"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?"[பகுதி:05]

ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"

        
வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையிலான பகுதியில் சம்புக வதம் விவரிக்கப்பட்டுள்ளது.அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் திடீரென இறந்து விடுகிறான்.மகனை இழந்த பிராமணன் இராமனிடம் நீதி கேட்டு வருகிறான்.அந்நேரத்தில் அங்கு வரும் நாரதமுனி,சூத்திரன் ஒருவன் உனது நாட்டில் தவம் இயற்றிக் கொண்டிருப்பதாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்கிறார்.சம்புகனைத் தேடிச் சென்ற இராமன்,ஒரு மலைச்சாரலில்,ஒரு ஏரிக்கு அருகில்,ஒரு சாது ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாய்த் தொங்கியபடி கடுந்தவம் புரிந்து கொண்டு இருப்பதை கண்டார்.அவன் அருகில் சென்ற ராமர், ' நீ பிராமணனா, சத்ரியனா அல்லது நான்காம் வருணத்தைச் சேர்ந்தவனா? நிஜத்தைச் சொல்' என்று கேட்க,அவன்,'மகாராஜா, நான் நான்காம் வருணத்தைச் சேர்ந்தவன்.சம்பூகன் என்று எனக்குப் பெயர்' என விடையளித்தான். உடனே ராமர் வேறு எது குறித்தும் கேட்காமல்,மின்னல் வேகத்தில் உறையிலிருந்து தன் வாளை உருவிச் அங்கேயே அவனைத் தனது வாளால் தலை வேறு முண்டம் வேறாக வெட்டி கொன்றான். தவம் இயற்றிய சூத்திரன் என்ற ஒரு காரணத்தால் மட்டும் இராமனால் கொல்லப்பட்டான் ?விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை-நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றிச் சம்புகனின் தலையைச் சீவிவிட்டான் இராமன்.இராமனின் காரியத்தைப் பார்த்தீர்களா?தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டிருந்ததைத் தடுத்துத் தண்டித்துச் சம்புகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக பார்ப்பனர்கள் மகிழ்ந்தார்களாம்?கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன் தோன்றி அவன் செய்த இந்நற்காரியத்திற்காக ?அவனைப் பாராட்டினார்களாம்?எப்படி இருக்குது ராமன் கதை?இவனுக்கு தான் இந்த தீபாவளி?இவனைத்தான் கடவுளாம்?இவன் மாதிரி உத்தம புருஷனுக்காக அலைகிறார்களாம் இன்றைய சீதைகள்?எப்படியிருக்குது வேடிக்கை?


திருவிளையாடல் புராணத்தில் 26 வது கதையாக  'மாபாதகம் தீர்த்த படலம்' வருகிறது.அதில்,அவந்தி நகரத்தில் வாழ்ந்த ஒரு பார்ப்பனரின் மனைவி மிகவும் அழகானவள்.அந்தப் பெண்ணுக்கும், அவள் கணவனுக்கும் பிறந்த மகன் தாயின் மீதே விருப்பம் கொள்கிறான்.தாயை நிர்ப்பந்தப்படுத்தினான்.இந்தக் கொடுமை கண்டு மனம் தாளாத அவனது தந்தை,அவனைத் தடுத்தார்,ஆனால் அவன்  தந்தையையே கொன்று விட்டு,தனது காம பசி தீர்க்க,தாயை இழுத்துச் சென்று விட்டான்.காமுகனாகத் திரிந்ததால் அவனது உடலில் கொடிய நோய் ஏற்பட்டது. என்றாலும், இறுதியில்,அவன் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து இறைவன் அவனுக்கு அருள் பாலிக்கின்றார்.

இப்போது இரு கதைகளிலும் இடம் பெற்றுள்ள மகாபாவங்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தாயை மணந்து, தந்தையைக் கொன்ற மகாபாதகம் இறைவனால் மன்னிக்கப் படுவதோடு, அவனுக்கு இறைவன் அருளும் கிடைக்கிறது. ஆனால் எந்தக் குற்றமும் புரியாமல் தவம் புரிந்த சம்பூகனைக் கடவுளின் அவதாரமான ராமரோ வாளினால் வெட்டி வீழ்த்துகிறார்.எத்தனை பெரிய கயமைத்தனங்களைச் செய்தாலும், அவன் பார்ப்பனனாக இருந்தால் இறைவன் அருள் பாலிப்பார்; எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும்,ஒரு சூத்திரன் தவம் செய்தால் இறைவன் அவன் தலையைக் கொய்து விடுவார் என்பதுதானே இவ்விரு கதைகளும் நமக்குக் கூறும் நீதி?இந்த அறிவுரை எமக்கு தேவைதானா?இப்படியான கடவுளும் எமக்கு வேண்டுமா?      

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், விளக்கீட்டு விழா என்னும் விழாக்கள் பற்றிய செய்திகள் உள்ளன.கார்காலம் முடிந்தபின் அறுவடையை எதிர்நோக்கிய காலத்தில் அறுமீன் சேரும் முழுநிலா மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்த ஒரு விழாவை அகநானூறு-141 கூறும்.இந்த நிகழ்வு பிற்காலத்தில்,ஆரியரின்  நாகரிகக் கலப்பால்,தீபாவளியுடன் இணைந்தது என்பார்கள்.இதனால் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளியானாலும் அதை தீபாவளி எனக் கூறுவதில்லை.விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலும் (14 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை) பிறகு நாயக்கர் ஆட்சியிலும் (16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை)  மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருநாள் இது எனலாம்?மேலும் தீபாவளிப் பண்டிகை,கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியத்துவம் பெற வில்லை.ஆனால் அங்கு  ‘ஓணம்’ பண்டிகை மிகச் சிறப்பாக நடை பெறுகிறது.

"உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர வருக தில் அம்ம
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலித்
தகரம் நாறுந் தண் நறுங்கதுப்பின்
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ
கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு
தீங்குலை வாழை ஓங்கு மடல் இராது
நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்"
[அகநானூறு 141]

உழவுத் தொழில் முடிந்துவிட்டதால் உழும் கருவியான கலப்பை வேலையின்றிக்
கிடக்கிறது.உழவுக்கு உதவியாக மேகமும் தக்கவாறு மழை பொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது.ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது.இந்நாளில் வீடுகள்தோறும் மக்கள் பூமாலைகளைத் தொங்கவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்துக் கூட்டமாகக் கூடி விழா கொண்டாடுவார்கள்.இக்கார்த்திகை விளக்கு நாளில் புது மணமகன் உண்பதற்காக பசிய அவலாலான இனிப்புப் பொருள் செய்வதற்காக வீட்டிலுள்ள பெண்கள் நெல்லின் கதிர்களைப் பறித்து அவற்றை உரலில் இட்டு உலக்கையால் குத்திப் பக்குவப்படுத்து கிறார்கள்.அங்ஙனம் குத்தும் உலக்கையின் ஒலியைக் கேட்டுப் பயந்தப் பறவை தானிருந்த வாழை மரத்தை விட்டு வேறொரு பெரிய மரத்தில் தங்கி தன் குஞ்சுப் பறவைகளைக் கூவுகின்றன என்கிறது இந்தப்பாடல்.

உலகின் எங்கும் மரணம் கொண்டாடப் படுவதில்லை.ராமன் பெருமைக்குரிய மனிதனாக இருக்கலாம்,ஆனால் அவன் சீதைக்கு செய்தது என்ன? சீதையின் வாழ்க்கை தனிமையில் வீணாகியது.அவள் அனுபவித்தது எல்லாம் துக்கமே.ராவணன் அரக்கனும் அல்ல,கடவுளும் அல்ல.அவன் ஒரு சாதாரண மனிதன்.அவன் தவறுகள் விட்டுள்ளான்.நான் அவனை மூடிமறைக்க
முயலவில்லை.நான் பாரம்பரிய ராமாயணத்தை, அப்படியே, ராவணன்,ராமனை சித்தரிக்க கையாளுகிறேன்.அவ்வளவுதான்.கடவுளாக கருதப்படும் ராமனையும் அரக்கனாக சித்தரிக்கப்படும் ராவணனையும் ஒப்பிடும் போது ,ராமன் பல பல குற்றங்கள் புரிந்து உள்ளான்.மிகப்பெரிய கொடுமை தன் மனைவியையே சந்தேகித்தது. அதனால் அவள் அடைந்து துன்ப வாழ்வு! இருவருமே நல்ல தீய செயல்கள்,பண்புகள் கொண்டுள்ளனர்.ஆனால் எப்படி ஒருவர் கடவுளானார்? மற்றவர் அரக்கன் ஆனார்? ராமாயணத்தில் உள்ள உண்மைகளை அப்படியே சிந்தியுங்கள்.ஒரு மனிதனின் இறப்பை நாம் கொண்டாடலாமா?இல்லை ராமனைத்தான் கடவுளாக்கலாமா? கடவுள் என கருதுபவர் மக்களுக்கு,எங்களுக்கு தார்மீக பிடிப்பை உண்டாக்கக் கூடியவராக இருக்கவேண்டும்.அவர்கள் நாம் பின்பற்றக் கூடிய முன்மாதிரியாக இருக்கவேண்டு? இதையாவது நம்புகிறீர்களா?ராமர் கதையில் அவரின் ஒரு பண்பு மட்டுமே மாறாமல் கதை முழுவதும் அப்படியே தொடருவதை காண்கிறோம்.இதைத்தான் நாம் அவரிடம் இருந்து கற்கலாம்.கண்மூடித்த தனமான கீழ்ப்படிதல் அல்லது பணிவு!அது மட்டுமே அவரிடம் இருந்து நாம் பெறலாம்?ராமன் குழந்தையாக இருக்கும் பொழுது  அவர் ஒரு நன்றாக நடந்து கொள்ளும் அன்பான குழந்தை,மற்றும் படி ஒரு சிறப்பும் அங்கு காணப்பட வில்லை!இளைஞனாக இருக்கும் பொழுது,அவர் ஒரு தந்தை சொல் தட்டாத  பிள்ளை,ஆனால் மீண்டும் ஒரு நடுத்தர வயது மனிதனாக,யாரோ ஒரு வழிப்போக்கன் தனது அன்பு மனைவியின் 'கணவன் மனைவி' விசுவாசத்தை  சந்தேகப்பட்டான் என்பதால் ஒரு அரசனாக தனது  கடமையை,'மக்கள் எவ்வழி அரசனும் அவ்வழி' என்ற கண்மூடித்த தனமான கீழ்ப்படிதலை  திடீரென்று நினைவுக்கு கொண்டுவருகிறேன். இதனால் கர்ப்பணி சீதை பிரிந்து,காடு சென்று,இறுதியாக தற்கொலை செய்கிறாள்.அவனின் பண்பில் நிலைத்து நின்று மாறாதது,'மாற்றான் சொல்' கேட்டு நடக்கும் பண்பு மட்டுமே!தனக்கு என ஒரு புத்தி அவனிடம் என்றுமே காணப்படவில்லை? அவன் வாழ் நாள் முழுவதும்,பண்பான, இணக்கமான, கீழ்ப்படிதல்' நபராகவே,எந்த கேள்வியும் கெடுக்காமல் பிறர் புத்தி கேட்டு நடக்கும் ஒரு மனிதனாகவே வாழ்ந்து விட்டான்!! அவ்வளவுதான்!!! 

ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
[பி கு :"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?"என்ற  தீபத்தில் Friday, November 13, 2015 இல் வெளியிடப்பட்ட  எனது கட்டுரையை தொடர்ந்து,அதன் விரிவாக இக்கட்டுரை எழுதப்பட்டு உள்ளது]

Diwali 

[முற்றிற்று] 

1 comments:

  1. குணா தம்பிராசாSunday, October 15, 2017

    ஆரியர்கள் இந்தியாவினுள் ஊருடுவ முன் அனுப்பிய ஒற்றர்கள் கூறிய செய்தி [நான் படித்த ஞாபகம்.]இந்தியா ஆன்மிகத்தில் மூழ்கியுள்ளது.என்பதாகும்.எனவே ஆன்மிக கதைகளை புகுத்தி அவர்களை அடிமைகொள்ளலாம் என ஆரியர்கள் முடிவு செய்தார்களாம் .எனவே தங்கள் அட்டுழியங்களை இறைவன் விளையாடல்களாக மக்களிடம் விதைத்து அடிமை கொண்டார்கள்.அது இன்றும் ஆட்சி புரிகிறது.

    ReplyDelete