நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/பகுதி: 08B

[சீரழியும் சமுதாயம்] 

"பால் கடல் கடைதல்" என்ற புராணத்தில், அங்கு கடைந்து எடுத்தது ஒரு இறப்பில்லா வாழ்வு தரும் அமுதம் என்பதால் தேவர்கள், தங்களுடன் சேர்ந்து கடைந்த மற்றவர்களை ஏமாற்றி தாம் மட்டும் உண்டதற்கு மாறாக, 'ஒரு மருந்தேயாயினும் விருந்தோடு உண். இறப்பில்லா வாழ்வு தரும் அமுதமே ஆனாலும், விருந்தினர்க்கும் பகிர்ந்து அளித்து உண்ணவேண்டும்' என்கிறது தமிழரின் கொன்றை வேந்தன். அது மட்டுமல்ல புறநானுறு 91 இல், பெரிய மலையிடத்து மிகவும் இடருக்குப் பின் பெற்ற அரிய நெல்லிக்கனியை உனக்கென்று கொள்ளாமல், அதன் சிறப்பை எனக்குச் சொல்லாமல், ஈந்து எனக்கு இறப்பில்லா வாழ்வு ஈந்தனையே என்று அதியமான் நெடுமான் அஞ்சியை, அவ்வையார்;

"பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே"

என்று வாழ்த்திப் பாடுகிறார்.இது தான் தமிழ் இலக்கியத்தின் சிறப்பு. இன்றைய தொழில் நுட்பத்தில் மனிதன் இறவாத்  தன்மையை [Human immortality] அடைதல் சாத்தியமாக தெரியவில்லை. என்றாலும் உயிரியல் ரீதியாக [biologically] நித்திய ஜீவன் [eternal life] ஒன்றை அடையாக கூடிய சாத்தியக் கூறுகளை, இறப்பில்லா உயிரி என அழைக்கப்படும், ஒரு இன ஜெல்லிமீன் அல்லது  இழுது மீன் [one species of jellyfish, Turritopsis dohrnii] ஒன்றில் காண்கிறோம். அந்த குறிப்பிட்ட ஜெல்லிமீனின் வாழ்க்கை வட்டம், 'பொலிப்' (Polyp) என்ற குழந்தை பருவத்தில் ஆரம்பித்து,  'மெடுசா' (Medusa) என்ற முதிர்ந்த பருவத்தை அடைகிறது, அதன் பின் அது இறப்பதற்குப் பதிலாக மீண்டும் குழந்தை பருவமான 'பொலிப்' பிறகு திரும்பி வந்து மீண்டும் தனது வாழ்க்கை வட்டத்தை அழிவில்லாமல் தொடர்கிறது. இது மனிதனுக்கு ஒரு தெம்பு தரும் சான்றாகும். ரஷ்ய இணைய முக்கியஸ்தரான டிமிட்ரி  இட்ஸ்கொவ் [Russian Internet mogul Dmitry Itskov] இப்படியான நம்பிக்கையை, அவரின் புதிய முயற்சி 2045 [2045 Initiative] மூலம் அடையலாம் என எதிர்பார்க்கிறார். அவர் இந்த முயற்சியை பெப்ரவரி 2011 இல் ஆரம்பித்து, ரஷ்ய வல்லுநர்கள் பலருடன் இணைந்தது, இன்று செயலாற்றுகிறார். ஆனால் இது முற்றிலும் ஒரு உயிரியல் முயற்சி அல்ல. இது மனிதனையும் இயந்திரத்தையும் இணைக்கும் ஒரு முயற்சியாகும். அதனால் ஒரு மீவு மனிதனை பரிணாம படுத்துதல் ஆகும்.

மீவு மனிதன் என்பது "Humanoide" எனப்படும் எந்திர மனிதன் ஆகும். மீவு மனிதன் இயற்கையாக பரிணாமம் அடைந்து தோன்றினால், அதனால் பெரிதாக கெடுதல் ஒன்றும் ஆகாது. ஆனால் மனித இனத்தின் மீது செயற்கையாய் திணிக்கும் முயற்சி அப்படி இல்லை. மீவுமனிதத்துவதுக்கு உட்பட்ட மனிதனை "Post-Human" என்றும் அழைக்கலாம். இந்த சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்பவர்கள் மனிதர்கள் இயல்பாகவே குறைபாடு [inherently flawed] உள்ளவர்கள் என்றும் அதை தொழில் நுட்ப படைப்புகளால் மீட்கலாம் என்றும் நம்புகிறார்கள். மெய்மை அல்லது ஒன்றின் உண்மையான நிலை [reality] யை இவர்கள் ஒரு சிறைச்சாலையாக பார்ப்பதுடன், ஒரு  மாய உலகிற்கு [virtual world] தப்பித்து போக முயலுகிறார்கள். அத்துடன் இவர்கள் மரணத்தை இல்லாமல் ஒழிக்கவும், அறிவை மேம்படுத்தவும், மனிதத் தெய்வத்தன்மை அடைவதற்கும் [to cheat death, enhance intelligence, and achieve human godhood], இவர்கள் மனிதனை இயந்திரங்களுடன் இணைக்க முயல்கிறார்கள். இது தான் இன்றைய மனித சமுதாயத்தின் பெரும் கேள்வியாக  உள்ளது.

நாம் என்ன யோசனையை தழுவியிருந்தால், மனிதகுலத்தின் நலனுக்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக, இடைஞ்சலாக இருந்து இருக்கும்? என்று யாராவது கேட்டால், இன்றைய காலகட்டத்தில், கட்டாயம் அது மீவுமனிதத்துவம் [Transhumanism] என்றே கூறலாம். ஏன் என்றால் அது மனித இனத்தை, அதன் உயிரியல் கட்டுப்பாடுகளிலிருந்து [biological constraints] விடுவிப்பதை நோக்கமாக கொண்டது. அதனால் வரும் விளைவு, நன்மையா தீமையா இன்னும் சரியான பதில் இல்லை? ஒரு மட்டத்தில் இயக்கத்தின் இலக்குகள் தீங்கற்றதாகத் தோன்றினாலும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மனித பரிணாமத்தை மிக தீவிரமாக்கி, முடிவில் இன்றைய மனிதனை அது இல்லாமல் செய்யும் என எதிர் பார்க்கப் படுகிறது. அதன் பின் ஒரு உயர்ந்த தொழில்நுட்பம் ஆட்க்கொள்ளும் மனிதர் [posthuman] தோன்றுமாம் ? இன்று செயற்கை நுண்ணறிவுடன் மனித நாகரிகத்தை ஒட்டிஇணைப்பதாலும் [fuse human civilization with artificial intelligence], மற்றும் ஒவ்வொரு புது கண்டு பிடிப்புகளாலும், நாம் சமுதாயத்துடனான எம் தொடர்பை மேலும் மேலும் துண்டிப்பதை அல்லது குறைப்பதை காண்கிறோம். என்றாலும், இவையை அளவோடு நாம் கடைப்பிடிக்கும் பொழுது, இவை பெரிதாக எம்மை, எம் சமுதாயத்தை பாதிக்கப் போவதில்லை, அதை பொறுத்தவரையில் சந்தோசம். ஆனால், எதுவும் எல்லை மீறினால் பிரச்சனை தானே? என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று நம்புகிறேன்.

  
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 09A  தொடரும்
📱📱📱📱📱📱📱📱📱📱📱📱📱📱📱
பகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள் →
பகுதி: 09A   வாசிக்க அழுத்துங்கள் →


2 comments:

  1. Nageswary UruthirasingamFriday, February 07, 2020

    மிகவும் அருமை எனக்குள்ளேயும் எமது இந்து சமய வரலாறுகளில் சந்தேகங்கள் பல ஏற்படுவது உண்டு. தேவர்கள் கொடுத்த வாக்கில் இருந்து தவறி சூழ்ச்சி செய்து, அதற்கு உதவியாக காக்கும் தெய்வம் நாராயணரையும் சேர்த்து அசுரர்களை ஏமாற்றியது ஏம்ற்றியது தான். ஏனெனில் அசுரர்கள் அமுதம் அருந்தியிருந்தால் உலகத்தின் நிலை கற்பனைக்கும் எட்டாத பேரழிவுக்கு ....உலக மக்களின் நலனுக்காக அந்த நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது.அந் நிகழ்வின் மூலம் தானே ஐயப்பன் தோற்றிவிக்கப் பட்டார்......எல்லா நன்மை தீமைக்கும் காரணங்கள் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. அன்று ஆரியரின் பண் பாட்டு சீரழிவினை எதிர்த்து நின்றவர்கள் அசுரர்கள் என ஆரியரால் குறிக்கப்படடார்கள். இன்று எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகள் என அழைக்கப்படுகிறார்கள். அசுரர்கள் சுரபானம் கூட அருந்தாத நற்குணமுடையோர் .அவர்கள் அமுதம் அருந்தினால் அழிவு என்பது இன்று பிரபாகரன் கையில் அதாவது தமிழருக்கு உரிமைகள் கொடுத்தால் ,சிங்களர்கட்க்கு ஆபத்து என்று கூறுவதற்கு ஒப்பானது- இது பேரினத்தாரின் ஏமாற்றுக் கட்டுக்கதை, அது ஆரியரின் ஏமாற்றுக் கட்டுக்கதை- s.manuventhan

      Delete