நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? பகுதி: 06A

[சீரழியும் சமுதாயம்] 
2]குடும்ப முறிவு அல்லது குடும்ப  செயலிழப்பு
 [The Collapse Of The Family]



எந்த நபரின் அல்லது எந்த ஒரு குழுவின் வாழ்விலும் குடும்பமே அவரின் அல்லது அவர்களின் முதலாவது சமூக குழுமம் ஆகும் [social community]. இங்கு தான் தம்மை பிணைச்சு, கலாச்சாரத்தின் மதிப்புகளை புரிந்து கொள்ளுவதுடன், சமூக நடத்தை அனுபவத்தையும் [social behavior] பெறுகிறது. இந்த குடும்பத்தில் தான், தமது முதல் இன்பத்தையும் மற்றும் துன்பத்தையும் கண்டு அனுபவிக்கிறது. இவைகள் எல்லாம், பின் பரந்த உலகிற்கு முகம் கொடுக்க அந்த நபருக்கு உதவுகிறது. எனவே குடும்பம் என்பது, தனிநபர்கள் ஈடுபடும் வெறும் நடவடிக்கைகள் அல்ல, இது ஒரு சிக்கலான சமூக அமைப்பு ஆகும். இங்கு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு தன்னேரில்லா தனிச் சிறப்புப் பண்பு கொண்ட உறுப்பினராகவும் அந்த முழு குடும்பத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு சில தசாப்தங்களின் இடைப் பட்ட காலத்தில், பெற்றோர் பிள்ளைகளுடன் பாட்டி, தாத்தா, அத்தை, மாமாக்கள் என பாரம்பரிய நீட்டிக்கப்பட்ட குடும்பம் [traditional extended family] இருந்தது. இன்று அது சுருங்கி தனிக் குடும்பமாகவும் சிலவேளை ஒற்றை பெற்றோர் குடும்பமாகவும் குறைந்து விட்டது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. திருமணம் செய்த ஒரு ஆணும் பெண்ணும் அவர்களின் குழந்தைகளும் ஒரு குடும்பம் என பழைய வரையறை கூறுகிறது. அவர்களுடன் சில வேளை பாட்டன் பாட்டியும் அடங்கும். என்றாலும், அந்த வரையறை பல ஆண்டுகளுக்கு முன், அதிகமாக வழக்கொழிந்து விட்டது. இன்று காலத்தின் மாறுதலையும் கவனத்தில் கொண்டு குடும்பம் என்பதற்கு ஓரளவு விட்டுக் கொடுப்புகளுடன் புதிய வரையறை செய்யப் பட்டுள்ளது. அதாவது குடும்பம் என்பது எந்த பாலினத்தையும் கொண்ட, திருமணம் செய்த அல்லது செய்யாத இரு பெற்றோர்களை அல்லது சிலவேளை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட  பெற்றோர்களை கொண்டதாகவும், இருவருக்கும் அல்லது ஒருவருக்கு பிள்ளைகள் பிறந்ததாகவும், அல்லது அவர்களில் எவருக்கும் பிறக்காத தத்து எடுத்த பிள்ளைகளாகவும் இருக்கலாம் என்று கூறுகிறது.

பொதுவாக, திருமணம் சார்ந்த குடும்பம் ஒரு நல்ல சமுதாயத்தின் அடித்தளமாகும். இதை எமக்கு வரலாறு போதித்துள்ளது, உதாரணமாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, சங்க காலத்திலேயே திருமணம் என்ற சடங்கு ஆரம்பித்து விட்டதாக தொல்காப்பியர் மூலம் அறிகிறோம். தலைவன் தலைவியரிடையே பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோரும், சான்றோரும் சடங்குகளை வகுத்து, வரையறைகளை அமைத்தனர் என்று ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப.’ (பொருள் 143) என தொல்காப்பியர் கூறுகிறார். பொய்யாவது செய்ததனை மறுத்து நிற்றல். வழுவாவது செய்ததை அதன் கண் நில்லாது தவறி ஒழுகுதல். கரணத்தொடு செயற்படின் பொய்யும், வழுவும் நிகழாவாம்.ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலை ஒன்றுதான் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஏற்ற நல்ல தருணம் என்றும், அதை பாரம்பரிய குடும்ப மாதிரி [traditional model of family] ஒன்றே இலகுவாக மிகத் திறமையாக கொடுக்கவல்லது என்றும் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகள் ஆதரவு வழங்குகின்றன. சில குடும்ப சூழ்நிலைகள் துரதிருஷ்டவசமாக இதை நிர்வகிக்க முடியாது இருப்பதுடன், ஒற்றை பெற்றோர் [single parent] தங்களால் முடிந்தவரை சிறந்ததை செய்ய இன்று போராடுகிறார்கள். நல்ல திருமணம் மற்றும் நிலையான குடும்பங்கள் இல்லாமல், ஒரு வலுவான சமுதாயம் இருக்க முடியாது என்று வரலாறு எமக்கு பாடம் படிப்பிக்கிறது. எனவே தான், திருமணங்களுக்கு ஊக்கமளிக்கவும் பாதுகாக்கவும் சமுதாயம் சட்டங்கள் இயற்றி அவ்வற்றை நடைமுறைப்படுத்தின.

ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மெசொப்பொத்தேமியா பெண்களின் வாழ்க்கையை அங்கு காணப்பட்ட பெண் தெய்வம் குலாவிற்கான [goddes Gula] துதிப்பாடல் ஒன்று "நான் ஒரு மகள், நான் ஒரு மணமகள், நான் ஒரு மனைவி, நான் ஒரு இல்லத் தரசி"["I am a daughter,I am a bride,I am a spouse,I am a house keeper"] என கூறுவதன் மூலம் தெரிய படுத்துகிறது. எனவே பெண்கள் தமது சம்பிரதாயமான பங்கான மனைவி, தாய், வீட்டுக் காப்பாளர் ஆகிய நிலைகளுக்கு சிறு வயதில் இருந்தே நன்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது. மேலும் பண்டைய சுமேரியாவில் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான உறவுகள் ஒரு திருமணக்கோரிக்கை / முன்மொழிதல் உடன் ஆரம்பமாகி, அதை தொடர்ந்து திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு, இறுதியாக ஒரு கல்யாணத்தில் முடிவுக்கு வருகிறது. இப்படிதான் அங்கு குடும்ப வாழ்க்கை நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  இருந்தது என்பதையும், அங்கு அவை உறுதிசெய்யப்பட்ட ஒரு கல்யாணத்தில் முடிந்தது என்பதையும் காண்கிறோம்.

பொதுவாக ஒரு சமுதாயத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இணைந்து சம்மதத்துடன் வாழவேண்டும். அத்துடன் ஒவ்வொரு உறுப்பினரும் சட்டத்தை மதித்து பின்பற்றி, தமது பங்களிப்பை நல்ல முறையில் ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான உறவு கொண்டிருக்க வழிவகுக்க வேண்டும். இயன்றவரை மோதல்களை தவிர்த்து, தீர்மானங்கள் மூலம் அங்கு எமக்கு தேவையானவற்றை அடையாக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மற்றும் தம்பதிகள் அங்கு ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்கும் ஒரு சந்தர்ப்பத்திலேயே அந்த சமுதாயம் ஒரு சிறந்த வெற்றிகரமான சமுதாயம் என பொதுவாக அறியப்படும். ஏனென்றால் குடும்பம் சமூகத்தின் மிக முக்கியமான சமூக அலகு ஆகும். எனவே குடும்பங்கள் வலுவாக இருக்கும்போது தான்,​​சமூகம் வலுவாக இருக்கும் என்பது ஒரு அடிப்படை விதியாகும். ஆனால் இன்று நிலைமை அதிகமாக இவ்வற்றிற்கு முரணாக உள்ளது. உதாரணமாக, இன்றைய மன அழுத்தம் அதிகம் நிறைந்த உலகில், அனைத்து திருமணங்களில் குறிப்பிடத் தக்க ஒரு பங்கு விவாகரத்தில் பரவலாக பல சமுதாயத்தில் முடிவடைகின்றன. இது குடும்பங்களை பலவீனமாக்கி, ​​சமூகங்கள் உடைய வழிவகுக்கிறது.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 06B தொடரும்......
ஆரம்பத்திலிருந்து வாசிக்க →  Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A

பகுதி: 06B வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/பகுதி: 06 B




0 comments:

Post a Comment