வருங்கால தொழிநுட்பம்: அங்கம்-05

 வருங்கால தொலைநோக்கு
[ஒவ்வொரு புதனும் மலரும் புதிய வாசகர்களுக்காக மீளிடுகை] 
இன்றில் இருந்து 2500 வருடம் வரை என்ன நடக்கும்?ஒரு அறிவுபூர்வமான தொழில்நுட்ப அலசல்:
(இது ஆங்கில மூலத்தின் சுருங்கிய தமிழ் வடிவம்)
6 .00தெய்வ நம்பிக்கை:

6.10தெய்வ நம்பிக்கை எப்படித் தொடங்கியது? 
பணடைக்காலத்தில், மனிதரால் பல இயற்கை விடயங்கள் பற்றி முழுமையாகச் சீரணிக்க முடியவில்லை. வானம், பூமி, சூரியன், சந்திரன், வெள்ளி,  மழை, கடல், ஆறு, மின்னல், முழக்கம், நில அதிர்வு, சுனாமி, புயல்,
வெள்ளம், வரட்சி, எரிமலை என்ற பல வியங்கள் எப்படி உருவாகின்றன என்பது  பெரும் புதிராகவே இருந்தது.  திருப்தியான விடைகள் கிடைக்காதவிடத்தும், உண்மையான விளக்கங்களை அறியவோ, கிரகிக்கவோ கூடிய ஆற்றல் இல்லாத காரணத்தினாலும், தமக்கு மிகவும் சௌகரியமாக, இவற்றை எல்லாம் செய்பவர் கடவுள் என்று ஒருவரைச் சிருஷ்டித்தார்கள். காலம் காலமாக, தங்கள் தங்கள்  தேவைகளுக்குச் சாதகமாகப் பல உப தெய்வங்களையும்  உருவாக்கினார்கள்.
உலகிலே,மனிதர்களுக்குள் நடைபெறும் பலவிதமான சமூகக் குற்றச்செயல்களைக் குறைப்பதற்கு இந்தத் தெய்வ நம்பிக்கை மிகவும் உதவியாக இருந்தது. அரசனால் முழுநேரமும் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போகவே, மக்களிடையே தெய்வபயத்தை உண்டாக்கி, அத்தெய்வம் 24 மணிநேரமும் மனிதர் எல்லோரையும்  கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும், அவர்கள் செய்யும் நல்ல, கெட்ட செயல்கள்  யாவற்றையும் அவர் கணக்கெடுத்து, அதன்படி அவர்களை, அவர்கள் இறந்தபின் சொர்க்கலோக சௌகரியங்களையும் அல்லது நரகலோக சித்திரவதைகளையும் அழிப்பார் என்று நன்றாகவே மக்களை மூளைச்சலவை செய்து அதில் வெற்றியும் கண்டார்கள்.
ஆனால், காலம் போகப்போக, பல பல சமயங்களும், வேறு வேறு கடவுள்களும் உருவாக்கப்பட்டு, தத்தம் கடவுளர்தான் பெரியவர் என்ற சண்டைகளினால், நினைத்ததிலும் பார்க்க மோசமான விளைவுகள் உருவாகி  வெடிக்கும் போர்களினால் பல்லாயிரக்கணக்கில்  உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் விழைந்துகொண்டே  இருக்கின்றன. அத்தோடு, மக்களின் குருட்டு நம்பிக்கைகளைப் பாவித்துப் பணம் செய்யும் ஏமாற்றுப் பேர்வழிகள்  பல வேடங்களில் பெருகியும் விட்டனர்.

6.20விழிப்புணர்வின்  காரணிகள்:
-மனிதன் தன்னால் முடியாது என்று எண்ணியிருந்த பல விடயங்களை நவீன தொழில்நுட்பம் மூலம் கண்டு பிடித்தமை.
-மனிதனுக்கு வேண்டியனவை எல்லாம் கிடைத்து, இறைவனைக் கேட்டுப் பெற வேறு ஒன்றும் இல்லாதமை.
-கடவுளே எல்லாம் நடத்துபவர் என்றால் அவர்தானே கஷ்டங்களையும் கொடுப்பவர் என்பதை உணர்ந்தமை.
-கடவுள் எல்லாமே  உணர்பவர்  என்றால் எதற்காக கஷ்டங்கள், அழிவுகள், கொலைகள், கொடூரங்கள், அநியாயங்கள் பற்றி அவருக்குப் பல விதமான கூட்டுப் பிரார்த்தனைகள் மூலம் ஏன் அறிவிக்க வேண்டும்?
-கடவுளைப் புகழ்ந்தால், போற்றினால், குஷிப்படித்தினால் கேட்டதைத் தருவார் என்றால் அவர் என்ன கடவுளா? மனிதனா?
-அவரே எல்லாம் இயக்குபவர் என்றால் நாம் செய்யும் நல்லவை, கேட்டவை எல்லாமே அவர் செயல் தானே?
-கடவுளின் பிள்ளைகள், அவதாரங்கள் என்று கூறிக்கொள்பவர்களே நோய்வாய்ப் படுவதும், கொலை செய்யப்படுவதும் எப்படி? இவர்கள் எப்படி தம் பக்தர்களைக் காப்பற்றுவார்கள்?
-அற்புதங்கள் செய்து காட்டும் இவர்கள், சிறு பொருட்கள் அல்லாது, நாடிவரும் அடியவர்கள் விரும்பும் குறிப்பிட்ட ஒன்றை உருவாக்கிக் காட்டினார்களா? 

-கர்ம விதிப்படி எமது பாவம் யாருக்கோ மறுபிறப்பில் போய்ச் சேரும் என்றால் மனிதன் குற்றச் செயல்கள் செய்வது அதிகரிக்கும் என்பது உண்மை.
-பாவத்தைச் செய்த பின்னர் கடவுளை வேண்டினால் அவர் மன்னிப்பார் என்றால், அவர் யார் கடவுளா?
-எல்லாம் கடவுள் சித்தம் என்றால், எமக்கு என்ன, எப்ப, எவ்வளவு, எங்கே வேணும் என்று கடவுளுக்கே உத்தரவு போடும்,தெரியப்படுத்தும் அளவுக்கு நாம் என்ன கடவுளிலும் பெரியவர்களா?
இப்படிப் பலவிதமான புரிந்துனர்வுகளின் பின்னர் மனிதன் உருவாக்கிய கடவுளின் தேவை சிறிது சிறிதாக அரும்பத் தொடங்கியது.
6 .30 அந்த உலகில்  90 % மத நம்பிக்கை இல்லாதவர்கள்:
அடுத்த 500 வருடங்களில் படிப்படியான விழிப்புணர்வின் பின் மத நம்பிக்கையும், கடவுள் தேவையும் பின்வரும் காரணங்களினால் தேய்வடையும்.
-மதநம்பிக்கை இல்லாத நாட்டு மக்கள் எல்லாம் அதி உயர் செல்வச் செழிப்போடு சிறப்பான வாழ்க்கைத் தரத்தினைக் கொண்டிருந்தார்கள்.கல்வியில் உயர்மை கொண்டு பல புதிய நவீன சாதனங்களைக் கண்டு பிடித்தார்கள்.
-மதமே எல்லாம் என்று திரிந்த நாட்டு மக்கள் மிகவும் குறைந்த வாழ்க்கைத் தரம், கல்வியின்மை, பொருளாதார வீழ்ச்சி, பட்டினி, பஞ்சம் காரணமாகச் செழிப்பான நாடுகளைக் கையேந்தி நிற்க வேண்டி இருந்தது.இவர்கள் கஷ்டப்பட்டு உழைக்காது, சுலபமான வழியில் இறைவன் கொடுப்பார் என்று நம்பிக் கெட்டார்கள்.
-கடவுள்தான் செய்தார் என்று நம்பிய இயற்கை முதலிய பல விடயங்களை மனிதன் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தான்.
-கடவுள் என்று கூறப்பட்டவருக்கு பிற்கால முன்னேற்றங்கள் பற்றி ஒரு சிறிய அறிவுகூடி இல்லாது,அவர் கற்கால ஆயுதங்கள், வாழ், வில், அம்பு மற்றும் மாடு, ஆடு, குதிரை, ஒட்டகம், பண்டி, கழுதை, குரங்கு என்று சிறு வட்டத்தினுள் மட்டும் நின்றதை உணர்ந்தான்.
-கடவுள் எனப்படுபவர் தொடக்கம், முடிவு இல்லாத பல பரிமாணங்கள் உள்ளபவராக இருந்தால்தான் இவ்வளவு சிருஷ்டிகளையும் பராமரிக்க முடியும். அப்படிப்பட்டவரை நாலு பரிமாணத்தை மட்டுமே உணரக்கூடிய இந்த மனிதனால் உணரப்படுவது என்பது முடியாத காரியம்.
-மனிதன் இங்கு உள்ள சொர்க்கத்தை விட்டு, இன்னும் பேரவாக் கொண்டு ஏன்தான் கற்பனையில் சொல்லப்படும் சொர்க்கத்தை அடையவேண்டும் என்று பேராசை கொள்ள வேண்டும்?
-மதநம்பிக்கை, கடவுள் பயம் என்பன ஒருவரின் மன அழுத்தங்களையும், கவலைகளையும் குறைப்பதற்கான, ஆறுதல் தரும் மூளையைப் பதப்படுத்தும் முறையாகும். ஆனால், நவீன புத்திஜீவிகளுக்கு கடவுள் என்று ஓன்று தேவையில்லாது ஒரு வெறும் வெறுமையிலே தியானம் செய்து இதே பலனைப் பெறலாம். இவ்விதமாக மனத்தை ஒருநிலைப் படுத்த முடியாதவர்களுக்கு மாத்திரம் ஒரு உயரிய போலிஸ்,கடவுள் தேவையாய் இருக்கும்.
இத்தகைய காரணங்களினால், பிற்கால மனிதன் கடவுளுக்கே ஒரு கும்புடு போட்டு விட்டான். கடவுள் இருக்கிறாரோ அல்லது இல்லாமல் போய்விட்டாரோ என்று பெரிதாய் அலட்டிக்கொள்ளத் தயாராய் இல்லை. என்றாலும், ஒரு சில பழமைவாதிகள் உலகின் சில மூலைகளில் இருந்து, அவர்களினால் இன்னமும் விளங்காத சில விடயங்களைக் கடவுள்தான் செய்கிறார் என்று கூறிக்கொண்டு சொர்க்கத்துப் போவதற்காக இறைவனைத் தொடர்ந்து குஷிப்படுத்திக்  கொண்டு இருப்பார்கள்.
இத்துடன் இந்த அறிவுடை தொலை நோக்கல் முடிவடைகிறது.
நீங்கள் இன்னும் சற்று விரிவான ஆங்கில மூலக் கட்டுரையை வாசிக்க விருப்பின்
தொடர்புகளுக்கு: santhira_gasan@Yahoo.com.au
(முற்றும்)technology tamil

1 comments:

  1. தீபத்தில் தொழில் நுட்பம் அங்கம் 05 டன் முடிவடைகிறதா?வேகமாக மாறி வரும் உலகில் உங்கள் கட்டுரை வியக்க வைத்தது.தொடர்ந்து உங்கள் சிந்தனைகளை எழுதுங்கள்.

    ReplyDelete