முகவுரை-18-சமூகத் தாக்கம்
திருவள்ளுவரின் உருவப்படங்கள் நெடுங்காலமாக சைவர்களாலும் சமணர்களாலும் வரையப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. கொண்டை வைத்த உருவம் துவங்கி தலைமுடி மழித்த உருவம் வரை பல்வேறு வகையில் இப்படங்கள் காணப்பபடுகின்றன. 1960-ம் ஆண்டு கே. ஆர். வேணுகோபால சர்மா என்ற ஓவியர் வரைந்த கொண்டை முடியும் தாடியுடனுமான உருவப்படம் ஒன்று தமிழக மற்றும் இந்திய அரசாங்கங்களால் ஏற்கப்பட்டு பயன்படுத்தப்படத் துவங்கியது. 1960-களுக்குப் பின்னர் இதுவே அரசு அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 1964-ம் ஆண்டு இப்படத்தினை இந்தியப் பாராளுமன்றத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் திறந்து வைத்தார். 1967-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வள்ளுவரது உருவப்படம் ஒன்று இருக்க வேண்டும் எ்னறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இருபதாம் நூற்றாண்டில் குறளுக்குப் பலர் இசையமைத்துப் அதைப் பாடி அரங்கேற்றியுள்ளனர். இவர்களுள் மயூரம் விஸ்வநாத சாஸ்திரி மற்றும் ரமணி பரத்வாஜ் ஆகியோர் அடங்குவர். குறளை முழுமையாகப் பாடி குறள் கச்சேரி நடத்தியவர்களுள் எம். எம். தண்டபாணி தேசிகர் மற்றும் சிதம்பரம் சி. எஸ். ஜெயராமன் ஆகியோர் முதன்மை வாய்ந்தவர்களாவர். மதுரை சோமசுந்தரம் மற்றும் சஞ்ஜய் சுப்பிரமணியன் ஆகியோரும் குறளை இசையாகப் பாடியுள்ளனர். மயூரம் விஸ்வநாத சாஸ்திரி திருக்குறள் முழுவதற்கும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இசையமைத்தார். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் சித்திரவீணா என். ரவிகிரண் குறள் முழுவதற்கும் 16 மணி நேரத்திற்குள் இசையமைத்து சாதனை படைத்தார்.
1818-ம் ஆண்டு அப்போதைய சென்னை நகர ஆட்சியராக இருந்த எல்லீசன் வள்ளுவரின் உருவம் பதித்த தங்க நாணயங்களை வெளியிட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வள்ளலார் இராமலிங்க அடிகளார் குறளறங்களைப் பரப்பும் பொருட்டு பொதுமக்களுக்கான தினசரி திருக்குறள் வகுப்புகளை நடத்தத் துவங்கினார். 1968-ம் ஆண்டு அரசுப் பேருந்துகளில் அனைவரும் பார்க்கும்படியாகக் குறட்பாவை ஏந்திய பலகை ஒன்றை வைக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. குறளின் நினைவாகக் கன்னியாகுமரியிலிருந்து புதுதில்லி வரை 2,921 கிலோமீட்டர் தூரம் இயக்கப்படும் தொடர்வண்டிக்கு இந்திய இரயில்வே "திருக்குறள் அதிவிரைவு வண்டி" என்று பெயரிட்டுள்ளது.
திருக்குறள் தமிழ் மக்களின் தினசரி வாழ்வோடு ஒன்றிய ஒரு இலக்கியமாகும். குறளின் பாக்கள் எல்லாத் தருணங்களிலும் அனைத்துத் தரப்பு மக்களாலும் கையாளப்படுகின்றன. இயக்குனர் கே. பாலச்சந்தரின் படத் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா தனது படங்களின் துவக்கத்தில் திருக்குறளின் முதற்பாவினைப் பாடித் துவங்குவதை வழக்கமாகக் கொண்டது. தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பலவற்றிலும் குறளின் வரிகளும் சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளன. இருபதாம் நூற்றாண்டிலிருந்து திருக்குறள் சார்ந்த மாநாடுகள் நடத்தும் வழக்கம் துவங்கியது. முதன்முதலாகத் திருக்குறள் மாநாடு ஒன்று 1941-ம் ஆண்டு திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களாலும் பின்னர் 1949-ம் ஆண்டு மேலும் ஒரு குறள் மாநாடு பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்களாலும் நடத்தப்பட்டன. இம்மாநாடுகளில் பல அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். அதுமுதல் பல திருக்குறள் மாநாடுகள் தெடர்ந்து நடந்தேறியுள்ளன. ஓவியக்கலை, இசை, நடனம், தெருக்கூத்து மற்றும் தெரு நிகழ்ச்சிகள், ஒப்புவித்தல் மற்றும் முற்றோதல், செயற்கூட்ட நிகழ்ச்சிகள், விடுகதைகள் மற்றும் புதிர்ப்போட்டிகள் எனப் பலவற்றிலும் குறளின் பாக்களும் சிந்தனைகளும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் தாங்கள் ஆற்றும் மேடை உரைகளனைத்திலும் குறட்பாக்களை மேற்கோள் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் குறளைப் பரவலாக எடுத்தாள்கின்றனர். இதுபோல் பேசிய தலைவர்களில் ராம் நாத் கோவிந்த், ப. சிதம்பரம், நிர்மலா சீதாராமன், ஆகியோர் அடங்குவர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டினை ஆதரித்துப் போராடியவர்கள் "காளைகளை தாங்கள் நேசிப்பதே அவ்விளையாட்டை தாங்கள் ஆதரிப்பதற்குக் காரணம்" என்று கூறியபோது அப்போதைய இந்திய அமைச்சர் மனேகா காந்தி "திருக்குறள் விலங்கு வன்கொடுமையை என்றும் ஆதரிப்பதில்லை" என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் கூற்றை குறளை மேற்கோள் காட்டி மறுத்துரைத்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2020-ல் இந்தியப் படைகளிடம் தாமாற்றிய உரை உட்படப் பல நிகழ்வுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார். இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய அரசின் அறிக்கையான "2020 இந்தியப் பொருளாதார மதிப்பாய்வு" தனது அறிக்கையில் குறளையும் அர்த்த சாஸ்திரத்தையும் அதிகமாகச் சுட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
[திருக்குறள் முகவுரை19, அடுத்தவாரம் தொடரும்]
திருக்குறள் தொடர்கிறது…
19. புறங்கூறாமை
👉குறள் 181:
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது.
மு.வ உரை:
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது
கலைஞர் உரை:
அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது.
👉குறள் 182:
அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
மு.வ உரை:
அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.
கலைஞர் உரை:
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.
👉குறள் 183:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்.
மு.வ உரை:
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
கலைஞர் உரை:
கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.
👉குறள் 184:
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்கமுன்னின்று பின்னோக்காச் சொல்.
மு.வ உரை:
எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.
கலைஞர் உரை:
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.
👉குறள் 185:
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.
மு.வ உரை:
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.
கலைஞர் உரை:
ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
👉குறள் 186:
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்.
மு.வ உரை:
மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.
கலைஞர் உரை:
பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்.
👉குறள் 187:
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தேற்றா தவர்.
மு.வ உரை:
மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
சாலமன் பாப்பையா உரை:
கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.
கலைஞர் உரை:
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.
👉குறள் 188:
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
மு.வ உரை:
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?
சாலமன் பாப்பையா உரை:
தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!
கலைஞர் உரை:
நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?
👉குறள் 189:
அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்புன்சொ லுரைப்பான் பொறை.
மு.வ உரை:
ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?
சாலமன் பாப்பையா உரை:
பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!
கலைஞர் உரை:
ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை `இவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.
👉குறள் 190:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
மு.வ உரை:
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம்
உண்டோ?
சாலமன் பாப்பையா உரை:
புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?
கலைஞர் உரை:
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்....
0 comments:
Post a Comment