"வேலைக்காரியின் திறமை"

வேலைக்காரி என்ற சொல்லுக்கு நாம் பணிப்பெண், ஏவற்பெண் அல்லது தொழுத்தை இப்படி பலவிதமாக கூறினாலும் சிலவேளை அவள் ஒரு அடிமை போல நடத்தப்படுவதும் உண்டு. இது மலருக்கு நன்றாகத் தெரியும். அவள் சாதாரண வகுப்பில் இறுதி ஆண்டு படிக்கும் பொழுது, தாயையும் தந்தையையும் ஒரு விபத்தில் இழந்துவிட்டாள். அவளுக்கு இரண்டு தம்பியும் இரண்டு தங்கையும் உண்டு. ஒரு சிறு குடிசையில், அப்பா, அம்மாவின் கூலி உழைப்பில் ஒருவாறு சமாளித்து குடும்பம் இன்றுவரை போய்க்கொண்டு இருந்தது. இந்த திடீர் சம்பவம், அவளுக்கு முழுப்பொறுப்பையும் சுமத்திவிட்டது. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கூலி வேலைக்கு போகும் பக்குவம் அனுபவம் அவளுக்கு இன்னும் இல்லை என்றாலும், சமையல், துப்பரவாக்கள், குழந்தை பராமரிப்பில் ஓரளவு அனுபவமும் திறமையும் உண்டு.

 

கைவசம் இப்ப வீட்டில் இருக்கும் கொஞ்ச காசும் உணவு பொருட்களும் ஒருகிழமைக்கு தாக்குப்பிடிக்கும், அதற்குள் எப்படியும், படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, ஒரு வேலைக்கு போகவேண்டும். அப்ப தான் தன் இரு தம்பிகளும் இரு தங்கைகளும் படிப்பை தொடரமுடியும், சாப்பிடமுடியும் என்று அவளுக்கு தோன்றியது. அதனால், தன் அம்மா அப்பா கூலிவேலை செய்த ஒரு சில இடங்களில், ஏதாவது வீட்டு வேலைகள் கிடைக்குமா என்று விசாரித்து பார்த்தாள். ஆனால் ஒருவரும் அவளை வேலைக்கு சம்மதிக்கவில்லை. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இன்னும் மூன்று நான்கு நாட்கள்தான் ஒருவாறு சாப்பாட்டுக்கு சமாளிக்கலாம். அப்ப தான், அவள் தன் குடிசைக்கு திரும்பும் பொழுது, இளம் தம்பதியர், தம் இரு சிறு குழந்தைகளுடன் காரில் இருந்து இறங்கி, வீட்டுக்குள் போவதை கண்டாள். அவர்களின் மூத்த மகள் ஒரு நாலுவயது இருக்கும், சடுதியாக முன் படலை மூடமுன்பு வீதிக்கு ஓடிவிட்டார். நல்ல காலம், மலர் இதைக் கவனித்துக்கொண்டு இருந்ததால், ஓடிப்போய் தூக்கிவிட்டார், இல்லாவிட்டால், வேகமாக வந்த பாரவூர்தியில் நசிங்கிப்போய் இருப்பார்.

 

பாரவூர்தியின் சடுதியான நிறுத்தமும், குழந்தையின் அழுகுரலும் பெரும் அதிர்ச்சியை பெற்றோருக்கு கொடுத்தது, என்றாலும் குழந்தை பாதுகாப்பாக மலரின் கையில் இருப்பதைக் கண்டு, அவளுக்கு நன்றி கூறியதுடன், அவளின் உடையையும், முகத்தில் தவழும் சோகத்தையும் பார்த்த அவர்கள், அவளை வீட்டுக்குள் அழைத்து விசாரித்தனர். அப்பொழுதுதான் மலரின் அப்பா, அம்மா இருவரும் சிலவேளை இவர்களின் வீட்டிலும் தொட்டாட்டு வேலை செய்தது தெரியவந்தது. அவர்களும் இவளின் இந்த திறமையை நேராக கண்டதாலும், அவளின் அப்பா அம்மாவின் அறிமுகம் முன்பே இருந்தலாலும், தமக்கு ஒரு வீட்டு உதவியாளராக, வேலைக்காரியாக, காலை பொழுதுக்கு சம்மதித்தனர். எது என்னவென்றாலும், அவளின் வேலையை, நடத்தையை பொறுத்தே நிரந்தரமாக்குவோம் என்று உறுதியும் கொடுத்தனர்.

 

அவளுக்கு நல்ல சந்தோசம், வீடு திரும்பியதும் அந்த செய்தியை தன் சகோதரர்களுடன் பகிர்ந்துகொண்டாள். அடுத்தநாள் காலை நாலு  மணிக்கே எழும்பி, சாப்பாடு தயாரித்துவிட்டு, சகோதரர்களை சாப்பிட்டுவிட்டு கவனமாக பாடசாலை போய் வரும்படி கூறிவிட்டு, ஆறுமணிக்கு முதலே வேலைக்காரியாக, தன் முதல் நாள் வேலையை தொடங்கினாள். இங்கு சமையல் பெரிதாக இல்லாவிட்டாலும் குழந்தை பராமரிப்பும் வீடு, வளவு துப்பரவாளாலுமே முக்கியமாக இருந்தது. அவளுக்கு அவை ஏற்கனவே பழக்கமாக இருந்ததால், அது அவளுக்கு பிரச்சனையாக இருக்கவில்லை.

 

முதல் நாள் வேலை முடிந்து வீடு திரும்ப இரவு ஏழு மணி கடந்துவிட்டது. என்றாலும் அவர்கள் மிஞ்சிய சாப்பாடுகளை அவளுக்கு வீட்டுக்கு எடுத்துப்போக கொடுத்துவிட்டனர். அவள் அங்கு மூன்று நேரமும் சாப்பிட்டதால், அதை சகோதரர்களுக்கு கொடுத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் அனுபவம் பெற, கெதியாக அதேநேரம் நேர்த்தியாக துப்பரவாக்கள் செய்ய தொடங்கினாள். இதனால், அவர்களின் மூத்த மகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கணக்கும் தமிழும் மிஞ்சிய நேரத்தில் படிப்பிக்கவும் தொடங்கினாள். அது அவர்களை மிகவும் கவர்ந்தது. மலர் பாடசாலையில் படிக்கும் காலத்தில், ஒரு திறமையான மாணவியாக இருந்தது இதற்கு அவளுக்கு உதவியது

 

அவளை இப்ப அவர்கள் தங்களின் ஒரு குடும்ப உறுப்பினராக கருத தொடங்கியதுடன், அவளை சாதாரண வகுப்பு பரீட்சைக்கு தனியார் பரீட்சையாளராக  தோற்றுவதற்கான உதவிகளையும் வழங்கி, அவளுக்கு தாமே ஓய்வுநேரத்தில் படிப்பித்தனர். இருவரும் பட்டதாரிகள் என்பதால், படிப்பித்தல் அவர்களுக்கு இலகுவாகவும் இருந்தது. மலரின் நேர்மையான திறமை அவளை மீண்டும் படிப்பை தனியார் மாணவியாக தொடர் வைத்தது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment