அடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது?


அலுவலகத்தில்,வீட்டில் மற்றும் சில இடங்களில் காட்ட முடியாத கோபத்தை வேறெங்கோ வீசி எறிகிறோம்.கோபம் அமிலம் போன்றது.யாரோ நம்மைவிட எளியவர்கள் பாதிக்கப்படுவது பற்றி நாம் கவலைப்படுவதில்லை.அடக்கிவைப்பதும் ஏதோ ஒருநாள் வெடிக்கவே செய்யும்.வெளியே கொட்டும்வரை உடலையும்,மனதையும் அரித்துக்கொண்டே இருக்கும்.முகம் மாற, உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
    ஒருவர் தனது குழந்தையை கடைத்தெருவில் போட்டு அடித்துக்கொண்டிருந்தார்.அவருடைய பையன் தான்.சுமார் எட்டு வயது இருக்கும்.அவ்வளவு பெரிய குற்றம் எதுவும் செய்திருக்க வாய்ப்பில்லை.எவர் ஒருவரும் உலகில் எந்த உறவையும் விட தனது குழந்தைகளை நேசிக்கிறான்.இருந்தும் ஏன்?
 எல்லா நேரங்களிலும் ஒருவர் இப்படி நடந்து கொள்வதில்லை.ஏதேதோ சிக்கல்கள்.போராட்டங்கள் எங்கோ காட்ட வேண்டிய கோபம்.எரிச்சல்.அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.சாதாரண சளி பிடித்தால் கூட எரிச்சலான மன நிலையில் இருப்பது பற்றி நினைத்தேன்.?
கோபம் ஒரு இயல்பான உணர்வு.இயலாமையில்,எதிர்பார்ப்புகள் சிதறும்போது சூழ்நிலைகளில் ஏற்படுவதைவிட,வலியவர்களிடம் வெளிப்படுத்த முடியாத கோபம் கொடுமையானது.பல நேரங்களில் நம் மீது கோபப்படும்போது நம்மை அவர்கள் நேசிக்கவில்லை என்று நினைத்து விடுகிறோம்.அதிகமாக பாதிக்கப்படுகிறோம்.
உங்கள் கோபத்தை எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?ஏனென்று? எனது கோபம் சரியானதா? ஏன் நான் கோபப்பட்டேன்?கோபத்தை புரிந்துகொள்வதே அதை வெல்ல சரியான வழி. தண்ணீர் குடிப்பது,ஒன்றிரண்டு எண்ணுவது,இடத்தை விட்டு வெளியேறுவது, மௌனம் சாதிப்பது போன்றவற்றால் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.  
  நம்மைப்போலத்தான் மற்றவர்களும்.தவிர,மனிதர்கள் எப்போதும் ஒரே மன நிலையில் இருப்பதில்லை.மாத விலக்கு நாட்களில் பெண்களின் மனநிலையில் மாற்றம் இருக்கலாம்.உடல்நலம் இல்லாதபோது சிடுசிடுவென்றுஇருக்கலாம்.ஏமாற்றங்கள், தோல்விகள் போன்றவையும்,இயலாமையும் தன் மீதோ,மற்றவர்கள் மீதோ கோபத்தை தூண்ட்த்தான் செய்கின்றன.
 விலங்குகளுக்குக் கூட கோபம் உண்டு.ஆனால்,சிந்திக்கத்திறன் பெற்ற மனிதன் அதை மேலாண்மை செய்ய முடியும்.ஏற்கனவே நமக்கு கோபத்தால் ஏற்பட்ட இழப்புகளை நினைத்துப்பார்த்தால்,தொடர்ந்து அதன் தீமையைப் பற்றி எண்ணிவந்தால் மனம் பக்குவமடைந்துவிடும்.
  நியாயமான கோபமும் இருக்கத்தான் செய்கிறது.அநீதிக்கு எதிரான கோபம் தேவையானது.கோபம் உள்ளிட்ட உணர்வுகளுக்கு சிந்திக்க துவங்குவதுதான் வெளியே வர சரியான வழி.சிந்திப்பது மூலம் நம்மையும் பிறரையும் பாதிக்காமல் காத்துக்கொள்வது சாத்தியம்தான்.மனிதர்கள் அனைவருக்கும் சிந்திக்கும் திறன் இருக்கிறது.

0 comments:

Post a Comment