"ஒரு புலம்பல்"

 


"முதுமையின் வாசலில் காத்து நிற்கிறேன்

முதலடி வைத்து உள்ளே போக

முறுக்கு மீசை கொஞ்சம் தளருது

முழங்கால் மூட்டு வலிக்கத் தொடங்குது"


"தள்ளாட்டம் என்னில் வெள்ளோட்டம் பார்க்குது

தனிமை என்னை தேடி வருகுது

தத்துவம் போதிக்கும் பக்குவம் வருகுது

தலை மயிரும் வெளுத்து போகுது"


"ஆடை மாற்றுகையில் அவதிப் படுகிறேன்

ஆகாரம் எதோ கொஞ்சம் சமாளிக்கிறேன்

ஆசை ஒன்றிலும் இல்லாமல் தவிர்க்கிறேன்

ஆத்திரம் அடக்கி அமைதியாய் வாழ்கிறேன்"


"சாப்பிட எடுத்தால்  கையும் நடுங்குது,

சாதம் தெரியாமல் கீழே சிந்துது,

சாந்தமான உன் முகம் ஏனோ சிவக்குது

சாபம் இடுகிறாய் பழசினை  மறந்து"


"பொறுமை கொண்டு புரிந்துணர்வு கொண்டு

பொடியனாய் உன்னுடன்  ஓடி விளையாடியும்

பொய்கள் கூறி நிலாவினைக் காட்டியும்

பொறுப்புடன் வளர்த்ததை எண்ணியே பாராயோ?"


"உன்னை குளிக்க வைக்க பட்டபாடு

உறங்க வைக்க சொல்லிய கதைகள்

உற்சாகம் கொடுக்க செய்த தந்திரம்

உயிர் உள்ளவரை மனதின் மகிழ்வுகளே"


"முதுமை பார்த்து முகம் சுளிக்காதே

முதிர்ந்து விழும் குருத்தோலையும் ஒருநாள்

முழக்கம் செய்து சுடுசொல் கொட்டாதே

முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்"


"சில நேரங்களில் ஞாபகம் மறக்கும்

சினம் கொண்டு கேவலப் படுத்தாதே

சிந்தித்து பார்த்தால் உண்மை அறிவாய்

சிரசில் கைவைத்து அன்பு காட்டுவாய்"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment