திருக்குறள்.../21/-தீவினையச்சம்

முகவுரை-20- மரபுத் தாக்கம்

குறள் தொன்றுதொட்டு சான்றோர்களால் போற்றிவரப்பட்ட ஒரு தமிழ் நூலாகும். சங்ககாலத்துப் பிழைப்பட்ட சிந்தனைகளைத் திருத்தி தமிழ்க் கலாச்சாரத்தினை நிரந்தரமாக வரையறை செய்த நூல் இது என்பது அனைத்து அறிஞர்களாலும் ஒருமனதாக ஏற்கப்படும் கருத்து. இந்தியத் துணைக்கண்ட இலக்கியங்கள் பலவற்றோடும் ஒப்பீடு செய்து அனைத்துத் தரப்பினராலும் பயிலப்படும் நூல் திருக்குறள். பதினெட்டாம் நூற்றாண்டில் துவங்கி பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூல் உலக அரங்கில் பேசப்படும் இலக்கியமாகத் திகழ்கிறது. குறளால் உந்தப்பட்ட ஆசிரியர்களில் இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், சேக்கிழார், கம்பர், லியோ டால்ஸ்டாய், மகாத்மா காந்தி, ஆல்பர்ட் சுவைட்சர், இராமலிங்க அடிகளார், . எஸ். ஏரியல், வீரமாமுனிவர், காரல் கிரவுல், ஆகஸ்டு ஃப்ரெட்ரிச் கேமரர், நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி, எல்லீசன், சார்லஸ் எட்வர்ட் கோவர், ஜி. யு. போப், வினோபா பாவே, அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி, அப்துல் கலாம், மற்றும் யூ ஹ்சி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்களுள் பலர் குறளை தங்களது தாய்மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.

 

தமிழ் மொழியில் அதிகம் சுட்டப்படும் இலக்கியமாகத் திருக்குறள் விளங்குகிறது. பண்டைய நூல்களான புறநானூறு, மணிமேகலை, சிலப்பதிகாரம், பெரிய புராணம், கம்பராமாயணம், திருவள்ளுவமாலை போன்ற அனைத்தும் வள்ளுவராலேயே பெயரிட்டு அழைக்கப்படாத குறளைப் பல்வேறு சிறப்புப் பெயர்களிட்டு தங்களது பாடல்களில் சுட்டுகின்றன. குறளின் வரிகளும் சிந்தனைகளும் புறநானூரில் 32 இடங்களிலும், புறப்பொருள் வெண்பாமாலையில் 35 இடங்களிலும், பதிற்றுப்பத்தில் ஓரிடத்திலும், பத்துப்பாட்டில் ஓரிடத்திலும், சிலப்பதிகாரத்தில் 13 இடங்களிலும், மணிமேகலையில் 91 இடங்களிலும், சீவக சிந்தாமணியில் 20 இடங்களிலும், வில்லிபாரதத்தில் 12 இடங்களிலும், திருவிளையாடற் புராணத்தில் 7 இடங்களிலும், கந்தபுராணத்தில் 4 இடங்களிலும் சுட்டப்படுகின்றன. கம்பராமாயணத்தில் கம்பர் சுமார் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் குறளைச் சுட்டுகிறார். இந்தியாவிலும் உலக அளவிலும் சைவ, நனிசைவ, மற்றும் தாவர உணவுகள் பற்றிய மாநாடுகளில் பரவலாகச் சுட்டப்படும் நூலாகவும் திருக்குறள் விளங்குகிறது.

ஆங்கிலேய ஆட்சியின் போது திருக்குறள் முதன்முதலாகப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆயின் தேர்ந்தெடுக்கப்பட்ட வெறும் 275 குறட்பாக்கள் மட்டுமே மூன்றாம் வகுப்பு தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிச் சிறார்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னரும் பல ஆண்டுகளாக குறளைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் இருந்து வந்தன.

 2016-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் "அறம் பிறழாத குடிமக்களைக் கொண்டதாக இந்நாட்டினை ஆக்கவேண்டும்" என்று பணித்து 2017–2018 கல்வியாண்டு முதல் குறளின் முதல் இரண்டு பால்களிலுள்ள 108 அதிகாரங்களில் காணப்படும் 1,080 குறட்பாக்களையும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்பட வேண்டுமென்ற உத்தரவினைப் பிறப்பித்தது.

 மேலும் "வாழ்வியலுக்குத் தேவையான அறங்களையும் அறிவினையும் குறளுக்கு நிகராக நல்கக்கூடிய வேறு ஒரு சமய நூலோ மெய்யியல் நூலோ எங்குமில்லை" என்று கூறி உயர்நீதிமன்றம் தன் தீர்ப்பினை நல்கியது.

 

மகாத்மா காந்தி உட்பட வரலாற்றில் பலரை அகிம்சையின் வழியில் திருக்குறள் பயணிக்க வைத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. குறளின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பு ஒன்றைப் படிக்க நேர்ந்ததன் விளைவாக லியோ டால்ஸ்டாய்க்கு வள்ளுவரின் இன்னா செய்யாமை அதிகாரம் பற்றித் தெரிய வந்ததும் அது வன்முறையை எதிர்க்கும் டால்ஸ்டாயின் சிந்தனைகளுக்கு வலுசேர்த்தது. தனது பொதுவாழ்வின் துவக்கத்தில் மகாத்மா காந்தி டால்ஸ்டாயிடம் அறிவுரை கேட்க, தனது "ஒரு இந்துவுக்கு வரைந்த மடல்" (A Letter to a Hindu) என்று தலைப்பிட்ட ஒரு கடிதம் வாயிலாக டால்ஸ்டாய் வள்ளுவரது இச்சிந்தனைகளை காந்திக்கு அறிமுகம் செய்துவைத்து அவரை அகிம்சை வழியில் நின்று சுதந்திரப் போராட்டத்தினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவ்வறிவுரையின் படி காந்தி தனது சிறைவாழ்வின் போது திருக்குறளைப் படிக்கத் துவங்கி அதன் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போர் புரிவதென்று முடிவெடுத்தார். தனது இளவயது முதலே குறளின்பால் ஈர்க்கப்பட்ட 'வள்ளலார்' இராமலிங்க அடிகளார், கொல்லாமையையும் புலால் மறுப்பினையும் மக்களுக்கு வலியுறுத்தி அகிம்சையையும் ஜீவகாருண்யத்தையும் மக்களிடையே பரப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

[முகவுரை முற்றிற்று]

திருக்குறள் தொடர்கிறது

 


21. தீவினையச்சம்

👉குறள் 201:

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை யென்னுஞ் செறுக்கு.

 

மு.வ உரை:

தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

சாலமன் பாப்பையா உரை:

தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.

கலைஞர் உரை:

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.

 

👉குறள் 202:

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

மு.வ உரை:

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

கலைஞர் உரை:

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.

 

👉குறள் 203:

அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்குஞ் செய்யா விடல்.

 

மு.வ உரை:

தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:

தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

கலைஞர் உரை:

தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.

 

👉குறள் 204:

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

 

மு.வ உரை:

பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

சாலமன் பாப்பையா உரை:

மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.

கலைஞர் உரை:

மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.

 

👉குறள் 205:

இலனென்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றுப் பெயர்த்து.

 

மு.வ உரை:

யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

சாலமன் பாப்பையா உரை:

தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.

கலைஞர் உரை:

வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.

 

👉குறள் 206:

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.

 

மு.வ உரை:

துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.

கலைஞர் உரை:

வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

 

👉குறள் 207:

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும்.

 

மு.வ உரை:

எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை:

எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.

கலைஞர் உரை:

ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.

 

👉குறள் 208:

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயா தடியுறைந் தற்று.

 

மு.வ உரை:

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.

கலைஞர் உரை:

ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.

 

👉குறள் 209:

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்துன்னற்க தீவினைப் பால்.

 

மு.வ உரை:

ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.

கலைஞர் உரை:

தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.

 

👉குறள் 210:

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.

 

மு.வ உரை:

ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

சாலமன் பாப்பையா உரை:

தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.

கலைஞர் உரை:

வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.

 

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்

0 comments:

Post a Comment