பழகத்தெரிய வேணும் – 87

அச்சம்தான் வெற்றிக்கு முதற்படி

பொறுக்கமுடியாத சந்தர்ப்பங்களில் மனிதர்கள் இரு விதமாக நடப்பதுண்டுஎதிர்த்துப் போராடுவது, இல்லையேல் அங்கிருந்து தப்பி ஓடிவிடுவது (FIGHT OR FLIGHT).

 

அச்சம் அளவுக்கு மிஞ்சினால், இவற்றில் ஒன்றைக்கூடச் செய்ய இயலாது, பயந்து நிற்க நேரிடும்.

 

`பிறர் என்ன சொல்வார்களோ!’ என்ற பயம் சிறுவயதிலிருந்தே நம்முள் விதைக்கப்பட்டுவிடுகிறது.

 

அதற்குப் பதில், `பிறர் பாராட்டும்படியாக, துணிந்து ஏதாவது செய்!’ என்று தூண்டியிருக்கலாம்.

 

எது தவறு?

`தவறு செய்துவிடுவோமோ?’ என்று பயந்தே காலங்கழிப்பதுதான் தவறு.

 

வாழ்க்கை எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. மாறிக்கொண்டே இருக்கும். இது புரியாது, அல்லது அஞ்சி, ஒத்துக்கொள்ள விரும்பாது, பழைமையிலேயே ஊறிக்கிடந்தால் அப்படி இருப்பவருக்கு மட்டுமல்லாது, அவரது குடும்பத்துக்கும் துன்பம்தான்.

 

துணிந்து செய்

எல்லா அனுபவங்களும் நல்லவிதமாக முடியும் என்பதல்ல. ஆனாலும், ஏதாவது நன்மை விளையக்கூடும்.

 

நாம் எதற்கு அஞ்சுகிறோமோ, அதைச் செய்துபார்ப்பதுதான் அச்சத்தை வெல்லும் வழி.

 

கதை::

நான் நீச்சல் பழக ஆரம்பித்து இரு மாதங்களுக்குப்பின், எதிர்த்திசையில் கண்களை மூடிக்கொண்டு நீச்சலடித்தவரால் அடிவாங்கி, தண்ணீருக்கு அடியில் போனேன். சில நிமிடங்கள் மேலே வரத்தெரியாது திணறினேன். (நெடுநேரமென்றுதான் அப்போது அடைந்த கலவரத்தில் தோன்றியது).

 

ஒரு கரம் என்னை மேலே இழுத்து, கரை சேர்த்தது. (நீச்சல் காவலர் அதற்கென்றே நியமிக்கப்பட்டிருந்தார்).

 

கவனித்துக்கொண்டிருந்த ஒரு சீனர், “உடனே நீங்கள் பயத்தை வெல்லவேண்டும்,” என்று அழுத்தமாகக் கூறினார்.

 

ஒரு பெண்மணி, “என்னையும் இப்படித்தான் ஒருமுறை காப்பாற்றினார்கள்,” என்று அசட்டுச்சிரிப்புடன் ஒத்துக்கொண்டாள்.

 

எதையாவது கற்கவேண்டுமென்றால், துணிச்சல் மிக அவசியம். `புதிய அனுபவம் எப்படி இருக்கும்?’ என்ற ஆர்வத்தை வளர்த்துக்கொள்பவர்களை அச்சம் தொடராது.

 

நீங்கள் மூச்சைப் பெரிதாக இழுத்துக்கொண்டு தண்ணீரின் அடியில் போய், பிறகு எம்பி, நீந்துவதுபோல் கைகளையும் கால்களையும் ஆட்டியபடி மேலே வாருங்கள். மேலே வந்ததும் மூச்சை விடலாம்,” என்று சொல்லிக்கொடுத்தார்.

 

நான் தயங்கியபோது, “உங்களால் முடியாவிட்டால், நான் தூக்கிவிடுகிறேன்,” என்று பலமளிக்க, துணிந்து அவர் சொற்படி செய்தேன். அவர் உதவி தேவைப்படவில்லை.

 

நான் கரையேறியதும், அவர் பெரிதாகச் சிரித்தார். “நீங்கள் முழுகவே மாட்டீர்கள். எவ்வளவு நேரம் மூச்சைப் பிடித்துக்கொண்டிருந்தீர்கள்!”

 

`முடியாதுஎன்று நினைத்ததைச் செய்துவிட்ட பெருமை அப்போது எழவில்லை. களைப்புதான் மிகுந்தது.

 

வீடு திரும்பியதும், நடந்ததை என் பெண்களிடம் கூற, தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்: “நாங்கள் (ஏழு வயதில்) நீச்சல் கற்கும்போது, மாஸ்டர் எங்களை இருபது அடி உயரத்திலிருந்து தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிடுவார். தத்தளித்தபடி மேலே வந்துவிடுவோம். அதன்பின் பயம் இருந்தால், பால் கலக்காத சூடான காப்பி குடிக்கவேண்டும்”.

 

(மூன்று மாதங்களே ஆன குழந்தையை ஆழமான தண்ணீர் தொட்டிக்குள் விட்டால், மேலே வந்துவிடும். தாயின் கருப்பையில் நீந்திய நினைவு அதற்கு மறக்கவில்லை).

 

பாதுகாப்பு

பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டதும், அம்மாவின் புடவையை இறுகப் பற்றிக்கொண்டு, சில குழந்தைகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்வதுண்டு. பழகிவிட்டால், `டீச்சர் திட்டினாலும், வீட்டுப்பாடம் கொடுத்தாலும் போகிறது, பள்ளிக்கூடத்தில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்களே!’ என்று பிடித்துப்போய்விடும்.

 

அதேபோல், திருமணமாகி, முதன்முறையாகப் புக்ககம் செல்லும் பெண்களும் அழுவார்கள். `இதுதான் தாம்பத்தியம்,’ என்று புரியும்போது, பயம் விலகிவிடும்.

 

பழகிப்போன சூழ்நிலையை மாற்றினால், வேறொரு இடத்தில் எப்படி இருக்குமோ என்ற அச்சம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

 

இதே காரணத்தால்தான் பொறுக்கமுடியாத தாம்பத்தியம் அமைந்தாலும், அதைவிட்டு விலகத் துணியமாட்டார்கள் சில பெண்கள்.

 

மரண பயம்

வயது முதிர்ந்த நிலையில், படுக்கையிலேயே காலம் கழிக்கவேண்டிய நிலை ஒரு பெண்மணிக்கு. இறக்கப்போகிறோம் என்று சந்தேகமறத் தெரியும். ஆனாலும், இவ்வுலகைவிட்டு நீங்கியபின் என்ன ஆகுமோ என்ற பயம்.

 

உயிர் பிரியும் தறுவாயில் உங்களுக்குப் பிடித்தவர்கள் எல்லாரையும் மீண்டும் பார்க்கமுடியும்,” என்று ஆறுதல் கூறினேன்.

 

பலமுறை விளக்கம் கேட்டார்.

 

இறக்கும் தறுவாயில், என்றோ மாண்டுபோன பெற்றோர், சகோதர சகோதரியர் ஆகியோர் அவர் கண்ணுக்குத் தெரிவார்கள், அவரை வரவேற்பார்கள் என்று நான் எப்போதோ படித்ததை எடுத்துச்சொன்னேன்.

 

இறுகியிருந்த முகத்தில் மலர்ச்சி. ஒரு வாரத்திற்குப்பின், தூக்கத்திலேயே மரணத்தைத் தழுவிக்கொண்டார்.

 

அச்சம் தன்னம்பிக்கையின் வித்து

மேடையில் உரையாற்றவோ, பாடவோ, நடிக்கவோ வருகிறவர்கள் எத்தனைமுறை அப்படிச் செய்திருந்தாலும், ஆரம்பிக்குமுன் சிறிது படபடப்பாக உணர்வார்கள். அந்த அச்சத்தை எதிர்கொள்ளும்போது தன்னம்பிக்கையும் கூடிக்கொண்டேபோகும்.

 

எதையாவது கற்கும்போது ஆர்வத்துடன் ஆரம்பித்தாலும், போகப் போக, `இதற்கொரு எல்லையே கிடையாதா!’ என்ற மலைப்பும், பயமும் எழும். அரைகுறையாக நிறுத்திக்கொள்ளத் தோன்றிவிடும்.

 

இசை, நாட்டியம், அல்லது வேறு எந்தத் துறையிலுமே கரைகாண்பது என்பது நடக்காத காரியம். இது புரிந்து, சிறுகச் சிறுக முயற்சிக்க, பயமும் போய்விடும். பயம்தான் கனவுகளின் எதிரி என்பார்கள்.

 

அச்சுறுத்துகிறவர்கள்

நம்மைக் கண்டு பயப்படுகிறவர்கள் தம் உணர்ச்சியை நம் பக்கம் தள்ளிவிட முனைகிறார்கள். அது புரிந்து, நாம் பயப்படாவிட்டால், அவர்களுடைய அச்சம் அதிகரித்துவிடும். சுவரில் வீசிய பந்துபோல்தான்.

 

பெண்களிடம் முறைதவறி நடக்க முயலும் ஆண்களுக்கு இந்த விளக்கம் பொருந்தும்.

 

அழகு, செல்வம், அறிவுஇப்படி ஏதோ ஒரு விதத்தில் தன்னைவிட உயர்ந்த நிலையில் ஒரு பெண் இருக்கிறாள் என்று கருதினால், துரத்தாத குறையாக, அவளை நெருங்க பெருமுயற்சிகள் எடுப்பார்கள். அவள் வயது ஒரு பொருட்டில்லை. அப்போது அவள் அடையும் அச்சம் அவர்களுக்கு வெற்றி.

 

அந்தப் பெண் எதிர்த்துப் பயனில்லை. பொதுவாகவே, பெண்கள் சொல்வதும் செய்வதும் எதிர் எதிராக இருக்கும் என்று தப்புக்கணக்கு போட்டுவிடுவார்கள்.

 

முதலில் பெண்ணுக்குச் சிறிது பயம் ஏற்பட்டாலும், துணிச்சலுடன் அதை எதிர்கொண்டால், அவமானம் அந்த ஆண்களுக்கு.

 

பயத்துடன் கோபமும் உடன்வரும்.

வேகமாக வரும் காரின் குறுக்கே ஒருவர் நடந்தால், காரோட்டிக்குக் கோபம் எழும்.

 

ஏன் கோபம்? விபத்து நடந்துவிடுமே என்ற பயம்தான் கோபமாக மாறுகிறது.

 

எதற்காவது பயந்து, அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால், கோபம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அப்போது ஏற்படும் மன இறுக்கம் உடல்நிலையைப் பாதித்துவிடுமே!

 

என்ன பயம் வேண்டியிருக்கிறது!

நம்மை நாமே உணர ஒரு வழி இது.

 

தன்னால் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை ஒருவருக்கு இருந்தால், `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்ற தயக்கமோ, `தோல்வியடைந்தால் அவமானம்!’ என்ற எண்ணமோ எழாது.

 

துணுக்கு

எனக்கு என்னென்னவோ சாதிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், பயம் குறுக்கே வந்நது எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது.

 

என்ன பயம்?

தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம்தான்!

 

போட்டிகளிலோ, விளையாட்டுகளிலோ பங்கெடுத்துக்கொள்பவர்களில் எத்தனைபேர் முதலிடத்தைப் பிடிக்கிறார்கள்?

 

அப்படி இல்லாதவர்கள் தோல்வி அடைந்தவர்கள் அல்லர். பங்கெடுத்துக்கொள்ளவாவது துணிந்தார்களே!

 

தமிழ்ப்படங்களிலிருந்து பாடம்

அண்மையில் வெளியான கர்ணன், அசுரன் போன்ற திரைப்படங்களில், சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைப்பற்றிக் காட்டுகிறார்கள்.

 

வயது முதிர்ந்தவர்கள் தமக்கு நியாயம் கிடைக்காது என்ற அச்சத்திலேயே தழைந்துபோய்விடுகிறார்கள்.

 

இளவயதினரோ, காலம் காலமாகத் தம்மை இந்த நிலையிலேயே இருக்கச் செய்யும் மேட்டுக்குடியினரைத் துணிச்சலுடன் எதிர்க்கிறார்கள். துன்பம் அனுபவித்தாலும், மனம் தளர்வதில்லை.

 

இறுதியில், கல்வியால்தான் ஒரு சமூகம் உயரமுடியும் என்று உணர்கிறார்கள். அதற்கும் எதிர்ப்பு. ஆனால், பலரும் இணைந்து எதிர்த்தால், வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்ற பாடம் புகட்டப்படுகிறது.

 

பயம் இயற்கையான உணர்வுதான். ஆனால், அதை எதிர்கொள்ளும்போதுதான் வாழ ஆரம்பிக்கிறோம்.

 

::நிர்மலா ராகவன்-/எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1

0 comments:

Post a Comment