கடவுள் [முடிவாக]ஆனந்தம்:02

கடவுள் இருக்கிறார் என்று யாரோ சொன்னதற்க்காக நம்புவதோ, கடவுள் இல்லை என்று யாரோ சொன்னதற்க்காக மறுதலிப்பதோ எப்படி புத்திசாலித்தனம் ஆகும்?
       கடவுளை நம்புவதும் நம்பாததும் கடவுளின் பிரச்சனை இல்லை அது முழுக்க முழுக்க உங்கள் பிரச்சனை.
       சிவன்  வந்தாரா, ஜீஸஸ் இருந்தாரா, நபிகள் வந்தாரா என்பதா பிரச்சனை?
       உங்கள் அனுபவம் என்ன?
       யூதர்கள் கடவுளுடன் நேரடித் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள். அவர்களைப் பற்றி ஒரு வேடிக்கைக் கதை.....
       யூதர்களின் தலைவரான ஜோஷ்வா கோல்டுபெர்க் வருடத்திற்கொரு தடவை சொர்கத்திற்குப் போய் கடவுளுடன் அமர்ந்து விருந்து உண்ணும் உரிமை பெற்றிருந்தான்.
       அப்படி ஒருமுறை கடவுளுடன் விருந்துக்கு அமர்ந்திருந்த நேரம்.... வருடா வருடம் மாற்றமில்லாமல் வறட்டு ரொட்டிகள் தான் பரிமாரப்படுவது தான் வழக்கம்.
       'கடவுளே ஒரு சந்தேகம் என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது' என்று கேட்டு விட்டு ரொட்டியை கஷ்டப்பட்டு மென்றான் ஜோஷ்வா.
       'கேள்,மகனே!'
       'உங்கள் சாம்ரஜ்ஜியத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் நாங்கள் மட்டும் தானா? வேறு யாராவது உண்டா?' என்று அடுத்த ரொட்டித் துண்டை விழுங்கித் தண்ணீரைத் தொண்டையில் சரித்துக் கொண்டான்.
       'சந்தேகமே வேண்டாம். வேறு யாருக்கும் அந்த சிறப்புரிமை இல்லை. அதனால் தான் உன்னை மட்டும் விருந்துக்கு அழைத்தேன்...'
       ஜோஷ்வா கையில் எடுத்த ரொட்டித்துண்டை கீழே போட்டுவிட்டு எழுந்து, 'எத்தனை நாட்களுக்கு எங்களுக்கே இந்த அவஸ்த்தை? வேறு யாரையாவது உங்களுக்கு நெருக்கமானவர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடாதா?' என்றான் கோபமாக.
       இப்படிக் கடவுளுக்கு நெருக்கமானவர்களாக சொல்லிக் கொள்பவர்களுக்குத் தானே அதிக வேதனை?
       இவர்கள் கடவுள் என்பதன் உன்னதத்தை புரிந்து கொள்ளவில்லை. கடவுளைப் பற்றிய உண்மையான அனுபவத்தை பெற்றதில்லை.
       ஆனாலும் கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் இடைத்தரகர்களாக இருந்து ஆதாயம் தேட, இவர்கள் போடும் நாடகங்கள் சகிக்க முடியாதவை.
       கடவுளை நீங்கள் முழுமையாக நம்பி வாழ்ந்திருக்கிறீர்களா?
       சிலர் இருக்கிறார்கள்... நெருக்கமானவர்களுக்கு உடல்னிலை மோசமாக இருந்தால் கடவுளிடம் வேண்டிக்கொள்வார்கள்.
       அப்படியும் அவர்கள் பிழைக்கவில்லை என்றால் 'கடவுள் என்பதெல்லாம் பொய்' என்று வீட்டில் இருக்கும் படங்களை எல்லாம் கழற்றி விட்டெறிவார்கள்.
       தனக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்று கேட்டு நடக்கவில்லை என்றால், கடவுளே இல்லை என்று சொல்வார்கள்.
       வளர்க்கப்பட்ட விதத்திலும், விதைக்கப்பட்ட் விதத்திலும் தானே உங்களுக்கு கடவுளை நம்பத் தெரிந்திருக்கிறது?
       கடவுள் இருக்கிறார் என்பது ஒரு நம்பிக்கை. இல்லை என்பது இன்னொரு நம்பிக்கை. இருக்கிறாரா? இல்லையா? என்பது உஙளுக்குத் தெரியாது என்பதே பட்டவர்த்தனமான உண்மை.
       எனக்குத் தெரியாது என்று எப்பொது தைரியமாக ஒப்புக்கொள்கிறோமோ, அப்போது தானே எதைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்க்கான வாய்ப்பு முழுமையாகக் கிடைக்கும்!
       வெறும் நம்பிக்கைகளை வைத்துப் பின்னப்படும் கற்பனைகளை எதற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்?
       கடவுளைப் பற்றி அறிந்துகொள்ளும் பற்றி அறிந்துகொள்ளும் தாகம் உண்மையிலேயே உங்களுக்கு இருந்தால், மற்றவர்கள் சொல்லிக் கொடுத்ததை குருட்டுத்தனமாக நம்புவதை முதலில் விட்டுவிடுங்கள்.
       கடவுள் இருக்கிறாரா? என்று நீங்களே தேடுங்கள்,
       உங்கள் தேடலை உங்களிடமே ஆரம்பியுங்கள்.
       எல்லையற்ற கடவுள் என்றொருவன் எல்லா இடங்களிலும் இருப்பது உண்மையாக இருந்தால், அந்தத் தன்மை உங்களிலும் இருக்கவேண்டுமே?
       உருவமாகத் தேடாமல் கடவுள் தன்மை என்பதை முதலில் உங்களில் தேடிப் பாருங்கள்.
       உங்களுக்குள் கடவுளைக் கவனித்து அனுபவமாகப் பெற்றுவிட்டால். அப்புறம் அவன் எங்கும் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம், கடவுள் இருப்பதாக ஒப்புக்கொள்ளலாம்.
       ஒரு விசயத்தை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
       உங்களுக்குப் புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்தத் தெரிந்திருந்தால், கடவுள் இல்லாமலும் சுகமாக வாழலாம்.
       வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ளாமல், மூடத்தனமாக வாழ்பவராக இருந்தால் பூஜை அறையில் எத்தனை கடவுள் படங்களைத் தொங்க விட்டிருந்தாலும் புண்ணியமில்லை......

வாழ்க வளமுடன்!

நீ இல்லாத வாழ்வு ..?


உன் காதல் கிடைக்காத வரை பெண்ணே
காதல் என்ன என்று அறியாமல் இருந்தேன்
உன்னோடு காதல் கொண்டதால்
பெண்ணின் அர்த்தம் புரிந்து
உன் சுகங்கள் சுமந்து
சந்தோசங்களை என் வசப்படுத்தி
இதயத்தில் உறைய வைத்து
காதல்த் தேன் பருகிய சந்தோஷத்தில்
கனவுகளில் மிதக்கிறேன் 
நீ இன்றி ஒரு வாழ்வா ?
உன் நிழலில் வாழாத ஒரு வாழ்க்கையை
வாழ்வதில் என்ன பயன்.
                      அகிலன்,தமிழன்                       

ஏன் இந்தப் போராட்டம்? -: பறுவதம் பாட்டி


அன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால்  காலை படுக்கையிலிருந்து எழ மனமின்றி படுத்துக்கொண்டிருந்தேன்அவ்வமயம் பக்கத்தில் பறுவதம் பாட்டியின் ஸ்பீக்கர் போன் மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவின் பெயர் கூறி அலறிக்கொண்டது. நானும் அவர்கள் உரையாடலை செவிமடுக்க தயாராகிக் கொண்டேன்.

''பாத்தியே பறுவதம்! zee tv -  junior super stars  நிகழ்ச்சியை ''ஆவலோடு  பேச  ஆரம்பித்தார் தாத்தா.

''ஓம்,அந்தக் கொடுமையையும் பார்த்தனான்.''பாட்டி அருவருத்துக் கொண்டார்.

''ஏன் பறுவதம் அப்பிடிச் சொல்லுறாய்? அந்தக் குழந்தைகள் என்னா நடிப்பு நடிக்குதுகள்.நீ..''

சற்று சத்தமாகவே குறுக்கிட்டுக் கொண்டார் பாட்டி. 'நடிக்கினம் சரி. இல்லை எண்டு சொல்லேல்லை. அதை சரியான முறையில இவங்களுக்கு பயன்படுத்த தெரியலையே!''

''நீ என்ன பறுவதம் சொல்லுறாய்?''

''அதிலை என்ன எல்லாம் காதல் ,குடும்ப பிரச்சனைகள் எல்லே போகுது .அந்தக் குழந்தைகளையும் பழுதாக்கி,வீடுகளிலை இருந்து இதை பார்க்கிற பிள்ளைகளையும் பழுதாக்கினம். இதுவரை ஊடகத்தின் பெயரையும்,நிகழ்வுகளின் பெயர்களையும் ஆங்கிலத்தில வச்சு மொழியை அழித்துக் கொண்டு வந்தார்கள்.இப்போது பண்பாட்டையும் அழிக்க துவங்கிவிட்டினம்.
இந்த வெள்ளைக்காரங்களின்ர பழக்க வழக்கங்களை முந்தி எங்கட ஆட்கள் பகிடி பண்ணுறவை.ஆனால்  அவங்கட நாட்டு தொலைக்காடசியில குழந்தைகளுக்கென 24 மணித்தியாலமும் நிகழ்ச்சிகள் இருக்கு. அதில அப்பிடி வயதுக்கு மீறின 
காட்சிகள் அனுமதிக்கப் படுவதில்லை.
''ஏன் ,இங்கை கனடாவிலையும் தமிழ் வானொலி ஒண்டு நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்கு -coffee double double- எண்டு தானே பெயர் வைச்சிருக்கினம்'' தாத்தாவும் பாட்டி பக்கம் மாறிக்கொண்டார் .
 ''சரி தமிழில் உழைத்துக்கொண்டு தமிழை பூண்டோடு அழிக்க எல்லா ஊடகங்களும் தயாராகிவிட்டன. அழிக்கட்டும்.
அப்படியெனில் இலங்கையில யாருக்காக இந்த உரிமைப் போராட்டம்,யுத்தம்,அழிவு,ஒன்றும் விளங்கவில்லை.
போராடாமல் இருந்திருந்தால்  பல லட்ஷம் சனங்களின்ர உயிர்களாவது மிஞ்சியிருக்கும் .''
''சரியாய் சொன்னாய்  பறுவதம் இப்பிடியே போனா சில வருஷத்திலே உலகத்தில தமிழர் எண்ட இனமே இருக்காது எண்டு சொல்லுறது தெளிவா தெரியுது.''
கவலை தோய்ந்த முகத்துடன் பாட்டி தங்கள் உரையாடலை முடித்துக்கொண்டார்.
நானும் அம்மாவின் வழமையான தேவாரத்துடன் படுக்கையிலிருந்து எழுந்து காலைக் கடன்களுக்காக விரைந்து கொண்டேன்.                                                       

ஆக்கம்:பேரன்,செல்லத்துரை மனுவேந்தன்.