பகுதி 09:இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்

 "பண்டைய இலக்கியத்தில் மரணம் (திருக்குறள், தேவாரம் &  திருவருட்பா)"

மக்கள் மரணம் பற்றி அறிய ஆவலாகவும் அதேநேரம் கவலையாகவும் உள்ளார்கள். ஏனென்றால்,

1] ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்ககள் மற்றும் அன்பானவர்களுக்கு, அது ஒரு வேதனையை கொடுத்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையை ஓரளவு முன்னையதில் இருந்து சீர்குலைகிறது அல்லது மாற்றி அமைகிறது,

 

2] வாழ்க்கையின் முழுமையற்ற அபிலாஷைகள் [Incomplete aspirations of life],

 

3] மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற விளக்கம் இல்லாமை ஆகும்.

 

மரணத்தின் கருத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல், பதட்டத்தைக் குறைப்பதற்கும் மரண பயத்தை குறைப்பதற்கும் கட்டாயம் வழிசமைக்கும். இதைத்தான், விஞ்ஞானமும், இலக்கியமும் சமயமும் செய்கின்றன, என்றாலும் அவைகளில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு காரணம் அவர்களின் அறிவு, பண்பாடு மற்றும் நம்பிக்கைகள் ஆகும். நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக, அறிவிற்கு ஒவ்வாததாக இருந்தாலும், அது மற்றவர்களை பாதிக்காதவரை பிரச்சனை இல்லை. என்றாலும் மரணத்தை பற்றிய அல்லது மரணத்தின் பின் வாழ்வு பற்றிய எல்லா நம்பிக்கைகளும் அப்படி அல்ல. அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். வேண்டாத, அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கைகளை, நீங்கள் எந்த சமயத்தை பின்பற்றினாலும் தூக்கி எறியவேண்டும். இதைத்தான் அறிஞர்களும் சித்தர்களும் கூறினார்கள். மேலும் பொதுவாக  ஆண்கள் மரணத்தை ஏற்றுக்கொண்டு அதனுடன் ஓரளவு சமரசம் செய்கிறார்கள், ஆனால் பெண்கள் அப்படி இல்லை. மற்றும், மரணம் பற்றிய கவலை, அதிக மத நம்பிக்கை கொண்டவர்களிடத்தில் குறைவாக காணப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு காரணம் சில 'சமயங்கள்', இறப்பை இன்னும் ஒரு தொடக்கத்தை குறிப்பதாக கருத்துவதாகும் [some religions associate death with another beginning]. இது ஓரளவு பாதிப்பில்லா மூடநம்பிக்கை. அப்படியான, ஆத்மாவின் விடுதலை அடையும் வரை, பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியின் இறையியலில் திருவள்ளுவர் நம்பினார் [theology of cycle of births and deaths till the liberation of soul is attained]. அதன் விளைவுதான் குறள் 339 எனலாம். அதில் அவர்

 

"உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு"

 

என்று கூறுகிறார். உலகிலேயே மிகவும் எளிமையான வேலை எது என்று கேட்டால் தூங்குவது என்று சட்டென்று சொல்லி விடுவீர்கள். என்றாலும் தூங்குவது போலவே இன்னொரு காரியமும் இருக்கிறது. அது தான் இறப்பது. அதாவது தூங்குவது போன்றதே இறப்பு, தூங்கிய பின்னர் விழிப்பது போன்றதாம் [மீண்டும்] பிறத்தல் என்கிறது. இந்த சிந்தனையில், பாவ புண்ணியங்களை பொறுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் நம்பிக்கையும், அதை ஒட்டிய கருத்துக்களும் கூட தெரிகிறது. ஒருவர் நன்றாக ஆழ்ந்து தூங்கும் போது, இவ்வுடம்பைப் பற்றிய எண்ணத்தையோ, அது இருக்கும் நிலையைப் பற்றியோ மூளை நினைவு படுத்திக் கொண்டிருப்பதில்லை. அது ஓரளவுக்கு உயிரியக்கத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும். தானும் ஓய்வு கொண்டு, உயிர், உடல் இவற்றுக்கும் ஓய்வினைத் தந்து இயங்குகிறது. தூக்கம் என்பது ஏறக்குறைய இறந்த நிலை தான். ஒருவருக்கு. ஒவ்வொரு நாளும் உறங்கி விழிப்பது, பிறப்பது போல என்பது, தூங்குவது இறப்பானால், விழிப்பது பிறப்புதானே என்கிற ஒரு வாதத்தை ஒட்டிய கருத்து ஆகும். நாம் தூங்கி விழிக்கும் போது நமக்கு நேற்று நடந்தது, இன்று நடக்க வேண்டியது, நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களைப் பற்றிய அறிவும் நினைவும் இருக்கின்றன. ஆனால் பிறக்கும் ஓர் உயிருக்கு - ஒரு கருத்துக்கு, மறு பிறப்பு என்று ஒன்று இருந்தால் கூட? - கடந்த பிறவிகளின் நினைவுகள் வருவது இல்லை, ஒரு சிலருக்கு இருப்பதாக நாம் செய்திகள் மூலம் கேள்விப் பட்டாலும் கூட அது இதுவரை அறிவியல் ரீதியாக உறுதிப் படுத்த வில்லை. பொதுவாகப் பார்க்கையில், இறப்பு என்பது நினவுகளை முற்றிலும் மறக்கச் செய்கிற நிகழ்வு. பிறப்பு என்பது எவ்வித நினைவுகளையும் சுமந்து வராத நிகழ்வு. பிறப்பை ஒரு தற்செயலாக தன்னிச்சையான செயலாகச் சொல்லலாம். இறப்பை ஒரு உறுதியான இறுதி செயலாகச் சொல்லலாம். இந்த கருத்தை யொட்டிய பாடல்களை, நாலடியார், மணிமேகலை, சீவகசிந்தாமணி முதலிய வற்றிலும் பார்க்கலாம்.

 

விழித்திமைக்கும் மாத்திரை யன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு” 

 

என்கிறது நாலடியார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்,

 

ஓடு புனற்க ரையாம் இளமை உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி”

 

என்கிறது.

 

பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மை யின்”

 

என்கிறது மணிமேகலை. இந்நிலையாமையை நாம் உணர்வதில்லை என்று சுந்தரர், இன்னும் ஒரு தேவாரத்தில்,

 

"நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்  நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற் சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்"

 

என்று கூறுகிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர்

 

"வறிதே நிலையாத இம்மண் ணுலகில்  நரனா கவகுத் தனைநா னிலையேன்"

 

என்று பாடுகிறார். இவை எல்லாம் இறப்பை பற்றிய அன்றைய சிந்தனைகள். அரசனின் ஆணை தன்னைக் கட்டுபடுத்தாது என்று அரசனை எதிர்த்து குரல் கொடுத்த புரட்சிக் கவியாக அப்பர், திருநாவுக்கரசர், நாம் யாருக்கும் குடி அல்ல;  நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது  எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார். நரகத்தில் இடர்ப்படோம். அதாவது  ஒருவேளை நரகத்திற்கே சென்றாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். ஏனெனில் சென்றவிடத்தைச் சொர்க்கமாய்ப் பாவிக்க எம் மனதிற்குத் தெரியும். ஏமாற மாட்டோம். பிணி அறியோம்.அதாவது, பிணியுற்றாலும், அதனால் துவண்டிட மாட்டோம். அடிபணிய மாட்டோம். எமக்கு என்றும், எப்போதும் துன்பம் என்பது கிடையாது. என்றும், எப்போதும், எந்நாளும் இன்பமே என்று பகிரங்கமாக அறை கூவல் விடுகிறார். இங்கும் இறப்பை பற்றிய அன்றைய கருத்து தெளிவாகிறது.

 

"நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;

நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;

ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;

இன்பமே எந்நாளும், துன்பமில்லை."            

 

திருக்குறளில் நிலையாமை குறித்து 34வது அதிகாரத்தில் மேலும் சில பாடல்களைக் காண்கிறோம். உதாரணமாக “நாள் என்பது, ஒவ்வொரு நாளாக வாழ் நாளின் உயிரை குறைக்கும் கருவி”  என பொருள் படுத்தி, குறள் 334

 

நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்"

 

என்று சிறப்பாக  சொல்கிறது. அதாவது ,ஒவ்வொரு நாள் முடிவும் உங்களை வாழ்க்கையின் முடிவான இறப்பிற்கு கிட்ட கிட்ட கொண்டு போகிறது. யமனின் வாள் போன்றது நாள் என்கிறது. இந்த வாளை பாவித்தே உங்களின் வாழ்வு காலம் அளக்கப்படுகிறதாம். அதாவது ஒரு நாள் முடியும் போது, யமன் வாழ்வின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து விட்டு, இன்னும் இறப்பில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள் என அளக்கிறான் என்கிறது.

 

இறப்பு மனிதனின் ஒவ்வொரு வாழ்வின் அடியையும் பின் தொடர்கிறது. என்றாலும் மனிதன் இந்த நிலையற்ற பொருட்களையும் தொடர்புகளையும் இன்னும் வைத்திருக்கிறான். வாளின் இறுதி பிரயோகத்தில், அவனது வாழ்வு எந்தவித அறிவிப்பும் இன்றி துடைத்து எறியப்படுகிறது. இறப்பின் பின் மனிதனை தொடர்வது அவன் செய்த நல்ல செயல்களின் சிறப்பு மட்டுமே என்று மேலும் கூறுகிறது. இதை உறுதி படுத்துவது போல பட்டனத்தார்,

 

"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே"

 

என்று கூறுகிறார்.

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:10  "பண்டைய இலக்கியத்தில் மரணம் (திருக்குறள், தேவாரம் &  திருவருட்பா / இரண்டாம் பாகம்)" தொடரும்

0 comments:

Post a Comment