சா ரு வா டி தண்டே [Cha Ru Wa Ti Dhande] என்றும் / ஹே து பிர பா [He Tu Pra Bha] என்று புஜிமோல் [Bhujimol script / the most ancient form of Nepal script.] எழுத்திலும் பொறிக்கப்பட்டு இருந்தது.

 

அசோகருக்கு பல ராணிகள் இருந்தபோதிலும், அசோகரின் கல்வெட்டுகள் மற்றும் ஆணைகளில் பெயர் பெற்ற ஒரே ராணி கருவாகி [Karuvaki] மட்டுமே. அப்படியே அசோகரின் மகன், திவரா [Tivara or Tivala] மட்டுமே கல்வெட்டுகளில், அவரது தாயுடன் [கருவாகி உடன்], ராணி ஆணையில் [Queen Edict] பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் வட இந்திய பாரம்பரியத்தின் படி, அசோகருக்கு குணாலா [Kunala] என்ற இரண்டாவது மகன் இருந்தான். குணாலாவுக்கு சம்பிரதி [Samprati] என்ற மகன் இருந்தான்.

 *அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

Theebam.com: "அறிவியல் நோக்கில்....[பகுதி-44C] பெளத்தம் ஒரு அலச..

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக..

Theebam.com: "அறிவியல் நோக்கில்...."பெளத்தம் ஒரு அலசல் . "

 

நன்றி  

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna] 

"அறிவியல் நோக்கில்....பகுதி-45B -பெளத்தம் ஒரு அலசல்''

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

 


பகுதி: 45 B / பின் இணைப்பு - தீபவம்சம் / 'அசோக மன்னனின் பதின்மூன்றாவது ஆணை சொல்லவது என்ன?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] 


அசோக மன்னனின் பதின்மூன்றாவது ஆணை:



இந்த அசோகன் ஆணையில், இந்தியாவின் பேரரசர் அசோகர் மற்றும் அவரது யோசனையான "தம்மத்தால் வெற்றி" பெறுவது பற்றி, அதாவது, போரை விட நீதி மற்றும் தார்மீக மதிப்புகள் மூலம் மக்களை வெல்வது பற்றிப் பேசுகிறது. அன்பு, கருணை மற்றும் நல்ல ஒழுக்க விழுமியங்களைப் பரப்புவதே மக்களை வெல்வதற்கான சிறந்த வழி என்று அசோகர் நம்பினார்.

அவர் தனது தருமத்தின் [தம்மத்தின்] செய்தி தனது சொந்த பேரரசுக்குப் அப்பால் பரவியுள்ளது என்று கூறுகிறார். இது எல்லைப் பகுதிகளையும், அறுநூறு யோசனைத் தொலைவில் உள்ள கிரேக்க மன்னர் அந்தியோகஸ் ஆட்சிக்கும் சென்றுள்ளது. அத்துடன், இதனால், டோலமி, ஆன்டிகோனோஸ், மாகாஸ் மற்றும் அலெக்சாண்டர் [Ptolemy, Antigonos, Magas and Alexander] ஆகிய நான்கு கிரேக்க மன்னர்களால் ஆளப்பட்ட நாடுகளுக்கு அவரது போதனைகள் சென்றடைந்ததாகவும் அசோகர் குறிப்பிடுகிறார்.


அதே போல, தெற்கே சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் தாமிரபரணி வரையிலும் அது (தம்மத்தால் கைப்பற்றப்பட்டது) வென்றுள்ளது என்கிறார். யோசனை என்பது பழங்காலத்தில் தூரத்தை அளக்க பயன்படுத்தப்பட்ட ஒரு வேத கால அலகாகும். இதன் சரியான அளவு சரியாகத் தெரியவில்லை. அறிஞர்களிடையேக் கருத்துவேறுபாடே நிலவுகிறது. இது 4 மைல்களிலிருந்து 9 மைல் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இது நவீனகால சிரியா, துருக்கி, ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பரந்த சாம்ராஜ்யத்தை ஆண்ட கிரேக்க மன்னன் மூன்றாம் அந்தியோகஸ் பற்றி பேசுகிறது. அவரது தலைநகரம் அந்தியோக்கி (இன்றைய துருக்கியில்) இருந்தது. அவரது பேரரசு அசோகரின் மௌரியப் பேரரசுக்கு நெருக்கமாக, மேற்கில் மத்திய தரைக்கடல் கடற்கரையிலிருந்து கிழக்கில் சிந்து நதி வரை நீண்டு, அண்டை நாடாக இருந்தது, அதனால்தான் அசோகர் தனது தர்மத்தின் பரவலைப் பற்றி பேசும்போது அவரைக் குறிப்பிடுகிறார் என்பதைக் கவனிக்க.

பண்டைய கிரேக்கரால் வரையப்பட்ட உலக வரைபடத்தில் (தொலெமி அல்லது தாலமி (Ptolemy) என்று பொதுவாக அழைக்கப்படும், குளோடியசு தொலெமாயெசு, கிபி 150ல் எழுதப்பட்ட  ஜியோகிரபிக்கா என்னும் புவியியல் தொடர்பான நூல் / Claudius Ptolemaeus "Geographia", 150 CE), இந்திய துணைக்கண்டத்தின் தெற்கே அமைந்துள்ள ஒரு பெரிய தீவு கிரேக்கர்களால் "Taprobane" என்று குறிப்பிடப்படுகிறது, இது நவீன வரலாற்றாசிரியர்கள் இலங்கை தீவு என்று அடையாளப் படுத்துகிறார்கள். இந்த சொல், தாமிரபரணி யில் இருந்து பெறப்பட்டது என்று ஊகிக்கிறார்கள்.

இருப்பினும், வி ஏ ஸ்மித்தின் சபாஷ் கார்கி அல்லது சபாஷ்கார்கி (Shahbaz Garhi, or Shahbazgarhi) உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் [English translation of the Shahbazgarhi  text by V A Smith], தாமிரபரிணி (சமசுக்கிருதம்: தாம்ரபர்ணி) என்பது தமிழ்நாட்டில் ஒரு நதியாகக் காணப்படுகிறது.- சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் தாமிரபரிணி வரை [நதி] என்று இருக்கிறது. / இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் வழியாகப் பாயும் ஒரு நதியின் பெயர் இது. சமஸ்கிருத வார்த்தைகளான தம்ரா (Tamra / செம்பு) மற்றும் பர்ணி (parni / இலை) ஆகியவற்றிலிருந்து இந்த பெயர் வந்தது. இந்த நதி இந்துக்களால் புனிதமாகவும் கருதப்படுகிறது.

 

சபாஷ் கார்கி அல்லது சபாஷ்கார்கி அசோகரின் கல்வெட்டுகள் கொண்ட கிராமம் ஆகும். இக்கிராமம் பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின், மார்தன் மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 293 மீட்டர் (964 அடி) உயரத்தில் உள்ளது.

*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக..

Theebam.com: "அறிவியல் நோக்கில்...."பெளத்தம் ஒரு அலசல் . "

 

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 46 தொடரும் / Will follow