இலங்கை நடிகர் தர்ஷன் நடிக்கும் ‘சுனாமி’:நடிகர்கள்→தர்ஷன் தர்மராஜ், நிரஞ்சனி சண்முகராஜா, ஹிமாலி சயுரங்கி, பிமல் ஜயகொடி, மொனரா வீரதுங்க
இசைரோஹண வீரசிங்க
இயக்கம் கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க
தயாரிப்புரேணுகா பாலசூரிய


செல்வம் (தர்ஷன் தர்மராஜ்), கல்யாணி (நிரஞ்சனி சண்முகராஜா) ஆகியோர் நீதிமன்ற வழக்கொன்றை சந்திக்கும் வகையில் இந்த திரைப்படம் ஆரம்பமாகின்றது.
சிங்களம் மற்றும் தமிழில் வெளிவரும் இந்த திரைப்படத்தில், காணாமல் போன தனது குழந்தையை உரிமை கோரி வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றமை முதலாவது காட்சியிலேயே வெளிப்படுகின்றது.
நீதிமன்ற விசாரணைகளில் காட்சியளிக்கும் செல்வம், தனது கடந்த கால நினைவுகளைக் கூறுகின்ற போது, 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குக் கதை நகர்கின்றது.
திருகோணமலையைச் சேர்ந்த செல்வம் மற்றும் கல்யாணி ஆகியோர் தனது இரண்டரை வயதுக் குழந்தையுடன் கருவாடு காய வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
குழந்தையைத் தூங்க வைக்கக் கல்யாணி வீட்டிற்கு சென்ற தருணத்தில், கடல் உள்வாங்குவதை செல்வம் அவதானிக்கின்றார்.
தனது மனைவியை அழைத்துக்கொண்டு செல்வம், உள்வாங்கிய கடல் பகுதிக்குள் செல்கின்றார்.
கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள பலர் கடல் உள்வாங்கியதைத் தொடர்ந்து, மீன்களைப் பிடிக்க ஆரம்பிக்கின்றனர்.
 உள்வாங்கி கடல் திடீரென மீண்டும் பாரிய அலையுடன் நிலப்பரப்பை நோக்கி வர, அச்சத்துடன் செல்வம் மற்றும் கல்யாணி தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடிவரும் காட்சி மிகவும் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் செல்வமும், கல்யாணியும் உயிர் தப்ப, தனது இரண்டரை வயதுக் குழந்தையை (பிரபா) தொலைத்து விடுகின்றனர்.
தொலைத்த தனது குழந்தையைத் தேடும் இருவரும், பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
மறுபுறத்தில் விடுமுறையைக் கழிப்பதற்காகக் கண்டியிலிருந்து திருகோணமலை நோக்கி சிங்கள குடும்பமான ஹிமாலி சயுரங்கி, பிமல் ஜயகொடி தம்பதிகள் தனது குழந்தையுடன் வருகின்றனர்.
காரில் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த குடும்பமும் சுனாமியில் சிக்குண்டு தனது குழந்தையைத் தொலைத்து விடுகின்றனர்.
இவர்களும் தனது குழந்தையைத் தேட ஆரம்பித்த நிலையில், சுனாமியினால் பாதிக்கப்பட்டுப் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிக்கும் சிறுவர் இல்லத்திலிருந்து தனது இரண்டரை வயதுக் குழந்தையைக் கண்டுபிடிக்கின்றனர்.
தனது குழந்தையை மீட்கும் சிங்கள குடும்பம் அந்த குழந்தையைக் கண்டிக்கு அழைத்து வருகின்றனர்.
கண்டிக்கு அழைத்து வரும் குழந்தையிடம் சில மாற்றங்கள் உள்ளதை அவதானிக்கும் சிங்கள குடும்பம், சுனாமியின் தாக்கத்தினால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என எண்ணுகின்றனர்.
இந்த நிலையில், 12 வருடங்கள் கடந்த நிலையில், சிங்கள பாடசாலையில் கல்வி பயில்கின்றார் மீட்கப்பட்ட சிறுமி. 
சிங்கள பாடசாலையில் தமிழ் மொழி கற்பிப்பதற்காகப் புதிதான வருகை தரும் ஆசிரியை (சத்யபிரியா ரட்ணசாமி), சிங்கள பிரதேசத்தில் வாழ்ந்த குறித்த சிறுமியிடம் காணப்படும் தமிழ் மொழி திறமையை கண்டு ஆச்சரியப்படுகின்றார்.
தமிழ் பின்புலம் இல்லாத ஒரு சிறுமி எவ்வாறு தமிழ் மொழியை புரிந்துக்கொள்கிறார் என்ற ஆச்சரியம் ஆசிரியைக்கு ஏற்படுகின்றது,
இந்த சிறுமி தமிழ் மொழி அறிவை கண்டு வியப்புறும் பிரதேச மக்கள், இந்த தொடர்பில் பேச ஆரம்பிக்கின்றனர்.
பூர்வ ஜென்மத்தில் குறித்த சிறுமி தமிழ் குடும்பத்தில் பிறந்திருக்கலாம் என்ற பேச்சு பிரதேசத்தில் பரவியதை அடுத்து, இந்த செய்தி சிங்கள பத்திரிகையொன்றில் வருகின்றது.
இந்த பத்திரிகை செய்தியைச் செல்வத்தின் நண்பன் செல்வத்திடம் காண்பிக்க, பெற்றோர் சிறுமியைத் தேடி கண்டிக்கு செல்கின்றனர்.
அதன் பின்னர் சிறுமியின் பெற்றோர்களிடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் வலுப் பெற்ற சிறுமி யாருக்கு சொந்தம் எனக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது.
இந்த வழக்கு விசாரணைகளின் ஊடாக சிறுமி தமிழ் பெற்றோருக்கு சொந்தமானது எனத் தீர்ப்பளித்து சிறுமியைத் தமிழ் பெற்றோர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடுகின்றது.
அதன்பின்னர் சிறுமியை அழைத்துக் கொண்டு திருகோணமலை செல்லும் பெற்றோருக்கு, சிங்கள பின்புலத்தில் வாழ்ந்த இந்த சிறுமியை வளர்ப்பதில் பல சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
இறுதியில் இந்த பிரச்சினைக்கு மனிதாபிமான ரீதியில் இரண்டு பெற்றோர்களும் எடுக்கும் முடிவு என்ன என்பதே கதை.
தேசிய நல்லிணக்கத்தைப் பாதிக்காத வகையில், தமிழ் சிங்கள ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படமே சுனாமி.
இலங்கையில் தொழில்நுட்ப சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில், திரைப்படத்திற்கான பல தொழில்நுட்ப வேலைகள் வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ளன.
படத்திற்கான ஒலிக்கலவை இந்தியாவில் செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த நிலையில், சுமார் 13 கோடி இலங்கை ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், எதிர்வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இலங்கையை சுனாமி தாக்கிய தேதியிலேயே இந்த திரைப்படம் வெளிவரவுள்ளது.
இலங்கையை பொறுத்தவரை இந்த திரைப்படத்திற்கு சபாஷ் எனக் கூறுவது மிகையாகாது.
📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽


0 comments:

Post a Comment