மகாவம்சத்தில் புதைந்துள்ள…..(பகுதி 26)

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்  

 


டச்சு காலத்தில், கிபி 1656 முதல் கிபி 1796 வரை, இலங்கையில் அடிமட்ட சமூக உறவுகளில், சிங்களம் தமிழ் என்ற வேறுபாடுகள் காணப்படவில்லை என்றும், ஆனால் பல்வேறு சாதி பிரிவுகளே காணப்பட்டதாகவும் அருட்தந்தை வீ. பெர்னியோலா அடிகள் கூறுகிறார் [Vito Perniola, in observing the social relations at the grassroots level in the Dutch period of SriLanka, did not see "any racial distinction between Sinhala and Tamils," but "rather the division into various castes"]. கண்டியைத் தலை நகராகக்கொண்டு 1707 ஆம் ஆண்டுக்கும் 1815 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆண்டு வந்த நாயக்கர் அரச மரபு [வம்சம்] எமக்கு எடுத்து கட்டுவது, அரசன் சிங்களவனாக இருக்கவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் அப்பொழுதும் இலங்கையில் இருக்கவில்லை என்றும், ஆனால் புத்த மதத்திற்கு ஆதரவளிக்க மட்டுமே அங்கு வலியுறுத்தப்பட்டது என்பதாகும் [The longevity of the Nayakkar dynasty (1739-1815) in the kingdom of Kandy indicates that there was no requirement for the king to be Sinhalese,while his patronage to Buddhism was insisted upon].

 


இலங்கையில் கண்டு எடுக்கப் பட்ட கல்வெட்டுகள், சிங்களம் என்பது கி மு 500 ஆண்டில் வடமேற்கு வடகிழக்கு இந்தியாவில் இருந்து வந்த குடியேறிகளால் கொண்டு வரப் பட்ட பிராகிருதத்தில் இருந்து மெல்ல மெல்ல வளர்ந்த ஒரு மொழியாகும் என்பதை உறுதிப் படுத்துகிறது. இது இந்திய-ஆரிய மொழிகளில் இருந்து தனிமை படுத்தப் பட்டதால், அதன் வளர்ச்சி ஓரளவு சுயாதீனமாக இருந்தது எனலாம். திராவிட மொழிகளில் மூத்தது தமிழ் என்பதாலும், சிங்கள இனம் என்ற ஒன்றின் தோற்றம் ஆரம்பத்தில் இருந்தே தமிழுடன் தலைமுறைகளாக இணைந்திருந்ததாலும், சிங்கள மொழியின் வளர்ச்சியில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்பு பெற்று, சிங்கள மொழியின் ஒலியியல், இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியங்களில் தமிழின் தாக்கத்தை இன்று காணக் கூடியதாக உள்ளது. [Stone inscriptions suggest that Sinhala developed from the Prakrits, brought to Sri Lanka by settlers from Northwestern and Northeastern India in the 5th century BCE. Because of its isolation from the other Indo-Aryan languages of mainland India, Sinhala’s development was somewhat independent. Since Tamil, the oldest of the Dravidian languages, and Sinhala have coexisted for generations, it strongly influenced Sinhala’s phonology, grammar, and vocabulary.] கி மு 300 ஆம் அல்லது கி மு 200 ஆம்  ஆண்டில் இருந்து சிங்கள பிரகிருத் அல்லது சிங்கள மொழிக்கு முன்னைய கல்வெட்டுக்கள் [Sinhalese Prakrit inscriptions] காணப்பட்டாலும், சிங்கள கல் வெட்டுக்கள் 6ஆம் நுற்றாண்டிற்குப் பின்பே, அதிகமாக 9ஆம் நுற்றாண்டிற்குப் பின்பே தான் காணப்படுகின்றன. தொடக்கத்தில் இரண்டு மூன்று வரிகளில் நன்கொடைகளைப் பற்றிய விபரங்களை தந்தன, ஆனால் 10ஆம் நூற்றாண்டில் இருந்து தான் கூடுதல் விளக்கமுள்ளதாக அமைந்ததாக காணப்படுகிறது [At the beginning the inscriptions had two or three short lines containing the information about donations made to bhikkhus. After the 10th century A.C these have become more descriptive because they contained appreciations made for some kings]. தமிழ் மொழியின் செல்வாக்கு இலங்கையில் பரந்து பட்டு இருந்தன என்பதற்கு தமிழ் கல்வெட்டுக்கள் சான்று பகிர்கின்றன. உதாரணமாக, காலி கல்வெட்டு, பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு, அனுராதபுரத்தில் உள்ள அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு, கேகாலை மாவட்டத்தில்  உள்ள கோட்டகமைக் கல்வெட்டு போன்றவை சான்றாகும். இந்த கல்வெட்டுக்கள் எல்லாம் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வெளியே, இலங்கையின் வெவ்வேறு திக்குகளில் கண்டு எடுக்கப் பட்டவையும் ஆகும்.

 


காலி கல்வெட்டு என்பது 1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் பதியப் பட்ட கல் ஒன்றில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள். இது கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசகமாகும். பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு என்பது  இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையில் உள்ள தளதாய்ப் பெரும்பள்ளிக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு இரண்டு மொழிகளில் உள்ளது. ஐந்து வரிகளில் அமைந்த மேற்பகுதி சமசுக்கிருத மொழியில் உள்ளன. அதற்குக் கீழ் 44 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு வேலைக்காரரினால் வெட்டுவிக்கப்பட்டது என்பது கல்வெட்டிலுள்ள குறிப்புக்களில் இருந்து தெரியவருகிறது. அதேபோல, அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு என்பது  அனுராதபுரத்தில் உள்ள பழங்காலத்து அபயகிரி விகாரையில் காணப்படும் ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். அபயகிரிச் சைத்தியத்தின் [பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம்] மேடையொன்றின் விளிம்புப் பகுதியை அண்டிக் காணப்பட்ட கற்பாளம் ஒன்றில் இக்கல்வெட்டு உள்ளது. கோட்டகமைக் கல்வெட்டு என்பது, 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்ச அரசன் ஒருவன் கம்பளை அரசின் மீதான போரொன்றில் பெற்ற வெற்றியைக் குறிக்க எழுதுவிக்கப்பட்டது ஆகும். இக்கல்வெட்டு நான்கு வரிகளைக் கொண்ட ஒரு பாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. இங்கே சொற்களிடையே இடைவெளி இல்லாமலும் அடிகள் முறையாகப் பிரிக்கப்படாமலும் உள்ளது. ஆய்வாளர்கள் இதைப் பின்வருமாறு ஒழுங்குபடுத்தியுள்ளர்கள்.

 

"சேது

கங்கணம் வேற்கண்ணினையாற் காட்டினார் காமர்வளைப்

பங்கயக்கை மேற்றிலதம்பாரித்தார் பொங்கொலிநீர்

சிங்கைநகராரியனைச் சேராவனுரேசர்

தங்கள்மடமாதர் தாம்"

 

இதன் கருத்து "சிங்கையாரியனுக்கு அடங்காத சிங்களத் தலைவர்களுடைய மனைவிமார் கண்ணீர் விட்டுத் தமது நெற்றியில் இருந்த பொட்டை அழித்தனர்" என்பதாகும்.

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 27 தொடரும்

👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக 

Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள…..(பகுதி 27):

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

0 comments:

Post a Comment