'எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:01


பரிணாம வளர்ச்சியின் படி, குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் தோன்றினான் என்று அறிவியல் சொல்கிறது. எனவே, மனிதர்களை ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். பொதுவாக மனிதர்களிடயே பேச்சு மொழியே முதலில் தோன்றியிருக்கும் என்று நாம் நினைக்கலாம். வாய் வழி ஒலி எழுப்பி மற்றவரோடு தொடர்பு கொண்ட மனித இனம் காலப் போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கி யிருக்கும் என்பது தெளிவு. ஆனால் முதலில் மனித இனம் சைகைகளையும், உடல் அசைவுகளின் மூலமான செய்தி களையும் தான் பரி மாறிக் கொண்டிருக்கும் என்பதற்கு ஆதாரமாக, அண்மையில் சிம்பன்சி மற்றும் போனோபோ குரங்குகளைக் கொண்டு நடத்திய ஆய்வின் முடிவாக வெளியிடப்பட்ட  தகவல்கள் அமைந்துள்ளன. எது எப்படியாகினும் ,பொதுவாக, ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்துதற்கு ஒரு கருவியாகக் கொள்ளும் ஒலித்தொகுதியே ‘மொழி’ என்பார் அறிஞர்கள். மொழிதல் என்றால் சொல்லுதல் என்பது பொருள். பேச்சு மொழியே முதலில் தோன்றியது.உதாரணமாக, அறிஞர் மு. வரதராசனார்:

‘பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; ஆயினும் எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவைகளே அன்றி வேறு வகை மொழி நிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவைகளும் மொழியே ஆகும்’ 

என்று கூறுகிறார். எனவே மொழி என்பதைப் பேச்சு, எழுத்து, எண்ணம் என்றும் பல நிலைகளில் அறியலாம். ஒலி வடிவான குறியீடுகளைக் கொண்டது பேச்சுமொழி; வரி வடிவான குறியீடுகளைக் கொண்டது எழுத்துமொழி. பேச்சு மொழி ஓடும் ஆறு போன்றது; எழுத்து மொழி அந்த ஆற்றில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்பர் அறிஞர். குளிர் மிகுதியால் பனி உறைந்து வேறுபட்டதைப் போல் கற்றவர்களின் முயற்சியால் மொழி இறுகி அமைந்ததே எழுத்து மொழி ஆகும்.

மொழியின் தோற்றம் என்பது, மனிதரின் படிமலர்ச்சியின் ஒரு காலகட்டத்தில், அவர்கள் மொழியைப் பயன்படுத்துவதற்கான வல்லமையைப் பெற்றதைக் குறிக்கிறது. இவர்கள்  மொழியைப் பயன்படுத்தும் வல்லமையற்ற, மனிதரல்லாத மூதாதையிலிருந்து மொழியைப் பயன்படுத்தும் வல்லமை கொண்ட , ஓமோ சாப்பியன்களுக்கு மாறியதால், அது, அவர்களின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவியதுடன், பிற உயிரினங்களில் இருந்து அவர்களை வேறுபடுத்தும் முக்கியமான காரணிகளுள் ஒன்றான உயிரியல் இயல்பு ஆகவும் உள்ளது. எழுத்து மொழியைப் போலன்றிப் பேச்சு மொழி அதன் இயல்புகள் குறித்தோ அல்லது அது இருந்ததைக் குறித்தோ எவ்விதமான நேரடி வரலாற்றுத் தடயங்களையும் விட்டுச் செல்ல வில்லை. இதனால், பொதுவாக, மொழியின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. எனினும் 2007 ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப் பட்ட  நியண்டர்தாலின் [Neanderthal] நாவடி எலும்பு [தொண்டை எலும்பு/hyoid bone] ஒன்று, நியண்டர்தால்கள் தற்கால மனிதர்கள் உடையதைய் ஒத்த ஒலிகளை எழுப்புவதற்கான வல்லமையைக் கொண்டிருக்கக் கூடும் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. எனினும், உடற் கூற்றியல் அடிப்படை யிலான தற்கால மனிதனின் மிகப் பழைய புதை படிவப் பதிவுகள்,ஹோமோ சேபியன்கள் [Anatomically modern humans, Homo sapiens /ஓமோ சாப்பியன்சு], எதியோப்பியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன் தற்கால மனிதனுக்குரிய முழுமை யான நடத்தைகள் உருவாகி விட்டதாகக் கருதப்படுகிறது. அக் காலத்தில், கற் கருவிகள் துல்லியமாக ஒரே மாதிரியான வடிவத்தில் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டவையாகக் காணப்படுகின்றன. எலும்புகள், விலங்குக் கொம்புகள் போன்றவற்றாலும் கருவிகள் செய்யப்பட்டன. அத்துடன் அக் காலத்துக் கருவிகள், பயன்பாட்டு அடிப்படையில் இலகுவாக வகைப் படுத்தக் கூடிய வகையிலும் உள்ளன. அவற்றை, எறிவதற்கான கூர்முனைகள், செதுக்குக் கருவிகள், கத்தி விளிம்புகள், துளைக் கருவிகள் என இலகுவாக அடையாளம் காண முடிகின்றது. இதை சரியாக பிள்ளைகளுக்கும், பிற குழு உறுப்பினர்களுக்கும், கருவிகளைச் செய்யக் கற்பிப்பது, மொழியின் துணை இல்லாவிட்டால் கட்டாயம் கடினமாக இருந்திருக்கும். எனவே இக்காலப் பகுதியில் அங்கு எதோ ஒரு மொழி பேசப்பட்டு இருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. இது அதிகமாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் தம்மிடையே தொடர்பு கொள்ளக் கூடிய ஒரு இலகுவான தொடக்க மொழியாக, திருத்தம்பெறாத மொழியாக [பிட்யின்/pidgin language or a simplified primary language] இருக்கலாம். எனினும், அவை பிற்பாடு படிப்படியாக ஆயிரக்கணக்கான ஆண்டுக் காலப்பகுதியில் ஓரளவு நல்ல நிலையை எட்டி இருக்கும் என நம்பலாம். இந்த தொடக்க மனிதர்களுக்கு அப்பொழுது எழுத தெரியாது. தங்கள்
எண்ணங்களை வெளிப்படுத்த சைகைகளையும், உடல் அசைவுகளையும், செய்கைகளையும்  மற்றும் பிட்யின் மொழியையும் பாவித்தன. பின், ஏறத்தாழ, 25,000-30,000 ஆண்டுகளுக்கு முன்பு,குகைகளில் வாழ்ந்த மனிதன் தான் பார்த்து பயந்த, அல்லது தான் பார்த்து ரசித்த சில காட்சிகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பினான். அதற்கு உண்டான மொழி அவனிடம் இல்லை. எனவே அவன்; வசித்த குகையின் சுவர்களில் வெண்மை, சிவப்பு நிறமுடைய கற்களைக் கொண்டு தாம் நினைத்ததை ஏதோ ஒரு வகையில் ஓவியமாக வரையத் தொடங்கினான். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தான் செய்த போரினையும், விலங்கினைக் கொன்ற தீரத்தையும் வெண்மை, பழுப்பு நிறங்கற்களால் குகைச்சுவர்களில் ஈட்டி , மிருகங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் நெருக்கமாக வரைவதன் மூலமாக வெளிப்படுத்தினான்.

இந்த குகை ஓவியம் பல செய்திகளை எமக்கு இன்று சொல்கிறது. அதை வாசிக்கக் கூடியதாக உள்ளது. அப்படி என்றால், இந்த குகை பட வரைவை ஒரு வித எழுத்தாக நாம் கொள்ளலாமா? அப்படி இதை ஒரு ஆரம்ப எழுத்தாக கொள்வோமாயின் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் எழுத ஆரம்பித்தான் என்று கொள்ளலாம். இது ,இந்த குகை ஓவியம், ஆதிகால மனிதனின் தொல் எச்சங்களில் ஒன்றாக கருதலாம். இந்த ஓவியங்கள் அந்தகால நடப்புகளை நமக்கு இன்று சுட்டிக்காட்டி நிற்கிறது. இன்று உலகின் பல பகுதிகளில் குகை ஓவியம் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. கற்கால ஓவியங்களில் மனித சித்திரம் மிக அரிதாகவே காணப்படுகிறது. விலங்குகள், கோடுகள்,முதலியவை தான் மிகுந்து நிற்கின்றன. உதாரணமாக, வேட்டையாடுதல், விலங்குகளை பழக்குதல், விலங்குகள் இடம்பெயர்தல், போர், விவசாயம் முதலிய செயல்கள் ஓவியங்களில் காணப்படுகிறது. தமிழகம், கர்நாடக முதலிய இடங்களிலும் சில குன்றுகளில் கற்கால குகை ஓவியங்கள் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளன. எனினும் இந்த ஓவியங்கள் பண்டைய ஒரு கதையை சொல்கின்றனவா அல்லது ஒரு வித ஆவி வீடு ["spirit house"] ஒன்றை பிரதி பலிக்கின்றனவா அல்லது வேறு ஏதாவது சடங்கு [ritual exercise] ஒன்றை குறிக்கின்றனவா என்பது சரியாக தெரியா?

ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடிய எழுத்து முறையின் ஆரம்பம் வேடடையாடி உணவு திரட்டும் சமூக நிலையில் இருந்து, நிரந்தரமாக குடியேறி விவசாய சமூக நிலைக்கு மாறும் தருவாயில் ஏற்பட்டதாக கருதலாம். ஏனென்றால், அப்பொழுது அவர்களுக்கு, தங்கள் உடமையை எண்ண வேண்டிய தேவை உண்டாகி இருக்கும். உதாரணமாக, காணி நிலம்,மிருகங்கள்,தானியங்களின் அளவீடு போன்றவற்றை எண்ண கணக்கிட அல்லது உடமையை வேறு ஒருவருக்கு அல்லது மற்றொரு குடியேற்றத்திற்கு எண்ணி,கணக்கிலிட்டு மாற்ற வேண்டிய கட்டாயம் அல்லது ஒரு நிலை  ஏற்பட்டிருக்கலாம். அந்த காலத்தில் யூப்பிரட்டீஸ், டைகிரிஸ் [ Tigris and Euphrates] என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியான மெசொப்பொத்தே மியாவை [ Mesopotamia], இன்றைய மத்திய கிழக்கு ஈராக் பகுதியை,  "செழுமையான பிறை" ( Fertile Crescent ) என அழைக்கப் பட்டது. அப்பகுதியில் 9,000 ஆண்டு பழமை வாய்ந்த, கற்கால [neolithic] கீறல் போட்ட  கணக்கிடும் அடையாள வில்லைகள் [ incised "counting tokens"]  பல தோண்டி எடுக்கப் பட்டன. மேலும் 4100-3800 ஆண்டுகளுக்கு முன், இந்த  அடையாள வில்லைகள் [டோக்கன்கள்] ,களிமண்ணில் [clay] பதியக் கூடிய அல்லது பொறிக்கக் கூடிய சின்னங்களாக [symbols] மாறின. இவை காணி [நிலம்] ,தானியம்,கால்நடைகள் போன்றவற்றை பிரதிநிதித்துவம் படுத்த அன்று பாவிக்கப் பட்டன. ஒரு எழுத்துமொழி அங்கு முதல் முதல் இவ்வாறு பிறந்தது எனலாம்?

களி மண்ணில் பதியப்பட்ட படங்கள் சித்திரவெழுத்தாக [ஓவிய எழுத்துக்கள் /உருவ எழுத்துக்கள் /pictographs] பரிணமித்தது, இந்த முறை மிகுந்த கடினமாகவும், நெடுங்காலம் பிடிப்பதாகவும், ஏராளமான உருவங்களையும் பயன்படுத்த வேண்டிய தாகவும் இருந்ததால், சில படங்கள் பின் ஒரு யோசனையை அல்லது ஒரு கருத்தை பிரதி பலித்து, கருத்தெழுத்தாக [ideographs] மாறின.அதாவது, அம்புகள் பாய்வதுபோல் வரைந்து போர் என்பதை குறித்தனர், மேலும் கண் எழுதி அதன் கீழ் செங்கோல் எழுதினால் அது ஒரு அரசன் என்பதை குறிக்கும். இப்படி அதை கொஞ்சம் இலகுவாக மாற்றினார். இதன் தொடர்ச்சியாக , பின்னர் சொற்களையும், சொல்லின் பகுதிகளையும் குறிப்பதற்கான படிமங்களை பயன்படுத்தி னார்கள். கல் என்று படிப்பதைக் குறிக்கும் சொல்லை எழுதுவதற்கு அதே ஒலியையுடைய கல் (பாறையின் ஒருபகுதி) என்ற பொருளின் உருவத்தை எழுதுவது போன்ற முறை இதுவாகும். இறுதியில் அவை இன்று உள்ளது போல, ஒலியை பிரதி பலிக்கும் ஒலியெழுத்தாக (alphabetic) மாறின. இது தான் சுருக்கமான எழுத்தின் பிறப்பின் கதை! 

உலகிற்கு முதல் முதல் எழுத்தை தந்த சுமேரியர்கள், அந்த சுமேரிய ஆப்பு வடிவ எழுத்தின் மூலம் முதல் காதல் கடிதத்தை கவிதை வடிவிலும் விட்டு சென்றுள்ளார்கள். இதை பிலடெல்பியா [Philadelphia] பல்கலைக்கழக பேராசிரியரான நோவா கிரேமர் [Noah Kramer]  ஆங்கிலத்தில் தந்தார்.அதை நான் தமிழில் மொழிபெயர்த்து இங்கு கீழே தருகிறேன். எழுத்து இல்லை என்றால் இந்த நாலாயிரம் ஆண்டிற்கு மேற்பட்ட காதல் கவிதையும் [கி மு 2031 ] இன்று இல்லை! 

"அன்பு மணாளனே! என் பிரியமான தோழனே !! 
உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது 
ஆண்மையுள்ள சிங்கமே, என் இதயத்திற்கினிய காதலனே, 
உன் வசீகரம் இனிமையானது, அமுதம் போல் இனிமையானது" 
"நீ என்னை வயப்படுத்தி விட்டாய், எனவே  
எனது சுய விருப்பத்தில் நான் உன்னிடம் வருவேன்
ஆண்மையுள்ள வீரனே! பள்ளி அறைக்குள் என்னை 
உன்னுடன் கொண்டு போ 
நீ என்னை மயக்கி விட்டாய், எனவே  
எனது  கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன்
காதல் தோழனே!  படுக்கையறைக்குள் என்னை 
உன்னுடன் தூக்கி போ"

"மணாளனே! உனக்கு என்னை இன்பம் கொடுக்க விடு
என் மதிப்புள்ள காதற் கண்மணியே!  உனக்கு என்னை தேன் தர விடு 
தேன் சொட்டும் பள்ளியறையில் உனது கவர்ச்சியை 
மீண்டும் மீண்டும் நாம் அனுபவிப்போம், இனிய இன்பமே 
இளைஞனே! உனக்கு என்னை மகிழ்வு கொடுக்க விடு 
என் அரிதான காதலனே! உனக்கு என்னை அமிர்தம் ஊட்ட  விடு"  

"வீரனே! நீ என்னை  கவர்கிறாய்,எனவே  
என் தாயிடம் கூறு நான் என்னையே தருவேன் 
என் தந்தையிடம் கேள் அவர் பரிசாய் தருவார் 
உன் ஆன்மாவை எங்கே மகிழ்ச்சி படுத்துவது என்பது எனக்கு தெரியும் 
மணாளனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு 
உனது இதயத்திற்கு எங்கே இன்பம் கொட்டுவது என்பது எனக்கு தெரியும் 
இளைஞனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு"

"வீரனே!நீ என்னை விரும்புவதால்,
நீயே எனக்கு இனியவை செய்வாய் என்றால் 
எனது எஜமானே! கடவுளே!! பாதுகாவலனே!!!   
"என்லில்" கடவுளின் இதயத்தை  மகிழ்ச்சிபடுத்தும் 
எனது  "ஷு-சின்"  அரசனே!
உனது இன்ப ஊற்றை நீயே கையாளுவாய் ஆயின், 
தேன் போல் இனிய அந்த இடத்தை நீயே பற்றுவாய் ஆயின்,
அளவு சாடியின் மூடி போல 
அங்கே உன் கையை எனக்காக மூடு[வை] 
மரச் சீவல் சாடியின் மூடி போல 
அங்கே உன் கையை  எனக்காக விரி[பரப்பு ]"  

[மொழி பெயர்ப்பு:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] 

குறிப்பு:ஷு சின்' :கி.மு 2037-2029 ஆண்டுகளில் ஆண்ட சுமேரிய அரசர்.என்லில்:மழை மற்றும் காற்று கடவுள்"  

                                                                            [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:02  தொடரும்

0 comments:

Post a Comment