எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் வேலூர் போலாகுமா?

Image result for Vellore
பொற்கோயில்
வேலூர் (Vellore), தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநகரமும் வேலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய சுற்றுலா இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. வெவ்வேறு காலங்களில் இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், விஜயநகரப் பேரரசு, இராட்டிரகூடர்கள், பல்லவர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வேலூரை ஆண்டுள்ளனர். இது தமிழகத் தலைநகரான சென்னைக்கு மேற்கே சுமார் 145 கிலோமீட்டர் (90 மைல்) தொலைவிலும் திருவண்ணாமலைக்கு வடக்கில் 82 கிலோமீட்டர் (51 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. தோல் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு சேவைத்துறை நிறுவனங்கள் இந்நகரின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்களிக்கின்றன. இந்நகர மக்கள் பல்வேறு உள்ளூர் மற்றும் வெளியூர் தொழில்துறைகளில் பணியாற்றுகிறார்கள். மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் இங்கு வேலூர் மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், அரசின் கல்விநிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முதலியன அமைந்துள்ளன.

இந்நகரம், 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வேலூர் மாநகராட்சி மூலம் ஆளப்படுகிறது. மாநகராட்சி சட்டத்தின்படி வேலூர் நகரம் 1,054 ஹெக்டேர் (10.54 கிமீ 2) பரப்பளவும், 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 177,413 மக்கள்தொகையும் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இடைக்கால மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி[1], மொத்த நகர்ப்புறத்தின் மக்கள்தொகை 185,895 ஆகவும் உள்ளதாக குறிக்கப்படுகிறது. இந்நகரம் இரயில் போக்குவரத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும் சாலைப் போக்குவரத்தே முக்கியமான போக்குவரத்து முறையாக இருக்கிறது. சென்னை பன்னாட்டு விமானநிலையம் இந்நகரில் இருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

தமிழில் வேல் என்ற சொல் இந்து மதக் கடவுள் முருகனின் ஆயுதமான ஈட்டி எனவும் ஊர் என்பது முருகக் கடவுள் ஆயுதத்தைப் பயன்படுத்திய இடத்தை குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்து மதப் புராணத்தின்படி, தீய சக்திகளை அழிப்பதற்காக வேலுடன் தாமரைக்குளத்தில் தோன்றிய ஒரு பழங்குடியின வேட்டைக்காரனாக முருகக் கடவுள் கருதப்படுகின்றான். எனவே "வேலூர்" என்றால் முருகன் தோன்றிய ஊர் என பொருள் கொள்ளப்படுகிறது.

மேலும், வேல மரங்களால் சூழப்பட்ட நிலம் என்பதால் இவ்வூர் வேலூர் என்று அழைக்கப்பட்டது என்று மற்றொரு விளக்கம் தருவாரும் உண்டு.

வரலாறு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சோழர் கால கல்வெட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது வேலூரின் வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு துவங்குகிறது. அதற்கு முன்னர் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சி முறை பற்றி குறிப்பிடுகின்றன.

Image result for வேலூர் கோட்டை
வேலூர் கோட்டை
850 முதல் 1280 வரையான ஆண்டு காலத்தில் வேலூர்ப்பகுதி சோழ மன்னர்களால் ஆளப்பட்டது. சோழ மன்னர்களுக்குப் பிறகு இராட்டிரகூடர்கள், பிற்காலச்சோழர்கள் மற்றும் விசயநகர மன்னர்களால் தொடர்ந்து ஆளப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது காலாண்டில் விசய நகர மன்னர்களின் பிரதிநிதியாக விளங்கிய சின்ன பொம்மு நாயக்கர் என்ற சிற்றரசர் வேலூர் கோட்டையைக் கட்டினார்.

17 ஆம் நூற்றாண்டில், வேலூர் ஆற்காடு நவாப்பின் ஆட்சியின் கீழ் வந்தது. முகலாய பேரரசின் சரிவுக்குப் பின்னர், நவாப்பால் இந்நகரைக் கட்டுப்படுத்த முடியாமல் போக 1753 க்குப்பிறகு குழப்பமும் கலவரமுமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர், வெவ்வேறு இந்து, முஸ்லிம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர் வந்தது.

17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பீஜப்பூர் சுல்தான் இக்கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் மராட்டியர்களாலும், தில்லி சுல்தானின் தளபதியும், கர்நாடகத்தின் நவாப்புமான தாவூதுகானாலும் கைப்பற்றப்பட்டது. 1760ஆம் ஆண்டு வேலூர் கோட்டை ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனியினரின் வசம் சென்றது. ஆங்கிலேயர் திப்பு சுல்தானைத் தோற்கடித்த பின்னால் அவருடைய மகன்களை வேலூர்க்கோட்டையில் சிறைவைத்தனர். 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் இந்தியச் சிப்பாய்கள் கலகம் செய்தார்கள். இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய் எழுச்சி என்று இந்திய வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்.

பொருளாதாரம்
                                  
Image result for Vellore map2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, வேலூர் நகர தொழிலாளர் பங்கு விகிதம் 43.64% ஆகும். வேலூர், மாவட்டத்தின் தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும் , சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி மிகையாகவும் கொண்டுள்ளது. தோல்தொழில், விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தொழிலாளர்களில் சுமார் 83.35 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 13.52 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 43.64 சதவீதமும் பெண்களின் பங்கு 24.39 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை இராயபுரத்திற்கும் வாலாசாபேட்டைக்கும் இடையில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் இரண்டாவது ரயில் பாதையின் வளர்ச்சியோடு வேலூர் மற்றும் அதன் அருகில் இருக்கும் தொழில் நகரங்களும் தொடர்ந்து நிலையாக தொழில்துறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. தங்கநாற்கர சாலை கணிசமாக இப்பகுதியில் தொழில்துறை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது

வேலூரைச் சுற்றியுள்ள இராணிப்பேட்டை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் கொண்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் இருந்துதான் நன்கு பதனிடப்பட்ட உயர்ரக தோல்பொருட்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்த தோல் ஏற்றுமதியில் வேலூர் மாவட்ட தோல் தொடர்பான பொருட்கள் 37 சதவீதம் ஆகும். ஆசியாவின் மிகப்பெரிய வெடிமருந்து தயாரிப்பு நிறுவனம், தமிழ்நாடு வெடிமருந்து (TEL) தொழிற்சாலை காட்பாடியில் அமைந்துள்ளது. இத்தொழிற்சாலை மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட இந்திய அரசாங்கத்தின் வெடிபொருட்கள் நிறுவனம் ஆகும். மற்றும் வேலூர் அருகே உள்ள இறையங்காடு என்ற ஊரில் உலோக மற்றும் வாகன, தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் மருத்துவப் பயன்பாடுகள் கொண்ட பிளாஸ்டிக் ஒருங்கிணைந்த பாகங்கள் உற்பத்தி நிறுவனம் ஒன்றும் இயங்கி வருகிறது. இவ்வூரில் உள்ள ஆபிசர்ஸ் லைன், காந்தி ரோடு, லாங்கு பஜார், மக்கான், சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலை போன்ற பகுதிகள் வியாபார மையங்களாக விளங்குகின்றன.

நகரின் இதயப் பகுதியான ஐடா ஸ்கடர் சாலையில் கிருத்துவ மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இம்மருத்துவமனை வேலூரின் மிகப் பெரிய வணிகத்தொழில் மற்றும் சேவை நிறுவனமாகும். இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஊள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து போகுமிடமாக இம்மருத்துவமனை விளங்குகிறது. உறைவிடம், மருத்துவமனைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் முதலியன நகரின் வருவாய்க்கு முக்கிய ஆதாரங்களாக உள்ளன. தமிழக அரசின் வேலூர் மருத்துவக் கல்லூரி அடுக்கம்பாறை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவை தவிர நாராயணி மருத்துவ ஆராய்ச்சி மையம், அப்போலோ மருத்துவமனை முதலியன இங்குள்ள மருத்துவ நிறுவனங்களாகும். இங்குள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Vellore Institute of Technology - VIT) அகில இந்திய அளவில் புகழ் பெற்றுள்ளது. விவசாயம் தவிர சிற்றூர்ப்பகுதி மக்கள், நெசவு, பீடி மற்றும் தீக்குச்சி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருவாய் ஈட்டுகின்றனர்.

சுற்றுலா

பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. இக்கோட்டையின் உள்ளே இந்துக் கோயில், கிறித்தவ ஆலயம், இஸ்லாமியரின் மசூதி ஆகியவை உள்ளன. இந்த நகரில் பல பழமை வாய்ந்த கோயில்கள் மற்றும் இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான கிறித்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் உள்ளது. வேலூருக்கு அருகில் இரத்தினகிரி பாலமுருகன் கோயில் உள்ளது.

இரத்தினகிரி பாலமுருகன் கோயில்

வேலூரில் பொற்கோயில் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது, இக்கோயிலில் கூரை முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து வணங்கிச் செல்கின்றனர்.

வேலூர் நகரில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா இடம் வேலூர்க்கோட்டை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சியின் போது, திப்பு சுல்தானின் குடும்பத்தினர் மற்றும் இலங்கையின் கடைசி அரசன் விக்கிரம ராசசிங்கா ஆகியோர் அரசாங்கக்கைதிகளாக இக்கோட்டையில் வைக்கப்பட்டிருந்தனர். இக்கோட்டையில் ஒரு தேவாலயம், ஒரு மசூதி மற்றும் ஒரு சிவன் கோவில் ஆகியன உள்ளன. சலகண்டீசுவரர் கோவில் என்றழைக்கப்படும் சிவன்கோயில் அதன் சிறப்பான சிற்பங்களுக்குப் பெயர்பெற்ற இடமென அறியப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான முதல் புரட்சி 1806 ஆம் ஆண்டில் இந்தக் கோட்டையில்தான் வெடித்தது. கனத்த மதில்களும், அவற்றில் சீரற்ற இடைவெளியில் எழுப்பிய கொத்தளங்களும் வட்டக்கோபுரங்களும் இணைந்து வேலூர் கோட்டையின் முக்கிய பாதுகாப்பு அரணாக விளங்கின. கோட்டையின் தலைமை மதில்கள் பெரிய கருங்கற்களால் (கிரானைட்) கட்டப்பட்டவை. நிலத்துக்கு அடியிலுள்ள குழாய்கள் மூலம் தண்ணீர் பெறும் வகையில் அகன்ற அகழி கோட்டையைச் சுற்றி வெட்டப்பட்டுள்ளது.

வேலூர்க் கோட்டைக்குள் இக்கோட்டையின் வயதொத்த சலகண்டேச்சுரர் கோவில் அமைந்துள்ளது. வேலுர்க் கோட்டையின் அமைப்புமுறை தென்னிந்திய இராணுவக் கட்டுமானத்திற்கு ஒரு குறிப்பிடதகுந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆங்கிலேயருடனான போரின்போது இக்கோட்டைக்குள் இடம்பெற்றுள்ள திப்புமகாலில் திப்புசுல்தான் தன் குடும்பத்தினருடன் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. திப்புவின் மகன்களுடைய கல்லறைகள் வேலூரில் காணப்படுகின்றன. இக்கோட்டை இந்தியத் தொல்லியல் துறையின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மற்றும் இக்கோட்டையானது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டு ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமாக சிறப்புடன் பாதுகாக்கப்படுகிறது.

அரசு அருங்காட்சியகம் கோட்டையின் உள்ளே அமைந்து இருக்கிறது. இது 1985 ஆம் ஆண்டு பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இங்கு கலை, தொல்லியல், வரலாறு, ஆயுதங்கள், சிற்பங்கள், வெண்கல, மர சிற்பங்கள், கைவினைப் பொருட்கள், நாணயவியல், அஞ்சல், தாவரவியல், மண்ணியல், விலங்கியல் தொடர்புடைய பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்படாத வடஆற்காடு மாவட்ட வரலாற்று நினைவுச் சின்னங்கள் இங்குள்ள கண்காட்சியகத்தில் உள்ளன. சிறப்புக் கண்காட்சியில் இம்மாவட்டத்தின் கி.மு 400 ஆண்டு பழமை வாய்ந்த வெண்கலத்தாலான இரட்டை வாள், பிற்காலப் பல்லவர்கள் முதல் விசயநகர அரசர்கள் காலம் வரையிலான கற்சிற்பங்கள் , கடைசி இலங்கை மன்னன் விக்ரம ராச சிங்கா பயன்படுத்திய தந்தத்தினாலான சதுரங்கப் பலகைகள் மற்றும் சதுரங்கக்காய்கள் முதலிய பொருள்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளி மாணவர்களுக்கான கலை முகாம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வெட்டுகள் மற்றும் படிமவியல் ஆய்வு முதலியன அருங்காட்சியகத்தில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

சலகண்டேச்சுரர் கோயில், இலட்சுமி தங்க கோவில், வாலாசா தன்வந்திரி கோயில் மற்றும் பொன்னை நவக்கிரகக் கோட்டை ஆலயம் ஆகிய கோயில்கள் வேலூரைச் சுற்றியுள்ளன. ஸ்ரீ லட்சுமி கோவில் தற்பொழுது மிகவும் புகழ்பெற்றுப் பொற்கோயில் என அழைக்கப்படுகிறது. வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமலைக்கோடியில் புதிதாக கட்டப்பட்ட இக்கோயில் ஆன்மீகப் பூங்காவாக திகழ்கிறது. சக்தி அம்மா என்பவரின் தலைமையில் உள்ள நாராயணி பீடத்தில் இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் கட்டிடக்கலையில் சிறப்புவாய்ந்த நூற்றுக்கணக்கான தங்கக் கைவினைஞர்களால் நுண்ணிய கை வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டுள்ளன. உலகிலேயே இங்குதான் 300 கோடி ரூபாய் செலவில் சுமார் 1500 கிலோ தங்கத்தை பயன்படுத்தி கோவிலின் வெளிப்புறம் தங்கத்தகடுகள் மற்றும் தங்கத்தட்டுகளால் வேயப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் நகருக்கு அருகிலுள்ள இரத்தினகிரியில் பாலமுருகனடிமை சாமிகளால் எழுப்பப்பட்டுள்ள முருகன் கோவில் இங்குள்ள மற்றொரு முக்கியமான இந்து மதமதக் கோவில் ஆகும். வேலூர் கோட்டையின் உள்ளே 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த செயிண்ட் ஜான் தேவாலயம் நகரில் அமைந்துள்ள தேவாலயங்களில் ஒன்றாகும். மேலும், நாட்டின் மிகப்பெரிய அரபிக்கல்லூரியை உள்ளடக்கிய பெரிய மசூதி நகரின் மையப்பகுதியில் உள்ளது.


0 comments:

Post a Comment