துடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா?:

ஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் 
நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு துடக்கு எனப்படும் 'தீண்டத்தகாமை', 'தூய்மை இன்மை'  என்னும் ஒரு வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றார்கள். இத்தகைய மரபுமுறை தற்கால சமுதாயக் கட்டமைப்புகளின் மத்தியில் நியாயப்படுத்தகூடியதாக இருக்கின்றதா என்பது ஒரு கேள்விக் குறியே!
 துடக்கு காலத்தில் கோவில் செல்வதோ, திருமணம் முதலிய சுபகாரியங்கள் செய்வதோ அல்லது முன் நிற்பதோ, பொது நிகழ்வுகளுக்குச் சென்று மகிழ்வுறுவதோ, துடக்கு இல்லாதவர் அவ்வீட்டில் உணவருந்துவதோ தவிர்க்கப்படுகின்றது.
 இத்துடக்கு, அவ்வீட்டினைச் சார்ந்தவர்களை மட்டுமல்ல, அவர்களின்  ஆண்வழிப் பரம்பரையில் (பெண்கள் அல்ல; அவர்களின் இரத்தம் மனுஷ இரத்தம் அல்ல!) சகோதரங்கள், பெரியப்பன், சித்தப்பன், பேரன், பாட்டன், கொள்ளுப்பாட்டன் என்று எல்லோருடைய ஆண் பிள்ளைகள், மனைவிகள், அவர்களின் ஆண், பெண் குழந்தைகள் என்று எல்லோரையும் பாதிக்கும் என்பது மரபு.
 துடக்கு என்பது பின்வரும் நிகழ்வுகளுக்குப் பின்னர் காக்கப்படுகின்றது:
 ஒருவர் இறந்தால்:

 குடும்பத்தில் ஒருவர் இறந்தால், அது ஒரு 'துடக்கு' சம்பவமாக ஒரு மாத காலத்திற்கு பேணப்படுகின்றது. அவர் உடலை அன்றே கொண்டு சென்று எரித்துவிட்டு வந்தாலும் துடக்கில் மாற்றமில்லை.அதுவும் அவரவர் சாதியைப் பொறுத்து அந்தத் தூய்மையின்மையின் காலமும் மாறுபடும். 'உயர் சாதி இரத்தம்' உள்ளவருக்கு தூய்மை 14 நாளிலேயே வந்துவிடும். ஏனையோர் பாவங்கள் 21 நாள், 30 நாள் என்று காத்திருக்க வேண்டும். அந்த நாள் முடிவில் ஐயரை அழைத்து, மந்திரம் சொல்லி 'துடக்கு கழித்தல்' கிரியைச் செய்தால் மாத்திரமே இவர்கள் எல்லோரும் வழக்கமான நிலைக்குத் திரும்ப முடியும், இடையில் இன்னொரு துடக்கு சம்பவம் நிகழாதிருந்தால்!
ஒரு சிலர் துடக்குக் கழிந்தபின்னரும், இறந்தவர் மேலுள்ள பெரும் பாசப் பெருக்கினால் மிகுதி உள்ள ஒரு வருட காலத்திற்கு 'துக்கம்' அனுஷ்டித்து, ஓரளவு இரண்டாம் படிநிலைத் துடக்கும் காப்பர்.

சில சமயத்தவர், இறந்தவர் உடலையே தங்கள் கோவிலுக்குக் கொண்டு செல்கின்றார்களே! அப்போது அந்தக் கடவுளுக்குத் துடக்குத் தொற்றாதா? நம்மர்வர் ஒரு செத்தவீட்டிற்குப் போய்விட்டுக் கோவிலுக்குப் போவதென்றால், முதலில் ஏழு கிணறுகளில் குளித்து சுத்தமாக்கிவிட்டுத்தான் போகவேண்டுமாம். என்ன கொடுமை ஐயா, இறந்தவரை இவ்வளவுக்குக் கேவலப்படுத்துகிறார்களே!

நியாயமாகப் பார்த்தால், இறந்தவர்மேல் உண்மையிலே பாசம் இருக்குமேயானால், அவர் ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாக இருந்தால், இறந்தவர் விரும்பிய  'சொர்க்கம்' அவர் போய்ச் சேரவேண்டும் என்ற விருப்பம் நெஞ்சில் கொண்டவர்களாக இருந்தால் இறந்தவர் உடலைக் கடவுள் சன்னதியில் கொண்டு சென்று உங்கள் கிரியைகளைச் செய்யவேண்டும். அத்தோடு, தினமும் கோவில் சென்று, இறந்தவரை இடையில் எங்கும் நிற்பாட்டாது நேரே 'அங்கு'  கொண்டுபோகுமாறு அவர்கள் வணங்கும் கடவுளிடம் விண்ணப்பம் செய்தல்வேண்டும் என்பதுதான் சரியான வழிமுறையாய் இருக்கவேண்டும் அல்லவா?
குழந்தை பிறந்தால்:

 குடும்பத்தில் ஒருவர், என்னமாதிரித்தான் சுத்தமான சுகாதார சூழலில், பெரும் வைத்திய சாலையில் ஒரு குழந்தையைப் பிரசவித்தாலும், இந்நிகழ்வும் ஒரு செத்த வீட்டை ஒத்த துடக்குப் போலவே காத்திடுவார். என்றாலும், சந்தோசப்பட வேண்டிய விடயம் என்பதால் துடக்கு கழிந்தவுடன் சகஜ நிலைக்குத் திரும்பிவிடுவர்.
 பெண் மாதவிடாய் வந்தால்:

 பெண் பருவம் எய்தால், அல்லது வழக்கமான மாதவிடாய் வந்தால் அந்த நாட்கள் எல்லாம் அப்பெண்ணுக்கு துடக்குத்தான். அப்பெண்ணை ஒருபுறத்தில் உட்காரவிட்டு, வேறு பக்கங்களுக்குச் சென்று 'அழைஞ்சு'  துடக்கை மற்றவர்களுக்கும் பரவாமல் கவனமாய் இருக்க வேண்டும். அவர்கள் என்னமாதிரியான நவீன யுக்திகளை உபயோகித்துச் சுத்தமானவர்களாய் இருந்தாலும், அது துடக்கு, துடக்குதான்.
 மேலை நாடுகளில், இப்படி ஒரு சம்பவம் ஒரு பெண்ணுக்கு நடப்பது என்பது அவரின் வீட்டிலேயே தெரிய வராது. அப்படி என்றால், அவர்கள் எல்லோருமே, எப்போதுமே துடக்கு உள்ளவர்கள் என்று ஆகிவிடுமா?
 தாம்பத்திய உறவினால்:
 தாம்பத்திய உறவினால் பெரும் துடக்கு உண்டாகுவதாகச் சொல்லி விரத காலத்திலும், கடவுளை வணங்குவதன் முன்னும் இப்படியான 'அசுத்த' வேலைகள் செய்வது கூடவே கூடாதாம். இது, இவர்கள் வணங்கும் அந்தக் கடவுளின் அபார சிருஷ்டிதனைக் கொச்சைப் படுத்தும் இந்தச் சாதாரண மானிடரின் கட்டுப்பாடு. ஆனால், கடவுள்மாரின் ஏற்றுக்கொள்ளவே முடியாத பெரும் திருவிளயாடல்களை மட்டும்  கதை, கதைகளாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும், பஜனைகள் பாடியும், நாட்டியங்கள், தெருக்கூத்துகள் ஆடியும் ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால், ஒழுங்கான தாம்பத்தியம் இவர்களுக்கு ஒரு துடக்கு சமாசரமாம்.

துடக்கு இல்லாத எத்தனை பேரை மிகவும் நாற்றமடிக்கும் அழுக்கு உடையுடன் பொது நிகழ்வுகளில் சந்திக்கின்றோம்! இவர்களிலும் பார்க்க சுத்தமான உடையுடன் வரும் துடக்குள்ளவர்களே மேல் என்பது உண்மை. இந்தத் துடக்கு என்பது காக்கப்படுவற்கு, 'அசுத்தம்', 'கிருமி' என்று பல நவீன காரணங்களைச் சொல்லி நியாயப்படுத்தப் பார்க்கின்றார்கள். அந்தக் காலத்தில் அப்படி அசுத்தமாக இருந்ததோ என்னவோ; அதனால்தான் அப்போது இப்படி ஒரு கட்டுப்பாட்டை வைத்திருந்தார்களோ யார் அறிவர்? நாம் இப்போது தற்கால சூழ்நிலைகளை நோக்கி அதற்கேற்ப எங்கள் செயல்களை, நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

'அப்போது சொன்னார்கள்', 'காலம், காலமாய்க் கடைப்பிடித்தார்கள்' என்பதற்காக, தேவையற்ற, பிழையான, அர்த்தமற்ற ஒரு விடயம் தற்போதைய சூழலில் இன்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற  கட்டாயம் இல்லை என்று ஓர் அற்ப அறிவு உள்ள சிறுவர்களுக்கே தெளிவாகப் புரியும்!
-----------------------------------------------

3 comments:

 1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Sunday, September 21, 2014

  "மனிதனாக பிறந்தாலும் −அது
  மற்றவர்க்கு துடக்கு

  வாழ்க்கையின் நடுவில் வீட்டுக்கு
  விலக்கு

  பாடையில் போனாலும்−அதுவும்
  துடக்கு

  யார் ஜயா போட்டது இந்த தப்புக்
  கணக்கு"
  [இலக்கியன்/தீட்டு (துடக்கு) - தமிழ் மன்றம்]

  தீட்டு என்பது சுத்தம் கருதி முன்னோர்கள் வகுத்த ஒரு நியதி
  அது இப்போதும் அதீத நம்பிக்கையாக இன்னும் கடைப்பிடிக்கப்படுவது ஒரு கேள்விக்குறியே/முட்டாள்தனமே?

  சுத்தம் கருதிதான்.துக்கம் நிகழ்ந்த வீட்டுக்குப் போய்வந்தால் குளிக்க வேண்டும் என்பது சவத்திலிருந்து ஏதாவது கிருமிகள் பரவக்கூடும் என்பதாலும் ,வீட்டு விலக்கு என்பது....பென்களுக்கு ஏற்படும் சோர்விலிருந்து அவர்களுக்கு ஒரு தற்காலிக கட்டாய ஓய்வளிக்கவும்தான். அதே போல்தான் குழந்தை பிறப்பிலும் சுத்தம்தான் நோக்கம்.இப்படியான நோக்கங்களுடன் சொன்ன சம்பிரதாயங்கள் தான் அவை.ஆனால், பின்பு மாறி... அதுவே பெரிய தடையாய் தீண்டத்தகாத விசயமாய் பார்க்கத் தொடங்கி தப்புக் கணக்கு ஆயிற்று.

  மேலும் குறிப்பாக மரணம் ஏற்பட்ட வீட்டில் சாப்பாடு சமைக்க மாட்டார்கள்.துடக்கு[தீட்டு/ unclean ] என்று கருதி சமையல் அறைப்பக்கம் போகமாட்டார்கள். அயலவர்கள் சமைத்து உணவு கொடுப்பார்கள்.ஒரு குடும்பத்தில் மரணம் நிகழும் போது அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து இருப்ப தாலும் சமைப்பதில் ஒரு விருப்பமோ அல்லது நேரமோ இல்லாததால் அன்றைய கூட்டு குடும்ப வாழ்வில் இப்படி ஒரு பழக்கம் தோன்றியது என நம்புகிறேன்.அது மட்டும் அல்ல இது,ஒரு பிரச்சனையான நேரத்தில், சமுகத்தின் உணர்வை[sense of community] அன்று பலப்படுத்தியது.

  சாதாரண காலங்களை விட மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல்நிலை பலவீனமாக காணப்படும்..அவ்வாறான பலவீனமான சந்தர்ப்பங்களில் ஆலய மணி ஒலி,மற்றும் இரைச்சல்கள் பெண்களை எரிச்சல் அடையச்செய்யலாம். அத்துடன் அவ்வாறான நேரங்களில் அலைச்சல்களை தவிர்பதற்காகவே பெண்கள் ஆலயங்களுக்கு செல்வது தடுக்கபட்டது.ஆனால் காலப்போக்கில் துடக்கு என்னும் சொல்லை மட்டும் வடித்து எடுத்து கொண்ட மக்கள் உண்மையான காரணங்களை தவற விட்டனர்.

  ReplyDelete
  Replies
  1. விளக்கமான விலக்கமுடியாத நல்ல கருத்து

   Delete
  2. மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.

   Delete