வாடைக்காற்று - திரைப்படத்தில் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன்


சினிமாத்துறையில் நடிகனாக எனது பிரவேசம் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராத வகையில் நிகழ்ந்தது. எனது நண்பர் சிவதாசன், மேடை நாடகத்துறையின் மூலம் எனக்கு அறிமுகமானவர், செங்கை ஆழியானின் "வாடைக்காற்று" நாவலை திரைப்படமாக்குவதின் மூலம் சினிமாத்துறையில் கால் வைத்தார்.

வீரகேசரி பிரசுரமாக வெளிவந்த "வாடைக்காற்று" நாவலை நான் வாசித்தபோதே இதுதிரைப்படமாக உருவாக்குவதற்கு ஏற்ற கதை என்று நினைத்தேன். உண்மையில் "விருத்தாசலம்" தான் எனக்கு பிடித்த பாத்திரமாக இருந்தது

அந்தப்பாத்திரத்தில் காமினி பொன்சேகா நடிக்கப்போவதாக சிவதாசன் ஆரம்பத்தில் எனக்கு சொன்னார்.

பிரேம்நாத் மொறாயஸ் (இவர் தமிழர்தான்) என்பவரை இயக்குனராக போட்டதே அவர் மூலம் காமினி பொன்சேகாவை நடிக்க எடுத்துப்போடலாம் என்ற நம்பிக்கையினால்தான் என்றும் சொல்லப்பட்டது. காரணம் அவர்கள் இருவரும் சிங்கள சினிமாத்துறையில் மிகநெருங்கிப் பணியாற்றியவர்கள்.

ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.காமினி பொன்சேகா வாடைக்காற்றில் நடிக்க மறுத்துவிட்டார். பலரையும் அந்தப்பாத்திரத்துக்கு யோசித்துவிட்டு, சிவதாசனும் அவரது தேர்வுக்குழுவும் கடைசி, கடைசியாக என்னில் வந்து நின்றார்கள்.

நான் ஒரு மூவி டெஸ்டடுக்கு அழைக்கப்பட்டேன். (மேக் அப் டெஸ்ட் அல்ல) என் நல்ல காலத்துக்கு பிரேம்நாத் மொறாயஸ் என்னிடம் ஆடுவாயா, சண்டைபோடுவாயா, குதிரை ஓடுவாயா என்ற வழ்க்கமான கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. ஒருமுறை என்னை (படத்தில் இருப்பதைப் போல) நிமிர்ந்து பார்த்தார். அவ்வளவுதான் சரியென்று சொல்லிவிட்டார்.

"
சம்மாட்டி" பாத்திரங்களில் நடிப்பதற்கு இருவர் தேர்ந்தெடுக்கப்ப்ட்டார்கள்.ஒருவர் அக்காலத்தில் பிரபலமான பொப்பிசைப் பாடகர். ..மனோகரன், அவருக்காவது யாழ்ப்பாண்க் கல்லூரிக் காலத்தில் ஜோ தேவானந்தின் "பாசநிலா" என்ற 16 மி.மி. படத்தில் நடித்த அனுபவம் இருந்தது. ஆனல் 'மரியதாஸ்' சம்மாட்டியாக நடிக்க வந்தவர், ஒரு மருத்துவர், விஞ்ஞான எழுத்தாளரும் கூட.ஆனால் டொக்டர் இந்திரகுமாருக்கு நடிப்பு அனுபவம் இருந்ததாக தெரியவில்லை.

"
வாடைக்கற்று" நாவலின் கதைக்களம் நெடுந்தீவு. ஆனால் நாவல் வெளிவந்த காலத்தில், நாவலின் குறிப்பிடப்பட்ட சில உவமைகளையிட்டு.அந்த ஊர்வாசிகளுக்கும் செங்கை ஆழியானுக்கும் முரண்பாடுகள் இருந்தன. இதனால் நாவல் அங்கு பகிரங்கமாக எரிக்கப்பட்டதாகவும் ஒரு கதை அடிபட்டது.இந்த நிலையில் அங்கு படப்படிப்பை வைப்பது உசிதமாகப் படவில்லை. எனவே அதேமாதிரியான ஒரு இடம் என்பதினால் "பேசாலை" தேர்ந்தெடுக்கப்பட்டது. பனைக்கூடல்கள், மட்டக்குதிரை,(Ponies) கரைவலை போடும் மீனவர்கள் என்று பலவகையிலும் நெடுந்தீவுக்கு ஒத்ததாக இருந்தது.அத்தோடு பேசாலைக்கு நெடுந்தீவைப்போல படகில்போக வேண்டியதில்லை. கொழும்பிலிருந்து, மன்னார் புகையிரதத்தில் நேராகப் போய் இறங்கி விடலாம்.

கதையின்படி, விருத்தாசலம், மட்டக்குதிரையில் கையில் முயல் வேட்டைக்காக ஈட்டியுடன் எந்த நேரமும் அலைந்துகொண்டிருப்பவன். தயாரிப்பு நிர்வாகி சிவதாசன், எனக்காக பொலிஸ் குதிரை ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்டுவரத் தீர்மானித்தார்.ஆனால் கதாசிரியர் செங்கை ஆழியானோ, விருத்தாசலம், மட்டக்குதிரையில்தான் சவாரி செய்யவேண்டுமென்று நிர்த்தாடசண்யமாக சொல்லி மறுத்துவிட்டார்.எனவே எனது எம்.ஜீ.ஆர் கனவு பலிக்காமல் போனது.


VIRUTHASALAM
இந்த இடத்தில் மட்டக்குதிரையைப்பற்றி சொல்லித்தானாக வேண்டும். அது
குள்ளமானது. கட்டக்காலியாக பனைக்கூடல்களில் மேய்ந்து கொண்டு திரியும். உள்ளூர் சிறுவர்கள் எப்படியோ மடக்கிப் பிடித்து ஏறி சவாரி செய்வார்கள். அவர்களே படப்பிடிப்புக்காக எனக்கு ஒரு மட்டக்குதிரையை பிடித்து தந்தார்கள். அதன் மேல் சவாரி செய்வது சிரமமாக இருந்தது. புது ஆள் (நான் தான்) ஏறியதும் சண்டித்தனம் செய்தது. அடிக்கடி என்னை தூக்கி மணலில் எறிந்தது. ஆனால் நாளைடைவில், அதற்கும் 'சினிமா ஆசை' வந்து விட்டது போலும். என்னோடு சகஜமாக ஒத்துழைத்து நடித்த்து. கீழே உள்ள படத்தில், வாசலடியில் தெரிகிறதே..அதுதான்..

விருத்தாசலம் நாகம்மாவிடம்
(
நான் விரும்புகிற ஒரே ஒரு சொத்து இந்த வீட்டிலைதான் இருக்கு. அதை எக்காரணம் கொண்டும் இழக்க தயாரில்லைநானும், ஆனந்தராணி ராஜரட்னமும் (பாலேந்திரா) இதற்கு முதலே பல வானொலி நாடகங்களில், குறிப்பாக இள்ங்கீரன் எழுதிய" வாழ்ப்பிறந்தவர்கள்" தொடர்நாடகத்தில் இணைந்து நடித்திருந்ததினால் எங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு இருந்தது. எனவே வாடைக்காற்றில் இருவரும் சேர்ந்து நடிப்பது சிரமமாக இருக்கவில்லை. .

Viruthasalam and Semiyon(A.E.Manoharan)
அதேபோல பொப்பிசைப்பாடகர் ..மனோகரனும் இலங்கை வானொலியில்தயாரிப்பளராக வேலை பார்த்த காலத்தில் இருந்தே என்னுடைய நண்பர். தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென்பதெ அவரது கனவாக இருந்த்தது. வாடைக்காற்றில் நடித்த பின்னர், தென்னிந்தியா சென்று, இலங்கையரான இயக்குனர் வி.சி.குகநாதனின் உதவியால், மாங்குடி மைனர் என்ற படத்தில் நடித்து, தொடர்ந்து, பல தமிழ், தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்தவர். அண்மைக்காலத்தில், சின்னத்திரை நாடகங்களில் தோன்றி வருகிறார்.
படப்பிடிப்பின் பெரும்பகுதி பேசாலையிலும், மிகுதி யாழ்ப்பாணத்தில், கல்லுண்டாய் வெளி, காக்கைதீவு, துணைவி (வட்டுக்கோடை), குரும்பசிட்டி போன்ற பகுதிகளிலும் நடந்தன. ..மனோகரன்,சந்திரகலா சம்பந்தப்பட்ட காதல் பாடல் காட்சியொன்று, வல்லிபுரக் கோவில் சூழ்லில் உள்ள மணல் திட்டிகளில் படமாக்கப்பட்டது.

இவர்களைவிட, "சுடலைச் சண்முகம்" என்ர்ற முரட்டுப்பாத்திரமொன்றில் பிரபல நடிகரான கே..ஜவாஹர் நடித்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

Viruthasalam and Shanmugam (K.A.Jawahar)

பாட்டனாராக நடித்த எஸ்.ஜேசுரத்தினம் அவ்வாண்டின்(1978) சிரந்த தமிழ் துணை
நடிகராக தேசிய விருது பெற்றார். வாடைக்காற்று 1978ம் ஆண்டின் சிறந்த
தமிழ்ப்படம் என்ற ஜனாதிபதி விருது பெற்றது. கே.கந்தசாமி, வசந்தா அப்பாத்துரை, பிரான்சிஸ் ஜெனம், எஸ்.எஸ்.கணேசபிள்ளை, லடிஸ் வீரமணி, சி.எஸ்.பரராஜசிஙகம், சிவபாலன், நேரு, டிங்கிரி, சிவகுரு போன்ற பல கலைஞர்கள் நடித்தார்கள்.

வாடைக்காற்று திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ரி.எப்.லத்தீப். ஈழ்த்து இரத்தினம் எழுதிய "வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" என்ற புகழ்பெற்ற பாடலை, ஜோசெப் இராஜேந்திரனும் குழுவினரும் பாடியிருந்தார்கள். இலங்கைத் திரைபடப் பாடல்களில் அதிகமாக வானொலியில் ஒலித்த பாடல் இது. முன்னர் குறிப்பிட்ட காதல் பாடலை (அலைகடல் ஓயாதோ) முத்தழ்குவும் சுஜாதாவும் பாடினார்கள். இவற்றைவிட "ஆடும் எந்தன் நெஞ்சில்" என்ற தனிப்படலையும் சுஜாதா பாடினார். திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே எனது முயற்சியால், புறக்கோட்டை விசாகமால்ஸ் நிறுவனத்தின் அதிபர் ஹெட்டியாரச்சி இந்தப்பாடல்களை இசைத்தட்டாக வெளியிட்டார்.

வாடைக்காற்று திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் என்னை நியமித்தார்கள். நானும், படத்தின் எடிட்டர் இராமநாதனும், உதவி எடிட்டர் எல்மோ ஹலிடேயும் (தற்போது சிங்கள திரைப்பட இயக்குனர்) சிலோன் ஸ்டுடியோவில் படத்தை தொகுத்து கொண்டிருக்கும்போது, வெளியில் 1977 கலவரம் உக்கிரமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. 13 நாட்கள், இரவும், பகலும் ஸ்டுடியோவிலேயே தங்கி, படத்தை முடித்தது தனி அனுபவம்,

"
வாடைக்காற்று" 1978ல் வெளியானது. யாழ்ப்பாணத்தில் ராணி தியேட்டரில் திரையிடப்பட்டது.அங்கு 41 நாட்கள் தொடர்ந்து ஓடியது. அதே நேரத்தில், கொழும்பில் கெயிட்டியிலும், படப்பிடிப்ப்ய் நடந்த பேசாலை போலின் தியேட்டரிலும் 21 நாட்கள் ஓடியது. அதே போல வவுனியா முருகனில் 20 நாட்களும், திருமலை நகரில் சரஸ்வதியில் 20 நாட்களும் ஓடியது.

 --கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் அனுபவக் குறிப்பிலிருந்து... தொடரும்

0 comments:

Post a Comment