பகுதி:01"முன்னுரை "
நாம் இப் பொழுது பாடசாலையில் பயிலும் போது ஆங் ஆங்கே
சில விஞ்ஞான ,கணித உண்மைகளை,சான்றுகளை
படிக்கிறோம். பொதுவாக நாம் நம்புவது ,விளங்கிக்கொள்வது ,இந்த உண்மைகளை, சான்றுகளை
கண்டு பிடித்தவர்கள் எல்லோரும் மேல் நாட்டவர்கள் என்று.ஆனால் பல உண்மைகள்,
நிறுவல்கள் எமது பண்டைய தமிழ் பாடல்களில் புதைந்து உள்ளது. அவர்கள் விட்ட தவறு ,அந்த உண்மைகளை மேலும் ஆராய்ச்சி செய்யாததும்,அவைகளை ஆதாரத்துடன் சான்று பகராததும் ஆகும்.
அவர்கள் ஒரு அனுபவ ,உணர்வு வழியில் அவைகளை மேலோட்டமாக அறிந்து வைத்துள்ளார்கள். அவைகளை ஆங் ஆங்கே பாடல்களில் உவமையாகவும் ,எடுத்துக்காட்டாகவும் கூறியுள்ளார்கள். அவ்வளவுதான். அதற்குமேல் முயற்சி செய்யவில்லை. இப்போது நாம் அவர்களின் அந்த பாடல்களை நுணுக்கமாக அணுகும்போது ,எமக்கு தெரிந்த ,நாம் கற்ற அந்த உண்மைகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு ,எமது மூதையர்களுக்கு தெரிந்து இருப்பதையிட்டு ஆச்சரியமாகவும், அதே நேரம் அந்த பெரும் விஞ்ஞான உண்மைகளை வெறும் உவைமைகளாக மட்டுமே பாவித்தார்கள் என்று அறியும் போது கோபமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது ,
உதாரணமாக கணிதத்தில் ,மிகச் சிறிய
பின்னம்:
[ இம்மி,அணு,வெள்ளம்,நுண்மணல், தேர்த்துகள்] முதல்
மிகப் பெரிய எண் [சங்கம்,வெள்ளம்.ஆம்பல், மத்தியம்,பரார்த்தம்,பூரியம்.....,கோடிக்கு மேல் உள்ள எண்களைத் தொல்காப்பியர் அல்பெயர் எண் என்று குறிப்பிடுகிறார். தாமரை, வெள்ளம், ஆம்பல்,..... என்பவை அந்த எண்கள்.] வரை கூறியிருப்பதுடன் வட்டம், செங்கோண முக்கோணம் போன்றவற்றின் சில இயல்புகளையும் கூறியுள்ளார்கள்.அதே போல அணுவைப்பற்றி ["சாணிலும் உளன் ; ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட கோணினும் உளன்"-கம்பமராமாயணம் - இரணியன் வதைப் படலம்- ], தாவரங்களின் உணர்வைப்பற்றி,சூரியனை கிரகங்கள் சுற்றுவதைப்பற்றி ,வானவில்லின் தோற்றத்தைப்பற்றி, மழையின்
தோற்றத்தைப் பற்றி, உலோக வார்ப்பு
பற்றி ["முதைப்புனங் கொன்ற ஆர்கலி உழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான் வந்தன்றே
மெழுகு ஆன்று ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி..."-குறுந்தொகை 155] கல்லணை பற்றி ["... கொடும் சிறை
மீது அழி கடுநீர் நோக்கிப் பைப்பயப் பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர"-அகநானூறு 346], கட்டிட கலை பற்றி ["நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி‘ பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து" -நெடுநல்வாடை(72- 78)],வானில் செல்லும் இயந்திரம் பற்றி [“வலவன் ஏவா வான ஊர்தி“-புறநானூறு 27],கடற்கோள் பற்றி [பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும்
கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும்
இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி’-சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டம்]
-இப்படி கூறியது மட்டுமல்ல ,இன்றைய நாகரிக உலகில் நம் பெண்கள் தம்மை அழகு இராணியாக்க கையாளும் "பூச்சிய உடல் பருமன் அளவை"க்கூட சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் காதலன்,காதலியை வர்ணிக்கும் உவமை மூலம் கூறிவிட்டார் என்றால் பாருங்களேன்!
இதோ அந்த பாடல்:
[சிலப்பதிகாரம்:கி. பி.முதலாம் /இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது ]
வேறு (திணை நிலைவரி)/சிலப்பதிகாரம்:
"கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய். [17]
கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய். [18]
ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்." [19]
இதன் பொருள்:
:உன்
தமையன்மார் கடலில் அங்குள்ள உயிரினங்களைக் கொன்று தமது வாழ்க்கையை நடத்துகின்றனர். நீயோ அவரினும் காட்டிற் கொடுந் தொழில் செய்கின்றாய்! என் கண் வழியே புகுந்து அங்கு வாழும் என்னுயிரைக் கொன்று வாழ்கின்றாய் .உன்னுடைய வெவ்விய முலைகலின் சுமை பொறாது உன்னிடையானது இப்பொழுதே மெலிகின்றது. நீ இயங்கின் அது முறியும்.இனி இயங்கி அவ்விடையை இழந்துவிடாதே
:உன் தந்தையோ வலையினாலே உயிர்களைக் கொல்லும் கொடுந்தொழிலுடையான்; நீ
அவனினும் காட்டில் உன்னுடைய நெடிய கண் வலையாலே உயிர் கொல்கின்றாய் நீ இனி இயங்காதே இயங்கின், தாமே பெருஞ்சுமையாகவும் அச்சுமையின் மேற் சுமையாய் முத்துவடத்தையும் ஏற்றியிருக்கின்ற கொடிய முலையால் உன் இடை
வளைந்து முரியும் அவ்விடையை நீ இழந்துவிடாதே
:உன்தமையன்மார் கடலிற் சென்று அங்கு வாழும் உயிர்களைக் கொல்வார். நீ அத்தொழிலில் அவர்களினுங் காட்டில் திறன் மிகவுடையாய் பிறருடைய பெருமையையும் துன்பத்தையும் பாராமல்; நீயும் உன் புருவத்தால் கொல்வாய். இப்பொழுதே உனது பாரிய முலைகளைச் சுமத்தலாலே உன்னுடைய சிறிய மெல்லிய இடை வருந்தி வாட்டமுடையதாகின்றது. அதனையும் இழந்துவிடாதே
எவ்வளவு கற்பனை நயத்துடன் பாடியிருக்கிறார்
என்று பாருங்கள். மேலும் இடை முறிந்து[ஒடிந்து] விடும் என்பதில் இருந்து எவ்வளவு சிறிய மெல்லிய இடை
என்பதை அறியலாம். இடை பருமன் பூச்சியத்தை
அடைந்தத பின் தானே முறியலாம் ?
நாம் இனி மேற்கூறிய சிலவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.
பகுதி:02
தொடரும்..
