பூமியின் மையத்தின் மேல் சிதம்பரம் நடராஜர் கோயில்

 


- அறிவியல் உண்மையா, போலிச் செய்தியா????

(இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி Myth Buster எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது.)

எல்லா மதங்களின் புராணங்களிலும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணான பல தகவல்கள் அடங்கியிருக்கும். அறிவியல் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைவதற்கு முன்பே எழுதப்பட்டவை அவை.

 

அவ்வாறு, மத நூல்களில் கூறப்படாத செய்திகள் சில, அறிவியல் உண்மைகள் எனும் பெயரில் வலம் வந்து கொண்டிருக்கும். அப்படி ஒன்றுதான் 'சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நடராஜர் சிலையின் கால் பெருவிரலின் கீழ் பூமியின் மையம் உள்ளது' என்பது.

 

சமூக ஊடகங்களில் மட்டுமல்ல, பல லட்சம் பேர் படிக்கும் மைய நீரோட்ட ஊடங்கங்களில் கூட இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

 

"பூமிப்பந்தின் மையப்புள்ளி அமைந்துள்ள இடத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் இருப்பதோடு, காந்த சக்தியின் மையப்புள்ளியானது நடராஜரின் கால் பெருவிரலில் இருப்பதாகவும் சர்வதேச ஆன்மிக ஆராய்ச்சியாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள்," என்று இந்தியாவின் முன்னணி தமிழ் ஊடகம் ஒன்றில் ஜூன் 2018இல் வெளியிடப்பட்ட ஆன்மிகக் கட்டுரை ஒன்று கூறுகிறது.

 

"இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் காந்த புலத்தின் மையத்தில், பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதியில் என்று கூறப்படுகின்றது (Centre Point of World's Magnetic Equator )," என்று கடலூர் மாவட்டத்தின் அலுவல்பூர்வ இணையதளத்திலேயே கூறப்பட்டுள்ளது.

 

பூமியின் மேற்பரப்பில் நிலநடுக் கோடு இருப்பது போலவே, 'காந்த மையக்கோடு' (Magnetic Equator) ஒன்றும் உள்ளது. அது தமிழகம் மீதும் அமைந்துள்ளது. ஆனால், போலிச் செய்திகளில் உலா வருவதைப் போலவே, அது சிதம்பரம் வழியாகச் செல்லவில்லை.

 

காந்த மையக்கோடு என்றால் என்ன, பூமியின் காந்த மையக்கோடு தமிழகத்தில் எந்த ஊரைக் கடந்து செல்கிறது என்பது குறித்து இந்தக் கட்டுரையின் கடைசிப் பகுதியில் பார்ப்போம்.

 

"ஒட்டுமொத்த உலகத்தின் மையப்புள்ளி இருக்கும் இடத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் இருப்பதை அறிந்து விஞ்ஞான உலகம் வியக்கிறது," என்கிறது இலங்கையின் முன்னணி செய்தி ஊடகம் ஒன்றின் இணையதளத்தில் உள்ள ஒரு கட்டுரை.

 

"சர்வதேச ஆன்மிக அமைப்புகள் கடந்த எட்டு ஆண்டுகளாக சில கோடி டாலர்கள் செலவு செய்து, தீவிர ஆராய்ச்சிக்குப் பின் பூமியின் காந்த மையப்புள்ளி சிதம்பரம் நடராஜரின் கால் பெருவிரலில் இருப்பதாக கண்டுபிடித்திருப்பதுதான் உச்சகட்ட ஆச்சரியம்," என்றும் 2016இல் வெளியான அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

 

ஆனால், அந்த ஆராய்ச்சியாளர்கள் யார், எப்போது சொன்னார்கள், தங்கள் கூற்றுக்கான ஆதாரத்தை முன்வைத்தார்களா என்றெல்லாம் அந்தக் கட்டுரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

 

ஒருவேளை இணையதளங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக இந்தச் செய்தியைப் பகிர்பவர்கள் அதற்கான ஆதாரத்தை முன்வைக்க முயன்றாலும் அது இயலாது. ஏனெனில், அறிவியல் உலகில் அப்படி இதுவரை எதுவும் முன்வைக்கப்படவில்லை.

 

சுருக்கமாகச் சொல்வதானால், இது ஒரு போலிச் செய்தி. அப்படியானால் சரியான தகவல் எது?

 

பூமி உருண்டையா இல்லையா?

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் அலுவல்பூர்வ தரவுகளின்படி பூமியின் ஆரம் (radius), பூமத்திய ரேகையில் (equator) 6,378.137 கிலோ மீட்டராக உள்ளது. இதுவே வட மற்றும் தென் துருவங்களை இணைக்கும் (கற்பனைக்) கோட்டில் 6,356.752 கிலோ மீட்டராக உள்ளது. ஆக, இந்தப் பூமியின் சராசரி ஆரம் 6371 கிலோ மீட்டர் என்கிறது நாசா. உலகின் பல்வேறு அறிவியல் அமைப்புகளும், அறிவியாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ள அளவீடும் இதுதான்.

 

ஆரத்தை இரண்டால் பெருக்கினால் வருவது விட்டம் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனவே பூமியின் சராசரி விட்டம் 12,742 கிலோ மீட்டர்.

 

பூமி உருண்டைதான் என்றால், அதன் ஆரம் அனைத்து புள்ளிகளிலிலும் ஏன் ஒரே அளவில் இருப்பதில்லை?

 

பூமியின் மையம் வழியாகக் கடந்து சென்று, மேற்பரப்பின் இரு வேறு பகுதிகளில் இருக்கும், இரு வேறு புள்ளிகளை இணைக்கும் கோடு பூமிப்பந்தின் விட்டம் ஆகும்.

 

இந்தக் கோட்டின் நீளம் அனைத்து ஜோடிப் புள்ளிகளுக்கும் ஒன்றாக இருப்பதில்லை. எனவே, விட்டம் மாறுகிறது. அதையொட்டி ஆரமும் மாறுபடுகிறது. அது ஏன் மாறுபடுகிறது என்று பார்ப்போம்.

 

பூமி கோள (sphere) வடிவம் உள்ளது எனப்பட்டாலும், அது ஒரு துல்லியமான கோளம் அல்ல. ஆங்கிலத்தில் கோள வடிவம் உள்ள பொருட்கள் 'sphere' என்றும் கோள வடிவம் போன்று உள்ள பொருட்கள் 'spheroid' என்றும் அறிவியலாளர்களால் அழைக்கப்படுகின்றன.

 

ஆனால், பூமிப்பந்தின் வடிவத்தை 'oblate spheroid' போன்றது என்று நாசா உள்ளிட்ட அறிவியல் அமைப்புகள் கூறுகின்றன. 'oblate' என்றால் தட்டையான அமைப்புடைய என்று பொருள்.

 

(ஆனாலும், பூமி ஒரு oblate spheroid என்று எல்லோரும் அறுதியிட்டுக் கூறுவதில்லை. பூமிப்பந்தின் அனைத்து இடங்களிலும் வடிவம், பரப்பு சமச்சீராக இல்லாமல் இருப்பதுதான் அதற்குக் காரணம். அதாவது நாம் வாழும் பூமிப் பந்து எல்லா இடங்களிலும் பந்து போலவே சீரொழுங்காக இருப்பதில்லை. மேடும், பள்ளமும் மலைகளும் இதனை ஓர் ஒழுங்கற்ற பந்தாகவே ஆக்கியுள்ளன. )

 

புவியின் வட மற்றும் தென் துருவங்களில் உள்ள நிலப்பரப்பு தட்டையாக இருப்பதே புவி ஒரு 'oblate spheroid' போன்றது என்று அறிவியலாளர்கள் கூறக் காரணம்.

 

பூமிப் பந்தின் மையம்

பூமிப்பந்து மேற்கிலிருந்து கிழக்காக சுழல்வதால் உண்டாகும் மையவிலக்கு விசை காரணமாக, நில நடுக் கோட்டை ஒட்டி பூமிப்பந்து சற்றுப் பெருத்திருக்கும்.

 

இதன் காரணமாகவே நில நடுக் கோட்டுப் பகுதியில், பூமியின் ஆரம் அதிகமாகவும், தட்டையாக இருக்கும் வட மற்றும் தென் துருவங்களில் பூமியின் ஆரம் சற்று குறைவாகவும் உள்ளது.

 

இந்த அளவையில் மாறுபாடு இருந்தாலும், கோள வடிவமுள்ள ஒரு பொருளின் மேற்பரப்பில் எந்த ஒரு புள்ளியை எடுத்துக்கொண்டாலும், அந்தப் புள்ளியில் இருந்து அந்தக் கோளத்தின் மேற்பரப்பு நேர்கோட்டில்தான் இருக்கும். ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குக் கீழ்தான் அந்த மையம் உள்ளது என்பது அறிவியலுக்கு முரணான தகவல்.

 

எனவே, நீங்கள் பூமத்திய ரேகைக்கு மேல் இருந்தால் பூமியின் மையம் உங்களுக்கு கீழே 6378.137 கிலோ மீட்டர் தொலைவிலும், துருவப் பகுதிகளில் இருந்தால் 6356.752 கிலோ மீட்டர் தொலைவிலும், பிற பகுதிகளில் இருந்தால் சுமார் 6371 கிலோ மீட்டர் தொலைவிலும் பூமியின் மையம் இருக்கும்.

 

புவியின் காந்தப் புலத்தின் மையத்தில் சிதம்பரம் உள்ளதா?

பூமியின் காந்தப் புலமும், பூமிப்பந்தின் மையத்தில் இருந்தே வெளிநோக்கி விரிந்து, பூமியைச் சுற்றிப் படர்ந்துள்ளது.

 

எனவே பூமியின் காந்தப் புலத்தின் மையமும், அப்புலத்தின் மேற்பரப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு நேர் கீழே உள்ளது என்பதும் அறிவியலுக்கு முரணான ஒரு தகவல்தான்.

 

சிதம்பரம் நடராஜர் கோயில் புவியின் காந்தப் புலத்தின் மையத்தில் உள்ளது என்பதும், அது புவியின் மையமாக உள்ளது என்பதை போன்றதொரு போலிச் செய்திதான்.

 

இதை பிபிசி தமிழிடம் கீழ்வருமாறு விளக்கினார் இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரன்.

 

"இந்த பூமியின் காந்தப் புலம் வடகாந்தப் புலம், தென் காந்தப் புலம் என்று இரண்டு பகுப்புகளாக உள்ளது. வட துருவப் பகுதியில் தென் காந்தப் புலம் தொடங்கும்; தென் துருவப் பகுதியில் வட காந்தப் புலம் தொடங்கும். வட துருவத்தில் இருந்து தெற்கு நோக்கியும், தென் துருவத்தில் இருந்து வடக்கு நோக்கியும் நகர்ந்தால், ஒரு கோட்டில் இரு காந்தப் புலங்களும் சமமாக இருக்கும். அந்தக் கோடு 'காந்த மையக்கோடு' என்று அழைக்கப்படுகிறது."

 

"காந்த மையக்கோடு, நிலநடுக் கோடு போல நேர்க் கோடாக இருக்காது. சூரியனில் இருந்து வெளியாகும் அயனி பொருட்களுக்கு (ions) ஏற்ப 10-15 கிலோ மீட்டர் மேலும் கீழும் சென்று கொண்டே இருக்கும். ஆனால், இதில் பெரிய மாற்றங்கள் இருக்காது. அந்த 10 - 15 கிலோ மீட்டரில் ஓரிடத்தில்தான் இருக்கும். இந்தக் கோடு தமிழ்நாட்டில் திருநெல்வேலி அருகே கடந்து செல்கிறது. இதனால்தான் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், இந்திய புவிகாந்த ஆய்வு நிறுவனம் திருநெல்வேலியில் தனது ஆய்வு மையத்தை அமைத்து இந்தக் கோட்டை கண்காணித்து வருகிறது," என்கிறார் வெங்கடேஸ்வரன்.

 

புவிக்காந்த மையக் கோடுதான் திருநெல்வேலி வழியாகச் செல்கிறது. பூமியின் மையப் புள்ளி நடராஜர் காலுக்குக் கீழே இருப்பதாக சொல்கிறார்களே என்று வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம். "பூமி என்பது ஓர் உருண்டை எனும்போது, அந்த உருண்டையின் மேற்பரப்பிற்கு என்று மையம் எதுவும் இருக்காது. ஒரு பந்தின் மேற்பரப்பில் இதுதான் இந்தப் பந்தின் மையம் என்று எப்படிக் கூற முடியும். அவ்வாறு சொல்வது அறிவியல் எனும் பெயரில் பகிரப்படும் கட்டுக்கதையே," என்கிறார் வெங்கடேஸ்வரன்.

விக்னேஷ்.அ (பிபிசி தமிழ்)

0 comments:

Post a Comment