சிறுநீரக கல் என்பது என்ன? அது வராமல் தடுப்பது எப்படி?

முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இது உடலில் கொடூரமான வலியை ஏற்படுத்த வல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

  இதுகுறித்த எளிய கேள்விகளுக்கு துல்லியமான பதில்களை வழங்குகிறார் சிறுநீரக சிகிச்சை நிபுணரான மருத்துவர் மதுஷங்கர்.

 

சிறுநீரகக் கல் என்பது என்ன?

சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கல்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்களுக்கு சிறுநீரகக்கற்கள் என்று பெயர்.

 

சிறுநீரகக் கல் ஏன் உருவாகிறது?

சிறுநீரில் அதிகமான யூரிக் அமிலம் இருந்தாலோ அல்லது கல் உருவாவதைத் தடுக்கும் காரணிகளான சிட்ரேட் ஆகியவை குறைவாக இருப்பதாலும் உருவாகின்றன. மொத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவுக்கும் தடுக்கும் அமிலங்களின் அளவுக்கும் இடையிலான விகிதம் இதில் முக்கியமான அம்சமாக இருக்கிறது.

 

சிலருக்கு சிறுநீரில் அதிகமான கல்சியம் இருப்பது, மரபு வழியாகவும் ஏற்படும். அதுபோக உணவுப் பழக்கம், தண்ணீர் குறைவாகக் குடிப்பது ஆகியவற்றாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

 

சிறு நீரகக் கல்லின் வகைகள் என்ன?

பெரும்பாலான கற்கள் கால்சியம் வகையைச் சேர்ந்தவையாக இருக்கலாம். கற்கள் எந்தத் தாது உப்பை அடிப்படையாக கொண்டவை என்பதை பொறுத்து அவை வகைப்படுத்தப்படுகின்றன.

>யூரிக் அமிலக் கற்கள்

>சல்பேட் கற்கள்

>மும்மைக் கற்கள்

>சிஸ்டீன் கற்கள்

 

சிறுநீரகக் கல் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?

பெரும்பாலான சமயங்களில் எந்த அறிகுறியும் இருக்காது. ஸ்கேன் எடுக்கும்போதுதான் தெரியவரும். சிலருக்கு சிறுநீர் வெளியாகும்போது அதில் கல்லும் வெளியேறும். அப்போது வலி ஏற்படும். அந்த வலி பின் வயிற்றிலிருந்து பரவி வரும். சிலருக்கு சிறுநீரில் ரத்தமும் வெளியேறலாம். இதுபோன்ற அறிகுறிகள் மூலம் நாம் சிறுநீரகக் கற்கள் பாதிப்பை உணர முடியும்.

 

சிறுநீரகக் கல் வராமல் தடுப்பதற்கான வழிகள் என்னென்ன?

உணவை முறைப்படுத்துவதுதான் ஒரே வழி. பிரதானமாக உப்பு. நாள் ஒன்றுக்கு 5 கிராமுக்கு மேல் உப்பு சேர்த்துக்கொள்ளக் கூடாது. நிறைய தண்ணீர் பருக வேண்டும். புரதச்சத்துக்காக இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை விட பயிறுகள், பருப்பு உள்ளிட்ட சைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்

சாக்லேட், கீரை, நட்ஸ் (முந்திரி, பாதாம், பிஸ்தா) போன்றவற்றை உண்பது இந்த சிறுநீரக கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஆனால், எந்த உணவாக இருந்தாலும் அதிலிருக்கும் உப்பின் அளவுதான் பிரதானமான காரணி.

 

சிறுநீரகக் கல்லுக்கு அறுவைச் சிகிச்சை எப்போது தேவைப்படும்?

பொதுவாக 5 முதல் 6 மி.மீ விட்டமுள்ள கற்கள் இருந்தால் அவை சிறுநீர் வழியாகவே வெளியேறி விடும். அந்த சமயங்களில் சில அசௌகரியங்கள் ஏற்படலாம். அதற்கு மேல் அளவுள்ள கற்கள் என்றால் மேலதிக சிகிச்சைகள் அவசியம்.

 

அறிகுறிகள் இருந்தால் முதலில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ய வேண்டும். சிறுநீரகத்தில் இருக்கும் பெரிய கற்களை இந்த சோதனையில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், சிறிய கற்களாகவோ அல்லது சிறுநீர்ப்பையிலோ இருந்தால் சிடி ஸ்கேன் செய்ய வேண்டி வரும். இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கல்லின் அளவு மற்றும் இடத்தை பொறுத்து லேசரோ அல்லது அறுவை சிகிச்சையோ செய்ய வேண்டி வரும்.

 

இயற்கையாகவே இதை கரைக்க வாய்ப்புண்டா?

உணவுப்பழக்கமும் தொடர்ச்சியாக தண்ணீர் அருந்தும் பழக்கமுமே இந்த கற்களை கரைக்கப் போதுமானது. முறையான உப்பு அளவும், தேவையான அளவு தண்ணீரும் இருந்தால் கற்களை கரைப்பது எளிமையானது. எங்கள் நோயாளிகளில் பலருக்கும் மருந்துகளோடு சேர்த்து உணவுப்பழக்க முறைமையை மாற்றவும் பரிந்துரைக்கிறோம். அவரவர் உடலின் தேவைக்கேற்ப நீர் பருக வேண்டும்.

 

உறங்குவதற்கு முன், நிச்சயம் தண்ணீர் குடிக்க வேண்டும். அந்த சமயங்களில் தான் உடலில் நீரிழப்பு அதிகம் ஏற்படும்.

 

நிறைய தண்ணீர் குடித்தால் பின்விளைவுகள் உண்டா?

ஒரு சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ஏராளமாக தண்ணீர் அருந்துவது உண்டு. ஆனால், ஆண்டுக்கணக்கில் இப்படி தண்ணீர் குடிப்பது தொடர்ந்தால், அது சிறுநீரகத்தின் செயல்பாடுகளை நீர்த்துப்போகச் செய்யும். குறிப்பாக, இரத்தத்தில் இருந்து தேவையான நீரை பிரித்து எடுக்கும் தன்மை சிறுநீரகத்தில் குறைய வாய்ப்புண்டு.

 

அதிக பாதிப்பு ஆண்களுக்கு மட்டுமா?

ஆம். அதிகம் வெளியே செல்வது உடல் உழைப்பால் வியர்வை மூலமாக நீரிழப்பு ஆகிய பிரச்னைகள் இருப்பதால் ஆண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம். ஆனால், மாறிவரும் வாழ்வியலில் அதிக நேரம் மலஜலம் கழிக்காமல் அமர்ந்தபடி வேலை செய்வோர், குறிப்பாக ஷிஃப்ட் அடிப்படையில் வேலை செய்வோர் ஆகியோருக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு.

 

மேலும், சூடான இடங்களில் வேலை செய்வோர், நீர் குடிப்பதற்கான வாய்ப்புகளற்ற வேலையிடங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

 

சிறுநீரகக் கல் மீண்டும் மீண்டும் வர வாய்ப்புண்டா?

ஒருமுறை சிறுநீரகக்கற்கள் வந்துவிட்டால், அது மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உண்டு. ஒருமுறை அறுவை சிகிச்சை செய்துவிட்டால், அதன்பிறகு வராது என்று நம்பக்கூடாது. சொல்லப்போனால், தொடர்ச்சியாக இதுபோல சிறுநீரக்கற்கள் பிரச்னை வந்துகொண்டே இருக்கும் நோயாளிகளுக்கு சிறுநீரகம் செயலிழப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

 

ஏன் வந்தது என்பதைக் கண்டறிவதுதான் சிகிச்சையின் பிரதான நோக்கம். அதைச் சரிசெய்யும் வரையில் மீண்டும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியாது.

 

ஒரு 16 வயது சிறுமி ஒருவர் என்னிடம் சிகிச்சைக்கு வந்திருந்தார். அவரது நிலைமை மிகவும் தீவிரமானது. ஏற்கனவே குறைந்த இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவரை மீண்டும் சிடி ஸ்கேன் சோதனை செய்த பிறகு அவருக்கு சிறுநீரகக் கற்கள் இருந்ததை கவனித்தோம். இதுபோன்ற நோயாளிகளுக்கு வெறுமனே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமன்றி கல்லீரல் மாற்று சிகிச்சையும் தேவைப்படும்.

 

சிறுநீரகக் கல் எந்த வயதினருக்கு வரும்?

முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டோரின் பிரச்னையாக இருந்த இது, அண்மைக்காலமாக இளம்வயதினருக்கு, பால் வேறுபாடு இன்றி, அதிக எண்ணிக்கையிலான கற்கள் உருவாகின்றன. இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தரவுகள் ஏதும் இல்லை என்றபோதும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்ற நடப்பு நிலைமை கண்கூடாகவே தெரிகிறது என்கிறார் மருத்துவர் மதுஷங்கர்.

 

நன்றி:பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment