முகவுரை-15-
உலக இலக்கியங்கள்
குறளின் சிந்தனைகள் பண்டைய உலக இலக்கியங்கள் பலவற்றோடும் பல இடங்களில் ஒத்து இருப்பதை அறிஞர்கள் கவனிக்கத் தவறுவதில்லை. ஹிதோபதேசம், பஞ்சதந்திரக் கதைகள், மனுஸ்மிருதி, திருமந்திரம், கன்பியூசியஸின் லுன் யூ, ஆதிகிரந்தம், விவிலியத்தின் நீதிமொழிகள், புத்தரின் தம்மபதம், பாரசிக நூல்களான குலிஸ்தான் மற்றும் புஸ்தான் உள்ளிட்ட பல புனித நூல்களோடும் குறளை அறிஞர்கள் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளனர்.
குறளும் கன்பியூசியஸின் தத்துவங்களான லுன் யூ என்றழைக்கப்படும் கன்பியூசிய அனலெக்டுகளும் பல ஒத்த கருத்துக்களைப் பகிர்வது கவனிக்கத்தக்கது. வள்ளுவர், கன்பியூசியஸ் இருவருமே தனிநபரின் அறங்களுக்கும் நன்னடத்தைகளுக்கும் முதலிடம் தருபவர்கள். வள்ளுவரைப் போலவே கன்பியூசியஸும் தனிமனித அறநெறிகள், கண்ணோட்டம், பெரியோரைப் பேணுதல் ஆகியவற்றைப் போதித்து நீதியைத் தழுவிய சட்டதிட்டங்களைப் போற்றியும் அருள், அறம், நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றை வாழ்வின் அடிப்படைகளாகக் கொண்டும் தனது போதனைகளைத் தந்துள்ளார். அகிம்சையையும் அன்பையும் அடித்தளமாகக் கொண்டு வள்ளுவம் இயற்றப்பட்டுள்ளதைப் போல் ஜென் என்னும் அடித்தளத்தைக் கொண்டு இயற்றப்பட்டவை கன்பியூசியத் தத்துவங்களாகும். இவற்றிக்கு அப்பால் கன்பியூசியஸிலிருந்து வள்ளுவர் இரு வகைகளில் வேறுபடுகிறார். முதலாவதாக, கன்பியூசியஸ் போல் ஒரு தத்துவ மேதை மட்டுமின்றி வள்ளுவர் ஒரு புலவருமாவார். இரண்டாவதாக, கன்பியூசியஸ் இன்பம் குறித்து ஏதும் கூறாதிருக்கையில் வள்ளுவர் இன்பத்திற்கு ஒரு பாலையே ஒதுக்கியுள்ளார். கன்பியூசியஸ் தத்துவத்தில் குழந்தை வளர்ப்பு என்பது வாழ்வின் நீட்சிக்கும் சமூகத்தின் நலனுக்கும் ஒரு முக்கியமான அங்கமாகும். "ஒரு மனிதன் தனக்கு மேலுள்ள பெரியோர்களான பெற்றவர்களையும் தனக்குக் கீழுள்ள மனைவி மற்றும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாப்பதற்குத் தேவையானவற்றை ஒரு அறிவிற் சிறந்த அரசன் தனது ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்க வேண்டியது அவசியம்" என்கிறது லுன் யூ. வள்ளுவத்தின் "மக்கட் செல்வம்", "இறைமாட்சி" ஆகிய அதிகாரங்கள் இக்கருத்துக்களை நினைவுறுத்துவதாக அமைகின்றன.
[திருக்குறள் முகவுரை16, அடுத்தவாரம் தொடரும்]
திருக்குறள் தொடர்கிறது…
16. பொறையுடைமை
👉குறள் 151:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
மு.வ உரை:
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்
சாலமன் பாப்பையா உரை:
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்
கலைஞர் உரை:
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.
👉குறள் 152:
பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று.
மு.வ உரை:
வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.
கலைஞர் உரை:
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.
👉குறள் 153:
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.
மு.வ உரை:
வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது
கலைஞர் உரை:
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.
👉குறள் 154:
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.
மு.வ உரை:
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.
கலைஞர் உரை:
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.
👉குறள் 155:
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
மு.வ உரை:
( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.
கலைஞர் உரை:
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள் பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.
👉குறள் 156:
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.
மு.வ உரை:
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.
கலைஞர் உரை:
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.
👉குறள் 157:
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.
மு.வ உரை:
தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது
கலைஞர் உரை:
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.
👉குறள் 158:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.
மு.வ உரை:
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.
கலைஞர் உரை:
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.
👉குறள் 159:
துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
மு.வ உரை:
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.
கலைஞர் உரை:
எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.
👉குறள் 160:
உண்ணாதுநோற்பார்பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்.
மு.வ உரை:
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.
கலைஞர் உரை:
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்....
0 comments:
Post a Comment