'எழுத்தின் கதை அல்லது வரலாற்றை' அறிவோமா?


எப்படி எழுத்து உண்டாக்கியது? என்பதற்கு, பதினெட்டாம் நூற்றாண்டு வரை, பெரும் பாலோர் கூறும் சாதகமான விளக்கம் தெய்வீக தோற்றம் என்பதே. அதனால் தான்  “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்று தம் நூலான “வெற்றிவேற்கை’’யின் முதல் அடியாக அதிவீரராம பாண்டியன் என்னும் தமிழ்நாட்டு மன்னன் சில நூற்றாண்டு களுக்கு முன்பும் கூறிப்போந்தான். அதே போல கி மு 3100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமேரிய பொது மக்களும்  எழுத்து உட்பட தாம் கையாளும் ஒவ்வொரு செயல் திறமையும் ஆண்டவனே தமக்கு வெளிப்படுத்தியதாகவும் தாம் அறிய வேண்டிய அனைத்தையும் கடவுளே தமக்கு வழங்கியதாகவும் நம்பினர். மத குருமார் தாம் முன்பு கூறிய புராணக் கதையை, அதற்கு தக்கதாக திரித்து, இந்த சமுக மாற்றம் அல்லது இந்த புதிய எண்ணங்கள் மனிதனின் முயற்சியால் ஆற்றலால் அறிவால் ஏற்பட்ட மாற்றம் என்பதை மறைத்து, அதை ஆண்டவனின் தெய்விக வெளிப்பாடு ஆக மாற்றினர். இதை மக்களும் நம்பினர். இப்படித்தான் எமது வரலாறு தொடர்ந்தது. இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.எனவே தான் எழுத்தின் கண்டு பிடிப்பும் அகர வரிசையின் தோற்றமும் கடவுளின் கைக்கு மாறி விட்டது! அதே போலத் தான் பிராமண இந்து மதமும் முதன்முதலில் எழுதத் தொடங்கியவர் விநாயகரே! என்றும், எழுத்து வடிவில் தோன்றிய முதல் நூல் வியாச பாரதமே! என்றும் உரைக்கிறது. அதனை ஒப்பித்தல் போல,அருணகிரிநாதர்,‘முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே’ என பாடி போற்றுகிறார். பொதுவாக, கிழக்கிலோ அல்லது மேற்கிலோ ,எல்லா பண்டைய சமூகமும், எழுத்து ஆண்டவனால் மனிதனுக்கு கொடுத்த கொடை என நம்பினர். ஆகவே எப்படி எழுதுவது என்பதை ஆண்டவனே மனிதனுக்கு படிப்பித்தான் என்கிறது.

உதாரணமாக,சுமேரிய காவியம்,நிசப அல்லது நிடப [Nisaba / Nidaba] என்று அழைக்கப் படும் பெண்தெய்வமே எழுத்தை கண்டு பிடித்ததாகவும், அப்படியே  மாயர்களும்  [Mayan] , இட்சம்ன [Itzamna ] என்ற தெய்வமே எழுத்தை கண்டு பிடித்ததாகவும் கருதினார்கள்.அதே போல,நோர்சு தொன்மவியலில் (Norse mythology) ,ஒடின் [Odin] என்ற தெய்வம்  ரூனிக் அகர வரிசையில் [runic alphabets] உள்ள ரூன்[rune] எழுத்துக்களை கண்டுபிடித்த தாகவும், எகிப்தின் புனித எழுத்துமுறையை [Egyptian hieroglyphs], தோத் [Thoth ] கடவுள் கண்டு பிடித்ததாகவும் , கிரேக்க அகர வரிசையை [Greek alphabet], ஹெர்மஸ் (Hermes/ ரோமர்களின் மெர்க்குரி) என்ற கடவுள் கண்டு பிடித்ததாகவும், கருதினார்கள். இந்துக்கள்,மகா பாரத விநாயகர் கதையை தவிர,எழுத்தைப் பற்றிய அறிவை, மும்மூர்த்திகளுள் ஒருவரான, பிரம்மா மனிதர்களுக்கு கொண்டுவந்த தாகவும் ,சில வேலை,பெண் தெய்வம் சரஸ்வதியையும் குறிப்பிடு கிறார்கள்.  
                                                                          
எந்த வித  சந்தேகத்திற்கு இடமின்றி, மனித இனத்தின் மிக முக்கியமான வளர்ச்சி அல்லது முன்னேற்றம் எழுத்தே ஆகும். என்றாலும் பொதுவாக எழுத்து முழுமையாக உருவாவதற்கு அது எடுத்துக் கொண்ட காலத்தையோ அல்லது கடந்து வந்த பாதையையோ, மற்றும் அதில் ஏற்பட்ட சிக்கல்களையோ பெரும்பாலோர் இன்னும் அறியார். பாட சாலையில் ஆசிரியர் எப்படி எழுத்து பிறந்தது அல்லது படி வளர்ச்சி பெற்றது என்பதை பொதுவாக கற்பிப் பதில்லை. ஆனால்,எதோ அது எப்பவும் இருந்தது போல மாணவர்களுக்கு அதை வழங்கு கிறார்கள். இதனால், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எழுத்தின் கதை அல்லது வரலாற்றின் பெருமையையும் மகிமையையும் கூறி அவர்களின் கவனத்தை ஆர்வத்தை இதன் பக்கம் கட்டி இழுக்கும் நல்ல ஒரு சந்தர்ப்பத்தை இழந்து விட்டார்கள். சிறுவர்கள் மட்டும் அல்ல பெரியவர்கள் கூட  எழுத்து எதோ அது தன் பாட்டில் வழங்கப்பட்டது போல எண்ணி, அதைப்பற்றி அலட்டிக் கொள்வதும் இல்லை,அது கடந்து வந்த சிக்கலான பாதைகளை சிந்திப்பதும் இல்லை. 

உதாரணமாக,வடமொழி  நாரதஸ்ம்ருதியில் [Nārada smṛti] எழுத்துக்களின் தோற்றத்தைக் குறிக்கும்போது. 

- नाकरिष्यद्यदि ब्रह्मा लिखितं चक्षुरुत्तमम्। तत्रेयमस्य लोकस्य नाभविष्यच्छुभा गतिः।। नारदस्मृतिः, 4.70. /தத்ரேயமஸ்ய லோகஸ்ய நாப⁴விஷ்யச்சு²பா⁴ க³தி​:|| நாரத³ஸ்ம்ருʼதி​:, 4.70.  

சுலோகம் 4.70 இல் ,ஒரு வேளை ப்ரஹ்மதேவன் கண்களுக்கு மேன்மையான எழுத்துக்களை உண்டாக்கியிரா விட்டால்,அப்போது இவ்வுலகத்தின் போக்கு நல்லதாக இருந்திராது என்கிறது. இதன் மூலம் எழுத்துக்களின் தோற்றம் ப்ரஹ்மாவினால் உண்டான தென்றும் இப்படி ப்ரஹ்மாவினால் உண்டாக்கப்பட்ட எழுத்து முறையே ப்ராஹ்மி என்றும் கூறுகின்றனர்.மேலும் வ்யவஹார ப்ரகாசிகையில், ஒரு சுலோகத்தில்,ஆறு மாதகாலத்தில் மனிதர்களுக்கு மறதி மற்றும் தடுமாற்றம் ஏற்படுவதால் ப்ரஹ்மாவினால் எழுத்துக்கள் படைக்கப்பட்டு தாள்களில் ஏற்றப்பட்டன என்கிறது. இப்படியான கருத்துக்களுக்கு முதல் இடம் கொடுத்து பல ஆசிரியர்கள் உண்மையை உரைக்காமல்,எல்லாம் ஆண்டவன் செயலே என வரலாற்றை மூடி மறைத்து விட்டார்கள்? 

எழுத்து மனிதனின் சாதனையே என முதல் முதலில்,கி பி 1755  இல்  கூறிய மேலை நாட்டு அறிஞர் பிரெஞ்சு தேசத்தை சேர்ந்த வில்லியம் வார்பர்டன் [William Warburton] ஆவார். இவர் சித்திர வடிவத்தில் இருந்து படிப்பு படியாக எழுத்து பிறந்ததாக வாதாடினார்.உணர்ந்தோ உணராமலோ இன்று பலர் எழுத்தின் முக்கியத்தை அறிந்துள்ளார்கள்.நாம் மக்களை படித்தவர்கள் படிக்காதவர்கள் என வேறுபடுத்துகிறோம்.மேலும் மற்றவரின் வாழ்வை விட மேம்பட வேண்டுமாயின், முதற்கண் நாம் செய்வது அவர்களுக்கு எழுத வாசிக்க கற்றுக் கொடுப்பதாகும். 

எந்த வித  ஐயத்துக்கும் இடமின்றி,நிரந்தரமாக கொடுக்கல் வங்காலை அல்லது வணிக நடவடிக்கைகளை  பதிவதற்கு,உருக் நகர,  ஒரு பெயர் தெரியாத தனிப்பட்ட சுமேரியரின்  விடா முயற்சியின் தேடுதலின் பயனாக , கி மு 3300 ஆண்டு அளவில் எழுத்து உண்டாகியதாக கருதப் படுகிறது. சுருங்கக் கூறின்,எழுத்து கணக்கிடும் அல்லது ஒரு எண்ணும் முறைமையில் இருந்து உருவாக்கினதாக வரலாறு சான்றுகளுடன் எடுத்து இயம்பு கிறது. ஆனால்,இந்த அடிப்படை உண்மையை, தமிழை விட எந்த ஒரு மொழியாவது அங்கீகரி த்துள்ளதா? ஏனென்றால், தமிழ் ஒன்று தான் இதை ஏற்றுக் கொண்டு, அதன் அகர வரிசையை 'நெடுங்கணக்கு' என அழைக்கிறது. நெடுங்கணக்கு என்றால் நீண்ட கணக்கு என்று பொருள்.இன்று நேற்று அல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அப்படி அழைக்க தொடங்கி விட்டார்கள்.ஆகவே நாம்,

• எப்பொழுது எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது?
• எங்கு எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது?
• ஏன் எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது?
• எப்படி எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது? 
• எப்படி எழுத்து வளர்ச்சி அடைந்தது?

என்பதை  அறிய வேண்டாமா? எனவே, மிக விரைவில் இதை,'எழுத்தின் கதை அல்லது வரலாற்றை'  உங்களுடன் பகிரலாம் என்று எண்ணுகிறேன் 

அன்புடன் உங்கள், 

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்1 comments:

  1. Tamil was ancient Sumerian language-( En Appa= என்அப்பா)

    ReplyDelete