கனடாவிலிருந்து ஒரு கடிதம்.ஊர் சுற்றிப் பார்த்ததில்...02

      
                                                              30/11/2019

அன்புள்ள அண்ணைக்கு ,

  நான் நலம்.  அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.

 ஊரிலிருந்து திரும்பியபின் நான்  உங்களுக்கு எழுதிய கடிதம் கிடைத்திருக்கும் என எண்ணுகிறேன். மேலும் இலங்கையில் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள  இருப்பதால் உங்கள் பதிலுக்குமுன் இதை எழுதுகிறேன். 

அண்ணை , நான் இலங்கையின் வடக்கு , கிழக்கில் திருகோணமலை , மேற்கில் கொழும்பு காலி என என் உறவுகளுடன் சுற்றித்திரியும் பாக்கியம் கிடைத்ததால் இம்முறைப் பயணம் பயனுள்ளதாக அமைந்தது.

அவற்றுள் வடக்கில் குறிப்பிடக்கூடியது நாவற்குழியில் 'சிவபூமி திருவாசக அரண்மனை ' என்ற பெயரிடப்பட்ட  வித்தியாசமான  ஆலயம் ஒரு சிவலிங்க அரண்மனையாகவே  கண்ணிற்கு விருந்தாக இருந்தது. கோவில் முழுவதும் , கோபுரம் அடங்கலாக அவலட்ஷண பொம்மைகள் இல்லாது , அவற்றுக்குப் பதிலாக சிவலிங்கம் அமைத்திருப்பது புதுமையாகவும் , நல்நோக்காகவும்  தோன்றியது.

உள்நாட்டு  யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்ற நோக்கில், கிழக்கில் ,திருகோணமலையில் தொழில் வாய்ப்பு வழங்கும்இலங்கை விவசாய அமைச்சின் கீழ் இயங்கும்  ''HELA BOJUN''  எனும் பெயர்கொண்ட தமிழ் சாப்பாட்டுக் கடையும், ''இலங்கை இராணுவ அருங் காட்சியகம்'' என்பன புதியனவாக நமக்கு விருந்தளித்தது.

இராணுவ காட்சியகத்தில் முதலாம் உலகப் போர் காலத்திலிருந்து இன்றுவரையில் உபயோகிக்கும் ஆயுதங்கள், மட்டுமல்லாது உள்நாட்டு யுத்தத்தில்  விடுதலைப் புலிகள் பாவித்த புதுவகையான பேராயுதங்களும்  காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. அவை  அனைத்தும் ஒவ்வொன்றாக ஒரு இராணுவத்தினால் தமிழில் எமக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ,கொழும்பில் 'புத்தர் அருங் காட்சியகம் , காலியில் ''களுகங்கை படகோட்டம் ''  ''சுனாமி காட்சியகம்'' என்பன பார்த்தவையில் குறிப்பிடத்தக்க புதியவையாகும்.

களுகங்கையில் பொறுமையுடன் ஒருமணிநேரம் படகில்  எம்மை அழைத்து சென்ற வழிகாட்டி  ,அங்கு காணப்படும் 26 தீவுகளில் ,பார்க்கக்கூடிய  சில தீவுகளையும்    , ஒரு குட்டித் தீவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்து ஆலயமும் கண்டு களிக்கசெய்தது வித்தியாசமாகவே இருந்தது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவின்பின் , பெரும்பாலான வீதிகள் சிறந்த முறையில் ,செப்பனிடப்பட்டதுடன், சேதமைந்திருந்த பாலங்களும் நவீன முறையில் கட்டப்பட்டிருந்ததும், யுத்தகாலத்திற்கு முன்னர்  நீண்டகாலக் கோரிக்கையாயிருந்தும் கவனிக்கப் படாதிருந்த  தனங்கிளப்பு -பூநகரி , சீனன்குடா -கிண்ணியா போன்ற பல கடல்பாதைகள்  புதிய பாலத்தினால் இணைக்கப்பட்டிருப்பது மேலும் வசதியாகவும் அழகாகவும் இருந்துது.

மேலும் வடக்கிலும் ,கிழக்கிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலங்கள் விபரம் கிடைக்கப் பெற்றதினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

🌉சீனன்குடா-கிண்ணியா ----------396M [OPEN 20 OCT.2009]
🌉உடப்பு -கிண்ணியா ---------------315M [OPEN 19 OCT.2011]
🌉இறக்கண்டி -குச்சவெளி --------300M [OPEN 20 OCT.2009]
🌉சங்குப்பிட்டி -பூநகரி ------------ -288M [OPEN 16 JAN.2011]
🌉மட்டக்களப்பு -கல்லடி -----------288 M [OPEN 22MAR.2013]
🌉அரிப்பு-மன்னார்------------------------258 M [OPEN 16 OCT.2011]
🌉ஓட்டமாவடி -மட்டக்களப்பு --250M [WIDED  2010]
🌉மூதூர் -கங்கைத்துறை ---------245M [OPEN 19 OCT.2011]
🌉மண்முனை-மட்டக்களப்பு-----210M [OPEN 19 APR.2013]
🌉இறால்குழி -மூதூர் ---------------175M  [OPEN 19 OCT.2011]
🌉மன்னார்-மன்னார்-------------------157M [OPEN 18 MAR.2010]

இவற்றுள் இன்று சீனன்குடா-கிண்ணியா பாலமே இலங்கையில் அதி கூடிய நீளமான பாலமாகக் கணிக்கப்பட்டு இருந்தாலும் கொழும்பு, காலிப் பகுதியில் முறையே அமைக்கப்பட இருக்கும் மகாவெவ[3100M ] ,அவித்தவ [695M] பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டால் கிண்ணியாப் பாலம் 3ம் இடத்தில் வந்துவிடும் எனவும் அறிந்துகொண்டேன்.

அண்ணை , நான் இம்முறைப் பயணத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் பல. அதில் வாழ்க்கையில்  தமக்குத் பிரயோசனப்பட்ட  காலத்தில் வரவேற்பளித்த ஒரு சிலர், இப்போது என்னைத் பிரயோசனமில்லை  என உணர்ந்து புறக்கணித்தமை கண்டு ஆச்சரியமடைந்தேன்.  குளிர்காலத்தில்  வெப்பம்  தேவையென்றால் மட்டும் ,அடுப்பங்கரையினை நாடும் பூனை போன்ற மனிதர்களும் உலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். என்ன செய்வது? வாழ்க்கையெனும் பயணத்தில் சந்திப்புகள் ஏராளம். எல்லாவற்றினையும் சமாளித்தே போகவேண்டியுள்ளது .

அண்ணை , மேலும் உங்கள் சுகத்தினை அறிய கடிதம் மூலம் தொடர்ந்து  எழுதுங்கள். மீதி மறு கடிதத்தில்....

இப்படிக்கு
அன்பின் தம்பி 
செ.மனுவேந்தன்
 
சிவபூமி திருவாசக அரண்மனை

                                                                   

0 comments:

Post a Comment