"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]
பகுதி: 25 C / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'எல்லாளனுக்கு முந்திய மன்னர்கள், எல்லாளன் உட்பட, கற்பனைப் கதாபாத்திரங்களா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]
இலங்கையில் கண்டு எடுக்கப் பட்ட கல்வெட்டுகள், சிங்களம் என்பது கி மு 500 ஆண்டில் வடமேற்கு வடகிழக்கு இந்தியாவில் இருந்து வந்த குடியேறிகளால் கொண்டு வரப் பட்ட பிராகிருதத்தில் இருந்து மெல்ல மெல்ல வளர்ந்த ஒரு மொழியாகும் என்பதை உறுதிப் படுத்துகிறது. இது இந்திய - ஆரிய மொழிகளில் இருந்து தனிமை படுத்தப் பட்டதால், அதன் வளர்ச்சி ஓரளவு சுயாதீனமாக இருந்தது எனலாம். திராவிட மொழிகளில் மூத்தது தமிழ் என்பதாலும், சிங்கள இனம் என்ற ஒன்றின் தோற்றம் ஆரம்பத்தில் இருந்தே தமிழுடன் தலைமுறைகளாக இணைந்திருந்ததாலும், சிங்கள மொழியின் வளர்ச்சியில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்பு பெற்று, சிங்கள மொழியின் ஒலியியல், இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியங்களில் தமிழின் தாக்கத்தை இன்று காணக் கூடியதாக உள்ளது. [Stone inscriptions suggest that Sinhala developed from the Prakrits, brought to Sri Lanka by settlers from Northwestern and Northeastern India in the 5th century BCE. Because of its isolation from the other Indo-Aryan languages of mainland India, Sinhala’s development was somewhat independent. Since Tamil, the oldest of the Dravidian languages, and Sinhala have coexisted for generations, it strongly influenced Sinhala’s phonology, grammar, and vocabulary.] கி மு 300 ஆம் அல்லது கி மு 200 ஆம் ஆண்டில் இருந்து சிங்கள பிரகிருத் அல்லது சிங்கள மொழிக்கு முன்னைய கல்வெட்டுக்கள் [Sinhalese Prakrit inscriptions] காணப்பட்டாலும், சிங்கள கல் வெட்டுக்கள் 6ஆம் நுற்றாண்டிற்குப் பின்பே, அதிகமாக 9ஆம் நுற்றாண்டிற்குப் பின்பே தான் காணப்படுகின்றன. தொடக்கத்தில் இரண்டு மூன்று வரிகளில் நன்கொடைகளைப் பற்றிய விபரங்களை தந்தன, ஆனால் 10ஆம் நூற்றாண்டில் இருந்து தான் கூடுதல் விளக்கமுள்ளதாக அமைந்ததாக காணப்படுகிறது [At the beginning the inscriptions had two or three short lines containing the information about donations made to bhikkhus. After the 10th century A.C these have become more descriptive because they contained appreciations made for some kings]. தமிழ் மொழியின் செல்வாக்கு இலங்கையில் பரந்து பட்டு இருந்தன என்பதற்கு தமிழ் கல்வெட்டுக்கள் சான்று பகிர்கின்றன. உதாரணமாக, காலி கல்வெட்டு, பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு, அனுராதபுரத்தில் உள்ள அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு, கேகாலை மாவட்டத்தில் உள்ள கோட்டகமைக் கல்வெட்டு போன்றவை சான்றாகும். இந்த கல்வெட்டுக்கள் எல்லாம் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வெளியே, இலங்கையின் வெவ்வேறு திக்குகளில் கண்டு எடுக்கப் பட்டவையும் ஆகும்.
காலி கல்வெட்டு என்பது 1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் பதியப் பட்ட கல் ஒன்றில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள். இது கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசகமாகும். பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு என்பது இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையில் உள்ள தளதாய்ப் பெரும்பள்ளிக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு இரண்டு மொழிகளில் உள்ளது. ஐந்து வரிகளில் அமைந்த மேற்பகுதி சமசுக்கிருத மொழியில் உள்ளன. அதற்குக் கீழ் 44 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு வேலைக்காரரினால் வெட்டுவிக்கப்பட்டது என்பது கல்வெட்டிலுள்ள குறிப்புக்களில் இருந்து தெரியவருகிறது. அதேபோல, அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு என்பது அனுராதபுரத்தில் உள்ள பழங்காலத்து அபயகிரி விகாரையில் காணப்படும் ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். அபயகிரிச் சைத்தியத்தின் [பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம்] மேடையொன்றின் விளிம்புப் பகுதியை அண்டிக் காணப்பட்ட கற்பாளம் ஒன்றில் இக்கல்வெட்டு உள்ளது. கோட்டகமைக் கல்வெட்டு என்பது, 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்ச அரசன் ஒருவன் கம்பளை அரசின் மீதான போரொன்றில் பெற்ற வெற்றியைக் குறிக்க எழுதப்பட்டது ஆகும். இக்கல்வெட்டு நான்கு வரிகளைக் கொண்ட ஒரு பாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. இங்கே சொற்களிடையே இடைவெளி இல்லாமலும் அடிகள் முறையாகப் பிரிக்கப்படாமலும் உள்ளது. ஆய்வாளர்கள் இதைப் பின்வருமாறு ஒழுங்குபடுத்தியுள்ளர்கள்.
"சேது
கங்கணம் வேற்கண்ணினையாற் காட்டினார் காமர்வளைப்
பங்கயக்கை மேற்றிலதம்பாரித்தார் பொங்கொலிநீர்
சிங்கைநகராரியனைச் சேராவனுரேசர்
தங்கள்மடமாதர் தாம்"
இதன் கருத்து "சிங்கையாரியனுக்கு அடங்காத சிங்களத் தலைவர்களுடைய மனைவிமார் கண்ணீர் விட்டுத் தமது நெற்றியில் இருந்த பொட்டை அழித்தனர்" என்பதாகும். இதில் இன்னும் ஒன்றையும் கவனிக்க, சிங்களப் பெண்கள் பொட்டு வைப்பதையும், கணவன் இறக்கும் பொழுது அதை அழிப்பதையும் கூட காண்கிறோம்.
👉👉👉👉👉
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 26 தொடரும் / Will follow
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...
0 comments:
Post a Comment