யாழ் நூலகம் அரசகாவலர்களால்
எரிந்தது
புத்தர் பெருமானும் சேர்ந்து எரிந்தார்!
நூலகத்தின் முன்றலில் அவரின் சாம்பல்
தொண்ணூறாயிரம் நூல்களின் சாம்பலுடன் கலந்து!
அறிவார்ந்த அற்புதங்கள் உறைந்த இடம்
ஆயிரமாயிரம் நூல்கள் வாழ்ந்த இடம்!
இதயமற்ற அரசு நடத்திய கொடூரத்தில்
ஈரமிழந்து வெம்மையில் வாடி வதங்கியது!
அந்த நொடியில்
நூலகத்தின் சுவர்கள்
சாம்பலின் நினைவைக் கூறின!
சாம்பலின் நடுவே விதை முளைத்தது
தமிழர்களின் உள்ளத்தில் மீண்டும் மலர்ந்தாள்!
மூடிய புத்தகங்கள் பிரார்த்தனையாய் திறந்தன
மறைந்த எழுத்துக்கள் ஆசீர்வாதமாக மாறின!
நூலகத்தின் அமைதி தெய்வீகத் தாலாட்டானது
“நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்!
'மருந்தே உணவாக ?'
மருந்தே உணவாக உணவே மருந்தென
மனதில் பதித்து செயலில் காட்டினால்,
மகிழ்ச்சி பொங்கும் வாழ்வு அமையுமே
மங்காத உடல்நலம் உன்னைச் சூழுமே!
அளவாக எடுத்து அமிர்தமாக அருந்தி
அயராது உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருந்தால்,
அழகான வாழ்வு உன்னை அடையுமே
அதிசயம் காண்பாயே பலன்களை உணர்வாயே!
'திரும்பிப் பார்க்கிறேன்'
திரும்பிப் பார்க்கிறேன் அத்தியடியில் நின்று
திண்ணையில் அப்பா அம்மாவைக் காணவில்லை
திலகமிட்ட படம் மட்டுமே தொங்குது!
குண்டுகள் சத்தம் இன்று ஓய்ந்துவிட்டது
குழிகளும் மறைந்து கட்டிடங்கள் உயர்ந்துவிட்டது
குரூரம் எனோ இன்னும் எதிரொலிக்குது!
‘சத்தியமே வெல்லும்'
சத்தியமே வெல்லும் குழப்பம் மறையும்
சந்தேகம் வேண்டாம் கடமையைச் செய்!
சமத்துவம் வளர்ந்தால் நீதி தவறாது
சத்தம் போட்டு உண்மைச் சொல்!
சமூகம் இணைந்தால் நட்பு வளரும்
சராசரி மனிதனுக்கும் மெய்மை நிலைக்கும்!
⊖⊖⊖⊖⊖
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment