"வாழ்க்கை என்னும் பெருங்கடலில்" & "ஏனிந்த கொடுமை?" & 'சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!'

"வாழ்க்கை என்னும் பெருங்கடலில்"

வாழ்க்கை என்னும் பெருங்கடலில்

வந்து மோதும் அலைகளெல்லாம்

வீழ்த்த வந்த பகைவன் அல்ல!

வெற்றி கொள்ளும் பயிற்சிகளே!

வாசல் தோறும் துயரங்கள்

வந்து நின்றால் கலங்காதே;

வேதனை கண்டு வாடுவதால்

விடியல் ஒன்றும் தோன்றிடுமோ?

 

இமய மலையின் உயரத்தில்

ஏறும் பாதைக் கற்களெல்லாம்

சுமையாய் நினைத்தால் சிகரத்தை

தொடுதல் என்றும் சாத்தியமோ?

தமியேம் என்று தயங்காமல்

தன்னம் பிக்கைச் சுடரேந்தி,

நிமிர்ந்து நடைபோடு! துன்பமெல்லாம்

நிற்கும் நிழலாய் மறைந்திடுமே!

- மனுவேந்தன்-செ

 [தமியேன்: தனியாக உள்ள நான் (தனித்து நிற்கும் நான்]


"ஏனிந்த கொடுமை?"

 

அத்தியடியில் நிற்கிறேன்

ஆனைமுகத்தானைக் கேட்கிறேன்

இன்பம் பொழிந்தவளையும்

ஈன்ற தாயையும்

உன்னிடம் அழைத்து

ஊமையாக்கி விட்டாயே! 

எரிவனம் எதற்கு?

ஏனிந்த கொடுமை?

 

 

'சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!'


சிங்கப் பாறையின் நிழலில் நிற்கிறேன்

சித்த மெல்லாம் எனக்கு உன்பெயரே!  

கண்ணாடிச் சுவர்களைத் தொடும் போது

கண்ணே உன்ஞாபகம் என்னை வாட்டுதே!


குன்றில் வரைந்த  தங்கநிற மங்கையே

குட்டி அரவணைப்பு தாராயோ நிழலில்!

தீட்டிய சிற்பத்தில் உன்னைக் கண்டேன்

தீராத மோகத்தில் அவளைத் தொட்டேன்!


சிகிரியாவின் தென்றல் காதலைச் சுமக்கிறது

சிறகடித்து வந்து இதயத்தை அணைக்கிறது!

சிங்கப்பாறை பற்றி தொல்லியலாளர் எழுதட்டும்

சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!

 

-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧 

0 comments:

Post a Comment