திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../09/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]


திரிகடுகம் தொடர்கிறது.....

 

பாடல் - 41

அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும், துளங்கினும்

தன் குடிமை குன்றாத் தகைமையும், அன்பு ஓடி

நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும், - இம் மூன்றும்

கேள்வியுள் எல்லாம் தலை.

 விளக்கம்:

துன்பப்படுவோருக்கு ஈதலும், வறுமையான காலத்திலும் ஒழுக்கத்தோடு இருத்தலும், நட்பு செய்தவரைப் பெருகச் செய்தலும் முதன்மையான அறங்களாகும்.

 

பாடல் - 42

கழகத்தால் வந்த பொருள் காமுறாமை,

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல், ஒழுகல்,

உழவின்கண் காமுற்று வாழ்தல், - இம் மூன்றும்

அழகு என்ப வேளாண் குடிக்கு.

 விளக்கம்:

சூதாட்டத்தினால் கிடைத்த பொருளை விரும்பாமையும், பிராமணரை அஞ்சி நடத்தலும், பயிர் செய்து வாழ்தலும் வேளாளர்க்கு அழகு.(இங்கு பிராமணர் என குறிப்பிடப்பட்டவர்கள் ,நாட்டின் நலனுக்காக மன்னர்களுக்கும், மற்றவர்களுக்கும் வேதங்களையும் பிற கல்வி அம் சங்களையும் பயிற்றுவிப்பவர்கள். மேலும் பிராமணர் என்பவர் அமைதி, சுய கட்டுப்பாடு, பொறுமை, நேர்மை, அறிவு, விவேகம், சுத்தம், புனிதம் போன்ற தன்மைகளும் நிறைந்தவர்கள்.)

 

பாடல் - 43

வாயின் அடங்குதல் துப்புரவு ஆம்; மாசு அற்ற

செய்கை அடங்குதல் திப்பியம் ஆம்; பொய் இன்றி

நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும்; - இம் மூன்றும்

வஞ்சத்தின் தீர்ந்த பொருள்.

 விளக்கம்:

தீவழிச் செல்லாமலிருப்பதால் செல்வம் உண்டாகும். உடலின் செய்கை அடங்குதலால் மறுபிறப்பில் தெய்வப் பிறப்பு கிடைக்கும். பொய் இன்றி மனம் அடங்குதலால் முக்தி கிடைக்கும். இம்மூன்றும் வஞ்சத்தில் நீங்கிய பொருள்களாகும்.

 

பாடல் - 44

விருந்து இன்றி உண்ட பகலும் திருந்திழையார்

புல்லப் புடை பெயராக் கங்குலும், இல்லார்க்கு ஒன்று

ஈயாது ஒழிந்தகன்ற காலையும், - இம் மூன்றும்

நோயே, உரன் உடையார்க்கு.

 விளக்கம்:

விருந்தினர் இல்லாமல் உண்ட பகலும், மனைவியில்லா இரவும், வறியவர்க்கும் கொடுக்காத காலையும் அறிவுடையார்க்கு நோய்களாம்.

 

பாடல் - 45

ஆற்றானை, 'ஆற்று' என்று அலைப்பானும்; அன்பு இன்றி,

ஏற்றார்க்கு, இயைவ கரப்பானும், கூற்றம்

வரவு உண்மை சிந்தியாதானும்; - இம் மூவர்

நிரயத்துச் சென்று வீழ்வார்.

 விளக்கம்:

திறமையற்ற ஏவலாளனை வேலை வாங்குபவனும், இரந்தவர்க்கு இல்லை என்று சொல்பவனும், இறப்பை நினையாமல் தீமையைச் செய்தவனும் நரகத்திற்குள் வீழ்வர்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

0 comments:

Post a Comment