ஆன்மீகம்- விதி/வினை/விளைவு


விதியும் [Fate], வினையும் [Action],
விளைவும் [Consequence]!!!

விதி என்றால் என்ன? விதிக்கப்பட்டது...
வினை என்றால் என்ன? செயலாக்கப்பட்டது...
விளைவு என்றால் என்ன? விளைந்தது...

விதிக்கப்பட்டதால் செயலாக்கப்பட்டு விளைந்ததா?

கர்மாவும் அப்படியே . நம் செயல்களுக்கு  நாமே காரணம்.

நாம் செய்கின்ற செயல்கள் எல்லாம் வினை ஆகிவிடுவதில்லை. செயலின்றி வாழ்க்கையும் இல்லை. செயல்களே வாழ்க்கையாக உள்ளது. செயல்கள் எப்பொழுது வினைகள் ஆகின்றன?

‘ஒருவன் ஒரு வினையைச் செய்தான்’  என்று கூறினால், அவன் செய்த செயலுக்குச் செயப்படுபொருள் வினை என்பது பெறப்படுகின்றது.எப்பொழுது ஒரு செயல் இன்னொரு உயிரைப் பாதிக்கின்றதோ அப்பொழுது அச்செயல் வினையாகின்றது. உண்ணுவது ஒரு செயல். அது வினையன்று. அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாது என்ற நினைப்போடு உண்ணுவது வினை.

வேலை செய்வது என்பது இரண்டு வகை. கடமைக்கு செய்வது ஒரு வகை. முழு ஈடுபாட்டுடன் செய்வது ஒரு வகை. எதில் பயன் அதிகம் என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.?

வினைக்கு  - எதிர் வினை -ஒரு உதாரணம்

வினை:
சிறு வயதில் கோபிகையர்கள்  குளிக்கும் போது அவர்களின் ஆடைகளை திருடிச்சென்று மரத்தில் உட்கார்ந்து கலாய்த்தது.
எதிர்வினை:
பாண்டவர்கள் வனவாசம் செய்யும் காலத்தில் கிருஷ்ணரும்  பாண்டவர்கள்  ஐந்து  பேரும்  குளிக்கப்போறாங்க. எல்லாரும் கரையேறின பிறகும் கிருஷ்ணர் கரையேறல. என்னடா  என்றால் அவரோட கோவணம் ஆத்தோட போயிருச்சு. அப்போ திரௌபதி தன் நுண்ணிய அறிவால என்ன  என்று   யோசித்து ஒரு முழம் புடவையை கிழிச்சு போடறாங்க. உடனே கிருஷ்ணர் கோவணத்தை கட்டிக்கிட்டு கரையேறி வரார். 

ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், வதைக்கப்பட்டவர்களுக்காகவும்,   பிற்படுதப்பட்டவர்களுக்ககவும் ,அடக்கப்படடவர்களுக்காகவும்  பேசுவது  ஒரு தர்மமே! சமத்துவத்தை  கேட்பதும்  ஏற்ற தாழ்விற்கு  எதிராக போர் கொடி தூக்குவதும்  ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை!!

அடக்கப்படடவர்களுக்காக   குரல் கொடுத்தோரும்  சமுதாய அநீதிகளுக்காக  போராடியவர்களும் ,தமது மக்களை  அடிமை பிடியில் இருந்து மீட்டு  எடுத்தவர்களும்  சரித்திரத்தில் உயர் மனிதர்களாக பதியப்பட்டுள்ளர்கள் .புலவர் கண்ணதாசன்  "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே " என்ற பாடலில் கூறியது போல "கலகத்தில் பிறப்பது தான் நீதி " 

கர்மா கொள்கை கூறுவது போல் ,இந்த மானிட வடிவில் நாம் பிறந்தது  எம்முடைய பழைய கர்மாவால்.எமது தலை விதியை  நம் பிறப்புக்கு முன்பே நாமே நிர்ணயம் செய்துள்ளோம்.மீண்டும் மறுபிறவியானது 'பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு' எனும் இயற்கையான பிறவிச்சுழலின் ஒரு பகுதியே ஆகும் .ஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை மோட்சம் அல்லது முக்தி என வழங்கப்படுகிறது.

"ஒருவரின் இறப்பிற்குப்பின், அவரது ஆத்மா முன்பிறவிகளின் மொத்த கர்மாவின் பதிவுகளுடன் அடுத்த உலகுக்குச் செல்கிறது. அங்கு தன் கர்மாவுக்கான பயன்களை அறுவடை செய்தபின், இந்த உலகுக்கு திரும்புகிறது. எப்படி கர்ம வினைகள் ஒருவருடைய செயலின் தேர்வின் அடிப்படையில் அமைகிறதோ, அதுபோலவே, அதனாலேயே, மறுபிறவியும் அவரவர் தேர்ந்தெடுப்பதுதான்"
- யஜீர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.6 

கர்மா கொள்கையின் படி கீழ் சாதியில் பிறந்தவன் அந்த நரக வாழ்க்கையிலேயே வாழவேண்டும்.அடுத்த பிறவியிலேயே ஒரு நல்ல உயர் சாதியில் நல்ல வாழ்க்கையை அமைக்கலாம்.கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கூறப்படுகிற “மனு ஸ்மிருதி” என்கிற மனு நீதி [மனுதர்மம் /பிராமண மனு சாத்திர நூல்] என்ன கூறுகின்றது என்று பாருங்கள்:

அதிகாரம்-8  ,சுலோகம்-4,14  ,
அடிமைத்தனம் சூத்திரருடன்  பிறந்தது .அதில் இருந்து எவராலும்  அவர்களை விடுவிக்க முடியாது .

அதிகாரம்-19  ,சுலோகம்-413 ,  
பிரமா தீர்மானித்தபடி சூத்திரர்கள் அடிமையாகவே பிறக்கவேண்டும்.அடிமையாகவே வாழவேண்டும் .அடிமையாகவே சாகவேண்டும் .

"சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோகுணத்தின் கதி". அ.8. சு.22.

இது சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்டது.. பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்கு வந்ததுதான் ‘மனு தர்மம்’. சமுதாயத்தை ‘பிராமணன்’, சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு பிரிவுகளாக பிரிச்சு, ஒவ்வொரு பிரிவினரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று உத்தரவிடுகிறது  இந்த ‘மனுதர்மம்’.

"இந்த உலகம் முழுதும் கடவுளுக்கு கட்டுப் பட்டது. கடவுள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர். மந்திரம் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டது” என்று ரிக்வேதம் கூறுகிறது.  

எந்த ஒரு மனிதனும் பிறப்பால் ஒரு வகுப்பைச் சேர்ந்தவன் ஆகிவிடுவதில்லை. அவனின் குணமும் நடத்தையும், வாழ்கை முறையையும் வைத்தே அவன் எப்படி பட்டவன் என்று கூற இயலும். மனுநீதி-ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று பெரியார் சொன்னதும், சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி என்று பாரதியார் சொன்னதும் இதைத்தானே.?

வடமொழியாளராகிய மனு, தமது சாத்திரத்தில் கூறுகின்ற ‘தருமம்’’ என்பது வேறு, வள்ளுவப் பெருந்கையார் திருக்குறளில் கூறுகின்ற ‘அறம்’ என்பது வேறு, எல்லாம் மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதாகத்தான் அமையும். பிறப்பைப் பொறுத்து ஏற்றத்தாழ்வு இல்லை என்னும் கருத்துப்பட. ``பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’’ (குறள் 972) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும். கல்லாதவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும், தாழ்ந்த குடியில் பிறந்திருந்து கற்றவர்களைப் போல பெருமை யுடையவராகக் கருதப்பட மாட்டார்கள் என்னும் கருத்துப்பட.... “மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும், கற்றார் அனைத்திலர் பாடு’’ (குறள் - 409) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று.சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று.சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று.சாதிவெறி சைவநெறி அன்று.`குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை.இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும்.சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது.
"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே."

-திருநாவுக்கரசர் (தேவாரம்)
உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, ஏழை, பணக்காரன் என்பதெல்லாம் மனித வர்க்கம் வகுத்துக் கொண்டது தான். பக்திக்கு அப்படியில்லை என்பதே நந்தனாரீன் வாழ்க்கை சரித்திரம்.இவரது இனத்தை புலையர் என்பார்கள்.அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை கோயிலுக்குள் அனுப்பதில்லை. எனவே, மனதிலேயே சிவனை வணங்கிக் கொண்டிருந்தார் நந்தனார். கோயில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது. யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது என திருப்பணிகளைச் செய்வார். தங்கள் ஊர் அருகிலுள்ள திருப்புன்கூர் சிவபெருமான தரிசிக்க நந்தனாருக்கு நீண்ட நாள் ஆசை, ஒரு நாள் திருப்புன்கூர் கிளம்பி விட்டார். கோயிலுக்குள் செல்ல முடியாது என்பதால், வெளியே நின்றபடியே மூலஸ்தானத்தில் சிவலிங்கம் தெரிகிறதா என எட்டி பார்த்தார். நந்தி சிலை மறைத்தது. எதுவும் தெரியவில்லை. வெளியே நின்றபடி சிவனைப் புகழ்ந்து பாடி வணங்கினார். உருகிப் போனார் சிவபெருமான். நந்தி தேவரிடம், நந்தி! நீ சற்று விலகிக் கொள். என் பக்தன் நந்தன் வெளியே நிற்கிறான். அவன் என்னைப் பார்க்கட்டும், என்றார்.நந்தி விலகிக் கொண்டார். வந்திருந்த பக்தர்கள் நந்தி சிலை நகர்வதைக் கண்டு பயமும், பரவசமும் கொண்டனர். சிலர் வாதம் செய்வார்கள். நந்தியை விலகச் சொன்ன சிவன், அவரை உள்ளேயே அழைத்திருக்கலாம் அல்லவா என்று! தானாக அழைப்பதை விட, பிறரால் சகல மரியாதைகளுடன் எந்த ஒரு தீவிர பக்தனும், தனது இடத்துக்குள் வர வேண்டும் என சிவன் நினைத்தாரோ! யார் அறிவார் ?

நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும், ஏழை ஏழையாக இருப்பதற்கும், ஒருவன் பள்ளனாக பிறப்பதற்கும், பார்பனாக பிறப்பதற்கும் விதிப்பயன் என்று துணிந்து சொல்கிறார்கள். அதாவது தான் பள்ளனாக பிறந்தது விதிப்பயன் என்று நினைத்து நன்கு முயற்சித்து பார்பனராக அடுத்த பிறவியில் பிறக்கவேண்டுமாம். அத்துடன் பிறவி சுழல் முடிவுக்கு வருகிறதாம். என்ன மடத்தனமான ஒரு கருத்து பாருங்கள். இனங்கள் என்பவை அந்தந்த நாட்டு சூழலுக்கு ஏற்ப உருவான நிறம் தோற்றம் குறித்ததே, ஆப்ரிக்க இனத்தினர் கருப்பாக இருப்பர், ஐரோப்பியர் வெள்ளையாக இருப்பர், சீனர்கள், ஜப்பானியர்கள் மஞ்சளாக இருப்பர். இது இயற்கை. இதில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது ? இதில் ஏன் ஒருவன் பள்ளனாக ( சூத்திரனாக) பிறப்பது இழிந்தது போன்றும் அவர் தம் இழிந்த நிலையில் இருப்பதை உணர்ந்து முயற்சித்து பார்பனாக பிறக்க வேண்டும் என்று சொல்வது பித்தலாட்டம் அன்றி வேறென்ன ? பார்பன் உயர்ந்த பிறவி என்பதை மனுதர்மத்தை  [மனுஸ்ம்ருதி]நம்புவதால் தானே ஏற்கவேண்டி இருக்கிறது ? இந்த அறிவற்ற மனுதர்மத்தை ஒதுக்கித்தள்ள மதத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் முன்வரவேண்டும். இல்லை என்றால் விதி  தத்துவங்களை சொல்லி சொல்லி 'நீ தாழ்ந்தவனாக பிறந்தது கடவுள் செயல், விதிப்பயன் என்று சொல்லி சிந்திக்க விடாமல் செய்துவிடுவர். உழைத்தால் சோறு, இதில் உயர்ந்தவன் என்ன ? தாழ்ந்தவர் என்ன ? கோவில் பிராசதத்தை உண்டவர் எத்தகையை தெய்வீக பிறவி என்றாலும் அடுத்த நாள் கோவில் பிராசதம் அவரிடமிருந்து மலமாகத்தான் வெளியேறும்.
ஒரு சூத்திரன்  சூத்திரருக்கு  என வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளுக்குள், அந்த வர்ண சாத்திர  எல்லைக்குள், நல்லவனாக செயல் பட்டால் ,அவன் அடுத்த  பிறவியில் பிராமணனாக பிறக்கலாம் .ஆனால்  இந்த பிறவியில் ஒரு போதும் இல்லை.இதன் பொருள் என்ன?இது  ஒரு மிகவும் புத்திசாலித்தனமான  சமயத்தின் பெயரில் தீட்டப்பட்ட திட்டம் . இன்னும் ஒரு "பிரெஞ்சுப் புரட்சி (French Revolution,]" நடை பெறாமல் தடுக்க?

நாம் செய்யும் எல்லா காரியங்களுக்கும் / எண்ணும் எண்ணங்களுக்கும் ஒரு விளைவு உண்டு. இதுவே கர்மவினை என்பது. உன்னை  எப்படி மற்றவர்கள் நடத்துகிறார்களோ அது அவர்களின் கர்மா .நீ எப்படி அவர்களை நடத்துகிறாயோ அது உனது கர்மா. இப்ப பலன் தரும் இதைத்தான் நானும் சரி என நம்புகிறேன் .

நாம் விதைத்ததை நாம் அறுவடை செய்கிறோம்
எது எம்மை சுற்றிப் போகிறதோ அதுவே எம்மை சுற்றி வருகிறது
நல்லது நல்லதையே ஏற்படுத்தும்

இப்ப பலன் தரும் இதைத்தான் நானும் சரி என நம்புகிறேன்

என்னைப் பொறுத்த வரையில் கர்மாவைப் பற்றிய அழுத்தமான கருத்து என்ன வென்றால் இது உனது முன் காலத்தை[முன் பிறப்பை ] வைத்து தீர்மானிக்கவில்லை .அது போல வரும் காலத்தை[மறு பிறப்பை ] குறி கூறவில்லை.அது இப்ப என்னத்தை நீ செய்கிறாய் என்பதன் பலனே.

நீ ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்றால் -இப்பவே மகிழ்ச்சியாய் இரு.
நல்லதை மற்றவர்களுக்கு -இப்பவே செய் .
அன்பாயிரு,சிரித்திரு ,சூழ் நிலைக்கு ஏற்ற நல்ல செயலை இப்பவே செய் .
நீ விரும்பும் வாழ்வு வழி உன் வசமே இப்பவே உள்ளது .

இப்ப பலன் தரும் இதைத்தான் நானும் சரி என நம்புகிறேன்.உதாரணமாக :-
உனது வாக்கை காப்பாற்று
எல்லோருக்கும் மதிப்பு கொடு
நல்ல நண்பனாக இரு
ஒருவரிடம் இருக்கும் நல்லதை எதிர் பார்
மன்னிப்பை காட்டு
அன்பாய் இரு
நீ தவறு இழைக்கும் போது, மன்னிப்பு கேள்
அன்பு வேண்டியவர்களுக்கு அன்பு செலுத்து
பிள்ளைகளின் தேவையை முதல் செய்
உன்னுடன் ஒருவர் கதைக்கும் போது கவனம் செலுத்து
உன்னை தினம் காதலி
உணர்வை காட்டு
கொடும் சொல் பாவிக்காதே
உனது அறிவை மற்றவர்களுடன் பகிர்
உனக்கு தேவையற்றதை தானம் கொடு
சிரிப்பை கூட்டு முகச்சுளிப்பை  குறை 
நல்ல வழ்வை எதிர் பார்
எப்பவும்  நல்லதையே  செய்
உன்  எண்ணங்களை  மற்றவர்களுடன்  பகிர்
உனது பிழைகளில் இருந்து பாடம் படி

திருவள்ளுவர், அறத்தின் சிறப்பினை இவ்வாறு சொல்லுகிறார்:

சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்
ஆக்கம் எவனோ, உயிர்க்கு? (31)

(தர்ம ஒழுக்கத்தினால் மேன்மை வரும் என்பது உறுதி. செல்வமும் வரலாம். ஆதலால் தர்மத்தை காட்டிலும் மனிதனுக்கு வல்லமை தரக்கூடியது வேறு என்ன இருக்கிறது?)

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32)

(தர்மங்களை செய்வதுபோல நன்மை தரக்கூடியதும் இல்லை. தர்மங்களை செய்யாமல் மறந்துவிடுவது போலத் தீமை தரக்கூடியதும் இல்லை.)
கர்ணன் அம்புகளால் துளைக்கப்பட்டு விழுந்து கிடக்கிறான். அங்கே அவன் செய்த புண்ணியம் அவனைக் காக்கிறது.தான்  வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட  தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன்.தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் மரண தருவாயில் இருக்கும் போது கண்ணன் அங்கே வருகிறான் அவனுடைய புண்ணியம் எல்லாத்தியும்   ஏமாற்றி வாங்கி அவனை கொன்றுவிடுகிறான் கண்ணன் நல்லவனோ கெட்டவனோ....கர்ணன் கெட்டவனில்லை.
தன் புண்ணியமனைத்தையும் தானமாகக் கேட்கும் கண்ணனுக்குத் தன் குருதியால் தன் புண்ணியங்களை தாரை வார்த்துக் கொடுக்கையில் கர்ணன் சொல்வது "யான் செய்புண்ணிய மனைத்தும் " உனக்குத் தந்தேன் . இதில் செய்புண்ணியம் என்ற பதத்தைக் கவனியுங்கள். அது வினைத்தொகை ,முக்காலங்களையும் குறிக்கும். யான் கடந்த காலத்தில் செய்த புண்ணியம், தற்போது (நிகழ் காலத்தில்) செய்யும் புண்ணியம், இப்படி உனக்குக் கொடுத்தபின் அதனால் எனக்கு ஏற்படப்போகும் புண்ணியம் அனைத்தையும் உனக்குத் தானமாகத் தந்தேன். அப்படித் தந்தபின் தான் அவன் உயிர் பிரிகிறது.
மானிடர் ஆன்மா மரணமெய்தாது என்பது தாங்களறியாததா? இன்றும் கர்ணனின் புகழே பெருகியுள்ளது.!!!
(இது ஒரு அலசல். மற்றும் இதில் சொல்லியிருப்பவைகள் தற்போதுள்ள கருத்துக்கள் அல்லது தத்துவங்கள் ஆகிய எவைகளையும் சார்ந்தோ எதிர்த்தோ சொல்லப் பட்டவைகளல்ல.)
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
By:Kandiah Thillaivinayagalingam]

2 comments:

  1. உன் நாக்கின் வாக்கும் சொல்லும்
    வன் வார்த்தையின் வரம்பும் சொல்லும் -நீ
    வந்த வழி எவ்வழிஎன்று, என்றும் அது
    சொந்தமாகும் உந்தன்வழி.

    ReplyDelete

  2. உங்களது ஆன்மீக தகவல்கள் அனைத்தும் அருமை. நான் சமீபத்தில் http://www.valaitamil.com/spiritual என்ற இணையதள முகவரியை பார்த்தேன். அதில் ஆன்மீக தகவல்கள். சிறப்பாக தொகுக்கப்பட்டிருந்தது.

    ReplyDelete