எதிர்காலத்தில் மனிதனுக்கு இயற்கை மரணமில்லை!

அறிவியல் என்னும் அற்புதக்கருவி மரணத்தையே வெல்லும் மகத்தான சக்தியை, மரணமில்லா பெருவாழ்வை மனிதனுக்குத் தரப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. உலகமெனும் இப்பெருமரங்கில் மனிதனுக்கு நிகர் மனிதனே. அவனது அறிவாலும் ஆற்றலாலும் இன்று நாளும் பற்பல புதிய விந்தை நிறைந்த அறிவியல் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. இவ்வுலகு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதுமை நிறைந்த பூவுலகாக, நவீன நாகரிகவுலகமாக மாறிவருகின்றது. எண்ணற்ற அறிவியல் சாகஸ செயல்களை நாம் அன்றாடம் சந்திக்கின்றோம். மனிதனின் இரகசிய ஆயுதமே விஞ்ஞானம்தான். அறிவியலைப் பயன்படுத்தி அகிலத்தையே கைக்குள் கொண்டுவந்துள்ள மனிதன் இன்று மரணதேவனுக்கே 'டாட்டா ' காட்டும் நிலைக்கு முன்னேறியுள்ளான். ஆம் இனிவரும் காலங்களில் மனிதனுக்கு இயற்கையான முறையில் மரணங்கள் (natural death) நிகழாது. இந்த நூற்றாண்டுக்குள் இந்நிலையை எட்டிவிடக்கூடிய சாத்தியம் தற்போது ஏற்பட்டுள்து. இனி இயற்கைச்சாவுக்கு வழியில்லை. தகவல்ஊடகங்கள், இவ்வரிய அறிவியல்செய்திகளை நமக்கு அறிவிக்கின்றன.


எண்ணற்ற அறிவியல் சாதனைகளைப் புரிந்துள்ள விஞ்ஞானிகள் இன்று மரணத்தையே வெல்லும் இரகசியத்தை அறிந்துகொள்வதிலும் வெற்றிமுகம் கண்டுள்ளனர். மனித உடலின் இரகசியங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய DNA என்ற அமைப்பின் இரகசியத்தைக் கண்டுபிடிப்பதில் பெருமளவு முன்னேறி விட்டனர். ஆறு நாட்டு அறிவியல் அறிஞர்களின் அசராத முயற்சியால் அபாரமான அதிசய இச்செய்தி வரும் தலைமுறைக்கு ஒரு வரப்பிரசதமாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து 'ஹியூமன் ஜினோம் புராஜக்ட் ' என்ற திட்டத்தின் கீழ் கடுமையாக உழைத்து திறமையாகச் செயல்பட்டு அரிய கண்டுபிடிப்பை அறிந்துள்ளனர். இந்த அபாரமான கண்டுபிடிப்பு மூலமாக மனித உடலின் அத்தனை இரகசியங்களும் விரைவில் அம்பலம் ஆகப்போகின்றன.


ஒவ்வொருவரும் குறிப்பிட்ட நோயால் அவதிப்படுவது ஏன் ? சிலர் குண்டாகவும் சிலர் ஒல்லியாகவும் இருப்பது எதனால் ? சிலர் புத்திசாலியாகவும் சிலர் முட்டாளாகவும் இருப்பது ஏன் ? ஒருசிலருக்கு மரணம் விரைவில் ஏற்படுவது ஏன் ? சிலர் அதிக காலம் வாழ்வது எப்படி ? இப்படி மனிதனுக்கு மனிதன் வேறுபாடுகள் எதன் அடிப்படையில் ஏன் ஏற்படுகின்றன ? இதற்கான இரகசியத்தை அறிந்துகொள்ளும் ஆய்வில் விஞ்ஞானிகள் தற்போது வெற்றியின் விளிம்பில் இருக்கிறார்கள். அறிவியல் அதிசயம் நிகழப்போகின்றது. ஆம்...இனி மனிதனின் ஆயுள் ஆயிரம் வருடங்கள் வரை நீண்டு போகலாம். இந்த ஆய்வு முழுமை பெறும்போது ஒருவருக்கு தோன்றும் எந்த விதமான நோயையும் முன்கூட்டியே கண்டுபிடித்து அதை அறுவைசிகிச்சையின்றி, மருந்து இல்லாமல் குணப்படுத்தி விடலாம். நமது உடல் வளர்ச்சியை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். இந்த அரிய அறிவியல் ஆராய்ச்சி மனிதனுக்கு மரணமில்லா பெருவாழ்வை வழங்கும்.


கோடிக்கணக்காண செல்களின் மொத்த தொகுப்புதான் நமது உடம்பு. மைக்ரோஸ்கோப் கருவி மூலம் மட்டுமே இந்த நுண்ணிய செல்லைக் காணமுடியும். நமது உடலின் எந்தப் பாகத்திலிருந்தும் ஒரு செல்லை மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கலாம். செல் எனப்படும் மிகச்சிறிய வட்ட வடிவிலான அமைப்புக்குள்தான் நமது உடலின் அனைத்து இரகசியங்களும் புதைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு செல்லிலும் நியூக்ளியஸ் எனப்படும் உட்கரு உள்ளது. அந்த உட்கருவில்தன் குரோமோசோம் எனப்படுபவை இருக்கின்றன. இது பெருக்கல் குறி (x) வடிவில் இருக்கும். ஒவ்வொரு செல்லிலும் இருபத்திமூன்று ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். அதாவது ஒரு செல்லில் 46 குரோமோசோம்கள் இருக்கும். ஆண் என்றும் பெண் என்றும் குழந்தைகள் பிறப்பது இந்தக் குரோமோசோம்களின் விளைவால்தான். கடைசி ஜோடி X Y என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. ஒரு செல்லில் இருக்கும் இந்த 23 ஜோடி குரோமோசோம்களின் கடைசி ஜோடியில் உள்ள இரண்டு குரோமோசோம்களும் எக்ஸ்களாக (XX) இருந்தால் அது பெண்ணைக் குறிக்கும். ஒன்று எக்ஸ், ஒன்று ஒய் (XY) என்று ஜோடி சேர்ந்திருந்தால் அது ஆணைக்குறிக்கும். ஆண்களை விட பெண்கள் அதிக ஆயுளுடன் விளங்கவும் இந்தக் கடைசி ஜோடி குரோமோசோமுகளே காரணமாகும். அதாவது பெண்களுக்குள்ள இரண்டு xx களில் ஏதாவது ஒன்றில் குறை ஏற்பட்டால் மற்றொரு x அந்தத் குறையை நிவர்த்தி செய்துவிடும். ஆனால் ஆண்களில் y-ல் குறைபாடு ஏற்பட்டால் xஆல் ஒன்றும் செய்ய இயலாது. இதன் விளைவுதான் பொதுவாக பெண்களை விட ஆண்களுக்கு, ஆயுள் குறைந்து காணப்படுகின்றது. மேலும், ஆண்கள் மட்டும் அதிகளவில் வழுக்கைத்தலையர்களாக விளங்குவதும் இதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.


ஒவ்வொரு குரோமோசோமையும் எடுத்துப்பார்த்தால் அதில் வளைந்து வளைந்து சுருள் போன்ற ஒரு அமைப்பு இருப்பதைக் காணலாம். இந்த அமைப்பே 'டிஎன்ஏ ' (DNA) எனப்படுகின்றது. இதில்தான் மனிதனின் உடல் இரகசியங்களுக்கு காரணகர்த்தாவான திருவாளர் ஜீன் இருக்கின்றார். ஏறத்தாழ எண்பதாயிரம் ஜீன்களில் உள்ள 320 கோடி இரகசிய குறியீடுகளில்தான் மனிதனின் உடல்வாகு, குணம், நோய்நொடி, ஆயுள் உள்பட அனைத்தும் அடங்கியுள்ளன. ஜீன்களில் உள்ள இரகசிய குறியீடுகள்தான் ஒவ்வொரு செல்லுக்கும் எந்த அளவில் தாதுப் பொருட்களைச் சேர்க்க வேண்டும் என்று கட்டளையிடும் எஜமான். ஜீன்களில் கோளாறு இருந்தால் கட்டளைகள் மாறுபட்டு செல்களின் இயக்கமும் மாறுபடுகின்றது. இதனால்தான் குறிப்பிட்ட நோய்கள் உடலைத் தாக்குகின்றன. எனவே கட்டளையிடும் இரகசிய குறியீட்டைத் திருத்தி அமைத்து விட்டால் எல்லாமே சரியாகி நோய் வராமல் தடுத்து விடலாம். இந்த இரகசிய குறியீடுகளைப் படிக்க முடியாமல் திணறிய விஞ்ஞானிகள் இன்று இதில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்து விட்டனர். மரபியல் மற்றும் மரபணுக் கோளாறு காரணமாக ஒரு மனிதனுக்கு ஆறாயிரம் வியாதிகள் வருகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது அப்பாவிற்கு சர்க்கரை வியாதி இருந்தால் மகனுக்கும் மகளுக்கும் அந்த வியாதி வர அதிக வாய்ப்பு உண்டு. எதிர்காலத்தில் இதுபோன்ற மரபணுக் கோளாறு காரணமாக ஏற்படும் நோய்களை முற்றிலுமாக ஒழித்து இனி யாருக்கும் இந்நோய்கள் வராமல் செய்துவிடலாம்.


ஜீன்களில் உள்ள இரகசிய குறியீடுகளில் 97 சதவீதத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டனர். இதில் 85 சதவிதம் மிகவும் துல்லியமாகக் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. மீதம் உள்ள குறியீடுகளையும் விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுபோல, ஜீன் இரகசிய குறியீட்டைப் படிப்பதன் மூலமாக அனைத்து நோய்களையும் தடுக்க முடியும். குணநலன்களையும் மாற்ற முடியும். முக்கியமாக ஒருவரின் ஆயுள்காலத்தை ஆயிரம் ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். எதிர்பாராத விபத்துகள், இயற்கைப்பேரிடர்கள், அணுவாயுதப்போர்கள் போன்றவைகளிலிருந்து மனிதன் தப்பித்துவிட்டால் ஆயிரம் ஆண்டுகள் அமர்க்களமாக வாழலாம். முதுமை ஏற்படுவதையும் முற்றிலுமாகத் தவிர்த்து விடலாம். எதிர்காலத்தில் மனிதன் மரணத்தை வென்றவனாக இருப்பான். மரணத்தை வெல்லும் மனிதன், மனிதனாகவே வாழ்வானா அல்லது மாக்களாகத் திரிவானா ? ஆக்கும் சக்தியும் அழிக்கும் சக்தியும் மனிதனுக்குள்ளேயே இருக்கின்றன என்பது மட்டும் உண்மை!


0 comments:

Post a Comment