நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/பகுதி: 06 B

[சீரழியும் சமுதாயம்] 


எந்த சமூகத்திலும்,சமூக நெறிகளை [societal norms] போதிக்கும் முதல் ஆசிரியர்கள், அவர் அவர்களின் குடும்பமே ஆகும். உதாரணமாக, குழந்தை பருவத்தில் இருந்து எது சரி, எது பிழை என எளிய அறிக்கைகள் மூலமாகவோ அல்லது நேரடியாக நடவடிக்கைகள் மூலமாகவோ அவை எமக்கு எடுத்து காட்டி போதிக்கின்றன. ஒரு செயலிந்த அல்லது முறிந்த குடும்பத்தில் [dysfunctional family], வன்முறை மற்றும் உணர்ச்சி துஷ்பிரயோகம் [violence and emotional abuse or psychological abuse] போன்ற விடயங்கள் சமுதாயத்தில் ஏற்கத்தக்கவை போன்று ஒரு தவறான நம்பிக்கையயை விதைத்து வழி காட்டுகிறது. ஏனெனில் அவை பெற்றோரால் அல்லது அதற்கு சமமானவர்களால், சர்வ சாதாரணமாக அவர்களின் குடும்பத்தில் செய்யப்படுவதால் ஆகும். இதனால், வளர்ந்து சமுதாயத்திற்குள் வந்த பின்பும், அதை அப்படியே அவர்கள் பிரயோகிக்கும் பொழுது, அவர்கள் அடிக்கடி சட்டத்துடன் மோதுகிறார்கள் அல்லது முரண்படுகிறார்கள். மேலும் எம்மால் சமுதாயத்தில் ஒழுங்காக பங்களிப்பு செய்ய முடியாமலும் போகிறது. நாம் பொதுவாக குடும்பத்திலேயே பல நேரம் கழிக்கிறோம். எனவே அது எங்களை மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது அல்லது பாதிக்கிறது. ஒரு நிலையான குடும்பத்தில், நாம் கண்ணியமான மற்றும் சமூகத்தால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகள் முதலியவற்றை கற்கிறோம். எனவே நாம் வளர்ந்து சமுதாயத்தில் நுழையும் போது, ​​நாம் வெற்றிகரமாக சமுதாயத்திற்காக மற்றவர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்யவும் முடிகிறது. எனவே தான் நிலையான குடும்பம் என்றும் எங்கும் அவசியம்.

குடும்பங்கள் சமூகவியல் செயல்பாட்டைத் [sociological function] தவிர இன்னும் ஒரு முக்கிய பங்கை சமூகத்திற்கு வழங்குகிறது. இது உயிரியல் செயல்பாடு [biological function] ஆகும். உயிரியல் ரீதியாக, குடும்பங்களை உருவாக்குகின்ற இனப்பெருக்கம் என்ற செயல்பாடு, அவர்களை சுற்றியுள்ள சமூகங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால தொடர்ச்சிக்கு நேரடியாக பங்களிக்க குடும்பங்களுக்கு வழிவகுக்கிறது. இதனால் தானோ என்னவோ, மெசொப்பொத்தேமியாவில், முதல் பிள்ளை பிறந்த பிறகே திருமணத்தை முறையானது என ஏற்கப் பட்டதுடன், அது வரையும் அந்த பெண் மணமகள் என்ற நிலையிலேயே தொடருவதுடன், அந்த முதல் பிள்ளைக்கு பின்பே அவள் மனைவி என்ற பதவியை பெறுகிறாள்.

அதீத தொழில்நுட்ப முன்னேற்றத்துடன், மாற்றமடையும் கலாச்சார நெறிமுறைகளும் [cultural norms], புதிய முன்னுரிமைகளும், இணையதளத்தால் ஏற்பட்ட புதிய வடிவில்லான தொடர்புகளும் இன்று எங்கும் எம் வாழ்வை மிகவும் மாற்றிவிட்டன. என்றாலும் இன்னும் குடும்பம்  எப்பொழுதும் இருந்ததைப் போலவே அப்படியே முக்கியமான சமூகத்தின் அடித்தளமாகவே இருக்கிறது. எதிர்காலத்தில் எவ்வளவு வாழ்க்கை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அது எதோ ஒரு வடிவில், சமுதாயத்தின் ஒரு முக்கிய அமைப்பாக தொடரும் என்று நாம் கட்டாயம் நம்பலாம். உதாரணமாக திருமணம் அல்லாத உடனுறைவு, விவாகரத்து, மறுமணம், திருமணம் அல்லாத  மறுஇணைவு [Non-marital cohabitation, divorce, remarriage and (non-marital) recoupling], போன்று ஒரு குழந்தையின் வாழ்க்கை முழுவதும் அதன் வடிவம் மாற்றம் அடைகிறது. கடந்த காலத்தில் பெரும்பாலும் ஒரு குழந்தை திருமணமான தம்பதியருக்கே பிறந்தனர். எனவே அவர்கள், தமது வாழ்வு முழுவதும் அந்த தமது உயிரியல் பெற்றோருடனே வளர்ந்தார்கள். ஆனால் இன்று அது அருகிவருவதுடன் முன்பு கூறியது போல, அந்த குழந்தையின் வாழும் ஏற்பாடு, அந்த குழந்தையின் பெற்றோரின் உறவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றம் அடைந்து அந்த குழந்தைக்கு ஒரு நிலையான வாழ்வை கொடுக்க மறுக்கிறது. இது ஒரு கவலைக்கு உரிய விடயமாகும். பொன்முடியார் என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால புலவர், அன்று வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப, ஒரு குடும்பம் ஒன்றாக எப்படி வாழவேண்டும், அவர்களின் கடமை என்ன என்று தனது புறநானுறு 312 இல், அழகாக வர்ணிக்கிறார்:       

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே."

அதாவது, மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் என் (தாயின்) தலையாய கடமை. அவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்குத் தேவையான வேலை (படைக் கருவிகளை) உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை. அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை. ஓளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்திப் போர்க்களத்தில் பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது அம்மகனின் கடமை என்கிறார். ஆகவே மறைமுகமாக குடும்பம் இந்த கடமைகளை சரிவர செய்ய ஒன்றாக மகிழ்வாக இருக்கவேண்டும் என்கிறார்.

ஒரு சமூகத்தில், கலாசார மற்றும் சமூக மதிப்பை உயர்த்துவதில், குடும்பங்கள் முக்கிய பங்கு வகிப்பதை இன்றைய அவசர உலகில் எடுத்து காட்டவும், அவர்களுக்கு உணர்த்தவும், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் A/44/82 (1989) மூலம், மே 15ம் தேதி 1994 இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 'சர்வதேச குடும்ப ஆண்டு' கொண்டாடிட  முடிவு செய்தது. "யாது ஊரே யாவரும் கேளீர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் இரண்டாயிரத்தி முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்த அடியை ஒற்றி,  'உலகம் ஒரே குடும்பம்' என்ற பழமையான தத்துவத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், மனித நேயம், இரக்கம், பெருமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய குடும்பமாக, ஒரு இணக்கமான சமுதாயத்தின் அடித்தளமாக இருக்கவும் மற்றும், உலக கண்ணோட்டத்தை வடிவமைத்து, தனி நபர்களின் மதிப்பு முறையை குடும்பம் வலுவாக்குகிறது. அதன் விளைவாக, அனைவரும் விரும்புகின்ற, ஒரு நிலையான, அமைதியான, வளமான சமூகத்தை உருவாக்க முடியும் என்பது எனது திடமான நம்பிக்கையும் ஆகும்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 07A   தொடரும்  →

ஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A

பகுதி: 07A   வாசிக்க →Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/ பகுதி: 07A

0 comments:

Post a Comment