[சீரழியும் சமுதாயம்]
7] வரலாறு அழிப்பு [Erasure of History]
ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர், ஜார்ஜ்
சண்டயானா (1863 - 1952) என்பவர் [George
Santayana], "முன்னைய தவறுத்தல்கள்
மீண்டும் வராமல் தவிர்ப்பதற்கு, கட்டாயம் வரலாறு படிக்கவேண்டும்" என்கிறார், என்றாலும்
இன்றைய அரசியல் சூழலில், பல்வேறு காரணங்களால்,
அதில் இருந்து பாடங்களை படிக்காமல், அதை
தமக்கு சார்பாக திரித்துக் கூறுவதற்காக,
தமக்கு பிடிக்காத அல்லது மற்றவர்களின் வரலாறு சான்று கூறும்
உயர்வை பொறுக்க முடியாமல், உண்மையான
வரலாறுகளை, அரச துணையுடன் இன்று அழிப்பதை காண்கிறோம். அப்படியானவற்றில்
ஒன்று தான், 97 ஆயிரம் அரிய நூல்களுடன் காணப்பட்ட யாழ் நூலக எரிப்பு
ஆகும். மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கிய,
மாயன் இனத்தவரின் வரலாற்று நூல்களை, கண்டு
பிடிப்புகளை, ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள், அன்று
எரித்து போல, இன்று இலங்கை அரச படை இதை செய்ததை காண்கிறோம். தமிழ்ப்
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற வரலாற்றுப் புத்தகங்களில், சிங்களவர்கள், ஆரியர்களாக
இலங்கைக்கு வருவதற்கு முன்னரே, தமிழர்கள் இரண்டு இனங்களாக இங்கு குடியிருந்தார்கள் என்ற போதிலும், அவையெல்லாம்
மறைக்கப்பட்டு, தமிழர்களின் வரலாறுகள் அழிக்கப் பட்டுள்ளதுடன், தமிழ்
மன்னர்கள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்பட வில்லை எனவும், ஆயிரம்
வருடங்கள் வரலாற்றைக் கொண்ட தமிழ் பேசும் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், அந்த
வரலாற்றுப் புத்தகங்களில் ஒரு வசனமேனும் இல்லை என்பதையும் இலங்கை நாடாளுமன்ற
உறுப்பினர்கள் பலர், வெவேறு காலங்களில் இலங்கை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டி
யுள்ளார்கள். இவை எல்லாம், எமக்கு எதிராக ஏற்பட்ட,
வரலாறு அழித்தலுக்கான சில உதாரணங்கள் மட்டுமே!! “இலங்கை
சிங்களவர்களின் தேசம், இங்கு வாழும் தமிழர்கள் வந்தேறு குடிகளே’ என்ற பாணியில்
அண்மைக் காலமாக பல அரசியல் வாதிகள் தொடக்கம்,
புத்த மதகுரு மார் வரை சொல்லுவதை எழுதுவதை காண்கிறோம்.
ஒன்றை மறைத்து இன்னொன்றாகச் செய்வதே இலங்கை இனவாத எழுத்தர்கள தமிழ் வரலாற்றுக்குச்
இதுவரை செய்த தொண்டாகும்.
மகாவம்ச சிந்தனையில் ஊறிப் போன சிங்களவர்கள் தங்களை ஆரியர்
என்றும் தாங்களே இலங்கையின் மூத்த குடியென்றும் தங்களுக்கே நாடு சொந்தம் என்றும்
பவுத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால்
ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள். ஆனால் கௌதமபுத்தர் இலங்கை வருகைகளைப்
பற்றி வரலாற்றுச் சான்றுகள் கிடையா,
மற்றது புத்தர் வட
இந்திய ஆட்புலத்தை விட்டு வேறெங்கும் செல்லவில்லை. ஏன் தெற்கேயுள்ள
தமிழகத்துக்கும் கூட வரவில்லை. மேலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மைக்கும்
சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்
எனவும் நினைக்கிறார்கள். இந்த மகாவம்ச சிந்தனையே இன்றைய இன முரண்பாட்டுக்கும்
மற்றும் வரலாறு அழிப்ற்கும் அடிப்படைக் காரணம் ஆகும். மகாவம்சத்தை எழுதியதன்
நோக்கத்தை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் நுலாசிரியர் குறிப்பிடுகிறார்.
எடுத்துக்காட்டாக ஆறாம் அத்தியாயத்தின் முடிவில் “(பவுத்த) பக்தர்களின் அமைதியான
ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட மகாவம்சத்தின் விஜயனின் முடிசூடல்
என்ற 6 ஆம் அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது” எனக் கூறுவார். இது
ஒன்றே நூலின் நோக்கத்திற்கு எடுத்துக் காட்டு ஆகும். இருந்தும் மகாவம்சத்தை முற்று
முழுதாக இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் எனக் கொள்ள முடியாவிட்டாலும் அதனை முற்று
முழுதாகப் புறக்கணித்து விடவும் முடியாது. மகாவம்சம் புனைந்துள்ள கதையில் சில
உண்மைகள் மறைந்து காணப்படுகின்றன. மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என இயக்கர், நாகர், இப்படி
சிலரை குறிக்கிறது. உதாரணமாக, நாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை
இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். இலங்கையை மகாவம்சம்
குறிப்பிடும் விசயன் (பொ.மு. 543 –
504) என்ற மன்னனுக்கு முன்பே முடிநாகர்
என்னும் தமிழ் நாகர் இனத்தவர்கள் ஆண்டனர் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.
இதற்கு ஆதாரமாக முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் முடிநாகர் இனத்தைச் சேர்ந்தவர்
சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியதை குறிப்பிடுகின்றனர். இவர்கள் நாகவுருவை தலையில்
அணிந்ததால் இவர்கள் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர்.
இலங்கையில் பண்டு தொட்டு தமிழர் எவரும் வாழவில்லை என்றும் சிங்கள அரசுகள் மீது
படையெடுத்து வந்த சோழ, பாண்டியர் படைகளோடே தமிழ் மக்கள் ஈழத்தில் வந்து
குடியேறினர் என சில சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால்
துட்ட கைமுனு காலத்தில் மாகா கங்கைக்கு அப்பால் தமிழர்கள் வாழ்ந்தார்கள் எனச்
சொல்லப்பட்டுள்ளது. பவுத்த மதத்தைத் தழுவிய முதல் அரசன் தேவநம்பிய தீசனே. இவனுக்கு
முன்னர் அனுராதபுரத்தை ஆண்ட அரசர்கள் வைதீக மதத்தவரே. தேவநம்பிய தீசனின் தந்தை பெயர்
மூத்த சிவன் (கிமு 307 – 247) ஆவான். இவர்கள் நாக வம்சத்தைச் சேர்ந்தவர்கள். மகாநாகன்
இவனது உடன்பிறப்பு ஆவான். இவன் துட்ட கைமுனுவின் பாட்டனுக்குப் பாட்டன் (ஒட்டன்)
ஆவன். எனவே தமிழர்கள் இலங்கையின் ஆதி குடிகள் என்பது மகாவம்சத்திலேயே
கூறப்பட்டுள்ளதை காண்க. ஆனால் இவை சில உதாரணங்களே, இன்னும்பல வரலாற்று
ரீதியான ஆதாரங்களும் உதாரணங்களும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
உதாரணமாக, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஆனைக்கோட்டை
என்னும் இடத்தில், 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தொல்லியலாளர்
கா. இந்திரபாலாவின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராச்சிக்
குழுவினர் நடாத்திய அகழ்வாய்வு ஒன்றின் போது,
கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த இறந்த மனிதன் ஒருவனுடைய கல்லறை
கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு ஒரு முத்திரை ஒரு மோதிரத்தின் முன் பகுதியாக கண்டு
எடுக்கப் பட்டது. அங்கு பதியப்பட்டிருந்த இரண்டு வரியிலமைந்த எழுத்துக்கள், தமிழ்
பிராமிவகையைச் சார்ந்தாக இருந்தது. கோ வெ ர அல்லது "கோ" "வே"
"த" (ko ve ta) என்ற அந்த எழுத்துக்கள் முதல் சங்ககால எழுத்துக்ளைச்
சார்ந்தாகும் [யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை முத்திரை]. அதை வாசித்த பேராசிரியர் கா.
இந்திரபாலா, மற்றும் பொ.
இரகுபதி, முனைவர் ஆர். மதிவாணன் போன்றோர்கள், அந்தக்
கல்லறை ஒரு தமிழ் மன்னனுடையதாக இருக்கக்கூடும் என்கின்றார்கள். அது மட்டும்
அல்ல இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து
துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு
பேருடன் இலங்கையில் வந்து இறங்கி, அதன் பின், தொடக்கத்தில் தமிழர் [இயக்கர், நாகர்]
பண்பாட்டை பின்பற்றி இருந்த இவர்களிடையே மகிந்ததேரரால் கிமு 3ஆம்
நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டதும், பண்டைய
சிங்கள எழுத்துக்கள், குறிப்பாக மட்பாண்டங்களில் கி பி 6 ஆம்
நூற்றாண்டின் பின்னர்தான் காணப்படுவதும் அதிகார பூர்வமான வரலாற்று சான்றாகும்.
என்றாலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மை இன்னும் தொடர்கிறது. உதாரணமாக, அண்மையில், முல்லைத்தீவு
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை
அமைத்து குடிகொண்டுள்ள பௌத்த துறவியான கொலம்ப மேதாலங்க தேரர், பாரிய
புத்தர் சிலை ஒன்றை நிறுவி முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தார். அங்கு மிக
நீண்டகாலமாக ஒரு பிள்ளையார் ஆலயம் இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றாலும், அடாத்தாக
பௌத்த பிக்குவால் 2019 ஆண்டு தொடக்கத்தில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்பதும்
குறிப்பிடத் தக்கது. அதே போல் கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரமும்
இன்னும் 2019 ஆண்டு நடுப்பகுதியை
தாண்டியும் தொடர்கிறது.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள்→
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A
கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ஐயா அவர்களுக்கு நன்றி. இலங்கையில் தமிழர்கள் தான் முதல் குடிகள் என்பது உண்மை. இந்த உண்மைக்கு சான்றுகள் பல இன்றும் உள்ளன.என்றாலும் அவை ஏற்றுக் கொள்ள முடியாத இடத்திற்குள் தள்ளப்பட்டு விட்டது என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இலங்கையின் வரலாறு நூல் என்று சொல்லப்படும் மகாவம்சம் இருட்டடிப்பு செய்ய பட்டு பொய் என்ற புழுதியி புதைத்து எழுத பட்டு அரங்கேறி அதிகாரம் பெற்று விட்டது.தமிழர்களின் பண்பாடு பழக்கவழக்கங்கள் இவை கூட இன்று தொலைந்து தானே விட்டது .இவ் உலகில் முதல் இடம் பெற வேண்டிய தமிழர்கள் சென்று கொண்டிருக்கும் பாதையின் ஆழம் தெரியவில்லை. 😢
ReplyDeleteஅமெரிக்கா ,கனடா, அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளெல்லாம் வந்தேறு குடிகள் ஆண்டுகொண்டு பழங்குடிகளை மெல்ல மெல்ல அழித்து வருகிறார்கள். இப்படியான நாடுகள் எங்கள் அழிவினை எங்கே நிமிர்ந்து பார்க்கப் போகிறார்கள்
ReplyDelete