போர்வெறி விலகு, ...இதுபோலே வருமா இனிமேலே,

 


போர்வெறி விலகு

நாடு நினையாத நாயகர் ஆட்சி நடப்பதால்

நாசம் நெருங்கும் நெடுந்தரணி

ஓடும் இரத்தம் ஓயா கண்ணீர்

உலகம் துயரும் உருக்கமிது.

 

கொள்கை எனும் கொடிய முகமிட்டு

கோபம் கொழுந்தென கிளப்புவோர்

தம் வீட்டு தீயை அணைக்க மறந்து

தன் அடுத்த  மண்ணில் நெருப்பிடுவார்.

 

தந்தையர் இழந்த பிள்ளை அழுகை,

தாய் மார்பைத் தேடும் துடிப்பு;

கணவனை இழந்த கண்கள் உலராது,

கணவன்மார் இழந்த மனைவியர் வாடல்.

 

மனைவி இழந்த மனம் நொறுங்க,

மகன் இழந்தோர் மூச்சே நின்றது;

அழுகை நதிகள் பெருகும் பூமி

அமைதி தேடும் அகலம் ஆனது.

 

வல்லரசே! வாழ  விடு இந்நேரம்,

வழி தவறாதே மனித நேயம்;

உன் வீடு காப்பது முதற்பணி

உலகம் காப்பது கருணை வழி.

 

விலகு போர் வெறி! விலகு வன்மை!

விடிய விடியாத இருள் அகலும்;

மனங்கள் மாறும் நாளிலே தான்

மண்ணின் மரபு மீண்டும் மலரும்.


 ⋲⋲⋲⋲⋲⋲⋲⋲

 

'பொன்னாள்  இதுபோலே வருமா இனிமேலே'

 

அன்ன நடையாள் தூளியிலே ஆடி

இன்முகம் காட்டி அருகில் அழைத்து

இன்பம் கொட்டும் நிலா ஒளியில்

மின்னும் விளக்கில் இருவரும் சேர

பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே ?

 

சின்ன இடையாள் அழகு காட்டி

தேன் சிந்தும் இதழ்கள் பதித்து

கன்னம் இரண்டிலும் முத்தம் கொடுத்து

அன்பு மழையால் உள்ளம் நனைக்க

இன்னாள் என்றும் கிடைக்குமா மீண்டும் ?

  ⋲⋲⋲⋲⋲⋲⋲⋲

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]


0 comments:

Post a Comment