சொந்தப் புத்தி இருக்க..(ஓர் உண்மைக் கதை)

1985 ம் ஆண்டு. அன்று ஒரு வெள்ளிக்கிழமை. பரந்தனில் எனது அலுவலகத்திலிருந்து கடமை நேரத்தில், தூரத்திலிருந்து  காதில் இடியோசை போல் ஒலித்த குண்டுச்சத்தம், அன்றய எனது ஊர் பண்டத்தரிப்புக்கான பயணத்தினை தடை செய்துவிடுமோ என்ற சந்தேகம் நெஞ்சில் வளர ,இடை இடையே ஜன்னலூடாக கண்டி வீதியினை அவதானிக்க ஆரம்பித்தேன்.

வாகனங்களின் நடமாட்டம் மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டு சென்றது,  எங்கோ ஆமிக்காரன் பிரச்சனை கொடுக்கிறான் என்று எனக்குப்  புரிய ஆரம்பித்ததால் 'சரி இந்தக்கிழமை ஊருக்கு போக முடியாது' என்று தீர்மானித்துக்கொண்டு வேலை முடிந்ததும், சிற்றுண்டிசாலையில் ஒரு தேனீர் அருந்துவம்' என்ற முடிவில் அங்கே அமர்ந்திருந்தேன்.

அந்நேரத்தில் அங்கே வந்த ஒரு மூத்த நண்பர், 'என்ன மனு ஊருக்கு போகேல்லையோ?'

''இல்லையண்ணை, நிலைமை பிழைபோல இருக்கு! பஸ்ஸுகளும் ஓடேல்லை''

'ஏன் மனு.உங்கை எல்லாரும் போய்விட்டினம்தானே!  பஸ்ஸும் இடைக்கிடை ஓடுது.போகலாம்தானே'

அவர் அன்பினில் கூறினாரோ,இல்லை பொழுதுபோக்கிற்கு கூறினாரோ,நான் ஆராயும் நிலையில் அந்நேரம் இருந்திருக்கவில்லை. அவர் கொடுத்த உற்சாகத்தில், ஆவலுடன் உடன் வெளிக்கிட்டுக்  கண்டி வீதிக்கு வர ,பேருந்தும் உடன் கிடைக்க என் அதிஷ்டம் என்றே அப்பொழுது எண்ணியிருந்தேன்.

பேருந்தில் வழமைபோல் பிரயாணிகள் அதிகம் காணப்படவில்லை. இருந்தவர்களும் சாவகச்சேரியுடன் இறங்கிவிட, பேருந்தில் தனிமனிதனாக இருந்தபோதே எனக்கு பயம் கொள்ள ஆரம்பித்தது.

 

அடுத்து யாழ் நகரில் பண்டத்தரிப்புக்கான பேருந்து கிடைக்குமா என்று சாரதியை கேட்ட போது அவரும் எதுவும் தெரியாது என்று கூறிச் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்.

வழியில் வந்த லொறியினை மறித்த சாரதி, அவரிடம் தகவலை பெற கேட்டபோது ,லொறி சாரதியும், யாழ்ப்பாணம் நகரை  ஆமி சுற்றி வளைத்துள்ளது என்று மட்டுமே கூறி சென்றான்.

எமது பேருந்து பஸ் நிலையத்தினை அண்மித்தபோது இரவு ஆகிவிட்டது.

 'பேருந்து நிலையம் நிறைய ஆமி நிற்கிறாங்கள். கீழ படு தம்பி' என்ற நடத்துனரின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து நான் பஸ் இருக்கையில் படுத்துவிட்டேன்.

படுத்திருந்தாலும், ராணி தியேட்டர் பக்கமும், மறு பக்கமும் பெரும் தீச்சுவால் கொண்டு பற்றி எரிவதினை என்னால் ஜன்னலூடு காணக்கூடியதாக இருந்தது. [அன்று பல இடங்கள் யாழ்நகரில் (தியேட்டர் உட்பட) எரியூட்டப்பட்டதாக பின்னர் அறிந்துகொண்டேன்.]

நிலையத்தினுள் எமது பேருந்தினை மறித்த ஆமிக்காரர் ,  ,இங்க நிக்காத , டிப்போ  போ  என்று சத்தமிட்டனர்.

அவர்கள் பேருந்தினுள் ஏறி என்னைக் காணாதது, என்னுடைய அடுத்த அதிஷ்டமாக கருதினேன்.

 விரைவாக அப்பால் சென்ற எமது பேருந்து, நல்லூர் வீதியில் என்னை இறக்கிச் சென்றுவிட்டது. எனக்கு பயம் பிடித்த , அந்நேரத்தில் திசை எதுவும் புரியவில்லை.

அப்பொழுது ஆறுகால்மடத்தில் எங்கள் உறவினர் வீடு நினைவு வரவே ,எத்திசையில் செல்வது என்று புரியாது ,பேசும் குரல் கேட்ட, ஒரு வீட்டுப் படலையைத் தட்டினேன்.

அவ்வீடு அமைதியடைந்ததுடன் அவர்கள் வரவே இல்லை.நீண்ட நேரம் தட்டியபின் ஒரு முதியவர் வந்து படலையை திறவாமலே ..

''யாரது?''

நானும் என் நிலையினை கூறி, ஆனைக்கோட்டைக்கு போகும் வழியினை கேட்டேன்.

''ஐயோ தம்பி ,உங்கை ஆமிக்காரர் சுடுறாங்கள். கவனமாய் போ.''என்று பாதையையும்  கூறி சென்றுவிட்டார்.

நடுக்கத்துடன் நடந்து வந்த எனக்கு ஐஞ்சிலாம்படி சந்தியில், ஒரு காருடன் எரிந்துகொண்டிருக்கும் தமிழ் உறவுகளை கண்டதும், உடல் முழுவதும் உதற தொடங்கியது. அந்த உதறலுடன், எப்படி வேகமாக ஆறுகால்மடம் (ஆனைக்கோட்டை) வந்தடைந்தேன் என்பது எனக்கே தெரியாது.

அன்று மட்டும் நான்  அவர்களிடம் அகப்படிருந்தால்,  நானும் எரியும் நெருப்பினுள் வீசப்பட்டு ,காணாமல் போனவர் பட்டியலில் இன்று வாழ்ந்திருப்பேன்.

இச் சம்பவத்தின் பின், நான் யார் எது கூறினாலும் செவிமெடுப்பேன்ஆனால் நெஞ்சில், எது சரியெனப் படுகிறதோ அதையே செய்வேன். வெற்றியும் கண்டுள்ளேன்

 குறிப்பு:மீண்டும் வேலைக்கு வந்த காலத்தில்,என்னை அன்று அனுப்பியவரிடம் இதுபற்றி நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில் இப்படியே ஒவ்வொருவரையும் நாம் பேச ஆரம்பித்தால் எல்லாருமே வாய்மூடி நாமுண்டு, நம் குடியுண்டு என சுயநலமாக  வாழ ஆரம்பித்துவிடுவர். 

உண்மைச் சம்பவம் :செமனுவேந்தன்

கடந்த வாரம் வெளிவந்த திரைப்படங்கள் எப்படி?


''ஆதார்''விமர்சனம்  (Cinema Tamil Movie 'Aadhaar' Review)

 ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கருணாஸ், அருண்பாண்டியன் , ரித்விகா,  இனியா, பிரபாகரன், ஆனந்தபாபு நடிக்கும்  இப்படத்திற்கு  ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

மருத்துவமனையில் தனது மனைவியை பிரசவத்துக்காக சேர்க்கிறார் கருணாஸ். ஆனால் அங்கு மனைவிக்கு  உதவியாக இருந்த இனியா கொலை செய்யப்பட்ட நிலையில் தனது மனைவியை காணாமல்  பிறந்த பச்சிளம் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அதன்பிறகு தனது மனைவியை எப்படி கண்டுபிடித்தார் தன் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக்கதை

பார்க்கலாம்,வலியுடன் ரசிக்கலாம்.[3/5]

 🎥🎥🎥🎥🎥

''ரெண்டகம்'' விமர்சனம்  (Cinema Tamil Movie Rendagam '' Review)

  ஃபெலினி இயக்கத்தில் அரவிந்த் சாமி, குஞ்சக்கோ போகன் மற்றும் ஈஷா ரெப முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்க, தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழியில் வெளியான  இப்படத்திற்கு காஸிப் இசையமைத்துள்ளார்.

மும்பையில் பெரிய தாதாவாக இருந்தவரின் வலது கரமாக செயல்பட்டவர் அரவிந்த்சாமி. தங்கக் கடத்தல் ஒன்று நடந்த போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தனது நினைவுகளை இழந்தவர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தத் தங்கத்தைப் பற்றிய தகவல்களை அவரிடமிருந்து எப்படியாவது பெற வேண்டும் என ஒரு கும்பல் குஞ்சாக்கோ போபனை அனுப்புகிறது. அவரும் அரவிந்த்சாமியுடன் பழகி, அவரிடமிருந்து தகவலைப் பெற முயற்சிக்கிறார். ஆனால், நடப்பதோ வேறொன்று. அது என்ன ?, அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மொத்தத்தில் ரெண்டகம் அருமை.[3/5]

 🎥🎥🎥🎥🎥

''பபூன்'' விமர்சனம்  (Cinema Tamil Movie ''bafoon'' Review)

 அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் மற்றும் அனகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தம்நாடகத்தை வைத்து பிழைப்பு நடத்த முடியாது என முடிவெடுத்த  குமரனும் அவரது நண்பனும்  வெளிநாட்டுக்கு  நாட்டுக்குச்  செல்வதற்கு பணம் தேடும் முயற்சியில்,கடத்தல் மன்னன் தனபாலனின்  லாரி டிரைவராக இணைகிறார்கள். அந்த லாரியை நிறுத்திய போலீஸ் அவர்கள் போதைப்பொருள் கடத்தியதா,  அவர்கள் இருவரையும் சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் தப்பித்து விடுகிறார்கள். பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதே கதை.

பபூன் பலிக்கவில்லை [2.5/5]

🎥🎥🎥🎥🎥

''ட்ரிக்கர்'' விமர்சனம்  (Cinema Tamil Movie ''trigger'' Review)

 சாம் அன்டன் இயக்கத்தில் அதர்வா, தன்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், சின்னிஜெயந்த், அறந்தாங்கி நிஷா நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

வில்லன் மைக்கேல் சிறை கைதிகளையும், அடியாட்களையும் ஒன்றிணைத்து குழந்தைகளை கடத்துகிறான். எதிர்பாராத ஒரு சம்பவத்தில் ஹீரோ வில்லன் இருவருமே மோதிக் கொள்ள நேர்கிறது. இந்த பிரச்சனையின் பின்னணியில் ஹீரோ தந்தையின் கடந்த காலமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. இதை அதர்வா கண்டுபிடிக்கிறார். இறுதியில் குழந்தைகள் கடத்தப்படுவது எப்படி? எதற்காக கடத்தப்படுகிறார்கள்? ஹீரோவின் தந்தைக்கும் இந்த கும்பலுக்கும் என்ன சம்பந்தம்? கடத்தல் கும்பலை ஹீரோ ஒலித்தாரா? என்பதை படத்தின் மீதி கதை.

ஒரு நல்ல த்ரில்லர் படம்.

🎥🎥🎥🎥🎥

''ட்ராமா'' விமர்சனம்  (Cinema Tamil Movie ''drama'' Review)

அஜூ கிழுமல இயக்கத்தில் கிஷோர், சார்லி, ஜெய் பாலா என பலர் நடித்திருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம்.

ஒரு பெண் காவலர், ஐந்து ஆண் காவலர்களை கொண்ட ஒரு காவல்நிலையத்தில் புதிதாக சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பை ஏற்கிறார் ஜெய்பாலா. அதே ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார் சார்லி. ஒரு நாள் நடுஇரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில்   அங்கு ஏட்டாக இருக்கும் சார்லி கொலைப்படுகிறார். இதனை விசாரிக்க போலீஸ் டி எஸ்  பியாக கிஷோர் வருகிறார். அந்த கொலையை செய்தவர் யார்? என்பது பற்றிய விசாரணையே "டிராமா".

அலட்சியத்துடன் எடுக்கப்பட்ட படம்![2/5]

தொகுப்பு:செ மனுவேந்தன்

''அம்மா'' குறும்படம்


Amma - Short Film
ஒவ்வொரு பெண்ணும் தமக்கு வரப்போகும் பாதிப்புகளை தெரிந்துகொண்டும், பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள தவறுவதினாலேயே,  பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதனை தவறு என சுட்டிக்காட்டும் இக்குறும்படத்தின் தயாரிப்பாளருக்குப் பாராட்டுகள்.
🙈🙉🙊

சிரிக்க... சில நிமிடம்

                              சர்தார்ஜி ஜோக்ஸ்                                                                

 

டிப்ஸ் கொடுத்தேன் –

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார்.

சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார்,

வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்.....” என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார்,

சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?”

நம் சர்தார்ஜி சொன்னார்,

மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்”

 

-இரவில் தானே அனுப்பினோம்!-

சீனாக்காரர் ஒருவரும் ஒரு சர்தார்ஜியும் சந்தித்தனர்.

சீனாக்காரர்: நாங்கள் தான் முதலில் சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பினோம்

சர்தார்ஜி: இது என்ன பெரிய அதிசயம். நாங்க சூரியனுக்கே ராக்கெட்டை அனுப்பியிருக்கோம்.

சீனாக்காரர்: என்னது சூரியனுக்கு ராக்கெட்டா? அது சூரிய வெப்பத்தில் கருகி விடாதா?

சர்தார்ஜி: கருகாது. ஏன்னா நாங்க இரவில் தானே அனுப்பினோம்.


- NH 140 லே வந்தேன் –

வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?”

இல்லையே… 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு..”

யோவ்… அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..

சிங்குங்கறதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படி பேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?”

கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்… அதான்….”

 

- முதல் தடவை விமானத்தில் பயணம்-

ஒரு சர்தாஜி முதல் தடவை விமானத்தில் பயணம் செய்யதிர்மாணித்தார், அவர் விமானத்தில் ஏறியதும் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் வேறு இருக்கையில் அமர்ந்துகொண்டு லந்து செய்து கொண்டிருந்தார் .

பணிப்பெண்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.

விஷயம் விமானிக்கு சென்றது அவர் நேராக சர்தாஜியிடம் சென்று "நீங்கள் எங்கு செல்ல வேண்டும்" என்றார் ,

அதற்கு சர்தாஜி "டெல்லிக்கு "என்றார். அதற்கு விமானி "இந்த இருக்கை சென்னைக்கு செல்கிறது,அந்த இருக்கைதான்

(சர்தாஜிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை காட்டி)டெல்லி செல்லும் "என்றதும் சர்தாஜி அவசர அவசரமாக தன இருக்கைக்கு நடையை கட்டினார்.


- எங்க தொட்டாலும் வலிக்குது!-

டாக்டரிடம் சென்ற சர்தார்ஜி

சர்தார்ஜி: டாக்டர் எனக்கு உடம்பில எங்க தொட்டாலும் வலிக்குது. பாருங்க மூக்கை தொட்டா வலிக்குது. தோளை தொட்டா வலிக்குது. காலை தொட்டா வலிக்குது.

டாக்டர் (சற்று யோசித்த விட்டு): எங்கே உங்க கையை காட்டுங்க?. உங்க கையில புண் இருக்கு அதான் நீங்க எங்க தொட்டாலும் வலிக்குது.

தொகுப்பு:செ.மனுவேந்தன்


தூக்கமும் உணவும்:


 ஆழ்ந்த தூக்கத்துக்கு என்ன சாப்பிட வேண்டும்? - உணவியல் நிபுணர் ரம்யா ராமச்சந்திரன் விளக்கம்:-

நாம் சாப்பிட்ட உணவு செரித்த பிறகு அடுத்தவேளை சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு மருந்தே தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். உணவுப் பழக்கத்துக்கு இதுவே அடிப்படை. அறிவியலும் இதை உறுதி செய்கிறது.

 

பால், பாதாம் பருப்பு, வாழைப்பழம் ஆகியவை தூக்கத்துக்கு நல்லது. ஏனென்றால் இவற்றில் கிரிப்டோஃபென் என்ற ஒருவிதமான அமினோ அமிலம் இருக்கிறது. ஆழ்ந்த தூக்கத்துக்கு மெலெட்டினின் என்ற ஹார்மோன், கிரிப்டோஃபென், மெக்னீசியம் ஆகியவை முக்கியம். மேற்சொன்ன உணவுகளில் இவை இருக்கின்றன.

 

தூங்குவதற்கு முன்பு கார்ப் உணவுகளைச் சாப்பிடலாமா?

பால், பாதாம் பருப்பு ஆகியவற்றுடன் சத்தான கார்போஹைட்ரேட் உணவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது இன்சுலின் சுரக்க உதவும். இது அமினோ அமிலங்களை தசைகளுக்கு கொண்டு சேர்த்து, கிரிப்டோஃபென் அமினோ அமிலம் ரத்த நாளங்களைச் சென்றடைய உதவுகிறது.

 

உதாரணத்துக்கு வாழைப்பழம் எடுத்துக் கொண்டால் கூடவே பால் அல்லது குறைந்த கொழுப்புள்ள தயிர் எடுத்துக் கொள்ளலாம்.

 

என்னென்ன கார்ப் உணவுகளைத் தவிர்க்க வேண்டும், எவற்றைச் சாப்பிடலாம்?

ரொட்டி, பாஸ்தா, வெள்ளைச் சர்க்கரை, பேக்கரியில் விற்கும் மாவுப் பண்டங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

 

எல்லா வகையான பழங்களையும் இரவில் சாப்பிடலாம். அவற்றில் பி வைட்டமின், நார்ச்சத்து போன்றவை இருக்கின்றன. வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் அதில் மெக்னீசியமும் கிரிப்டோஃபெனும் இருக்கின்றன. வால்நட் எனப்படும் வாதுமைக் கொட்டைகளில் மெலட்டினின் ஹார்மோன், ஒமேகா 3 என்ற நல்ல கொழுப்புகள் இருக்கின்றன.

 

ஒரே உணவை மட்டுமே நம்பியிராமல், இதுபோல் பலவகையான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

 

இரவு உணவை எப்போது சாப்பிடலாம்?

இது ஒவ்வொருவரின் வேலை நடைமுறைகளைச் சார்ந்து மாறுபடலாம். ஆனால், தூங்குவதற்கு 3 முதல் 4 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிடுவது மிகவும் நல்லது. குறைந்தபட்சம், 10 மணிக்குத் தூங்கும் ஒருவர் 8.30 மணிக்கு மேல் எதுவும் சாப்பிடக்கூடாது.

 

அதற்கு மேல் ஏதேனும் உணவு சாப்பிடத் தொடங்கினால், உடலானது நச்சுத் தன்மையை நீக்கும் வேலையை விட்டுவிட்டு சாப்பிட்ட உணவைச் செரிப்பதற்கான வேலையில் ஈடுபடத் தொடங்கிவிடும். அதனால் நச்சுத் தன்மையை வெளியேற்றும் பணிகள் பாதிக்கப்படும். நல்ல தூக்கம் இருக்காது.

 

இரவில் என்னென்ன உணவுகளைச் சாப்பிடக்கூடாது?

புளிப்பாக இருக்கும் பழங்களைத் தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்தைத் தடுக்கும். வாயு உற்பத்தியாகக் காரணமாகலாம்.

 

காரம் அதிகமாக இருக்கும் உணவுகளால் நெஞ்சு எரிச்சல் உண்டாகலாம்.

 

காஃபி, டீ, சாக்லேட் போன்றவற்றில் காஃபீன் இருப்பதால் அவை ரத்தத்தில் 6 மணிநேரம் வரை கலந்திருக்கும். மூளையை விழிப்பாக வைத்திருக்கச் செய்யும். அதனால் ஆழ்ந்த தூக்கம் வராது. குறைந்தபட்சம் ஆறு, ஏழு மணி நேரத்துக்கு முன்பே காஃபி, டீ குடிப்பதை நிறுத்திவிட வேண்டும்.

 

வறுத்து, பொறித்த உணவுகளை செரிப்பது கடினம் என்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.

 

மது குடித்தால் தூக்கம் நன்றாக வரும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. தூக்கம் வரும் என்பது உண்மைதான். ஆனால் தொந்தரவு இல்லாத நிம்மதியான தூக்கம் வருமா என்றால், இல்லை. பலருக்கு தலைவலி உருவாகும், உருண்டுபுரண்டு படுத்துக் கொண்டிருப்பார்கள்.

 

இரவில் அதிகம் தண்ணீர் குடிக்கலாமா?

குறைவாக தண்ணீர் குடித்தால், நமது வாய் மற்றும் மூக்குத் துவாரங்கள் உலர்ந்துவிடும். அப்படி ஆகும்போது பலருக்கு குறட்டை வரும். இது ஆழ்ந்த தூக்கத்துக்கு தடையாக இருக்கும்.

 

அதற்காக அதிக அளவில் தண்ணீர் குடித்தால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இது தூக்கத்தைக் கெடுக்கும். இரவில் மட்டும் அதிகமாக தண்ணீர் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக பகல் முழுவதும் தண்ணீரையும், பானங்களையும் எடுத்துக் கொள்வது நல்லது.

 

தூக்கத்துடன் தொடர்புடைய சர்காடியன் ரிதம் என்பது என்ன?

சர்காடியன் ரிதம் என்பது நமது உடலின் கடிகாரம். எப்போது சாப்பிட வேண்டும், எப்போது தூங்கச் செல்ல வேண்டும் என்பனவற்றை இதுவே நமது உடலுக்குக் கூறுகிறது.

 

நமது உடல் சொல்வதைக் கேட்டாலே பெரும்பாலான பிரச்னைகள் வராது. இதைக் கேட்காமல், நாம் நினைத்த நேரத்துக்கு சாப்பிடுவதும் தூங்குவதும் நாளடைவில் பல பிரச்னைகளுக்குக் காரணமாகும். ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

நன்றி-பிபிசி / தமிழ்