ஒரு அம்மம்மா எப்படி வாழ்கிறாள்? - பறுவதம் பாட்டி

அண்ணாமலைத் தாத்தாவுடன் தொலைபேசியிலே பேசிக்கொண்டிருந்த   பறுவதம் பாட்டி, நேரம்  
ஆறு மணி என்றதும் தொலை பேசித் தொடர்பினைத் துண்டித்துக்கொண்டார்தொலைபேசி மட்டுமல்ல,
ரேடியோ,ரீ.வி  அனைத்துக்கும் பாட்டி மாலை வேலையில் ஓய்வு கொடுப்பது வழக்கமாகி விட்டது.அப்படி
அவர் நடந்து கொள்வது நாங்கள் படிப்பதற்காகவே என்பது எங்களுக்கு சற்று வளர்ந்த பின்னரே புரிய வந்தது.

பாட்டி எங்கள் கல்வி விடயத்தில் சற்றுக் கடுமையாகவே நடந்து கொண்டார்.மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை நாம் படிப்பதைத் தவிர ரீ.வி பார்ப்பதிலிருந்து எந்த பொழுது   போக்கு அம்சங்களையும் நாம் தொடுவதற்கு பாட்டி அனுமதிப்பது இல்லை.அது ஆரம்பகாலத்தில் எமக்கு எரிச்சலைக் கொடுத்தாலும் எமது பாடப் புள்ளிகளில் ஏற்பட்ட ஏற்றம்   பாட்டியின் மேல் பக்தியையே பெருக்கியது.தமிழ் மொழி மட்டுமல்ல   பாடசாலை வேலைகளையும் நாம் வீட்டில் கவனமாக செய்திட நல்ல விட்டு ஆசிரியராகவும்   நல்ல துணைவியாகவும் விளங்கினார் பாட்டி.பாடசாலைப் பாடங்களில் தனக்குத் தெரியாத விடயங்களாக இருந்தாலும் பக்கத்தில் இருந்து எம்மைக் கவனித்துக் கொள்வார் பாட்டி.
பாட்டியிடம் நாம் கற்றுக் கொண்டது வெறும் கல்வியினை மட்டுமல்ல.அவருடைய அனுபவங்களும் தான்.அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தினை குறிப்பிட விரும்புகிறேன்.சில வருடங்களுக்கு முன் வழமைபோல் எமது ஊர்ச் சங்கம் கோடை காலத்தில் நடத்திய விளையாட்டுப் போட்டிக்கு எங்கள் வீட்டிலிருந்து எல்லோரும் பங்குபற்றினோம்.தடையோட்டப்   போட்டி ஒன்றில் கடைசியாகிவிட்ட   என்னால் அதை தாங்கிக் கொள்ள முடிய வில்லை ஓடி வந்து பாட்டியின் மடியில் விழுந்து அழத்தொடங்கிவிட்டேன்.
கட்டிஎனை அணைத்தவாறே "அட!பேரா இதுக்குப் போய் அழுகிறியா?இதையும் நீ கற்றுக் கொள்ளத்தான் வேணும்" என்ற பாட்டியை நான் புரியாமல்   நிமிர்ந்து பார்த்தேன். "பேரா  இந்த வயதில் நீ தோல்வியையும் கற்றுக் கொண்டால் தான் எதிர் காலத்தில் நீ வளர்ந்து   பெரியவனானதும்   வாழ்க்கையில் வரும்  பெரிய தோல்விகளையும் கண்டு துவளமாட்டாய்.தவறான முடிவுகளை எடுக்கமாட்டாய்.விளையாட்டாக இருந்தாலென்ன, கல்வியாக இருந்தாலென்ன , எந்தத் துறையாக இருந்தாலென்ன வெற்றியும் தோல்வியும் வரத்தான் செய்யும். தோல்வி யையும் சந்திக்காவிடில்,வெற்றியின் அருமை தெரியாமல் போய்விடும்.
வெற்றி,தோல்வி இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை.வெற்றியைக் கண்டு சந்தோசமடையும் நாம் தோல்வியைக் கண்டு அழுது புலம்பக் கூடாது.அதை ஒரு தற்காலிக பின்னடைவாக பார்த்தல் வேண்டும்.நமக்குக் கிடைக்கும் புகழ் கூட   எமது வாழ்க்கை பாதையில் நாம் ஒரு போதும் வீழாதிருப்பதில்   மட்டும் தங்கியிருக்கவில்லை. வீழும் போதெல்லாம் எழுந்து நிற்பதில் தான் உள்ளது.தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்து மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.அக் காரணத்தினை ஆராயும்போது உன் முயற்சியில் நீ சென்ற வழிகள்,கையாண்ட முறைகள், துணைக்கு சேர்த்துக்கொண்ட ஆட்கள் பற்றியெல்லாம் மீள்பார்வை செய்து செப்பனிட்டு உன்  பாதையினைச் செழுமைப்படுத்தி கொள்ளவேண்டும்.
பாட்டியின் புத்திமதிகளினால் புதிய பலம் பெற்றது நான் மட்டுமல்ல.எமது வீடும்தான்.அவருக்கு மட்டும் 24  மணித்தியாலமும் தமிழ்த் தொலைக் காட்சி பார்க்கவோ,
அல்லது தமிழ் வானொலிக்காக தொலைபேசி மூலம் கலந்துகொண்டு உரையாற்றவோ ஆசை இல்லாமலில்லை. எல்லாவற்றையும் திட்டமிட்டுசெயல்படுத்திக் கொள்வர் பாட்டி.
அவர் கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முதியோர்கள் மத்தியில் முன்மாதிரியாக வாழ்ந்து   காட்டிக் கொண்டிருக்கிறார்.

                                       


0 comments:

Post a Comment