'காவலும் பிள்ளை வளர்ப்பும்' & ‘மழை நனைந்த மண்… '



'காவலும் பிள்ளை வளர்ப்பும்'

காவல்  கொண்ட பிள்ளையெனில்
காலம் கண்டு வளர்ந்திடுவான்;
அன்புடனே அறிவும் தந்து
அறவழியில் நடந்திடுவான்.

அளவோடு கண்டிப்பு காட்டி,
அன்போடு அரவணைத்தால்,
வழிதவறா மனம் வளர்ந்து
வாழ்வில் நன்றாய் உயர்ந்திடுவான்.

காவல் என்பது சிறை அல்ல,
கால்வழிகாட்டும் ஒளியாகும்;
பெற்றோரின் நல்வழிகாட்டல்
பிள்ளை வாழ்வின் துணையாகும்.

அன்பும் காவலும் இணைந்திடில்
ஆற்றல் கொண்ட பிள்ளை வளரும்
உறுதியான அடித்தளத்தில்
உயர்ந்த எதிர்காலம் மலரும்.

- செ.மனுவேந்தன்

 

‘மழை நனைந்த மண்… மனம் நனைந்த நினைவுகள்”

அத்தியடி வீதியெங்கும் - அந்த

ஆயிரங்காலத்து மண்வாசம்!

மேகங்கள் முத்தமிட - இந்த

யாழ் நிலம் புன்னகைக்கும் நேரம்!


கூரை வழி ஒழுகும் - அந்த

முத்துத் துளி ஓசையிலே,

பழைய நினைவலைகள் - மெல்ல

பயணம் போகுதே இதயத்திலே!

 

புழுதி படிந்த வீதிகள் - இன்று

புதுக் கோலம் பூணுதடா...

நனைந்த அந்த மண் மணம் - என்

நினைவுகளைத் தூண்டுதடா!


மழை நனைந்த மண்ணில் - எங்கள்

யாழ் மண்ணின் இருப்பிடம்...

புயலுக்கு அஞ்சாத - அந்த

பனை மரத்தின் வீரம்!


நாணலாய் வளைந்து - அது

பிழைக்கத் துணிந்ததில்லை...

உடைவதைத் துணிந்தாலும் - தன்

உறுதி இழந்ததில்லை!


பனை தந்த பாடம்தான் - எங்கள்

பண்பாட்டு அடையாளம்...

துன்பங்கள் வந்தாலும் - தளராத

துணிச்சலே எமக்குப் பலம்!


தைரியமும் துணிவும் - எங்கள்

தனித்துவமான குணம்...

விடாப்பிடி உறுதியுடன் - வாழ்வதே

யாழ்ப்பாணத்து மனம்!


ஈழத்து பனைகளும் - தலை

ஆட்டி வரவேற்க,

தூரத்துத் துளிகளிலே - எம்

சொந்தங்கள் முகம் தெரியுது!


"யாழ்ப்பாணம் போனேனடி - பொன்னம்மா

யாழ்ப்பாணம் போனேனடி..."

என்று அன்று முணுமுணுத்த வரிகள் - இன்று

எம் நினைவலைகளில் இனிக்குதடி!


அத்தியடி வீதியோரம் - பெய்யும்

ஆயிரங்காலத்து மழையில்...

நனைந்து கிடக்கிறோம் - மீண்டும்

எம் மண்ணின் பெருமையில்!

 

-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

👼👼👼👼👼👼👼👼👼👼👼👼

0 comments:

Post a Comment