ஆலயத்தில் 'கள்வர்கள் கவனம் உங்கள் நகைகளையும், பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்' என்ற எச்சரிக்கும் பலகை கண்ணில் தெரிந்தது. அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அலங்கார கந்தனை பார்த்தான். நீ இந்த அலங்கார கோலம் எனறால், பெண்களை எப்படி குறை சொல்லுவேன்? அவர்களுக்கும் ஆசை அடிமனதில் இருக்கும் தானே?? கள்ளனையும்,
ஏமாற்றி பறிப்பவளையும் ... ' ... அவன் அதற்கு மேல் சிந்திக்கவில்லை. சனநெருக்கம் அவனை வெளியே தள்ளிவிட்டது. என்றாலும் அவன் வாய், தன் வேதனையை முணுமுணுத்துக்கொண்டு இருந்தது
ஐயோ ஸ்வாமினி [Swamini] நீ எனக்கு வேணாம்
பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்
மனச்சாட்சியை நீ விலைபேசினாய்
அட நீசொல்லு நீ மனுசியா ?
உனைப்போன்ற பெண்ணை நான் நம்பி வந்தேன்
உயிர்கொன்று நீ ஓடினாயே
எனைப்போன்ற ஆணை ஏமாற்றிவிட்டு
தினம் நூறு பொய்கூறுறாயேன்?
தேன்போலே பேசி துரோகங்கள் செய்தாய்
அதை யாருக்கும் நீ செய்யாதே
நான் போன பின்னர் எனைப்பற்றி இழிவாய்
யாரோடும் பேசிக் கொல்லாதே!
ஐயோ ஸ்வாமினி [Swamini] நீ எனக்கு வேணாம்
பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்!
ஆகஸ்ட் 21, தேர்த்திருவிழா இன்று. நல்லூர் திருவிழாவின் கடைசி பெரிய நாள் இது - தெருக்கள் பக்தர்களால் நிரம்பி வழிந்தன. நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர். அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர். அருண், காலையில் வெக்கை என்பதால், வேட்டி சால்வையுடன் மட்டுமே வந்தான். ஆனால் இன்று தேவையான பணம் கொண்டு வந்தான். அவன் கண்களுக்கு இன்னும் வெட்கம் இல்லை. ஆரணி அங்கு நிற்கிறாளா எனத் தேடிக் கொண்டு இருந்தது. ஆசை யாரைத்தான் விடுகுது?
இன்று அவனிடம் தாராளமாக பணம் இருப்பினும், ஒரு எளிய சாலையோர விற்பனையாளரிடமிருந்து வாங்கிய ஒற்றை சிவப்பு ரோஜாவை ஏந்தி, அங்கு காத்து நின்றான்.
அவன் கண்கள் அன்பால் நிறைந்திருந்தன.
ஆரணி தூர வருவது அவனுக்கு தெரிந்தது, ஆனால் அவள் தனியவரவில்லை. ஒரு இளம் தம்பதியாக, அவன் வாங்கிக் கொடுத்த சேலையுடனும் அலங்காரத்துடனும் வந்துகொண்டு இருந்தாள். அவளுக்கு அருகில் ஒரு தோழியையும் காணவில்லை. அவனுக்கு அவன் கண்ணையே நம்ப முடியவில்லை. அவன் நெஞ்சம் நடுங்கியது, அவன் இதயம் வெறுமையாகியது. அவள், அவனை கண்டும் காணாமலும், ஒரு கேலியான புன்னகையுடன் கூட்டத்திற்குள் நழுவினாள். அருணின் கையிலிருந்து ரோஜா தூசி நிறைந்த தெருவில் விழுந்தது. அவன் மனம் வாழ்வதா சாவதா என்று காதல் மேல் கோபம் கொண்டு ஏதேதோ புலம்பத் தொடங்கியது. அவன் இப்ப தத்துவவாதி (Philosopher) ஆகிவிட்டான்
தீ குச்சிகளை தேடிக்கொண்டிருக்காதீர்கள்
அவளிடம் கேளுங்கள் சிரிப்பில் இருந்து நெருப்பை
உண்டாக்குவது எப்படி என்று?
என் கல்லறைக்கு வரும் போதாவது
அவளை பார்த்து யாராவது கேளுங்கள்
அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று?
அருண் உயர்ந்த கோபுரத்தின் கீழ் தனியாக நின்றான். தேர் மணிகள் முழங்கின, சங்குகள் ஊதப்பட்டன, தெய்வம் தனது முழு மகிமையிலும் பிரகாசித்தது - ஆனால் அருணின் கண்கள் ஏமாற்றத்தால் நனைந்தன. அவன் திரும்பி பார்த்தான் ஆரணி ஒரு மூலையில், வெள்ளை மணலில் அந்த நபருடன் அருகில் இருந்து கடலை கொரித்துக் கொண்டு இருந்தாள். இடைக்கிடை அவர்கள் இருவரும் உரையாடுவது தெரிந்தது. என்றாலும் அவனுடன் அவள் முன்பு எப்படி அன்னியோன்னியமாக, நெருக்கமாக கொஞ்சி பேசினாலோ, அப்படி அது இருக்கவில்லை.
அந்த நேரத்தில், அந்த வழியாகச் சென்ற ஒரு வயதான ஒருவர், சற்று
நின்று, அவனது நெற்றியில் மெதுவாக புனித திருநீறு பூசினார்.
"மகனே," மெதுவாகச் சொன்னார், "உண்மையான கடவுள் ஒரு பூவைக் கூட அன்புடன் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ஆபரணங்களையும் தங்கத்தையும் கேட்பவர்களுக்கு அன்பு தெரியாது - அவர்களுக்கு ஆசை மட்டுமே தெரியும்."
அருண், அவரின் வார்த்தைக்கு முன் தலை குனிந்தான். அந்த வார்த்தைகள் ஆழமாகத் தாக்கின. பளபளப்பை தங்கம் என்றும், கவனத்தை பாசம் என்றும், பக்திக்கான ஆசை என்றும் தான் தவறாகப் புரிந்துகொண்டதை உணர்ந்தான். வாங்கி பெறப்படும் அன்பு நிலையானதல்ல. அது ஒரு நாள் விற்கப்படும். பரிசுகள், பொருட்கள், ஆடம்பரங்கள் மூலம் கட்டப்பட்ட அன்பு, அந்தப் பரிசுகள் இல்லாமல் போனவுடன் மங்கிவிடும்.
ஆனால் உண்மையான அன்பு வேறுபட்டது. அது ஆபரணங்களையும் செல்வங்களையும் எண்ணாது. பொருள்களை அளவிடாது. அது உள்ளம் உள்ளத்தோடு பிணையும் உணர்வு. கைகள் காலியாக இருந்தாலும், அன்பின் தூய்மை என்றும் அழியாது நிலைத்து நிற்கும்.
அருண், அன்று இரவு யாழை விட்டு புறப்பட்டான். ஆனால் அந்தப் பிரிவிலும் கூட, அவன் இதயம் மேலும் ஞானம் பெற்றது. ஏனெனில் அவன் உணர்ந்தான்—பொய்யான அன்பு, அழகு
மலர்கள் போலவே விரைவில் வாடிவிடும். அது இறுதியில் பணப்பையையும் இதயத்தையும் காலி செய்து விடும். ஆனால் உண்மையான காதல், சாம்பலுக்குள் மறைந்திருந்தாலும், ஒருநாள் மறுபடியும் முளைத்து மலரக் கூடிய சக்தி கொண்டது. அது அழியாதது!
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
முற்றிற்று
0 comments:
Post a Comment